lenin 350 copyசமாதானம், முன்னேற்றம் ஆகிய லட்சியங்களுக்கு மிக முக்கியத்துவமுடைய சோவியத் இந்திய மக்களிடையேயுள்ள நட்புறவு நீண்டகால மரபினைக் கொண்டது ஆகும். புரட்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததும் பின்னர் சோஷலிச வழியில் வாழ்க் கையை மாற்றியதுமான ரஷ்யாவினால் கவரப்பட்டவர் களில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் அரசியல் மற்றும் சித்தாந்தத் தலைவர் மகாத்மா காந்தியும் ஒருவராகும்.

1905-ஆம் ஆண்டின் முதலாவது ரஷ்யப் புரட்சியை காந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின்நாட்களில் “போல்ஷ்விக் லட்சியங்களுக்கு” புகழுரை வழங்கினார், லெனின் “மாமனிதர்” என்று பேசினார். இவ்வாறு கவரப்பட்டவர்களில் சுதந்திர இந்திய அரசின் முதல் தலைவரான ஜவகர்லால்நேருவும் ஒருவராகும். அவர் சோவியத் யூனியன்பால் மிகுந்த நேசம் பாராட்டினார்; சோவியத் இந்திய ஒத்துழைப்பை நிறுவுவதில் மகத்தான பாத்திரம் வகித்தார். அற்புதமான இந்திய எழுத்தாளரான ரவீந்திரநாத் தாகூர் அவருடைய இறுதிக்காலம்வரை சோவியத் யூனியனது உண்மையான நண்பராகவே இருந்துவந்தார். சென்ற நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஆரம்பத்திலேயே புகழ்பெற்ற இந்திய மெய்ஞ்ஞானியான சுவாமி விவேகானந்தர், எதிர்கால உலக வளர்ச்சிப் போக்கில் ரஷ்யாவின் முன்னணிப் பாத்திரத்தை முன்கூட்டியே எடுத்துரைத்தார்.

இதற்குப் பதிலாக, ரஷ்ய முற்போக்காளர்கள் 19-வது நூற்றாண்டிலும் 20-வது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்காக ஆழ்ந்த அனுதாபம் கொண்டனர். அவர்களை அடிமையாக்கிய காலனி யாதிக்க வாதிகளை அம்பலப்படுத்தினார்கள். இந்த வழியாகத்தான் இந்தியா பற்றிய லெனினது கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவைப் பற்றி ரஷ்யாவில் லெனினுக்கு முன்னதாகவும், ரஷ்யாவில் மட்டு மல்லாமல் பேசப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் அவசிய மாக மாறுபட்டிருந்தன. லெனினது சில வார்த்தைகள், எளிமையான வார்த்தைகளும் விசேஷமாக ஆழமான வரலாற்று அறிவு நுட்பம் நிறைந்ததாகவும் சமுதாய வளர்ச்சியின் விஞ்ஞானத் தத்துவத்திலிருந்து எழுந்த தாகவும் இருந்தது.

லெனினுக்கு முன்பும், அவருக்குப் பின்னரும் பல்வேறு நாடுகளில் பல முற்போக்கு மக்களைப் போலவே, காலனி ஆட்சி, எதேச்சாதிகார, பிரிட்டிஷ் காலனியாட்சியின் கொடுங்கோல் தன்மை ஆகியவற்றின் சாரத்தை லெனின் மிகவும் அம்பலமாக்கினார். அந்த ஆட்சி இந்திய மக்களை உண்மையிலே ராட்சதத் தனமான வறுமையில் தள்ளியது. “இந்தியாவில் பிரிட்டிஷ் பாணி ஆட்சியின் பெயரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் கொள்ளை நடவடிக்கைகளுக்கு முடிவே இல்லை” என்று 1908-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை பிரபுத்துவ சர்வாதிகார ஆட்சி என்று வர்ணித்து லெனின் எழுதினார்.

இந்தியாவின் விடுதலையில் நம்பிக்கை

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் திறமையையும், வலிமையையும் முழுக்க அறிந்திருந்து, 1908-ஆம் ஆண்டிலேயே மிகுந்த நம்பிக்கையுடன் அதன் தவிர்க்க வியலாத வீழ்ச்சியைக் கணித்துக் கூறினார் லெனின். இந்த ஆருடங்கள் எல்லாம், நாட்டின் வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருக்கும் காலனி ஆதிக்கத்தின் பிற்போக்குப் பாத்திரத்தினைப் பற்றிய லெனினது முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். வேறு எவருமல்லாமல், லெனின் தான் நாட்டின் அரசியல் அரங்கத்தில் புதிய சக்திகள் பிரவேசிப்பதை தெள்ளத்தெளிவாக அறிந்தார்.

இந்தியாவில் வெகுஜனங்களிடையே தேசிய அரசியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்ப அடையாளங்களை மிகுந்த திருப்தியுடன் அவர் குறிப்பிட்டார். அதுதான் அந்நாட்டின் எதிர்காலத்துக்கான பிரதான முக்கியத்துவமுடையது என்று கருதினார்.

