பொறாமை என்ற குணம் இருக்கிறதே! அது நாம் உண்ணும் சோற்றைப் போன்றது! பொறாமையும் சோறும் ஒன்றே! இதென்ன, ஆத்திசூடி மாதிரி ஒரே சுருக்கமாயிருக்கிறதே, என்று நினைக்காதீர்கள். விளக்கி விடுகிறேன்.

kuthoosi gurusamy 300நாம் சாப்பிடும் சோறு சத்தே யில்லாதது. சத்தான கஞ்சியை வடித்து கழுநீர்ப் பானையில் அல்லது சாக்கடையில் ஊற்றிவிட்டு, வெறும் சக்கையை (வைக்கோலுக்குப் பதிலாக, அதை நான்கு கால் பிராணிகள் எடுத்துக் கொள்வதனால்) தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். இது தவறுதான்; ஆனாலும் இதைச் செய்யாதவர்களே யில்லை, (என்னையும் சேர்த்து). இதைப் போலத்தான் பொறாமை என்பதும். பொறாமை கூடாது தான்; ஆனாலும் பொறாமைப் படாதவர்களே யில்லை.

வாழைப் பழத்திலுள்ள பழத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுத் தோலை மட்டும் தின்றால் அவனை நாம் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு (நம் செலவிலேயே) அனுப்பி விடுவோம்! ஆனால் கஞ்சியை வடித்துவிட்டுச் சோறு சாப்பிடும் நம்மை யாரும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதில்லை! காரணம், இடமிருக்காது! அனுப்புவதற்கு ஆளுமில்லை! (அத்தனை பேரும் கீழ்ப்பாக்கம்!) இந்த ஒரு புத்திசாலித்தனத்துக்கே நம்மில் ஒவ்வொருவருக்கும் (என்னை மறந்து விடாதீர்கள்!) ஒரு நோபல் பரிசு கொடுக்கலாம்!

ஆனால் நாம் வருஷத்துக்கொரு தரம் பொங்கல் விழாக் கொண்டாடுவதில் மட்டும் குறைச்சலில்லை!

எதுவும் திருவிழாதான், நமக்கு! ஒரு நாளைக்குப் பொங்கல் செய்து உண்டுவிட்டு, மீதி 364 நாட்களும் அரிசிச் சக்கையை மேய்ந்து கொண்டிருப்போம்! வருஷத்தில் ஒரு நாளைக்கு மாட்டைக் கும்பிட்டுவிட்டு மீதி 364 நாட்களும் அதை அடித்துக் கொல்வோம்! இத்தியாதி! இத்தியாதி!

பொறாமை என்ற குணம் சோறு போன்றது என்றல்லவா சொன்னேன்? சரிதானே?

சாதாரணமான தண்ணீர் விஷயத்தில் கூட நம்மிடம் பொறாமை யில்லாமலில்லை. நகரத்திலிருப்பவர்கள் கிராமாந்திர மக்களைப் பார்த்து, “அடாடா! எவ்வளவு தாராளமாகக் குளத்திலும், ஆற்றிலும் குதித்துக் குதித்துக் குளிக்கிறார்கள்? நாம் வடநாட்டுக்காரன் மாதிரி ஒரு மூக்குச் செம்பு தண்ணீரில் உடம்பு முழுவதையுமே கழுவ வேண்டியிருக்கிறதே!” என்று பொறாமைப் படுகிறார்கள்! ஆனால் அதே கிராமவாசிகள் நகரவாசிகளைப் பார்த்து, “அடாடா! அவர்கள் பாடுதான் அதிர்ஷ்டம்! நம்மைப் போல வெகு தூரம் போய் அலைய வேண்டியதில்லை! குழாயைத் திருப்பியவுடனே மந்திரக் காளி தண்ணீரைக் கொட்டுகிறாளே! பானையோ, அண்டாவோ, குடமோ தேவையில்லை; தண்ணீர் தூக்க வேண்டிய அவசியமில்லை. கிணற்றில் குனிந்து இழுக்கும் தொல்லையுமில்லை!” என்று அவர்கள் நகரவாசிகளைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார்கள்.

நகரவாசிகள் கூட ஒருவருக்கொருவர் இதே தண்ணீருக்காக பொறாமைப் படத்தான் செய்கிறார்கள். வெளி நகரத்தார் சென்னைவாசிகளைப் பார்த்து, “இவர்கள் பாடுதான் யோகம்! வீட்டுக்கு வீடு குழாய்! தெருவில் நின்று தயங்கித் தவிக்க வேண்டியதில்லை! “மீட்டரு”ம் இல்லை! தாராளமாய்க் குளிக்கலாம்! இரவு பகலாய் சாக்கடையில் போகுமாறு (உண்மையில் அதுதான் நடக்கிறது!) குழாயைத் திறந்து விட்டால்கூடக் கேட்பாரில்லை! நினைத்த நேரத்தில் தண்ணீர் வருகிறது! நம்மைப்போலத் தினம் 4 மணி நேரம்தான் என்று கிடையாது!” என்று பொறாமைப் படுகின்றனர்.

