மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் உள்ள தலித் மக்களின் பிரச்சனையில் தலித் மக்கள் மட்டும் தான் அக்கறைப்படுவது போன்ற பாவனையை தமிழக அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.
அனைத்துப் பகுதி மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் மூலமே தலித் விடுதலைக்கு வித்திடும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் என்பதை விட சகலருக்கும் ஜனநாயகம் என்பதில் கூடுதல் அக்கறை கொண்டவர்கள். அதன் காரணமாக உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதிகேட்டு தொடர்போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியத்திற்கு ஜனநாயக சக்திகள் தள்ளப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தின்போது வர்ணாசிரமவாதிகள் வெளியிட்ட பிரசுரத்தையும், உத்தப்புரம் கோவில் நுழைவு போராட்டத்தையொட்டி ஒரு அரசு அதிகாரி வெளியிட்டுள்ள ஆணையையும் படித்தால் ஒன்று போலவே இருக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் நுழையக் கூடாதென்று ஆகமகவிதிகளின் பேரில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும், நாடார்களும் கோயிலில் நுழையும் போராட்டம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டு கோவில் நுழைவுப்போராட்டமும் நடைபெற்றது. இதன் காரணமாக சாமி கோபித்துக் கொண்டு போனதாகக் கூறுவார்கள். மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி அம்மனுக்கு கோவில் அமைத்து அங்கு அர்ச்சகர்கள் பூஜை நடத்தியுள்ளனர். 1945-ஆம் ஆண்டு வரை இக்கோவிலில் பூஜை நீடித்த நிலையில் பழையபடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீனாட்சி குடிபோனதாகக் கூறப்படுகிறது.
மனுவாதிகளின் பிரசுரம்
இன்ன சாதியைச் சேர்ந்தவர் தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆச்சாரம் கெட்டுப்போனதாகக் கூறி “வர்ணாசிரம ஸ்வரராஜ்ய சங்கத்தார்“ என்ற இந்துத்துவ அமைப்பினர் “மதுரை ஆஸ்திக மஹாஜனங்களுக்கு விக்ஞானபம்“ என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். வரிக்கு வரி மனுதர்மத்தினை நியாயப்படுத்தி எழுத்தப்பட்ட அந்த பிரசுரத்தில் எழுத்தப்பட்ட விபரம் வருமாறு:
“8.7.39 காலையில் 5 பஞ்சமர்களும், 1 நாடார் மட்டும் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள், தேவஸ்தானம் எக்ஸிகியூடிவ் ஆபீஸரின் ஒக்குமத்தின் பேரில் பட்டர்களும், ஸ்தானீகர்களும், மஹாஜனங்களும் இல்லாத காலமான, சுமார் 8 3/4 மணிக்கு, ஒரு ஆசேபணையும் எதிர்ப்பும் இல்லை என்று காண்பிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வெகு தந்திரமாகவும், திருட்டுத்தனமாகவும், பிரவேசம் செய்யப்பட்டது. பூஜை முறையில்லாத ஒருபட்டரும் நுழைந்த கூட்டத்தாரும் சேர்ந்து அந்த சமயத்தில் 10 பேருக்கு மேல் அங்கு இல்லை. போலீஸ் எமர்ஜன்ஸி லாரி ஒன்று முன் ஏற்பாட்டின்படி கீழச்சித்திரை வீதியில் தயாராகக்காத்துக் கொண்டிருந்தது. இந்த சம்பவம் நடந்து வெகு நேரத்துக்குப் பிறகு தான் பொதுஜனங்களுக்குத் தெரியவந்தது. மந்திரிக்கூட்டம் தரிசனத்துக்கு வருவதாக பொன்னுச்சாமி பட்டரிடம் சொல்லி அவரை ஏமாற்றி தரிசனம் செய்விக்கும்படி எக்ஸிகியூடிவ் ஆபீஸர் செய்த உத்திரவை அனுசரித்து அவர் ஸ்ரீ ஏ.வைத்தியநாதய்யரிடம் 1 ரூபாய் தட்சணைப் பெற்றுக் கொண்டு தீபாராதனை செய்து அவர்களால் கொடுக்கப்பட்ட மாலைகளைப் போட்டு விபூதிப்பிரசாதம் கொடுத்தார். வந்தவர்கள், பஞ்சமர்களும் நாடாரும் என்பது அவருக்குப் பிந்திதான் தெரியும். முறைகாரபட்டரும் ஸ்தானீகர்களும் அந்த சமயம் அங்கில்லை.
