சூக்ஷிகளிலும் வஞ்சகத்திலும் சிறந்த ஒரு கூட்டத்தார் சமுதாய வாழ்க்கையில் தங்களது சுயநலத்திற்கென்று எப்படி மதம், சமயம், வேதம், சாஸ்திரம், கோவில், பல சாமிகள், அவைகளுக்குப் புராணங்கள், குளங்கள், தீர்த்தங்கள், சடங்குகள், பூசைகள், உற்சவங்கள், பிராயச்சித்தங்கள், மோக்ஷம் நரகம், மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலியவைகளைக் கற்பித்து, தங்களையும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு இவைகளுக்கு சமயத்திற்குத் தகுந்தபடி வியாக்கியானம் (அர்த்தம்) சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்களைப் படிக்க விடாமலும் செய்ததோடு, மற்றவர்கள் உழைப்பில் தாங்கள் நோகாமல் பிழைக்கவும் வழி செய்து கொண்டது போலவே நமது நாட்டில் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டத்தார் சிறிது காலமாய் அதாவது 40,50 வருஷ காலமாய் தங்கள் சுயநலத்திற்கென்று அரசியலிலும் தேசியக் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசீயம் என்பதாகப் பல பெயர்களை உற்பத்தி செய்து அதன் மூலமாகவும் அரசாங்கத்தில் உத்தியோகங்களும் அதிகாரங்களும் பெற எண்ணம் கொண்டு பாமர மக்களைக் கூட்டி, ஏமாற்றி, பல தீர்மானங்கள் செய்து, ஒன்றுக்கு இரண்டு மூன்று நான்கு, சில சமயங்களில் பத்து என்பதாக உத்தியோகங்களையும் இலாக்காக்களையும் உற்பத்தி செய்து சம்பளங்களையும் அதுபோலவே நாளுக்கு நாள் கோடிக்கணக்காய் உயர்ப்பித்துக் கொண்டு அவைகளுக்காக பொது ஜனங்கள் மீது வரியையும் தாறுமாறாய் உயர்த்தி நாட்டையும் ஜனசமூகத்தையும் பாழ்ப்படுத்திவரும் விஷயத்தை இதற்கு முன் பல தடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இதற்கு உதாரணங்களைச் சுருக்கிக் காட்ட வேண்டுமானால் நம் நாடு காங்கிரசுக்கு முன் இருந்த நிலைமையும் அதற்குப்பின் ஏற்பட்ட நிலைமையும் ஒன்று இரண்டு விஷயங்களில் பார்த்தாலே விளங்காமல் போகாது. நமது மாகாண அரசியல் நிர்வாகத்தில் காங்கிரசுக்கு முன் µ. 5500 ரூபாயில் 2 மந்திரிகள் 2000 ரூபாயில் 2 காரியதரிசிகள் இருந்தது, காங்கிரசுக்குப் பின் 5550 ரூபாயில் 7 மந்திரிகள் 2500 ரூபாயில் 5 காரியதரிசிகள் ஏற்பட்டதும், நீதி நிர்வாகத்தில் காங்கிரசுக்கு முன், µ .2500 ரூபாயில் 5 ஹைகோர்ட் ஜட்ஜிகள் இருந்தது, காங்கிரசுக்குப் பின் µ 3000 ரூபாய் சம்பளத்தில் 15 ஜட்ஜிகள் இருப்பதும், காங்கிரசுக்கு முன் இந்தியா பூராவுக்கும் 30 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு வந்தது, இப்போது 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதும் ஆகியவைகளைக் கவனித்தால் போதுமானதாகும். இன்னமும் இதுபோன்ற விஷயங்கள் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் காட்டலாம்.

periyarr 450இந்த நிலையில் பாமர மக்கள் வஞ்சிக்கப்பட்டு வதைக்கப்பட்டதோடு நில்லாமல் இந்த அதிகாரங்களையும், உத்தியோகங்களையும், சம்பளங் களையும் நமது நாட்டில் ஒரு கூட்டத்தாரே, அதாவது பார்ப்பனர்களே அடைய வேண்டும் என்பதற்காகக் கருதி அதற்காகவும் பல சூக்ஷிகள் செய்யப்பட்டும் வருகின்றது. அந்த சூக்ஷிகளின் பலனாகத்தான் நமது மாகாணத்தில் சமீபகாலம் வரையில் சட்டசபை, ஜில்லா போர்ட், தாலுக்கா போர்ட், முனிசிபாலிட்டி முதலிய பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் எல்லா வற்றிலும் பார்ப்பனரல்லாத ஓட்டர் என்பவர்களே 100-க்கு 75 பேர்களுக்கு மேலாக இருந்தும், பார்ப்பனர்களே தெரிந்தெடுக்கப்பட்டு அங்கத்தினர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.

