kuthoosi guruநாய் விற்ற காசு குறைக்குமா? - என்பார்கள்!

சாணி விற்ற காசு நாறுமா - என்று கேட்கிறேன்!

பணம் வரும் வழி எப்படியிருந்தாலும் சரி, பரவாயில்லை-என்பது பணப் படுக்கையில் படுத்திருக்கிறவர்களின் முடிவு! சந்தேகமிருந்தால் அக்கம் பக்கத்திலுள்ள அக்கிரமக்காரர்களைக் கேட்டுப்பாருங்கள்! யாரும் அகப்படாவிட்டால் அக்கிரகாரத்தில் கேட்டுப்பாருங்கள்!

தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல; சர்க்கார்கூட அப்படித்தான் கருதுகிறார்கள்.

குதிரைப்பந்தய சூதாட்டத்தைத் தடைசெய்து விட்டதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்த மாகாண சர்க்கார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தடை நடை முறைக்கு வருவதாயிருந்தது. நேற்று மந்திரிமார்கள் கூடிப்பேசி, இப்போது வேண்டாம்; அடுத்த ஆண்டிலிருந்து குதிரைப் பந்தயத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்களாம்!

அதுதான் நல்ல யோசனை! காந்தி சீடர்களே! குதிரைப் பந்தயக்காசு உங்கள் சம்பளத்துக்கும், உங்கள் கண் ஜாடையறிந்து கைதூக்குகின்ற “கைகாட்டி” களின் சம்பளத்துக்குமாவது ஆகுமல்லவா? சூதாட்டப் பணமாச்சே! ஏழைகள் ஏமாந்த காசாச்சே! பாபமல்லவா! குடியினால் வருகின்ற வருமானத்தைக் கூட “கரைபடிந்த காசு” என்றுதானே வெறுத்தோம்?- என்று கவலைப்படாதீர்கள், கனம் மந்திரிமார்களே!

உங்களுக்கிருக்கின்ற பணக் கஷ்டம் எனக்கு நன்றாகத் தெரியும். என்னைவிட நன்றாகப் பள்ளி ஆசிரியர்களுக்கும், ப்யூன்களுக்கும், கான்ஸ்டபிள்களுக்கும், சர்க்கார் குமாஸ்தாக்களுக்கும் தெரியும்! கள்ள மார்க்கெட் அரிசிக்கும், விறகுக்கும், வீட்டு வாடகைக்கும் கொடுத்தான பிறகு சம்பளம் வாங்கிய அடுத்த வாரத்திலேயே கையில் 10 ரூபாய் கூட மிச்சமிருப்பதில்லை! பாக்கிச் செலவுகள் கடனில்தான் என்பது, எந்தக் கதர்ச் சட்டைக்குத் தெரியப்போகிறது? இவர்கள் எப்படியோ தொலையட்டும்! சென்னை மந்திரிகளுக்கு ஆதாரம் தேடிவைத்திருக்கிறேன்.

அர்த்த சாஸ்திரத்தில் (நிபுணர் கவுடில்யர் எழுதியது) விரிவாகக் கூறியிருக்கிறது. சர்க்கார் பணம் திருட்டுகின்ற வழிகளைப் பற்றி! அடாடா! எத்தனை வழிகள் தெரியுமா? புதுப்புதுக் கடவுள்களை உண்டாக்கிக் கூடப் பணவசூல் செய்யச் சொல்லியிருக்கிறார்! ஆஸ்திக சிகாமணிகள் அவசியம் படிக்கவேண்டிய நூல்! கடவுள்கள் எல்லாம் மனிதனுக்கு (கற்பனைக்கு)ப் பிறந்தவை என்பதை அதன் மூலம் நன்றாகக் காணலாம்!

இன்னொரு ஆதாரம் தரட்டுமா?

காசியிருக்கிறதே காசி! அதாவது புண்யக்ஷத்திரம்! அந்த ஊர் நகர சபையார் விபசாரிகளுக்குத் தலைக்கு 50 ரூபாய் வீதம் வரி விதிப்பதென்று முடிவு செய்திருக்கிறார்களாம்! (அத்தனை பேரும் சினிமா ஸ்டார்களாக மாறிவிட்டால் என்ன செய்வார்களென்று நான் கேட்கிறேன்!) எப்பேர்ப்பட்ட முடிவு பார்த்தீர்களா? மந்திரிமார்களே! இந்தப் பாழும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் மட்டும் விபசாரத்தடைச் சட்டம் நிறைவேற்றி யிருக்காவிட்டால், உங்களுக்கும் எவ்வளவு லட்சக் கணக்கில் வருமானம் கிடைக்கும்?

கொழுத்த வருமானம் தொலைந்துபோய் விட்டதே! அட, பாவிகளா? எங்கள் காங்கிரஸ் மந்திரிகளுக்கு இவ்வளவு மகத்தான் நஷ்டத்தை உண்டாக்கிவைத்து விட்டுப் போய்விட்டீர்களே!

போகட்டும்! ஒரு யோசனை கூறுகிறேன்! விபசாரத் தடைச் சட்டத்தை நீக்கி விட்டாலென்ன? பிரஜா உரிமையின் கீழ் ஒருவன் தசரதனைப் போல 60,000 மனைவிகள் வரையில் வைத்திருக்கலாம் என்றும், (பலதார மணத்தடை சட்டத்தை எதிர்த்து ஒருவர் பம்பாயில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றுவிட்டார்) ஒருவர் விபசாரம் செய்கின்ற உரிமையை அரசியல் சட்டம் 13வது பிரிவு ஆதரிக்கிறது என்றும், யாராவது ஒரு ‘கில்லாடி’ அய்யரைக் கொண்டு ஹைகோர்ட்டில் வாதாடச் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்!

அதன் பிறகு, (1) குதிரைப்பந்தயம் (2) விபசார லைசென்ஸ் ஆகிய இரண்டு துறை வருமானங்களைக் கொண்டு கனம் மந்திரிமார்கள் தங்கள் சம்பளத்தை மூவாயிர ரூபாயாக உயர்த்திக் கொள்ளலாம்! இந்தப் பஞ்ச காலத்தில் இப்போது கிடைக்கும் அற்ப சம்பளம் (1500) ருபாய் எப்படிக் கட்டுபடியாகும்?

கனம் மந்திரிகளே! என்னுடைய பொருளாதார ஆலோசனை எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கிறது! நீங்கள்தான் என் யோசனையை ஏற்று நடக்க மறுக்கிறீர்களே!

குதிரைப் பந்தயம் நீடுழி வாழ்க!
விபசாரத்தடைச் சட்டம் ஒழிக!!
ஜேய் ஹிந்த்!!!

- குத்தூசி குருசாமி (9-1-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It