kuthoosi gurusamy 268“கள்ள மார்க்கெட் வியாபாரத்தையும் பதுக்கலையும் ஒழிப்பதற்காக கெடுபிடியான நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாமே?” என்று வியாபாரி யொருவர் என்னைக் கேட்டார்.

“அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? நீங்கள்தான் அதில் சேர்ந்தவர்களல்லவே!” என்றேன்.

“நான் கள்ள மார்க்கெட் வியாபாரிகள் கூட்டுறவு சொஸைடியில் ஒரு மெம்பராயில்லை யென்றாலும், சுத்த சுயம்பிர காசமானவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்படி ஒருவர் இருப்பதாகச் சொன்னால் ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷன் இருப்பதாகச் சொல்வது போலத்தான்,” என்றார்.

இத்துடன் நிறுத்தவில்லை, இவர், கள்ள மார்க்கெட்டில் விற்பதற்காகவே தாம் சுமார் பத்தாயிர ரூபாய் சரக்குகள் வாங்கி வைத்திருப்பதையும் குறிப்பிட்டார்.

நியாய விலைக்கு விற்றால் 1,000 ரூபாய்கூட லாபங் கிடைக்காதென்றும், கள்ள மார்க்கெட்டில் விற்றால் ஒரே ஆண்டில் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்குமென்றும் கூறினார். என் யோசனையைக் கேட்பதற்காகவே வந்திருப்பதாகவும் சொன்னார்.

என் நண்பரான அவருக்குச் சொன்ன யோசனையை மற்ற வியாபாரிகளும் பின்பற்றலாம் என்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்:-

எந்தச் சட்டம் வந்தாலுஞ் சரி. அதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழிதானுண்டு. பூணூல் அணிந்துகொண்டு எந்த அக்ரமம் செய்தாலும் பிராமணன் - உயர்ந்த ஜாதி என்ற பாதுகாப்பு இருப்பதுபோல, கள்ள மார்க்கெட் வியாபாரஞ் செய்ய வேண்டியவர்கள் எல்லோரும் தவறாமல் கதர்த் துணியை அணியுங்கள்! கள்ளிறக்கும் மொந்தையைக்கூட கதர்க் துணியால் மூடி வைத்தால் எந்த அதிகாரியும் அதன் கிட்டே நெருங்க மாட்டான். கதர் அருகில் “காங்கிரஸ் ஷாக்” அடிக்குமே!

உதாரணம் கூறுகிறேன், கேளுங்கள், எனக்குத் தெரிந்த ஒரு காங்கிரஸ்காரர் - ஆச்சாரியாருக்கு நெருங்கிய நண்பர். முருகன் கோயில் விபூதியைப் பார்சலாகக் கட்டி விமானத்தில் சி. ஆர். க்கு அனுப்பியவர்! புதுவீடு கட்டி மந்திரியைக் கூப்பிட்டுத் திறக்கச் செய்தவர்.

இவர் ஏதோ ஒரு பொது ஸ்தாபனத்திலிருந்து சுமார் 50, 000 ரூபாய் கையாடல் செய்துவிட்டார். “செய்து விட்டார்” என்று நான் சொல்ல மாட்டேன்! படுபாவி ஆடிட்டர்கள் “கதை கட்டி” விட்டிருக்கலாம்!

எப்படியோ, இவர்மீது வாரண்ட் பிறப்பிக்கிற மாதிரி நிலைமை முற்றி விட்டது.

இவர் குற்றவாளியோ, நிரபராதியோ, எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் எனக்கத் தெரியும் - அதிகார வர்க்கம் இவரிடம் நெருங்கு வதற்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது! ஏன் தெரியுமா? கதர்த் துணி கட்டியிருக்கிறார்! தொட்டால் “காங்கிரஸ் ஹாக்” அடிக்கிறது!

இப்போது அதிகாரிகளிலேயே சிலர் இந்த வேஷம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்! ஆகையால் எந்தப் பாவத்தையும் புண்ய தீர்த்தத்தில் முழுக்குப் போட்டுக் கரைக்கலாம் என்று

புராண - இதிகாசங்கள் கூறுவதுபோல, இன்று கதர்த் துணியினால் மூடி மறைத்துவிடலாம்! அது ஒன்றுதான் சுளுவான வழி!

- குத்தூசி குருசாமி (23-8-50)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It