அதுபோலவே பொதுஜன எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்வீதமே இருந்து வந்தும், அதிகாரப் பதவியிலும் பெருத்த அதாவது, 100, 200, 500, 1000, 2000, 3000, 5000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்களில் 100-க்கு 90 வீதமும் 95 வீதமும் சிலவற்றில் 100-க்கு 100 வீதமும் இருந்து வந்தார்கள். சிலவற்றில் இன்னமும் இருந்து வருகின்றார்கள். இவைகளை உணர்ந்த சிலர் இக்கொடுமைகளை ஒழிக்க முயற்சித்ததில் அவர்களை இப்பார்ப்பனர்கள் தேசத்துரோகன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டதால் கடைசியாக இந்த பதவிகளையும் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் அப்பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வருவதையாவது ஒழித்து எல்லா மக்களுக்கும் அதில் பங்கு கிடைக்கட்டும் என்று முயற்சி செய்து தீரவேண்டியதாயிற்று.

இம்முயற்சியின் பலனாய் பார்ப்பனரல்லாதார் ஒருவாறு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பலனடைந்து வருவதன் மூலம் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கமும் உரிமையும் ஆட்டம் கொடுக்க வேண்டியதாய்ப் போய் விட்டதால் அதற்காக பார்ப்பனர்கள் வேறு பல சூட்சிகளும் கண்டு பிடிக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். அந்த சூட்சிகள் தான் தேர்தல் சமீபிக்கின்ற காலங்களில் சுயராஜ்யக் கட்சி, முட்டுக்கட்டைக் கட்சி, பூரண சுயேச்சை கட்சி என்பது போன்ற ‘தீவிரவாதிகள்’ கட்சிகளும் அவைகளுக்குள் தீண்டாமை விலக்கு, உத்தியோக விலக்கு, பதவி விலக்கு, சைமன் கமிஷன் விலக்கு, அரசாங்கங்க விருந்து விலக்கு, அன்னியத்துணி விலக்கு என்பது போன்ற பல விலக்குத் திட்டங்களையும் வார்த்தை அளவில் கற்பித்துக் கொண்டு அவைகளுக்காக அறிவுக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் பொருந்தாத முறைகளில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் யோக்கியர்களும் அறிவாளிகளும் நாணயமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் பின்பற்ற முடியாத ஒப்புக் கொள்ளாத, ஒத்துழைக்க முடியாத முறைகளில் அவைகளைப் பிரசாரம் செய்வதன் மூலம் பாமர மக்களின் செல்வாக்கையும் ஓட்டு களையும் பெற முயற்சித்து வருகின்றார்கள்.

இந்த சூட்சிகள் சாதாரணமாக ஒவ்வொரு தேர்தல்களிலும் கையாளப்பட்டு வருவதையும் பார்க்கலாம். உதாரணமாக அதிக தூரம் கூடப் போக வேண்டியதில்லை. தீண்டாமை விலக்கு என்பது காங்கிரஸ் திட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானமாக இருந்தும் அது காரியத்தில் வருவதானால் பார்ப்பனர்கள் உயர்வு அடியோடு போய்விடும் எனக் கருதினதைப் பற்றி எல்லா காங்கிரஸ் திட்டத்திலும் நழுவ விட்டுக் கொண்டே வந்துவிட்டார்கள். சென்னைக் காங்கிரசிலும் அக்கொள்கையைக் காங்கிரஸ் கொள்கையில் ஒன்றாக இருக்கும்படி சேர்க்க வேண்டும் என்று திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் தீர்மானம் அனுப்பியிருந்தும், அதை யோசனைக்குக் கூட எடுக்காமலே சூட்சி செய்து அடக்கி விட்டார்கள்.

தவிர, சென்ற சட்டசபைத் தேர்தலுக்கு முந்தின சட்டசபைத் தேர்தலின் போது சுயராஜ்யக் கட்சி என்று ஒன்றைக் கற்பித்து அரசாங்கம் நடைபெற ஒட்டாமல் முட்டுக்கட்டை போடுவது என்ற கொள்கையைச் சொல்லிக் கொண்டு தேர்தல் வேட்டை ஆடினார்கள்.

