தோழர் சத்தியமூர்த்தி பொய்ப் புகார்களுக்குப் பதில்

தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரையொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகி விட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். "அபேட்சகராக நிற்கும் ஆளை கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுப் போடுங்கள்" எனக் கூறுகிறார்கள். இது நாமம் போட்ட சோம்பேரிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிறது.

periyar 433நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்தஸ்தையும், யோக்கியதாம்சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்வது தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டுப் போடும் உரிமை உங்களுக்கு உண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாறமாட்டீர்களென்பது நிச்சயம். காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரசாரத்தை நீங்கள் கவனிக்கக்கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படியிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள்.

தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்கு மேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டுமென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றனவென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம் மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்கு பதில் கூற வேண்டியிருக்கிறது.

(குறிப்பு: 20.10.1934 மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தோழர் சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தும் திவான்பகதூர் ஏ. ராமசாமி முதலியாரை இகழ்ந்தும் சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும், ஆந்திர ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும் வெளியிட்டிருந்த துண்டு பிரசுரத்திற்கு பதில் கூறுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியது.

பகுத்தறிவு சொற்பொழிவு 28.10.1934)

Pin It