kuthoosi gurusamy2அன்னை வைத்த தீ அடிவயிற்றிலே!”

“அவர்கள் வைத்த தீ அடிப்படையிலே!”

தீ வைப்பதில் கூட இடம் முக்கியமானது! நம் தலைமயிரிலேயே நாம் தீ வைத்துக் கொள்ளலாமா? எது எதில் எப்போது தீ வைக்க வேண்டும் என்பதை ஆலோசித்துச் செய்ய வேண்டும். பச்சை வகுப்புவாதம் எழுதுகிறது என்பதற்காக “ஹிந்து” பத்திரிகையிலோ, அல்லது “சு. மி.” பத்திரிகையிலோ பொதுக் கூட்டத்தில் தீ வைத்து நம் அதிருப்தியைக் காட்டிக் கொண்டாலென்ன?- என்று சிலர் கேட்கிறார்கள்.

ஆஹா! செய்யலாம்! அன்னியத்துணி மீது நம் வெறுப்பைக் காட்டிக் கொள்வதற்காக அன்று கதர்த் துணிக்காரர்கள் தீயிடவில்லையா? அது போல!

“ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்தில் மனு தர்மத்தையாவது, பகவத் கீதையையாவது, பஞ்சாங்கத்தையாவது, தர்ப்பைப் புல்லையாவது தீ வைத்துக் கொளுத்தப் போகிறேன்,” என்று ஒரு சுயமரியாதைப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

ஆஹா! தப்பு ஒன்றுமில்லை, பேஷாகச் செய்யலாம். ராமன் படத்தைக்கூடக் கொளுத்தலாம், துணிவிருந்தால்!

தீ வைப்பது பற்றி முழுவிவரமும் அறிய விரும்புவோர் இதில் நிபுணர்களான ஆகஸ்ட் தியாகிகள்- அல்லது அவர்களின் தலைவர்களான மந்திரிகள், அல்லது சட்டத்தை இயற்றுகின்ற சட்டசபை (காங்கிரஸ்) உறுப்பினர்கள் - ஆகியோரைக் கேட்கலாம்!

“அவர்கள் வைத்த தீ அடிப்படையிலே”. என்று கூறினேனே! அதென்ன தெரியுமா?

நாமெல்லோரும் எந்த வகையிலும் ஒன்று சேர்ந்து விடாதபடி நம் ஒற்றுமையின் அடிப்படையிலேயே தீ வைத்து விட்டார்கள், அவர்கள்! “பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்!...... நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்!” (கபிலர்)

-அதாவது அவர்கள் வைத்த தீயின் பெயர் ஜா-தீ; பெருந்தீ! சந்தேக மில்லை! எப்பேர்ப்பட்ட வில்லாதி வில்லனையும் வாட்டி வளைவெடுக்கிறது, இந்த ஜா-தீ!

தன் ஜாதியை விட்டு வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ள முயன்று பாருங்கள். வீராதி வீரர்கள் கூட மண்ணைக் கவ்வி விடுகிறார்கள்! மணிக்கணக்கில் பேசுகிறவர்கள் - பத்திக் கணக்கில் எழுதுகிறவர்கள் - சிறையைப் பலமுறை படையெடத்தவர்கள் - யாராயிருந்தாலுஞ் சரி, கலப்பு மணம் என்றால் உடனே டன்கர்க் - ஒரே ஓட்டம்! குதிகால் பிடரியில் அடிபடும்படியான வீர ஓட்டம்!

அந்தோணிப் பிள்ளை - சக்கரை செட்டியார் - ஆரோக்கியசாமி முதலியார்- அற்புதசாமி உடையார் - டேவிட் நாடார்!

அடாடா என்ன கூத்து! கொஞ்ச நாள் போனால் சர்ச்சில் முதலியார், அட்லி நாடார், ட்ரூமன் பிள்ளை என்றுகூட இவர்கள் சொந்தங் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த ஜா-தீ இந்தியக் கிறிஸ்தவர் பங்களாவிலும் பிடித்துச் சாம்பலாக்கி விட்டது!

“தோய்காமாஸ் (வெள்ளாளர்) போன்ற ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் புத்த குருக்களாக வர அனுமதிக்கப்படுகின்றனர். புத்தர்களிடையிலும் ஜாதி வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது,”

- என்று யாழ்ப்பாணம் மேயரான சி. பொன்னம்பலம் கூறுகிறார்.

ஆமாம்! ஜாதியை ஒழிப்பதற்காகவே உண்டாக்கப்பட்ட கொள்கைக்குள்ளேயும் இந்தத் தீ!

பாக்கி சங்கதியெல்லாம் மெள்ள நடக்கட்டும்! முதலில் இந்த ஜா-தீயை அணையுங்கள் என்றால், யாராவது கேட்கிறார்களா? நம்மைப் பார்த்து உறுமுகிறார்கள்!

“இந்த சு. ம. வுக்கு இதைத் தவிர வேறெதுவுமே தெரியாது போலிருக்கே!” என்று நையாண்டி செய்கிறார்கள்!

தீ அப்பா தீ! பெருந்தீ! பல கோடி மக்களைச் சுட்டெரித்திருக்கும் தீ அப்பா! அதை முதலில் அவிக்கவா! ஆபத்தான வேலை என்பதற்காக சாக்குப் போக்குச் சொல்லாதே! புறப்படு பார்க்கலாம்!

குத்தூசி குருசாமி (15-6-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It