இதைக்கண்டு பல பாமர மக்களும் ஏமாந்தார்கள் தேர்தல் நடந்த பின்பு வெற்றிபெற்ற சுயராஜ்யக் கட்சியாரும் முட்டுக் கட்டையாரும் அரசாங்க சட்டசபைகளில் கலந்து கொண்டு தீர்மானங்களை பிரேரேபிக் கவும் எதிர்க்கவும், கிடைத்த உத்தியோகங்களையும் பதவிகளையும் வருமானங்களையும் நாணயக் குறைவான முறையில் பெறவும் செய்ததன் மூலம் அரசாங்கத்தை ஒருவாறு நடத்திக் கொடுத்தார்கள்.

அது மாத்திரமல்லாமல், இரண்டு வருஷ காலம் சட்ட சபையிலிருந்து சகல போகமும் அனுபவித்துவிட்டு அந்த சட்டசபை காலாவதியாகும் தருணத்தில் கொஞ்சமும் மானம், ஈனம், நாணயம் ஆகியவைகள் ஒருசிறிதும் இல்லாமல் “இந்த சட்டசபைக்கு வந்ததே தப்பு. இதில் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. இந்த சர்க்கார் எங்களை ஒரு மனிதர்கள் என்றுகூட ஒரு சிறிதும் மதிக்கவே இல்லை. ஆகையால் இதில் இனி அரைவினாடி நேரம் கூட இருப்பது எங்களுடைய சுயமரியாதைக்கு இழிவு. ஆதலால் நாங்கள் இந்த சட்டசபையை விட்டு வெளியில் போகின்றோம்” என்று சொல்லிவிட்டு வெளிவந்துவிட்டு மறுபடியும் அந்த சர்க்கார் இவர்களை மதிக்காமலும் லக்ஷியம் செய்யாமலும் கூப்பிடாமலும் இருக்கும்போதே அந்த சட்ட சபைக்குள் போய் சிறிது கூட மானம் வெட்கம் இல்லாமல் தீர்மானங்களைப் பிரேரேபிப்பதும் எதிர்ப்பதும் ஆன காரியங்கள் செய்து விட்டு மறுபடியும் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கும் நின்றார்கள்.

அப்படி நிற்கும்போது முன்போல் முட்டுக்கட்டைபோடுவது என்கின்ற வார்த்தையை அடியோடு விட்டுவிட்டு புதிதாக ஒரு சூட்சி செய்தார்கள். அதாவது:- தாங்கள் மந்திரி பதவி, உத்தியோகம் முதலிய வைகள் பெற்றுக் கொள்வதில்லை என்றும் மந்திரிப் பதவிகள் வேறு யார் பெற்றுக் கொண்டாலும் அந்த மந்திரிசபைகளை அழித்து விடுவதாகவும் சொல்லி பிரசாரம் செய்து ஓட்டுப் பெற்று மறுபடியும் சட்டசபைக்குப் போனார்கள். அந்தப்படி போனபின்பு மந்திரி பதவி பெறுவதில் தங்களுக்குள் போட்டி இருந்தபடியால் வேறு ஆசாமிகளைப் பிடித்து, மந்திரிகளாக இருக்கச் செய்து அவர்களுக்கு உதவியும் செய்து சட்டசபைத் தலைவர் பதவியும், தங்கள் கட்சித் தலைவர் ஒப்புக் கொண்டு அரசாங்கத்தை நன்றாய் நடத்திக் கொடுத்தார்கள். இதற்கு காங்கிரஸ் என்கின்ற ஒழுக்கம் கெட்ட இயக்கமானது சற்றும் நாணயமும் யோக்கியப் பொருப்பும் இல்லாமல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி மந்திரி சபை அமைக்கவும், மந்திரிசபையை நடத்திக் கொடுக்கவும் உதவி செய்ததற்காக அதைப் பாராட்டுவதாக ஒரு தீர்மானமும் செய்துவிட்டது.

