kuthoosi gurusamy“ரஷ்யாவில் சினிமாவுக்கே ஒரு தனி மந்திரி இருக்கிறாராமே! இதையறியாது நீர் ஏன் சினிமாவைக் கண்டித்து எழுதுகிறீர்?”- என்று ஒருவர் என்னைக் கேட்டிருக்கிறார்.

ரஷ்யாவில் எது எதற்கு மந்திரியிருக்கிறார் என்பது எனக்கும் தெரியும். நானும் ஏதோ சில நூல்களாவது படித்திருக்கிறேன்; படித்துக் கொண்டிருக்கிறேன்.

கெஜம் 60 ரூபாய்-70 ரூபாய் என்று கூடத் துணி வாங்கிச் சிலர் கட்டுகிறார்கள். இதைப் பார்த்த ஒரு தொழிலாளி, தானும் தன் மாதச் சம்பளத்தில் ஒரு கெஜம் துணி வாங்கி வந்து தன் மனைவியிடம் தந்து, “இதோ? பார்! என் கண்ணாட்டி! உனக்காக இந்தத் துணி! கெஜம் 68 ரூபாய்! சம்பளத்தை அப்படியே கொடுத்து வாங்கி வந்தேன்!” - என்று கூறினால் அவன் மனைவி என்ன சொல்வாள்? “என் அருமை நாதா! உங்கள் அன்பே அன்பு!” என்று கூறி முத்தமா கொடுப்பாள்?

“ஏனய்யா! உனக்கென்ன மூளைக் கோளாறா, என்ன? வீட்டுக் கூரை ஒழுகுதுண்ணு தலை தலையா அடிச்சுக்குறேன்! திருட்டரிசி வாங்கப் பணமில்லாமே குழந்தைகள் ஒரு வாரமா சோளக் கஞ்சி குடிச்சுப்பிட்டு வயிற்று வலியாக் கிடக்குதுண்ணு சொல்றேன்! நீ என்னடாண்ணா, எழுபது ரூபாயிலே ஜாக்கெட் துணி வாங்கிகிட்டு வந்துட்டியே! என்னையென்ன சினிமா ஸ்டார்ண்ணா நினைச்சுகிட்டே?”- என்றுதானே கேட்பாள், அறிவு சூன்யமான மனைவியுங்கூட?

ரஷ்யாவில் எப்போது சினிமா மந்திரி ஏற்பட்டார்? புரட்சியின் போதா? தயவு செய்து சிந்தனைக்கு வேலை கொடுக்க வேண்டும். நாட்டை மீட்க வேண்டிய சமயத்திலா ரஷ்யாவிலே சினிமாக் கதை எழுதிக் கொண்டிருந்தனர்? இல்லை! இல்லை! எல்லோரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்தனர். ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்காக இரத்தஞ் சிந்தினர். வீட்டுக்கு வீடு படை முகாம்! எல்லோரும் கிளர்ச்சி செய்தனர்!

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டது. சர்வாதிகார ஆட்சி ஒழிந்தது. மக்கள் கைக்கு அதிகாரம் கிடைத்தது. உணவு, உடை, வீடு -யாவும் தேவைக்குமேல் கிடைக்கக் கூடிய திட்டங்களை வகுத்தனர். அதன் பிறகுதான் கலையுணர்ச்சி! அதுவுங்கூட எதையோ எழுதிப் பணந்திரட்டுவதற்காக அல்ல. சர்க்கார் சார்பில், சர்க்கார் கொள்கையைப் பிரசாரஞ் செய்வதற்காக!

பட முதலாளிகளுக்குப் பயந்து கொண்டு, தன் கருத்துக்களுக்கு 144 விதித்து, ஆமைபோல் உள்ளே இழுத்துக் கொண்டு கதை எழுதுவது, அல்லது நடிப்பது யாருக்குப் பயன் தரும்? நாட்டுக்கா?

சினிமாவே ஒழிய வேண்டும் என்பதல்ல, என் கருத்து. கள் - சாராயக் குடியைவிடப் பெருங்கேடாக இன்று முளைத்திருக்கின்ற சினிமாக்கள் ஏழைகள் பணத்தைச் சுரண்டத்தான் பயன்படுகின்றன!

மாட்டுக்கு முன்னே வண்டியை நிறுத்தி அதன் கொம்பில் வண்டியைக் கட்டலாமா? எதற்கு முன்னே எது வர வேண்டும் என்ற ஒழுங்குமுறை கூடவா கிடையாது? நாட்டில் யாவரும் ஒருமுகமான கிளர்ச்சிகள் செய்து, சுய ஆட்சி பெற்ற பிறகு, சுரண்டல் ஒழிந்த பிறகு, உணவும், உடையும், இருக்கையும் கிடைத்த பிறகு, கல்வி பரவிய பிறகு - ஒரு சினிமா மந்திரியில்ல; ஆசைப்படுகின்ற அத்தனை பேரும் சினிமா மந்திரிகளாகத்தான் வரட்டுமே! மக்கள் அம்மாதிரி விரும்பினால்! அதைவிட்டு ஆறவுன்ஸ் அரிசி தரப்படுகின்ற நாட்டிலிருந்து கொண்டு, “அடுத்த ஆண்டு முதல் எல்லோருக்கும் இலவச ரொட்டி கொடுப்பதென்ற” திட்டம் வைத்திருக்கின்ற ஒரு நாட்டைக் காட்டி, “அதோ! அங்கே சினிமா மந்திரி யிருக்கிறாரே! நானும் இங்கே ஒரு சினிமா மந்திரியாக ஆனாலென்ன?”- என்று கேட்பது என் சிற்றறிவுக்குச் சரியாகப் படவில்லை!

“ஏனப்பா! குடிக்கிறாய்?”, என்று கேட்டால் “என்னைக் கண்டு உனக்குப் பொறாமையா? வேணுமானால் நீயும்தான் குடித்துப் பாரேன்! ஒரு அவுன்ஸ் குடித்தால் மயக்கம் வந்துவிடுமே உனக்கு? நீ ஒரு கையாலாகாதவன்! அதற்கு நானென்ன செய்வது?”- என்று கேட்கலாமா? குடிக்கப் பழகுவது என்பது பிரமாதமல்ல; குடியர்களுடன் ஒரு வாரத்துக்கு நெருங்கிப் பழகினால் தானாக வந்து விடும்! குடி மட்டுமா? எதுவுமே வரும்! குடியர்களெல்லாம் பிறவிக் குடியர்களா, என்ன?

இந்த மாதிரிப் போட்டி என் போன்றவரிடம் போட்டுப் பயனில்லை. “கூடாது” என்பதுதான் எண்ணமே ஒழிய “முடியாது” என்பது அகராதியிலேயே இல்லை!

- குத்தூசி குருசாமி (26-11-1951)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It