இந்த சம்பவத்தையே ஹரிஜன சேவாசங்கத்தார் ஒன்றுக்குப் பதினாயிரமாகக் கூட்டி ஏதோ வெகு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் பிரவேசம் ஏற்பட்டதாக, மனம் போன போக்காக, உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்து, அதை தினசரிகளும் தெரிந்தோ, தெரியமாலோ பிரசுரித்து வருகிறார்கள், மந்திரிமார்களும், ரெலிஜியஸ் எண்டோமெண்டு போர்டரும், அதுவிஷயமாய் முன்கூட்டியே ரகசியமாக செய்யப்பட்டிருந்த சூழ்ச்சியை முழுப்பூஷணிக்காயை சோற்றில் மறைத்ததைப் போல சென்னையில் தந்திரமான விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தவித பிரவேசம் திறந்த வீட்டில் திருடன் நுழைந்ததற்கு சமானம்.
1 1/2 நாட்கள் வரை ஒழுங்காக பூஜை நடந்ததாக ஆலயப் பிரவேசக் கமிட்டியாரின் 17 நிர் பிரசுரத்தில் கண்டிருக்கிற விஷயம் கடுக்காயின் நீளம் 10 முழம் என்று சொல்வதற்கு ஒப்பானது. கோவில் ஸ்தானீகர்களும், பட்டர்களும், சாஸ்திரவிதிப்படி சம்புரோசணை செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை எக்ஸிகியூடிவ் ஆபீஸர் நிராகரித்து விட்டார். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஸ்தானீகர்களும், பட்டர்கள் யாவரும் கோவிலைப்பூட்டி விட்டார்கள். இன்று சாயாரஷை பூஜையாவது, அர்த்தஜாமபூஜையாவது நடக்கவேயில்லை. உண்மையான விஷயங்களைக் கண்டு மே.த கவர்னரவர்களுக்கும், கலெக்டரவர்களுக்கும் தந்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அன்று இரவு சுமார் 3 மணிக்கு வெகு சிரமப்பட்டு பூட்டுக்களை ரம்பம்போட்டு அறுத்து உடைத்து எந்நாளுமில்லாத உரத்த சத்தத்துடன் பூஜைகள் நடந்தது போல் பாவனை செய்யப்பட்டிருக்கிறது. கோவில் முற்றிலும் அசுத்தமாய் போனபின்னும், விக்கிரகங்களில் ஸான்னித்தியம் விலகிவிட்ட பின்னும் அவைகளுக்கு ஆராதனை செய்வது பாபகரமானதும், ராஜாக்களுக்கும், பிரஜைகளுக்கும், நாட்டுக்கும் தீங்கை விளைவிக்குமென்று ஆகமசாஸ்திரங்கள் கூறியிருப்பதை முன்னிட்டு ஸ்தானீகர்களும் அர்ச்சகர்களும் விலகிக்கொண்டார்களே தவிரவேறல்ல.
விஷயம் இப்படியிருக்க இதற்கு விரோதமாய் ஏதோ ஸனாதனத்தலைவர்கள் வீடுகளில் ஸ்தானீகர்களும், பட்டர்களும் மறைந்திருப்பதாகச் சொல்வது வெறும் கல்பனை, சமயநல்லூரிலிருந்து, சாந்துபட்டரை ஸ்பெஷல் கார் அனுப்பி ஏமாற்றிக்கொண்டு வந்து கோவிலுக்குள் அடைத்து வைத்துக் கொண்டார்கள். இரவு 3 மணிக்கு சாயாரஷை அர்த்த ஜாமம், திருவநேந்தல் நடந்ததாகச் சொல்லப்படுவதிலிருந்தே உண்மை வெளியாகும். அவரிடம் சாவியிருந்ததுமில்லை. வழக்கம் போல் முறைபட்டவர்களிடமே சாவிகள் அப்பொழுதும் இருக்கின்றன. பிரஸ்தாப சாந்துப்பட்டர் பூஜை செய்வதாகச் சொல்லும் காலத்தில் பூஜை செய்ய அவருக்குப் பாத்யதையே கிடையாது. அவர் பூஜை செய்வது உண்மையானால் ஆகமஸாஸ்த்ரங்களில் நம்பிக்கையில்லாத எக்ஸிகியூடிவ் ஆபீஸர் பூட்டை உடைத்தது போலவே அபசாரமாகும். அவர் செய்ததாச் சொல்லும் பூஜை பூஜையல்ல, சவங்களுக்குச் செய்த ஆராதனையாகும். காலை முதல் ஒழுங்காக நடைபெற்று வருவதாகச் சொல்வது வெறும் ஏமாற்று.
