kuthoosi gurusamy 263“திராவிடநாடு - திராவிட நாடு என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாயே! ஏய் முட்டாள்! இங்கே வா! திராவிடமாவது! நாடாவது! இனி அப்படி உளறாதே! “தமிழ் அரசு தேவை” என்று ஓலமிடு! இன்னும் கேளடா, என் அடுக்குப் பேச்சை! கன்னடர் கருதாத நாடு! ஆந்திரர் ஆசைப்படாத நாடு! மலையாளி மதிக்காத நாடு! அடாடா! எப்படி மோனைகள் உதிர்கின்றன பார்த்தியாடா, மட்டீ! சுரண்டலாவது! புரண்டலாவது பாரதம் ஒரே தேசமடா, பாவி! அதைப் பிளக்க நினைக்காதேடா சாவி! வடநாட்டில் மட்டும் நம்மவர்கள், இல்லையாடா, மேவி!.”

இதுபோல் எதுகையும் மோனையும் சொட்டச் சொட்டத் தாக்கினார், ஒரு தமிழரசர்!

உடனே ஒரு சிறு ஓசை கேட்டது! அதாவது கன்னத்தில் அறைந்தது போன்ற ஓசை! ஆனால் அடிதடி யொன்றுமில்லை. தமிழரசர் முகத்தில் கருஞ்சட்டைக்காரர் ஒரு சிறு புத்தகத்தை வீசினார்! அவ்வளவுதான்! அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன்! அதன் மேலட்டையில் “தமிழ் முரசு” என்று எழுதியிருந்தது. உள்ளே புரட்டிப் பார்த்தேன்! அதிற் கண்டவைகளைக் கீழே தருகிறேன்;-

  1. முதலாளித்துவத்தின் சுரண்டற் கருவிகளான, பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், கப்பல் தொழில், ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவைகளில் கூட வடநாட்டு மூலதனம் முற்றுகையிட்டுள்ளது. தமிழகத்தின் பெரிய பெரிய தொழில்கள் - வாணிகம் ஆகியவற்றில் மட்டுமின்றி, சினிமா, சிற்றுண்டிசாலை, நகைக்கடை, கடிகாரக்கடை, வட்டிக்கடை, செருப்புக் கடை, உடைக்கடை போன்ற சின்னச் சின்ன வாணிப நிலையங்களைக் கூட வடநாட்டார் நடத்தி வருகின்றனர். தமிழன் என்ற உணர்ச்சியோடு சென்னை சைனா பஜாரில் சுற்றிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அப்போது ஆத்திரத்தால் நம் செந்நீர் கொதிக்கும். துக்கத்தால் கண்ணீர் பெருகும். இதனால் தான் நாம் வடநாட்டு ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்கிறோம்.”
  2. வடநாட்டு சுரண்டலை எதிர்ப்பது உள்நாட்டு சுரண்டலுக்கு உதவி செய்வதாக முடிந்துவிடுமோ என்று அய்யப்படுகிறவர்களுக்குத் தோழர் லெனின் அறிவுரையைச் சமர்ப்பிக்கிறோம்:- ... “தனியரசு கோரும் ஒரு இனத்தின் முதலாளிகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு இனத்து முதலாளிகளின் சுரண்டலையும் கொடுமையையும் எதிர்த்துப் போராடினால் நாம் அத்தகைய எதிர்ப்பு முன்னணியில் நிச்சயம் இருப்போம்....” (தமிழ் முரசு - தொகுதி 1, பகுதி 14, பக்கம் 38, 39)
  3. ஏகாதிபத்திய சுரண்டலால் இந்தியா வறுமையடைந்து விட்டது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, வட இந்தியப் பணமூட்டைகளின் சுரண்டலால், தென்னிந்தியாவின் பொருளாதார வளம் குன்றி விட்டது என்பது. எந்தத் தேதியில் தமிழகத்தில் ஆந்திரத்தில், கேரளத்தில், கன்னடத்தில் சோஷியலிசக் குடியரசுகள் அமைகின்றனவோ அதே தேதியில் குமரி முதல் விந்தியம் வரை பரவியுள்ள முதலாளித்துவத்தின் மூலவேர் அறுபட்டு சுரண்டல் ஒழியும்.” (தமிழ் முரசு தொகுதி 1, பகுதி 11, பக்கம் 35-36.)
  4. “பாரத மாதாவின் பேச்சின் அடிப்படையில் தேசியமிருக்கிறது. திராவிட நாட்டின் கொள்கையின் அடிப்படையில் இனப்பற்று இருக்கிறது.”
  5. “திராவிடர் ஓர் இனம் என்பதும், திராவிட மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், நான்கும் நெருங்கிய உறவுடைய மொழிகள் என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்... எல்லோரையும் தழுவிக் கொள்ளும் தமிழன் பரந்த நோக்கத்தோடு திராவிட நாட்டுப் பேச்சைப் பேசுவதில் குற்றமொன்றுமில்லை.”
  6. “தமிழ் - நம் மொழி, திராவிடம் - நம் மொழியின் மூலம்.”
  7. “தமிழரசு, தானே விருப்பத்தின்பேரில் ஏனைய இன அரசுகள் அடங்கிய இந்தியக் கூட்டரசில் இணைய வேண்டும். அப்படி இணைவதானது, பிரிந்து நிற்கும் உரிமையும், தனது பண்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புள்ள ஆந்திரா, கேரள, கன்னட இன அரசுகளுடன் உறவுகொண்டு ஒரு கூட்டாக நிறுவிக்கொள்ளும் உரிமையும் உடையதாயிருத்தல் வேண்டும்.” (தமிழ் முரசு, தொகுதி 1- பகுதி 10, பக்கங்கள் 20, 24)

(மேலேயுள்ளவைகளை மறுமுறையும் படித்துப் பாருங்கள்!)

தமிழரசர் தம் சொந்த “முரசினால்” தானே அடிபட்டோம் என்பதை மறந்து மீசையை முறுக்கிக்கொண்டு, கருஞ்சட்டையார் மீது பாய்ந்தார்! கஞ்சட்டையார் அகிம்சா புத்திரா என்ன? அவரும் எட்டி மீசையைப் பிடித்தார்!

“சே! சே! நமக்குள் இது நன்றாயில்லை! அக்கிரகாரம் எதிர்பார்ப்பதையா நாம் நடுத்தெருவில் நடத்திக் காட்டுவது? பேச்சு மேடையில் இருக்க வேண்டியவர்கள் குஸ்தி மேடைக்கே தயாராகி விட்டீர்களே? இது அவசியமில்லை. இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து பொது எதிரியைக் கவனிப்போம், வாருங்கள்! பொது எதிரி யார் என்பது இந்தப் புத்தகத்துக்குள்ளேயே இருக்கிறதே!”- என்று கூறி நான் இருவரையும் விலக்கி சமாதானப்படுத்தினேன்!

பிறகு மூவரும் சேர்ந்து கை கோர்த்துக்கொண்டு மேலே கண்ட பொன்மொழிகளை உரக்கப் படித்துக் கொண்டே சென்னை இருசப்பக் கிராமணி தெரு வழியாகச் சென்றோம். அங்கிருந்த தனிப்பெருந் தலைவர் எங்கள் மூவரையும் நகைமுகத்துடன் வரவேற்று உபசரித்தார் என்க!

(நிகழ்ச்சி மட்டுமே கற்பனை!)

- குத்தூசி குருசாமி (19-04-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It