இது இப்படி இருக்க ஒத்துழையாதார் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றும் நாணயம் கெட்ட கூட்டமாகிய திரு.காந்தி கூட்டமும் இந்த நாணயமும் யோக்கியதையும் அற்ற கட்சியின் வெற்றிக்கு மதுவிலக்கின் பேரால் திருட்டுத் தனமாகவும் வெளிப்படையாகவும் உதவி செய்ததோடு “வேதவாக்கு” என்று சொல்லக் கூடிய “யங் இந்தியா” பத்திரிகையும் காந்தி சிஷ்யர் என்கின்ற திரு. ராஜகோபாலாச்சாரியாலும் கோடு கட்டிய குறள்களும் கிராமப் பிரசாரமும் செய்து இக்கூட்டத்திற்கு ஓட்டுகளும் வாங்கிக் கொடுத்தார்கள். கடைசியாக விளைந்த பலன் என்ன என்று பார்த்தால் சட்டசபையின் மூலம் எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்குத் தடை செய்யலாமோ அதைத்தவிர வேறு ஒரு காரியமும் செய்ததாக அவர்களே சொல்லிக் கொள்ள முடியாமல் போய் விட்டது. போதாக்குறைக்கு இந்த வருஷத் தேர்தலுக்கும் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டாய் விட்டது.

அவைகளில் முதலாவது, சைமன் கமிஷன் பகிஷ்காரம். இது அழுவாரற்ற பிணமாய் நாற்றமெடுத்து புழுத்து சருசாகக் காய்ந்து விட்டது.

இரண்டாவது, பூரண சுயேச்சை கட்சி என்பது. இதன் யோக்கியதை இப்பொழுதே வெளியில் எடுத்துப் பேசுவதற்கு இடமில்லாமல் போனதோடு கூடிய சீக்கிரத்தில் இக்கட்சியில் சேர்ந்து பயந்து கொண்டு ஓடிப் போய்விட்ட இரண்டொருவரைத் தவிர மற்றும் மீதியுள்ள இரண்டொருவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப்பட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

போக மூன்றாவதாக ஸ்லேத்துமம் கட்டி, சாகப் போகும் மனிதனுக்குத் ‘துளசி தீர்த்தமாக’ விளங்குவதுபோல் ‘அன்னிய ஆடை பகிஷ்காரம்’ என்கின்ற ஒரு பித்தலாட்டம் பிரசாரமேயாகும். இந்த பித்தலாட்ட மூட்டையைத் தூக்கி திரு.காந்தியின் தலையில் வைத்து அவருக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையையும் ஒழிக்க முடிவு செய்து கொண்டு வெளியில் புறப்பட்டாய்விட்டது. இதன் பேரால் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சொந்த பொருப்பில் வெளிவந்தும் ஆய்விட்டது. இதை இனி பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பத்திரிகையில் கலம் கலமாய் எழுதுவதின் மூலமும் கிராமங்களில் போய் கத்துவதின் மூலமாகவும் பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கி கொடுக்க பிரசாரங்கள் செய்து பார்ப்பனர்களிடம் இருந்து கூலி வாங்கப் போகின்றார்கள் என்பது நிச்சயம். ஆனால் இவர்கள் பேச்சைக் கேட்டு ஏமாறுவதற்கு இனி எந்தக் கிராமத்திலும் முன்போல முட்டாள்கள் இல்லை என்பதும் நிச்சயம்.

ஏனெனில், இப்போது நமது நாட்டில் தீண்டாமை விலக்கைவிட மது விலக்கைவிட அன்னிய துணி விலக்குக்கு என்ன அவசியமும் அவசரமும் நியாயமும் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தியாவில் எவ்வளவோ மில்லுகள் இருந்தும் இந்தியாவுக்கு வருஷா வருஷம் வெளிநாட்டில் இருந்து வரும் துணியின் கிரயம் ரூ.60,00,00,000 அறுபது கோடியே ஆகும். இந்த அறுபது கோடிரூபாய்க்கு ஈடு செய்வதற்கு இந்தியா வில் உற்பத்தியாகும் கதர் வருஷம் ஒன்றுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கதர் துணியேயாகும். இதுவும் வெளிநாட்டுத் துணிகளும் மில் துணிகளும் கஜம் ஒன்றுக்கு 4 அணா முதல் ஆறு அணா வரையில் விலையானால் கதர் துணிகள் 10 அணா முதல் கொண்டு 12 அணா வரையில் விலை ஆகக் கூடியதாயிருக்கின்றது. இவற்றில் பெண்களுக்கு என்று கதர் 50,000ரூ பெறுமானமுள்ள துணிகள்கூட உற்பத்தி ஆவதில்லை. ஆனாலும் அன்னியத் துணி ஒரு சேலை இரண்டரை ரூபாய் அல்லது மூன்று ரூபாய் அடங்கினால் கதரில் அதைப்போல் ஒரு சேலை 8 ரூபாய் அல்லது 10 ரூபாய் அடக்கமில்லாமல் கிடைப்பதில்லை.

