வழக்கறிஞர் விக்டோரியா கெளரி அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படும் முன்னர் எழுந்த குற்றச்சாட்டு குறித்து உங்கள் பார்வை.

உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, உச்சநீதிமன்றத்தின் அமைப்பான கொலீஜியம் என்ற அமைப்பாகும். அதில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் இருப்பார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் பெயர்களை ஒன்றிய அரசாங்கம் பரிசீலனை செய்து, அவர்கள் அதை அங்கீகரித்தால், அந்த நபர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பார்கள். கொலீஜியம் என்கிற அமைப்பு ஒன்றிய அரசுக்குப் பெயர்களைப் பரிந்துரை செய்யும்போது, ஒன்றிய அரசின் உளவுத்துறை (Intelligence Bureau) அப்பரிந்துரை குறித்தும், அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்தும், அந்த நபர்கள் வழக்கறிஞராக இருக்கும்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் போன்ற செய்திகளைச் சேகரித்தும் ஒன்றிய அரசுக்கு ஓர் அறிக்கையை வழங்குவார்கள்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நபர்களின் பெயரை நீதிபதிகள் நியமனப் பட்டியலில் சேர்க்கலாமா வேண்டாமா என்று ஒன்றிய அரசு முடிவு செய்து மீண்டும் கொலீஜியத்திற்கு அனுப்பும். வழக்கறிஞர் ஜான் கிறிஸ்டியன் அவர்களின் பெயரை இதே போன்ற பரிசீலனையில் அங்கீகரிக்க மறுத்து, அது மீண்டும் கொலீஜியத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய அரசு கூறிய காரணம் அவர் ட்விட்டரில், பிரதம மந்திரியை விமர்சித்து ஒரு சில பதிவுகள் செய்தார் என்பது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது. வழக்கறிஞர் ஜான் கிறிஸ்டியனை மீண்டும் பரிந்துரைத்தார்கள். மீண்டும் பரிந்துரைத்த பெயரை கட்டாயம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது வழக்கறிஞர் விக்டோரியா கௌரி அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் மீது அப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அவர் மதச்சார்பின்மைக்கு எதிராக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய கூறான மதச் சார்பின்மைக்கு எதிராகப் பேசி வந்தார் என்பது அவர்மீதான் குற்றச்சாட்டு. அதுமட்டுமன்று. அவர் பி.ஜே.பி யின் மகிளா மோர்ச்சா என்ற அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. இதை மத்திய அரசின் உளவுத்துறை அரசாங்கத்திடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையில்தான் திருமதி விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள், குறிப்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. மூத்த வழக்கறிஞர் வைகை, செல்வி அன்ன மேத்யூ, வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். கொலிஜீயம் பரிந்துரை செய்த பிறகு, அவர்கள் அனைத்து விடயங்களையும் கணக்கில் எடுத்த பின்புதான் பரிந்துரை செய்திருப்பார்கள் என்ற அடிப்படையில் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இயலாது என்று வழக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நியமனம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் முகவுரையில், இந்த நாடு ஒரு Sovereign, Socialist, Secular, Democratic, Republic போன்ற விழுமியங்களை உள்ளடக்கி உள்ளது. இதற்கு எதிராக யார் பேசினாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள் என்றே பொருள்படும். கௌரி அவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்கூட்டியே இருந்த நிலையில், அதைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தவறாகும்.

அரசியல்வாதிகளையோ, அரசியல் சார்புடையவர்களையோ நீதிபதிகள் பொறுப்பிற்கு நியமிப்பது சரியாகுமா?

அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் -சொல்லப்போனால் இதற்குமுன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த திரு.ரத்னவேல்பாண்டியன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டவர். இது ஒன்று. முன்னாள் நீதிபதிகள் சந்துரு அவர்களும், அரிபரந்தாமன் அவர்களும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஆனால் இவ்விருவரைப் பொறுத்தவரை நீதிபதியாகப் பதவியேற்பதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்கள் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள்.

திரு.ரத்னவேல் பாண்டியன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டார் என்றாலும், அவர் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டாரா என்பதைத்தான் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும். வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு கட்சியில் இருப்பார்கள். கட்சியில் உறுப்பினராக இருப்பதே ஒரு தகுதிக் குறைவாக நாம் பார்க்க இயலாது. ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பவர்களை நாம் அரசமைப்புச் சட்டத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் பதவிகளுக்கு நியமனம் செய்யாமல் இருப்பதுதான் சரியானது. இதுவே எனது கருத்து.

வழக்கறிஞர் கா.இளங்கோ, மாநிலத் துணைத் தலைவர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்

நேர்காணல்: வெற்றிச்செல்வன்

Pin It