ஆம்! திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புதுஅழகாபுரி கிராமத்தில்தான் அந்த கோர சம்பவம் நடந்தது. ஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால் சமூகத்தின் சகல மட்டங்களிலும் புறக்கணிப்புக்கு ஆளாகிவரும் தலித் மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக வீடு இருந்தும் பட்டா இல்லாமல் வாழக்கூடிய நிலையும் தொடர்ச்சியாக 10 நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கிடைக்காத காரணத்தாலும் தவித்து வந்தனர். பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு இப்பிரச்சனைகள் தெரிந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களிடம் இப்பிரச்சனைகளை தெரிவித்தனர். இதன் விளைவாக கடந்த 20.01.2010 அன்று நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் (DYFI) தலைமையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் வாலிபர் சங்க தோழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திடீரென்று அங்கு வந்திறங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் எவ்வித விசாரணையுமின்றி மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்த சு.ப.பாலுபாரதியை பார்த்து இவனை அடித்து தூக்கினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொல்லி அவரை தன்னுடைய லத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கினார். உடனிருந்த காவல் அதிகாரிகளும் தன்னுடைய பூட்ஸ் காலாலும், லத்தியாலும் கடுமையாக தாக்கினார்கள். குரல்வளையில் ஒருவர் பூட்ஸ் காலால் மிதிக்க, குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்த இடத்திலும் கடுமையாக தாக்கப்பட்டார். சுயநினைவற்ற நிலையில் தோழர் பாலுபாரதியை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

பிறகு சம்பவ இடத்திற்கு (DYFI) மாநில துணைச் செயலாளர் S.பாலா, தோழர் K.பாலபாரதி MLA, CPM மாவட்டச் செயலாளர் N.பாண்டி, டிஒய்எப்ஐ மாவட்டத் தலைவர் கி.அரபுமுகம்மது, மாவட்டச் செயலாளர் ரி.பிரபாகரன் ஆகியோர் வந்து, “சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இவ்விடத்தைவிட்டு செல்லமாட்டோம்” என்று போராட்டம் நடத்தியதன் விளைவாக காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். எனவே, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்பொழுது சு.பாலுபாரதி அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இக்கொடூர தாக்குதலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளனர். டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழனி, சமய நல்லூர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனவரி 27 அன்று வேடசந்தூரில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் மாபெரும் கண்டன பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சம்பவம் கேள்விப்பட்டு, மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டமும், போஸ்டர், தட்டிகள் என வெளியிட்டு காவல்துறையின் இந்த அராஜக போக்கிற்கு எதிராக தோழர்கள் கிளர்ந்தெழுந்தனர்.

- பிரபாகரன்

Pin It