“மண் இல்லா மண்டை பாழ், புண் இல்லா உடம்பு பாழ்,” என்றார் ஒரு பெருங் கவி. அதாவது, நான்! (இ-ள்) அதாவது இதன் பொருள்:- களிமண் இல்லாத மண்டை பாழாகும்; ஒரு புண் கூட இல்லாத உடம்பு பாழாகும்!

kuthoosi gurusamy 300இந்த அபத்தப் பேச்சு வேண்டாமப்பா, குத்தூசி! மண்டையில் மூளையல்லவா வேண்டும்? உடம்பு நோயற்றல்லவா இருக்க வேண்டும்? என்று கேட்பீர்கள்.

இவ்வாறு கேட்பவர்கள் “நீறில்லா நெற்றி பாழ்” என்று கூறியிருப்பதைக் கவனிக்கவும் ‘திருமண் இல்லாத் திருமுகம் பாழ்’ என்று ஏன் சொல்லவில்லை யென்பது பற்றி சைவ மெய்யன்பர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கலாம், வேறு வேலை தெரியாதவர்களாயிருந்தால்!

“டேய்! குப்புசாமி! ஏன் நெற்றியில் ஒன்றும் வைக்கவில்லை? பெஞ்ச் மேல் ஏறு!”

“ஸார்! விபூதி இட்டிருந்தேன், அழிஞ்சு போச்சு ஸார், வேர்வையினால்”

“அழியாமல் பூசுவதற் கென்னடா அதிகப் பிரசங்கி? என் நெற்றியைப் பார்!”

இது உபாத்தியாயரின் அறைகூவல்!

“உங்கள் நெற்றியிலும் அழிஞ்சு தான் ஸார் போயிருக்கு! ஒண்ணுமில்லையே !”

“அடேடே! ஆமாண்டா! அதுவா அழியலே! நான் தான் அழிச்சேன். வரும்போது பிரசிடெண்ட் ராமசாமி நாயுடுவைப் பார்க்க வேண்டியிருந்தது! அதற்காக அழிச்சேன்! அது கிடக்கட்டும். இனிமேல் அழியாதபடி பூசி வர வேண்டும், தெரியுமா?”

“சரிங்க, ஸார்! அப்படியே ஆகட்டும்!”

“டேய்! சுந்தரம்! நீ ஏண்டா திருமண் இடாமல் வந்திருக்கே? ஏறு பெஞ்ச் மேலே!”

“இட்டேன் ஸார் கலைஞ்சு போச்சுங்க”

“கலைஞ்சு போச்சா? போகும்! போகும்! உங்களையெல்லாம் என்ன செய்யணும் தெரியுமா? . . . . . சரி.”

“டேய் சாம்பசிவம்! நீ என்ன பொம்புளை மாதிரி சாந்துப் பொட்டு வச்சிருக்கே! திருமண்ணாவது, விபூதியாவது இடப்படாதோ?”

“இது அழியாமலிருக்குமுங்க! அதுக்காகத் தான்”

"அழியாமலிருப்பதற்காக எதை வேணுமானாலும் இட்டுக்கிறதோ? ரொம்ப பேஷ்!”

இந்த மாதிரி சில பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் தங்கள் புத்தியில் கவனஞ் செலுத்தாமல் மாணவர் நெற்றியில் கவனஞ் செலுத்தி வருகிறார்களாம்! நெற்றியில் எதுவுமில்லாத பையன்களை வீட்டுக்கே அனுப்பி விடுகிறார்களாம்! பெற்றோர்கள் தலையிட்டால் மாணவர் தலை உப்புகிறதாம்!

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்றார்கள், அந்தக் காலத்தில்; நகரங்களே எடுபடாத காலத்தில். அது இன்று சரியாயில்லையே! சென்னை நகரத்திலுள்ள ஆறு (கூவம்) இல்லாமலிருப்பதே அழகு என்பதை நானா சொல்ல வேண்டும். பெரிய பட்டணங்களில் ஆறு இருந்தால் கூடப் போதாது. குழாய் அவசியம் வேண்டும். அப்போதுதான் வீட்டுக்கு விடு தண்ணீர் கிடைக்கும். “பைப் இல்லாத பட்டணம் பாழ்” இது சுகாதார சுலோகம்!