ஆகவே இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள அன்னியத் துணிகளை எல்லாம் நெருப்பில் கொளுத்திவிட்டால் சுமார் 5992 லக்ஷ ரூபாய் துணிகள் கட்டும்படியான ஆண்களும் பெண்களும் என்ன கதி அடை வார்கள்? ஒரு சமயம் எல்லோரும் திரு.காந்தியை போல் முழங்காலுக்குமேல் துணி கட்டிக் கொள்வதன் மூலம் சுமார் 10, 20 கோடி ரூ. பெருமான துணி வேண்டியதில்லாமல் போய்விட்டாலும் அதற்குப் பதிலாக திரு.காந்தி உபயோகிப்பதுபோல் மெத்தைத் தலையணை துப்பட்டி கொசுவலை ஆகியவைகளையும் பார்த்து, ஜனங்கள் அதையும் பின்பற்றுவதானால் மேல் கண்ட 10, 20 கோடி ரூபாய் துணி மீதியாவதற்கு பதிலாக 20, 30 கோடி ரூபாய் துணி அதிகமாகத்தான் வேண்டியிருக்கும். தவிர ஏழைகளுடைய துணிகளை வாங்கிக் கொளுத்தினால் அவர்கள் அதற்குப் பதிலாக வேறு எதை வாங்க யோக்கியதை உடையவர்கள் ஆவார்கள் என்பதை யாராவது யோசித்துப் பார்த்தார்களா? கதர் வாங்குவதானால் பணம் ஒன்றுக்கு இரண்டு மூன்று அதிகமாய் செலவு செய்ய வேண்டும். அப்படி செலவு செய்வதானாலும் கிடைக்குமா? கடைசியாக உள்நாட்டு மில் துணியானாலும் வாங்குவதாயிருந்தாலும் அதுவும் போதாமல் தானே மேல்கொண்டு அறுபது கோடி ரூபாய் துணி வெளிநாட்டிலிருந்து வரவேண்டியிருக்கின்றது.

அப்படி இருக்க, இந்த கணக்கை எப்படி சரி சொல்ல முடியும்? எல்லோருமே நூல் நூற்க ஆரம்பித்தால் ஒரு சமயம் துணி கிடைக்கக்கூடும் என்று சொல்லலாமானாலும் நூல் நூற்பவர்களுக்கெல்லாம் மணிக்கு ஒரு (சல்லி) பை தானே கூலி கிடைக்கின்றது. அந்தப்படி மணிக்கு ஒரு தம்பிடி கூலி கிடைப்பதானாலும் அந்த நூலில் நெய்த வேஷ்டிக்கு ஒன்று இரண்டாக மூன்றாக கிரயம் கொடுத்து வாங்கினால்தானே கிடைக்கக் கூடியதாயிருக்கின்றது. இதுவரை கதருக்காக என்று பாழாக்கின ரூபாய்களை நூல் நூற்பு மில்லாகவும் நெசவு செய்யும் மில்லாகவும் கட்டி இருந்தால் சுமார் ஒரு 50 மில் கட்டியிருக்கலாம். இந்த ஐம்பது மில்லில் உற்பத்தியாகும் நூலுக்கும் துணிக்கு கொடுக்கக்கூடிய கூலிகளில் இப்போது மணிக்கு ஒரு தம்பிடி சம்பாதிக்கும் கூலி ஆண்களைவிட இரண்டு மூன்று பங்கு ஆட்கள் மணிக்கு ஒரு அணா முதல் ஒரு ரூபாய் வரை சம்பாதிக்கக் கூடிய யோக்கியதை அடைவார்கள்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களை ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டத்தாரின் வயிற்று வளர்ப்புக்கென்றே- தேர்தல் சூழ்ச்சிக்கென்றே போலி இயக்கங்களை வைத்துக் கொண்டு மக்களின் பணங்களையும் நேரங்களையும் ஊக்கங்களையும் அறிவுகளையும் கெடுத்துக் கொண்டும் இருக்கும்படி இனியும் எத்தனை காலத்திற்கு நாம் இடங்கொடுத்துக் கொண்டு இருப்பது என்பதை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.03.1929)

Pin It