இதுவொரு நுணுக்கமான விஷயம். நமது முன்னோர்கள் வானத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். தினசரி மாறும் காட்சியையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்பு கண்ட காட்சியே மீண்டும் தோன்றுவதையும் அவர்கள் ஆச்சரியத்தோடு நோக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து நாள்காட்டி (calendar) ஒன்றை உருவாக்கவும் அவர்களால் முடிந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஒரு நீள் வட்டப் பாதையில் (Ecliptic) சுற்றி வருகிறது. இதற்கு அது 12 மாதங்களை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கான காலம் 12 மாதங்கள் என்பதை அறிந்திருந்தனர். சந்திரனைப் பொறுத்த வரை பிரச்சினை இல்லை. இதே தளத்தில் அதுதான் பூமியைச் சுற்றி வருகிறது. இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் 27 நாட்கள். சூரியனை பூமி சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை ஒட்டியுள்ள ஒரு பகுதியைத்தான் zodiac என்கிறார்கள். ‘இது நாமே கற்பிதம் செய்து கொள்கிற பகுதி’ (lntroducingAstronomy-j.B.Sidgwick ) என்கிறார்கள் வானவியலார். இதைத் தான் 12 நட்சத்திர மண்டலங்களாகவும் (Constellations) மேலும் அவற்றை 27 நட்சத்திரங்களாகவும் வகுத்துக் கொண்டார்கள். நட்சத்திர மண்டலங்களான இராசிகள் என அழைத்து, இவற்றை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று பெயரிட்டனர்.

27 நட்சத்திரங்களுக்கு அசுவினி எனத் துவங்கி ரேவதி வரை பெயர்களைக் கொடுத்தனர். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் இதர கிரகங்களும் ஏதாவதொரு இராசி மண்டலத்தின் அருகே மாறி மாறி இருப்பது போல் தோன்றும். அவ்வாறே ஏதாவதொரு நட்சத்திரத்திற்கு அருகே இருப்பது போலவும் தோற்றம் காட்டும். உதாரணமாக சந்திரன் பூமியைச் சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்வதால் 12 இராசிகள் ஒவ்வொன்றின் அருகிலும் 21/4 நாள்களுக்கு இருப்பதுபோல் தோன்றும். வான மண்டலம் வெறும் கண்களுக்கு காட்டும் காட்சி இதுதான். அதிநவீனதொலை நோக்கிகளும், அறிவியல் வளர்ச்சியும் உருவாகாத காலத்தில் இவ்வளவுதான் மனிதனுக்குத் தெரிந்தது. இதற்காக அந்தக் காலத்து மனிதனைக் குறைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இந்தக் காலத்திலும் அதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது என்பது நம்மைத் தடுமாற வைத்துவிடும். மூடநம்பிக்கை எனும் புதைச் சேற்றில் தள்ளி விடும். வானம் காட்டும் தோற்றம் என்பதற்கும் உண்மை நிலை என்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை இன்று நம்மால் அறிய முடிகிறது. அறிவியல் வளர வளர ‘உண்மை நிலை’யின் பல்வேறு பரிமாணங்களையும் மனிதன் அறிந்து கொண்டே போவான். இதுவரை தெரிந்துள்ள அறிவியல் உண்மைகளைக் கீழ் வருமாறு தொகுக்கலாம்:-

1. பிரபஞ்சம் ஆதி அந்தம் இல்லாதது. அதற்கு எல்லையே இல்லை. அதில் உள்ள நட்சத்திரங்களும் கணக்கிடலடங்காதவை.

2. பூமியிலிருந்து சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் தெரியக்கூடிய ஒரு பால் வெளி மண்டலத்தில் (Milky way) பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும், அத்தகைய பால்வெளி மண்டலங்கள் பத்தாயிரம் கோடி இருக்கலாம் என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது. இதுவும் ஒரு கணிப்பு தான். உண்மையில் பால்வெளி மண்டலங்கள் எண்ணிக்கைக்குள் அடங்காதவை.

3. இந்தப் பால்வெளி மண்டலங்களும் நகர்ந்துகொண்டே – அதாவது இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பால்வெளி மண்டலமும் இன்னொன்றிலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளது. இது பிரபஞ்சம் எல்லை யில்லாதது என்பதையே மீண்டும் சுட்டுகிறது.

4. ஒரு நிலவில்லாத இரவில் வெறும் கண்களாலேயே சில ஆயிரம் நட்சத்திரங்களைக் காண முடியும். ஒரு வசதிக்காக வானவியலார் இவற்றை 88 நட்சத்திர மண்டலங்களாகப் பகுத்துள்ளார்கள்.

