வித விதமான சந்தேகங்களெல்லாம் கேட்கிறார்கள், நம் சு.ம. தோழர்கள்.

  1. மருள் வந்து ஆடுகிற ஆசாமியைக் கிணற்றிலோ குளத்திலோ தள்ளினால் பிழைத்துக் கொள்வானா? அப்படித் தள்ளிப் பார்க்கலாமா?
  2. மந்திரத்தின் மூலம் தேள்கடி விஷத்தைக் குறைப்பவர்களைக் கொண்டு பறக்கிற விமானத்தை மந்திரத்தின் மூலம் நமக்கு நேரே (??) இறங்கச் சொல்லலாமா?
  3. புரோகிதன் வாங்கிக் கொண்டு போகும் அரிசி, காய்கறி வகையறாக்களைப் பறிமுதல் செய்து ஏழைக்குத் தந்துவிட்டு, அந்தப் புரோகிதன் மீது நம்பிக்கை மோசடிக்காக (பிதிர் உலகத்திற்கு அனுப்புவதாகச் சொன்னது பற்றி) வழக்குத் தொடரலாமா?
  4. பாலாபிஷேகம் செய்கிறவர்கள் அதி முக்கியமான உணவுப் பொருளை வீணாக்குவதாகச் சொல்லி அவர்கள் மீது வழக்குத் தொடரலாமா?
  5. சோதிட நிபுணர்களில் யாராவது “இந்தக் காங்கிரஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்?” என்பதைப் பற்றி நன்றாகக் கணித்து பத்திரிகையில் வெளியிடச் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாமா?

kuthoosi gurusamy 300இம்மாதிரி வித விதமான ஆய்யப்பாடுகள் தோன்றுகின்றன!

இவைகளைப் பற்றியெல்லாம் பின்னால் கவனிக்கலாம்.

முக்கியமான ஒரு சந்தேகத்தைப் பற்றி இன்று எழுதப் போகிறேன்.

“நான் ஒரு கோவில் பணியாள். 24 வருஷமாய் கோவிலில் வேலை செய்து வருகிறேன். சாதாரண காலங்களில் விளக்குப் போடுவதும், திருவிழா சமயங்களில் சாமி தூக்குவதும் தான் என் வேலை. மாதம் பத்து ரூபாயும் சோற்றுக்கட்டி தினம் நாலும் தான் எனக்குக் கிடக்கும் கூலி. திருவிழாக் காலங்களில் தேங்காய் மூடி, பழம் முதலியவைகளும் கிடைக்கும். 24 வருஷமாக சாமி தூக்கித் தூக்கி என் தோள் பட்டை சோற்றுப் பட்டையைவிடப் பெரிதாக உப்பி விட்டது. எதற்கெல்லாமோ சட்டம் செய்கிற சர்க்கார் என் தோள்பட்டை உப்பாமலிருப்பதற்கு ஒரு சட்டம் செய்யக்கூடாதா? மாடுகள் இவ்வளவு எடைக்குமேல் பாரம் இழுக்கக் கூடாது என்று சொல்லுகிறார்களே! மனிதர்களாகிய நாங்கள் 7-8 மணங்கு வாகனத்தைத் தூக்குகிறோமே! மாட்டின் கழுத்து வீங்கினால் மாட்டுக்காரன் தண்டிக்கப் படுகிறானே! என் தோள்பட்டை வீக்கத்திற்கு யாரையும் தண்டிப்பதில்லையா? அது மட்டுமல்ல. வாகனத்தோடு கூட அய்யர்களும் உட்காருகிறாக்ளே! இது என் தோளுக்குப் பாரம் மட்டுமல்ல; நெஞ்சில் பெரும் பாரமாக இருக்கிறதே! மனிதனை மனிதன் தூக்க வேண்டுமா, இந்தக் காலத்தில்? நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன். கோவில் அதிகாரிகள் என்னைத்தான் மிரட்டுகிறார்கள். அர்ச்சகரம் என்னை ஏற இறங்கப் பார்க்கிறாரே யொழிய, இறங்க மறுக்கிறாரே! நாங்கள் கட்டுப்பாடாகத்தான் இருக்கின்றோம். ஏன் ஒரு நாளைக்குத் திடீரென்று வாகனத்தோடு அய்யரையும் சேர்த்து ஏதாவத ஒரு பள்ளத்தில் போட்டு விடக் கூடாது? அது சட்டப்படிக் குற்றமாகுமா? கடவுள் தண்டிப்பாரா?”

- இந்தத் தோழனுக்கு நான் என்ன பதில் கூற முடியும்? இவர் நிலைமை பரிதாபகரமானது தான். மனிதனை மனிதன் சுமப்பது அநீதிதான்! அதுவும் மோட்டார் வாகனம் வந்திருக்கும் இந்த நாளில்! வாகனத்தையும் “சாமி” யையும் ஒரு லாரியில் வைத்து ஓட்டிக் கொண்டு போகலாம், பக்தர்களுக்குச் சுண்டைக்காய் அளவாவது புத்தியிருந்தால்! என்ன செய்வது? புத்தியில்லாத மக்களிடையே வாழ வேண்டியதாகி விட்டதே!

அர்ச்சகரையும் வாகனத்தையும் பள்ளத்தில் போட்டால் சட்டப்படி குற்றமா?- என்று கேட்கிறார். சட்ட நிபுணர்களைக் கேட்டுப் பார்த்தேன். எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று கூறப்படவில்லை யென்றும், ஆனால் இது புதிதாக இருப்பதனால் 4-5 ஊர்களிலாவது போட்டுப் பார்த்தால் தான் சட்டத்தில் தெளிவு ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். ஆகையால் சட்ட விஷயத்தை இத்துடன் நிறுத்தி விடுகிறேன். எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது.

இனி, அடுத்தபடியாக “கடவுள் தண்டிப்பாரா?” என்ற சந்தேகத்தைக் கவனிப்போம். எந்தக் கடவுள் தண்டிப்பார்? தோழன் தூக்குவது கடவுளல்ல; அது வெறும் சிலை. ஆகையால் அதனால் தண்டிக்க முடியாது.

அது கடவுளாயிருந்தால் முதலில் தன் படைப்பாகிய மனிதன் தோளை உப்ப வைத்து, உல்லாசப்படாது. ஆதலால் வாகனத்தின் மீதுள்ள 'சாமி'யைப் பற்றித் தோழன் கவலைப்பட வேண்டியதில்லை. அது எதுவும் செய்யாது என்பதற்கு நானே பொறுப்பாளி! மற்றப்படி உருவம் இல்லாது “எங்கும் பிரகாசமாய்” உள்ள கடவுள் கோபிப்பாரா என்பத எனக்குத் தெரியாது. அவரைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்!

ஆனால் ஒன்று நிச்சயம், தைரியமுள்ளவனுக்கு என்றுமே வெற்றிதான். கோழைக்குத்தான் தோல்வி, எதிர்ப்பு என்னும் சாணையில் தீட்டப்படுகிறவனே வீரன். வீரன் பழைமைக்கு அஞ்ச மாட்டான். புரட்சியே செய்வான். பல வீரர்கள் பலியானதன் பயன்தான் இன்றைய மனித வாழ்க்கை.

ஆனால் எந்தப் புரட்சியும் முறையோடு நடக்க வேண்டும். கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும்.

- குத்தூசி குருசாமி (03-09-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It