இந்திய தேசியத்தை மிகச் சரியாக 1930களில் அடையாளம் கண்டவர் பெரியார். இந்தியாவை ஒரு நேஷன் அல்ல என்றார் பெரியார். பெரியார் வழிவந்த அண்ணாவும் இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்றும் டெல்லி ஏகாதிபத்தியம் என்று கூறியுள்ளார்.

1970களில் இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடம் என அடையாளம் கண்ட இ.பொ.க (மா.லெ) இயக்கம் அதன் சமூகத்தன்மை பற்றி எவ்வித ஆய்வுகளும் செய்யவில்லை.

இ.பொ.க (மா.லெ) அமைப்பின் வழிவந்த தோழர் கார்முகில் அவர்கள் இந்திய சமூகத்தில் நீடித்து வரும் சாதியச் சிக்கல், தேசிய ஒடுக்குமுறை சிக்கல் என்பது பார்ப்பனியத்தின் இரண்டாயிரமாண்டு கால வரலாற்றோடு இணைந்திருப்பதையும் இ.பொ. இயக்கத்தின் கட்சித்திட்டங்கள் அனைத்தும் முந்நூறாண்டு வரலாறு கொண்ட காலனியகால சமூக அமைப்பையே ஆய்வு செய்து வகுக்கப்பட்டுள்ளது என சுயவிமர்சனமாக உணர்கிறார். பார்ப்பனியத்தின் இரண்டாயிரமாண்டு வரலாற்றுத் தொடர்ச்சியில் உருவாக்கப்பட்டதே 'இந்திய தேசியம்' என்ற இந்த ஒடுக்குமுறைக் கட்டமைப்பு என்கிறார்.

இந்திய தேசிய இனம் என்று இல்லை அவ்வாறு இருக்க பார்ப்பனியத்தை அதன் இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டதே இந்திய தேசியம். இது அரசியல், பொருளாதர, கலாச்சாரத்துறைகளில் தேசிய இனங்களின் வளர்ச்சியை முற்றாக நசுக்குவதன் மூலமே செயல்படுகிறது.

இவ்வாறு சாதிய சமூக அமைப்பை பாதுகாப்பது, தேசிய இனங்களின் சுயமான பொருளியல் வளர்ச்சியைத் தடுப்பது, கலாச்சார. அரங்கில் மக்களின் மொழியும் அதுசார்ந்த கலாச்சாரத்தை இழிவானதாக்கி பார்ப்பனிய சமக்கிருத மொழி அது வழியான பண்பாட்டை உயர்வானது என ஆக்குவது - என்பதே இந்திய தேசியத்தின் இயல்பாகும். இதனால் இந்திய தேசியம் என்பது தரகு முதலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்தியமாக செயல்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகளை மிக விரிவாக இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும் என்ற நூலில் முன்வைத்துள்ளார். சிக்கலான இந்திய சமூக அமைப்பை அதன் அரசியல், பொருளியல், பண்பாட்டு தளங்கில் ஆய்வு செய்து முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் திராவிட இயக்கத்தவர்களும், தமிழ்த் தேசிய இயக்கத்தவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்களும் என அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய அரசியல், பொருளியல், பண்பாட்டியல் நெருக்கடிகளின் ஊற்றுக்கண் எது?

அரசியல் தளத்தில்

இன்று நாம் தமிழகத்திலும் இந்தியா முழுவதும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் அனைத்தும் சற்றொப்ப ஒரே மாதிரியானவைகளேயாகும்.

1) நாம் அரசியல் தளத்தில் முற்ற முழுக்க ஒரு பாசிச கொடுநெறி அடக்குமுறையை சந்திக்கின்றோம். பாராளுமன்றம் என்பது எந்த ஜனநாயக மாண்புகளையும காக்கத் தவறிய ஓர் அரட்டை மடம்போல் உள்ளது. நாட்டின் பிரதமர் மோடி எந்த விவாதங்களையும் பாராளுமன்றத்தில் எதிர்கொண்டு பதில் அளிப்பதில்லை. செய்தியாளர்களைக் கூட சந்திப்பதை தவிர்த்து விடுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்களிடம் நீதி கேட்டு வரும் நிலை உருவாகியுள்ளது. ஊழல்களைக் கட்டுப்படுத்தும் மிக உயர் அமைப்பான சி.பி.ஐ. தலைமை நிலையத்தில் வரலாறு காணாத மோதல். பிரதமரின் ஆசிபெற்ற அஸ்தானா அந்த அமைப்பை வீதிக்கு கொண்டு வந்துள்ளார்.
modi and epsதமிழகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, இவைகளின் மீதான கொடூரத் தாக்குதல் நடைபெறுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்த நாட்டு மக்கள் சுட்டுப் பொசுக்கப்படுகிறார்கள். அரசின் திட்டங்களைப் பற்றி பேசினாலே தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு வெள்ளையன் காலச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நாடாளுமன்ற ஜனநாயகம் வெளிப்படையான சந்தை ஜனநாயகமாக மாறி முடைநாற்றம் வீசுகிறது. மக்களின் வாக்குகள் ஏலத்தில் விடப்படுகிறது, இதை ஆளும் வர்க்க கட்சிகளே ஒப்புக்கொண்டு வாக்கின் விலையை சொல்லி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் கொள்கையிழந்து கார்பரேட் கம்பெனிகள் போல மாறி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும் தனது போர்க்குணத்தை இழந்து சீரழிந்த முதலாளிய விளம்பர பகட்டு நடவடிக்கைகளில் காலந் தள்ளுகின்றன.