சென்னை வாசிகளோ, திருச்சி - மதுரை போன்ற நகரவாசிகளைப் பார்த்து, “இவர்கள் பாடு தேவலாம்! குழாயைத் திறந்துவிட்டு வாயையும் திறந்தால் போதும்! சுத்தமான ஆற்றுத் தண்ணீர்! அப்படியே குடிக்கலாம்! நாம் அப்படிச் செய்தோமோ, பசி திருகிற அளவுக்குப் பாசியும் தூசியும் தும்பும் வந்து விழுந்து விடுகின்றன!” என்று பொறாமைப் படுகின்றார்கள்.

சென்னை நகரத் தண்ணீர் பிரச்னை பற்றித் தலையங்கம் எழுதாத தினசரிப் பத்திரிகை அநேகமாக இல்லை. பொடி விஷயம் இவ்வளவு பெரிதாகி விட்டது! ஆஸ்ட்ரேலியா அரசியல் சிக்கலைப் பற்றியும் அர்ஜன் டைனாவின் பொருளாதார நிலையைப் பற்றியுமே தலையங்கங்கள் எழுதி வரும் அவ்வளவு விரிந்த நோக்குடைய “ஹிந்து” பத்திரிகை கூட, சென்னைக் குழாய்த் தண்ணீரைப் பற்றித் தலையங்கம் எழுதி விட்டதென்றால், பாருங்களேன்!

சென்னையில் தீர்த்த விசேடம் அவ்வளவு பிரபலமாகி விட்டது!

  1. நகரத்தின் முக்காலே மூன்று வீசம் பகுதிக்குத் தினம் 4 மணி நேரந்தான் தண்ணீர் வருகிறது. (பாக்கி நேரத்தில் ஓய்வுதான்!)
  2. தண்ணீருடன் திட பதார்த்தங்கள் தாராளமாகக் கலந்து வருகின்றன.
  3. தண்ணீரை வாயில் ஊற்றினால் மசக்கைப் பெண் நிலைமை தான்! ஒரே குமட்டல்!

இதுதான் கார்ப்பரேஷன் தீர்த்த விசேடம்! சத்தியமூர்த்தி சாகரத்தின் சிறப்பு!

இவைகளில் மூன்றாவது பெருமையைப் பற்றித்தான் இப்போது பிரமாதமாகக் கண்டனம் நடைபெறுகிறது!

இந்தக் கண்டனத்தில் நான் மட்டும் (தனியாக) கார்ப்பரேஷன் அதிகாரிகள் பக்கந்தான் இருப்பேன்! அதாவது, சென்னையிலுள்ள 14 லட்சம் பேரும் எப்போது உயிருடனிருக்கிறார்களோ, அப்போதே இந்தத் தண்ணீரினால் கெடுதல் ஒன்றுமில்லை யென்று ஏற்படுகிறதல்லவா? துர்நாற்றந்தானே? அதைப் பொறுத்துக் கொள்ளாதவர்களா உலக வாழ்க்கையிலுள்ள துயரங்களைப் பொறுத்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருக்கால் சென்னை வாசிகள் அத்தனை பேரும் செத்து விட்டால் அடுத்த நிமிஷமே சுத்தமான தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்கிறார்களா, இல்லையா, என்பதை (வெளியூர்க்காரர்கள்) பாருங்களேன்!

உயர்ந்த “ஈக்கோ செண்டை”ப் பற்றி அறிந்தவர்கள் இருக்கலாம். ஓர் அண்டா தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டாலே போதும்! ஒரே வாசனை!

அதைப் போலவே பெருமையுடையது, எங்கள் ஊர் குழாய்த் தண்ணீர்! ஓர் அண்டா “ஈக்கோ செண்டில்” ஒரே ஒரு சொட்டு குழாய்த் தண்ணீரை விட்டாலே போதும்! அண்டா முழுதும் அடுத்த நிமிஷத்தில் சாக்கடைத் தண்ணீர்தான்!

“படே படே உத்யோகஸ்தர்கள்! எஞ்சினியர்கள்! சுகாதார ஆஃபீசர்கள்! மூட்டை மூட்டையாகச் சம்பளம்! கார் அலவன்ஸ்! இவ்வளவு இருந்தும் குழாய்த் தண்ணீர் மூக்கைத் துளைக்கிறதே! இதைக் கேட்பாரில்லையா?” என்று அலறுகிறார்கள், நகரவாசிகள்!

பொறுங்கள்! சற்றுப் பொறுங்கள்! ஆராய்ச்சி செய்து வருகிறார்களே! பத்திரிகையில் படிக்கவில்லையா?

கார்ப்பரேஷன் அதிகாரிகளைப் பாராட்டுகிறேன், ஒரு விஷயத்திற்காக, அதாவது இனிமேல் எந்தப் பேர் வழியும் சென்னை வாசிக்குள்ள தண்ணீர் வசதியைப் பற்றிப் பொறாமைப்பட மாட்டான்! மூக்கு இருப்பதனால்தானே இந்தத் தொல்லை? அதை அறுத்தெறியா விட்டாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஏன் தண்ணீர் குடித்துப் பழகக் கூடாது?

இதுதான் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கேட்கும் கேள்வி.

- குத்தூசி குருசாமி (12-11-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It