பள்ளி ஆசிரியர்கள் நெற்றிக் குறிகளைப் பற்றி இவ்வளவு அக்கறை செலுத்துவானேன்?

ஒரு யோசனை. அழிக்கவே முடியாத வெள்ளைப் பூச்சு வேண்டுமானால், முத்து வெள்ளையை எண்ணெயில் கலந்து கனமாக ஒரு அடி அடித்து விடலாம்! நாமம் போடுவதில் கூட (பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு போடுவதைக் குறிக்கவில்லை!) வார்னிஷ் மூலம் செய்யலாம்! அவசரமாக ஆபீசுக்குப் போக வேண்டியவர்கள் தகரத்தால் வெட்டி வைத்துக் கொண்டு நெற்றியில் வைத்து ஒரு பூச்சுப் பூசுவது நல்ல முறை! மது தாங்கும் மரங்களுக்கு நம்பர் போடுவதுபோல, மதங்கொண்ட மக்களுக்கு இது!

வார்னிஷூம் முத்து வெள்ளையும் அழியாமலிருக்கும்! ஆனால் இந்த உடல் மண்ணாகவும் சாம்பலாகவும் போகக் கூடியது என்ற உயர்ந்த தத்துவத்தை ஞாபகப்படுத்தாதே ! பெண்களை ஏன் நாமம் போட்டுக் கொண்டோ வீபூதிப்பட்டை அடித்துக் கொண்டோ வரச் சொல்லி பெண் ஆசிரியர்கள் கட்டாயப் படத்துவதில்லை? பெண்கள் மட்டும் இஷ்டம்போல ஏதாவது ஒரு வர்ணப் பொட்டு இடுவானேன்? சிவபிரானும், மகா விஷ்ணுவும் பெண்கள் விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கோபமாயிருக்கலாமோ? அல்லது அடுப்பங்கரையில் உபயோகப்படும் சாம்பலும் மண்ணும் தங்கள் நெற்றியில் வைக்கத் தகுதியற்றவை என்ற நினைப்பே? இதுவும் ஆராய்ச்சிக்குரிய அருமையான விஷயம்!

வெளி நாடுகளில் விஞ்ஞான ஆராய்ச்சி! இங்கே விபூதி ஆராய்ச்சி! ஏதோ ஒரு ஆராய்ச்சி நடக்க வேண்டியது தானே!

“ஏ! கைலாசபதி! வைகுண்டவாசா! எங்களுக்கு இவ்வளவு அழகான உருப்புகளைப் படைத்த உங்கள் தோழன் பிரம்மா எங்கள் நெற்றியில் குறுக்கிலோ நெடுக்கிலோ மூன்று கோடுகளையும் இழுத்து விட்டிருந்தால் இவ்வளவு தொல்லையில்லையே! நாங்கள் டீச்சர்களிடத்தில் அடிபடாமலாவது இருப்போமே!”

இது தான் மாணவர்கள் பிரலாபம்!

இனிமேல் வரும் மனிதனின் புது எடிஷன் (பதிப்பு)களிலாவது நெற்றியில் மூன்று நிரந்தரக் கோடுகள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது! அல்லது நெற்றியே இல்லாமலிருந்தாலும் இந்தத் தொல்லை இல்லாமலாவது இருக்கும்!

அதுவரையில் வாசகர்களே உங்கள் நெற்றி ஜாக்கிரதை! ஸ்டாலினே! உம் நெற்றியும் ஜாக்கிரதை ! பர்னாட்ஷாவே ! உமக்குந்தான் சொல்கிறேன். எங்கள் ஊர்க்காரர்கள் எமகாதகப் பேர்வழிகள். திருவள்ளுவர் நெற்றியிலேயே விபூதிப் பட்டை போட்டு விட்டார்கள்! உங்களுக்கும் போட்டாலும் போட்டுவிடுவார்கள்! எதற்குந் துணிந்த ஆசாமிகள்!

ஜின்னா நெற்றியில் (படத்தில் தான்!) நாமம் போடுவார்கள்! பெரியார் மார்பில் பூணூல் போடுவார்கள்! அசகாய சூரர்கள்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It