kuthoosi gurusamy 268“ஒத்த ஒருவனும் ஒத்த ஒருத்தியும் கூடி இன்பம் நுகர்தலே இல்லற வாழ்க்கை,” - என்பார், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள்.

பிரஜா கட்சியும் சோஷ்யலிஸ்ட் கட்சியும் கலப்பு மணம் செய்து கொள்ளப் போகின்றனவாம்! நல்ல ஜோடி! மணமகன் வீட்டார் டில்லியில் கூடி முடிவு செய்து விட்டார்களாம்! அநேகமாக அரைக்கல்யாணம் ஆன மாதிரித் தானே!

மணமகனும் மணமகளும் விரைவில் பூனா அல்லது பம்பாயில் சந்தித்துப் பேசுவார்களாம்!

ஈருடல் ஓருயிர் போலவும் வீணை நரம்புக்குள் ஒளிந்திருக்கும் நாதம் போலவும், விறகில் மறைந்திருக்கும் தீயைப் போலவும் மேற்படி இரு கட்சி களும் இரண்டறக் கலக்கப் போகின்றனவாம்!

கலந்த பிறகு சென்னையைப் பொறுத்தமட்டில் மட்டும் ஊடல் முறையைக் கையாளுவார்களாம்! ஏனெனில் இங்கு தம்பதிகளில் ஒருவரான பிரஜா கட்சியானது தன் மனைவிக்கு விரோதமான ஒருத்தியுடன் 2-3 மாதமாக சல்லாப விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாரல்லவா? இங்கு நடக்கின்ற விபரீதக் கூட்டுறவை மட்டும் சோஷ்யலிஸ்ட் மனைவி அநுமதித்து விடுவாளாம்! பாருங்கள், பரந்த நோக்கத்தை! மும்மூர்த்திகளே முறை தவறி நடந்திருப்பதாகப் புராண - இதிகாசங்கள் கூறும்போது, அரசியல் கட்சிகளுக்கு விபசார தோஷம் கற்பிப்பது முறையாகுமா?

இரண்டு கட்சிகளும் ஒன்றானபிறகு இரண்டுஞ் சேர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் அய்க்கியமானாலும் ஆகலாம்! அதிலும் தவறொன்றுமில்லை! எப்படியாவது தங்கள் பொது எதிரியாகிய ஏழையை நசுக்க வேண்டியது தானே! இதற்காக யாரைக் கூப்பிட்டாலும் வருவார்கள்!

முஸ்லிம் லீக் காங்கிரஸ் மந்திரி சபையை ஆதரிக்கும் போது, இந்த நாட்டில் எது நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை! “கடவுள் - மதம் ஆகிய இரண்டையும் காப்பாற்றுவதற்காகவே காங்கிரஸ் மந்திரி சபையை ஆதரிப்பதாக” முஸ்லிம் லீகர் ஒருவர் சட்டசபையில் பேசியிருக்கிறார்! அப்படியானால் சங்கராச்சாரியாரின் பல்லக்கைக் கூட யாராவது சில லீக் தலைவர்கள் தூக்கினாலும் தூக்குவார்கள்! அதுதான் கடவுளையும் மதத்தையும் காப்பாற்றுவதற்குத் தலைசிறந்த வழி என்று கூறினால் அவர்களை யார் தடுக்க முடியும்? இது கிடக்கட்டும். இப்போது எடுத்துக் கொண்ட சங்கதியைக் கவனிப்போம்.

பிரஜாகட்சி - சோஷ்யலிஸ்ட் கட்சிக் கலப்பு மணத்தின் பயனாக என்ன பிறக்கும்? கட்சி பேதமற்ற ஒரு நல்ல குழந்தை பிறக்கும்! இரு வேறு மதங்கள் அல்லது இரு வேறு ஜாதிகளைக் கொண்டவர்கள் கலப்புத் திருமணஞ் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு எது மதம்? என்ன ஜாதி? மதம் - ஜாதி அற்ற குழந்தையல்லவா? அது போல என்க!

காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தான் இந்தக் கலப்பு மணம் என்கிறார், திருவாளர் பிரகாசம் பந்துலு! காங்கிரஸ் கட்சியின் வலது கை தான் சோஷ்யலிஸ்ட் கட்சி என்பது பிரகாசம் பந்துலுவுக்குத் தெரியாமலிருக்க முடியாது. அதிதீவிரப் புரட்சிக்காரர்களிடம் நாட்டு மக்கள் சென்று விடாதபடி தடுப்பதற்காகவே சோஷ்யலிஸ்ட் குழந்தையை ஸ்வீகாரமாக எடுத்து வளர்த்து வருகிறது, காங்கிரஸ் கட்சி, என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தானே?

ரமணரிஷியையும் அரவிந்தரையும் வழிகாட்டிகளாகக் கொண்டிருப்பவர், சோஷ்யலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ்! அவர்களிருவரும் எப்பேர்ப்பட்ட புரட்சிகரமான வழியைக் காட்டியிருக்கிறார்கள் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே? “தனித் திராவிட நாடு கேட்டால் தென்னாட்டைச் சுட்டுப் பொசுக்கிச் சுடுகாடாக்கி விடுவோம்” என்று என்னிடமே கூறினார், பிரஜாக்கட்சி தலைவரான கிருபளானி, திரு. ஜி. டி. நாயுடு அவர்களுக்கு முன்பாக!

கிருபளானி-ஜெயபிரகாஷ் கலப்புத் திருமணம் நல்ல ஏற்பாடுதான், தென்னாட்டைப் பொறுத்தமட்டில்! ஏனென்றால், இருவர் கட்சிகளையும் பின்பற்றுகிறவர்கள் திருப்பதிக்குத் தெற்கே கிடையாது; குமரிமுனை வரையில் கிடையாது!

மணமக்கள் நீடூழி வாழ்க! வட நாட்டிலேயே வாழ்க! சுபம்!

- குத்தூசி குருசாமி (02-07-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It