Òஆனால் இந்தியாவில் அதன் தலைவர்களுக் காகவும் எழுத்தாளர்களுக்காகவும் மக்கள் தெருக்களில் எழத் தொடங்கியுள்ளனர்Ó என்று லெனின் 1903-ல் எழுதினார். மகாராஷ்டிரத்தில் பாலகங்காதரதிலகர், பிபின் சந்திரபாலர், பஞ்சாபில் லாலா லஜபதிராய், தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரனார் போன்ற தேசியத் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் தண்டிக்கப் பட்டதற்கு, நியாய விரோத விசாரணைகள், நாடு கடத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையே அவர் குறிப்பிடுகின்றார்.

1908-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பம்பாயில் நடந்த பொது வேலைநிறுத்தம், ஹர்த்தால் ஆகியவற்றில் 1,00,000 பேர் பங்கு பெற்றது லெனினது விசேஷ கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிகளின் அடிப் படையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த அவருடைய முக்கியமான முடிவுகளை வகுத்தார். இந்தியாவில் கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் ரஷ்யாவில் ஜாரிச எதேச்சாதிகாரத்திற்கும் இடையே சாயல்களை சுட்டிக் காட்டி 1908-ல் லெனின் எழுதினார். Òஇந்தியாவிலும் கூட, தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு மிக்க அரசியல் வெகுஜனப் போராட்டத்திற்கு வளர்ச்சி பெற்றுவிட்டனர். நிலைமை அவ்வாறு இருக்க, இந்தியாவில் (ஜார்) ரஷ்யபாணி பிரிட்டிஷ் ஆட்சி அழிந்துவிடும் என்றார்.

ஆனால், இந்தியாவிலும் சரி அல்லது உலகின் வேறு எங்கும் சரி இந்தியத் தொழிலாளர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை களில், பெரும்பாலும் அரைகுறையாக தன்னிச்சையாக எழுகிற, இன்னும் தனிமைப்பட்ட, ஆரம்பநிலை நடவடிக்கைகளில், அந்தசமயத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வருகிற முடிவின் உண்மையான அடையாளத்தை அவ்வளவு தெளிவாக அறிந்து சொல்ல வேறு எவராலும் முடியவில்லை. லெனின் அதனைக்  கண்டறிந்தார். வரலாறு அவர் கூறியது சரி என்று நிரூபித்தது.

1917-ல் லெனினியக் கட்சியின் தலைமையின்கீழ் ரஷ்யாவில் மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியானது, இந்தியா உள்ளிட்ட கீழையநாடுகளின் விடுதலை இயக்கம் மேலும் வளர்ச்சியடைவதற்கு சக்தி வாய்ந்த தூண்டுதலாக விளங்கியது.

இந்தியாவை உணர்தல்

இளம் சோவியத் அரசு நிலைத்திருப்பதற்கே தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்த வருடங்களில், இந்தியாவில் நிகழ்ச்சிகளை நெருக்கமாகக் கவனித்துவந்த லெனின், இந்த நாட்டினையும், அதன் விடுதலை இயக்கத்தையும் பற்றி ஆராயுமாறு அறைகூவல் விடுத்தார். 1921-ஆம் ஆண்டில் Òஇந்தியத் தோழர்களின் எழுத்துக்களை அவர்களை உற்சாகமூட்டும் பொருட்டு எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு பிரசுரிப்பதும், இந்தியாவைப் பற்றியும், அதனுடைய புரட்சிகர இயக்கம் பற்றியும் அதிகமான தகவல்களைச் சேகரிப்பதும் அவசியம்Ó (அடிக்கோடிட்டது லெனின்) என்று லெனின் Ôபிராவ்தாÕ ஆசிரியருக்கு எழுதினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கம் பரவி வரும் நாடுகளிடையே இந்தியாவின் சிறப்பான பாத்திரத்தை அதே ஆண்டில் லெனின் குறிப்பிட்டார்.

Òபிரிட்டிஷ் இந்தியா இந்த நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. அங்கே புரட்சி விகிதாச்சார அளவில் முதிர்ந்து வருகிறது. ஒருபுறம், தொழில்துறை, ரயில்வே தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவும், மறு புறத்தில் பிரிட்டிஷாரின் மிருகத்தனமான அச்சுறுத்தலின் அதிகரிப்புக்கு ஏற்பவும், அவர்கள் முன்பு இல்லாத வகையில் அதிகமாக அடிக்கடி படுகொலை (அமிர்த சரஸ்)யும், பொதுத்தண்டனைகளையும் கையாளு கின்றனர். அதற்கேற்பவும் முதிர்ச்சி பெற்றுவருகிறது.Ó