5. பூமிக்கு அருகேயுள்ள ஒரே நட்சத்திரம் சூரியனே. இதன் தூரம் பதினைந்து கோடி கி.மீ. மற்றவை யெல்லாம் வெகு வெகு தூரத்தில் உள்ளன. பார்க்கத்தான் எல்லாம் ஒரே தூரத்தில் இருப்பவைபோல் தெரிகின்றன. சூரியனுக்கு அடுத்து நமக்கு நெருங்கியிருக்கும் நட்சத்திரம் ஆல்பா சென்டாரி (திரிசங்கு). அது சூரியனிலிருந்து நான்கு ஒளி ஆண்டுகளுக்கும மேலான தூரத்தில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது ஒளியானது நொடிக்கு மூன்று இலட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டு முழுவதும் பயணம் செய்யும் தூரம். அப்படி யெனில் திரிசங்கு நட்சத்திரம் ஒன்பது இலட்சம் கோடி கிமீட்டருக்கும் அதிகமான தூரம்!

அடேங்கப்பா! அப்படியெனில் இதர நட்சத்திரங்கள் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் - கற்பனை செய்ய முடிந்தால்!

6. சூரியனிலிருந்து வெகுதூரம் என்றால் சூரியனைச் சுற்றி வரும் இதர கிரகங்களிலிருந்தும் இந்த நட்சத்திரங்கள் வெகுதூரம் என்பதை புரிந்து கொள்ளலாம். கிரகங்களில் ஒன்றாகிய பூமியிலிருந்தும், பூமியின் உபகிரகமாகிய சந்திரனிலிருந்தும் இந்த நட்சத்திரங்கள் வெகுதூரம் என்பதை உணர்ந்திடலாம். (Reader’s Digest LIBRARY OF Modern Knowledge – Part II மற்றும் The Universe Unfolding-Ivan R. King மற்றும் ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட நூலி லிருந்தும் இவை எடுக்கப்பட்டுள்ளன)

இந்த அறிவியல் உண்மைகளோடு ஜோதிட சாஸ்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ‘ஒரு குழந்தை பிறந்தபோது எந்த நட்சத்திரத்தில் - எந்த பாதத்தில் ஒரு கிரகம் இருக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பாதம் எந்த இராசியைச் சேர்ந்ததோ அந்த இராசியில் அந்த கிரகத்தை எழுத வேண்டும்’ என்று கூறி ஜாதகம் கணிக்கிறார்கள். அதாவது 27 நட்சத்திரங்களையும் 12 இராசிகளுக்குச் சமமாகப்பிரித்துப் போடுகிறார்கள். ஒரு இராசியில் இரண்டு நட்சத்திரங் களும் மற்றொரு நட்சத்திரத்தின் நாலில் ஒரு பாகமும் (இதைத்தான் பாதம் என்கிறார்கள்) இருக்கும் என்கிறார்கள். அந்த நட்சத்திரத்தின் இதர மூன்று பாகங்கள் இன்னொரு இராசியில் இருக்கும். ஆக ஒவ்வொரு இராசியிலும் ஒன்பது பாகங்கள் இருக்கும்.ஒருவன் பிறக்கும்போது எந்த பாகத்தில் ஒரு கிரகம் இருக்கிறதோ, அந்த பாகம் எந்த இராசியில் இருக்கிறதோ அங்கே அந்த கிரகத்தை எழுதுவார்களாம்!

இங்கே சில விஷயங்கள் இடிக்கின்றன. வானில் எத்தனையோ கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. வானவியலார் தங்களது வசதிக்காகப் பிரித்துக் கொண்டபடி பார்த்தால்கூட 88 நட்சத்திர மண்டலங்கள் இருக்கின்றன. அப்படியெனில் அவற்றில் 12ஐ மட்டுமே ஜோதிடக்காரர்கள் எடுத்துக் கொண்டது ஏன்? சூரிய மண்டலத்துக்கு ‘அருகே’ அவை உள்ளன என்றாலும் அதன் தூரம் நமக்குத் தெரியும். இந்த இராசிகள் பூமியில் உள்ள தனி மனிதனைப் பாதிக்கும் என்றால், ஏன் மற்றவையும் பாதிக்காது? ஏன் அவற்றையெல்லாம் ஜோதிடக்காரர்கள் கணக்கில் கொள்ளவில்லை? 12 இராசிகளும் 27 நட்சத்திரங்களாக ‘இந்துக்களால் வகுக்கப்பட்டன’ என்கிறார்கள். அப்படியெனில், இது நம்மூர் ஜோசியக்காரர்கள் தங்களது வசதிக்காகச் செய்து கொண்ட ஏற்பாடாகத் தெரிகிறது.

(பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து)

Pin It