மொத்தத்தில் பெயரளவிற்கான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிட்டு ஒரு கொடூர பாசிசத்தை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். அரசின் பயங்கரவாதத்தையும், அதன் பார்ப்பனிய. ஆதிக்கத்தையும் அறிவுத்தளத்தில் எதிர்த்துப் போராடும் அறிவுத்துறையினர் வெளிப்படையாக பார்ப்பனிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சாரமாக முதலாளிய ஜனநாயகம் என்பது கூட மறுக்கப்பட்டு ஒரு பாசிசத் தன்மை கொண்டதாக அரசியல் களம் மாறிவிட்டது. இது பாஜக காலத்தில் அதிகரித்துள்ளது என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸும் இதே கொடுநெறியோடுதான் செயல்பட்டது. இனியும் செயல் படும்.

பொருளியல் தளத்தில்

இன்று நாம் சந்திக்கிற கடுமையான. பொருளியல் நெருக்கடி காரணமாகவே அரசியலில் பாசிச அடக்குமுறை நிலவுகிறது. பொருளியல் தளத்திலான நெருக்கடிகளை பட்டியலிடும் முன் இதன் தோற்றுவாய் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக, மிக முக்கியமானது.

ஏகாதிபத்தியங்களின் காலனி ஆதிக்கத்திற்காகவே முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப்போரின் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்கள் தனது காலனிய சுரண்டல் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துகொண்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டனின் வீழ்ச்சியும் அமெரிக்கா எழுச்சியும் முதலாளிய முகாமில் நடைபெற்றது. சோவியத்திலும், சீனத்திலும் சோசலிச முகாம் வலுப்பெற்றது. இவ்வாறு உலகம் இருவேறு துருவங்களாக இயங்கி வந்தது.

தமது காலனிய சுரண்டல் முறையை புதிய உலக நிலைமைகளுக்கேற்ப மாற்றியமைத்தன ஏகாதிபத்தியங்கள். இதைப் புதுக்காலனிய காலகட்டம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தைப் பெயரளவிற்கு ஒப்புக்கொள்வது. ஆனால் தனது தரகர்களாக அந்த நாட்டு முதலாளி வர்க்கத்தை மாற்றிக்கொண்டு சுரண்டலைத் தொடர்வது. இவ்வாறு அரசியல், பொருளியல் ஆதிக்கத்தை முழு அளவில் வேறுவடிவங்களில் தொடர்வதுதான் புதுக்காலனிய கொள்கையாகும்.

உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (IMF), வணிக ஒப்பந்தங்கள் என பொருளாதார சுரண்டலை வளரும் நாடுகள் மீது திணித்தன. ஐக்கிய நாடுகள் சபை எனும் தனது கைப்பாவை அமைப்பை வைத்து உலக நாடுகளை கட்டுப்படுத்தியது.

சோசலிச முகாமின் வீழ்ச்சிற்குப் பிறகு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என வெளிப்படையாக தனது புதுக்காலனிய ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. இந்தியாவில் 1947 ல் நடைபெற்ற மாற்றம் காலனிய சுரண்டல் முறையை புதுக்கானிய சகாப்தத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டதன்றி வேறல்ல.

globalization effectஇந்திய முதலாளிகள் ஏகாதிபத்திய நலன்களைப் பேணிக் காப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். உள்நாட்டில் தாமே ஒரு ஏகாதிபத்தியமாகச் செயல்பட்டு அனைத்து தேசிய இனமக்களின் சுதந்திரமான பொருளியல் வளர்ச்சியை தமது ஏகாதிபத்திய சார்பு பொருளியல் கொள்கைகளால் தடுத்து விட்டனர். பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக நமது தாயகமாம் தமிழகம் ஆக்கப்படடுள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நச்சுத்தொழிற்சாலைகளை நம் தலையில் கட்டுகின்றனர். இதனால் ஏகாதிபத்தியங்களின் குப்பைத்தொட்டியாக மாற்றிவிட்டனர்.

இனி சந்தைப் பொருளாதாரம் தான் சமூகத்தை ஆளும் என' உலகமயம்' வெளிப்படையாக அறிவிக்கை செய்தது.

கல்வி, குடிநீர், மருத்துவம், உணவுப்பாதுகாப்பு என்ற மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் தனியார் கார்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டது. மக்களின் சமூகப் பாதுகாப்பை அரசு தனது பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டது.

இயற்கை வளங்களை சூறையாடுவது வரம்பற்றுப் போய்க்கொண்டுள்ளது. மக்களின் தேவைக்கான உற்பத்தியை விட நுகர்விய வாழ்விற்கான உற்பத்தியில் மூலவளங்கள் செலவழிக்கப்படுகிறது. இதனால் பெருவாரியான. சாமானிய மக்களின் தேவைக்கான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

வேளாண் பொருளியல் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனால் இடுபொருள்கள் வாங்கமுடியாத விலையில் உள்ளன. விளை பொருட்களை கார்பரேட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளையடிக்கிறது.

உலக வர்த்தகக் கழகத்தின் நெருக்கடியால் வேளாண் மானியம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து மடிவது அதிகரித்து வருகிறது. வேளாண்மையை நம்பி வாழும் 50% க்கும் மேலான மக்களின் வாழ்க்கை மிக மோசமடைந்த நிலையில் உள்ளது.

தொழிற்துறையில் சிறு தொழில்கள் நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பல்லாயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. உழைப்புச் சுரண்டல் மிகக் கொடூரமாக நடந்துவருகிறது. ஒப்பந்தமுறை என்ற திட்டத்தை அரசே செயல்படுத்துகிறது. பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவை பகல் கனவாகிவிட்டது.

அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

(தொடரும்)

- கி.வே.பொன்னையன்

Pin It