இடதுசாரி மனோபாவமுடைய தலைவர்களை மறுத்து, விசேஷமாக தேசிய இயக்கத்தை ஒரு பூர்ஷ்வா இயக்கம் என்று குணாம்சப்படுத்திய எம்.என். ராய் போன்றோரை மறுத்து, லெனின், இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் சூழ்நிலைகளின் குறிப்பிட்ட தன்மையையும் திட்டவட்டமான சரித்திர ரீதியான தன்மைகளையும் கவனத்திற்கொள்ளுமாறு லெனின் கேட்டுக்கொண்டார். கீழை நாடுகளில் “எழுச்சி பெற்றும், வரலாற்று ரீதியாக நியாயப்படுத்தப்பட்டும் உள்ள பூர்ஷ்வா தேசியத்தை ஒரு அடிப்படையாக எடுத்துக்கொள்வது அவசியமாகும்” என்று குறிப்பாக அவர் கூறினார். இந்தியா மற்றும் இதர கீழை நாடுகளின் தேசியத் தலைவர்கள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைத்தவர்கள் அந்தத் தலைவர் களின் நடவடிக்கைகளை முற்போக்கானவை, புரட்சி கரமானவை என்றும் அவர் கருதினார். எம்.என். ராயின் நினைவுக் குறிப்புகளின்படி, இந்த வழியாகத்தான் லெனின், மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளை மதிப்பிட்டார்.

காந்தி பற்றி லெனின்

காந்தியைப் பற்றி லெனினது கருத்துக்கள் அவராகவே பதிவு செய்தவைகள் நமக்குக் கிடைக்க வில்லை என்றுதான் இதுவரை நிலவிவருகிறது. ஆனால், இது சரி அல்ல. “பிரச்சாரகனின் குறிப்புகள்” என்ற கட்டுரையின் குறிப்புகள் 1922-இல் லெனினால் எழுதப்பட்டவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. (துரதிருஷ்டவசமாக, இக்கட்டுரை பிரசுரிக்கப்படவே இல்லை. பெரும்பாலும் லெனினது சுகவீனத்தினால் இருக்கலாம்) இக்குறிப்புகளிலிருந்து மதிப்பிட்டால், அவர் உலக வளர்ச்சியின் விரிவான சித்திரத்தையும் அந்தச் சமயத்தில் சோவியத் ரஷ்யாவின் நிலைமையையும் தருவதற்கு உத்தேசித்திருந்தார் என்று தோன்றுகிறது. அந்தக் குறிப்பு கீழ்க்கண்ட அம்சத்தைக் கொண்டிருக் கிறது.

“இரண்டு முனைகள், இரண்டுக்குமிடைப்பட்ட டால்ஸ்டாயைப் பின்பற்றிய இந்து” இவ்விதம் “டால்ஸ் டாயைப் பின்பற்றிய இந்து” என்று குறிப்பிடுவது காந்திதான் என்பதில் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. அது அவ்வாறு இருக்குமானால், பின்னவரை (காந்தியை) சர்வதேச முக்கியத்துவமுடைய தலைவராக லெனின் வர்ணித்தார். அவர்(காந்தி) “இரண்டு உலகு தழுவிய முன்னணிகளான” முதலாளித் துவம், சோஷலிசம் ஆகியவற்றின் மாபெரும் போராட்டத்தில் இடைப்பட்ட இடத்தை (இரண்டுக்கு மிடைப்பட்ட) வகித்தார். இந்த “உலகச் சண்டையின்” விளைவு, லட்சோப லட்சம் இந்திய மக்கள் உட்பட மனித குலத்தின் மிகப் பெரும்பான்மையினர், “அசாதாரணமான விரைவுடன் விடுதலைக்கான போராட்டத்தில் ஈர்க்கப்படுவதனைச்” சார்ந்திருக்கிறது என்று லெனின் கருத்துக் கொண்டிருந்தார்.

1920-இல் லெனின் செய்தியன்றை அனுப்பினார். அதில் “இந்தியத் தொழிலாளர்கள் விவசாயிகளின் விழிப்புணர்ச்சி” பற்றி எழுதினார் “விடுதலைக்காக வீரஞ் செறிந்த போராட்டத்தைத் தொடங்கியுள்ள முற்போக்கு இந்தியர்களை” வாழ்த்தினார். அந்தச் செய்தி கீழ்க் கண்டவாறு முடிவடைகிறது: “சுதந்திர ஆசியா நீடுழி வாழ்க”, இது 50 ஆண்டுகட்கு முன்பு, இந்தியாவின் நண்பரும், சோவியத் இந்திய மக்களின் ஒத்துழைப்பிற்கான கோட்பாடுகளை வகுத்தவரும் அடித்தளமிட்டவருமான லெனினால் எழுதப்பட்டது. அவருடைய ஆரூடங்கள், ஒடுக்கப்பட்ட தொழிலாளி மக்களிடம் அன்பில் தோய்ந்த, மனிதகுலத்தின் மேம்பாடான எதிர்காலத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கூடிய அறிவுபூர்வ ஆருடங்கள், நமது காலத்தில், உலக வளர்ச்சியின் தீர்மானமிக்க சக்தியாக சோஷலிசம் ஆகிவரும் வேளையில், உண்மையாகி வருகின்றன.

(ஆராய்ச்சி இதழ் 4-ல் வெளியான கட்டுரை)

Pin It