வெளியூரிலிருந்து பாத்யதையில்லாத ஒருவரை பிடித்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரள் ஆலயபூஜை செய்ய சாஸ்திரபடி லாயக்கில்லை. அவர்கள் விக்ரங்களைத் தொடுவதும், ஆராதனை செய்வதும் மற்றொரு பெரிய அபசாரம். இவ்விதம் அபசாரம் செய்தவர்கள் எல்லோர் பேரிலும் சிவில், கிரிமினல், கோர்ட்டுகளில் அதிசீக்கிரமாக நடவடிக்கை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. கோவிலை விட்டு அம்பிகை மீனாட்சியும், ஸ்வாமி சுந்தரேஸ்வரரும் மற்ற பரிவார தேவதைகளும் அந்தர்த்தியானம் செய்துவிட்டார்கள். இந்நிலையில் கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்பவர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரகவாசம் செய்யவேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதிஹாஸ. ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்துகிறது
என கடந்த 11.7.1939 ஆம் ஆண்டு வர்ணாசிரம ஸ்வரராஜ்ய சங்கத்தார் துண்டு பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.
மனுவாதியின் மறுவாரிசா?
1939 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தலித் மக்கள் கோவிலுக்குள் செல்லமுடியவில்லை. தீண்டாமை ஒரு குற்றம் எனச்சொல்லும் அரசு, தீண்டாமையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரம் சாட்சியாக உள்ளது.
வர்ணாசிரம ஸ்வரராஜ்ய சங்கத்தார் போன்று மதுரை பேரையூர் தாலூகா வட்டாட்சியர் ஆர்.மங்கள ராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ள ஆணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உத்தப்புரம் முத்தலாம்மன் கோவிலில் துவக்க காலம் தொட்டே தலித் மக்கள் வழிபாடு செய்யவில்லை என்பது போன்ற அவரின் ஆணை தலித் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு வழங்கிய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க மதுரை உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜன-31 ந்தேதி முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு முன்பே அரசு இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழுதினார். அன்றாடம் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும் கலைஞர், எதிர்கட்சியைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவர் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் சொல்லவில்லை.
ஆலய நுழைவுப் போராட்டம் என அறிவித்த பின் அரசு நிர்வாகம் மிக வேக வேகமாக தலித் மக்களின் உரிமைகளைத் தடுக்க அனைத்து வேலைகளிலும் இறங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு எனச் சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களைத் தேடித்தேடி ஒரு ஆணையை வழங்கி வருகிறது. அந்த ஆணையை பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ளார். அடுத்து அந்த ஆணையில், "முத்தாலம்மன் கோயில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளது.
உத்தப்புரத்தில் கால காலமாக முத்தலாம்மன் கோவிலில் எழுமலை, சீல்நாயக்கன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, தங்ககவுண்டன்பட்டி, தச்சம்பட்டி, கோட்டைப்பட்டி, நல்லதுநாயக்கன்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த தலித் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர். ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு எழுமலையில் நடந்த கட்டப்பஞ்சாயத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, அரசமரத்தை வழிபடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு "முடிவுகளை" எடுத்தனர். இதன் பிறகு தான் தலித் மக்களைப் பிரிக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது.
குழப்பம் அதிகாரிக்கா? காவல்துறைக்கா?
தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வின் ஒரு பகுதியாக உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் வெளிஉலகத்திற்கு வந்தது. இச்சுவரை இதுவரை முழுமையாக அகற்ற மனமில்லாத தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர்-8 ந்தேதி ஒரு பகுதியை அகற்றியது. அந்த வழியாக இதுவரை தலித் மக்கள் வாகனத்தில் செல்ல முடியவில்லை. மிக கவனமாக காவல்துறை அப்பாதையில் தலித் மக்கள் செல்வதைத் தடுத்து தனது பணியை "சிறப்பாக" செய்து வருகிறது.
இந்த நிலையில் தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட சூழலில் ஜன-28 ந்தேதி பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்த ஆணையைப் படித்தால் எவ்வளவு அபத்தமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத்தெரிந்து கொள்ளமுடியும்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ணி சென்னையில் உத்தப்புரம் மக்களுக்காக சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை கூட அறியாமல் பேரையூர் வட்டாட்சியர் பிறப்பித்த ஆணையில், "எழுமலை காவல் ஆய்வாளரின் அறிக்கையில், கடந்த 30.12.2010 அன்று சென்னை பனகல் பூங்காவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தியதாகவும், எதிர்வரும் 31.1.2011 அன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தை தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்காவில் நடைபெற்றதாக குறிப்பிட்டு ஆணை பிறப்பித்ததில் இருந்தே எதையும் முழுமையாக விசாரிக்காமல் ஒரு தரப்பாகத்தான் அதிகார வர்க்கத்தினர் செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.
அவர் வெளியிட்டுள்ள ஆணையில்,“முத்தலாம்மன் கோயில், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது. கோயிலின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டில் அந்நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆதி திராவிடர்கள் மற்றும் இடதுகம்யூனிஸ்ட் கட்சியினர், முத்தலாம்மன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டால், பிள்ளைமார் இனத்தவருக்கு ஆதரவாக இதர கிராமத்திலுள்ள பிள்ளைமார் சமூகத்தினர், மற்றும் இதர சமூகத்தினர் ஆலய நுழைவுப் போராட்டத்தை தடுக்க இருப்பதாகவும், அதனால் மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், காவல் ஆய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமலும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், எழுமலை காவல் ஆய்வாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றுபட்ட போராட்டமே தலித் விடுதலை
உத்தப்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் இடையேயுள்ள பகைமை உணர்வு, தணிந்து விட்டதாக கருத இயலாத சூழ்நிலையே தற்போதும் நிலவி வருவதாக எனது இரகசிய அறிக்கையில் தெரியவந்தது“ என அவர் ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் வழங்கிய தங்கள் உரிமைகளை தலித் மக்கள் கேட்டால், அதை ஒடுக்குவதற்காக உத்தப்புரத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் பகைமை உணர்வு எனக் குறிப்பிட்டுள்ள வட்டாட்சியர், காலம் காலமாக 18 கிராமங்களைச் சேர்ந்த அனைத்துப்பிரிவு மக்களும் முத்தாலம்மனை வழிபட்டார்கள் எனக்குறிப்பிடாமல் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது என உத்தரவிட்டதில் இருந்தே உண்மையின் பக்கம் இவர் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் ஒரு பிரசுரத்தை வெளியிட்ட பிரசுரத்தின் இறுதியில் "கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்பவர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரகவாசம் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதிஹாஸ, ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அது போல இருக்கிறது உத்தப்புரத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் அரசு எந்திரத்தின் அதிகாரி ஒருவர் பிறப்பித்துள்ள 144 ன் கீழ் தடையாணையும், அதற்கான வியாக்கியனங்களும்.
தலித் மக்களின் சமுக நீதிக்கான போராட்டத்தில் தலித் மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து தான் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இயக்கங்களை நடத்தி வருகிறது. உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட்டத்தை முடக்க தலித்துகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களைக் கட்டியமைக்க நினைக்கும் புனைவை ஒரு அரசு அதிகாரி செய்திருப்பதைப் பார்த்தால் தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கும் (இயற்தமிழ் உள்ளிட்ட எத்தனையோ பரிசுகளை வழங்குகிறார்) பரிசுகளில் ஒன்றை கட்டாயம் பெறுவார் போலிருக்கிறது!
- ப.கவிதா குமார் (