இந்த இதழில் தலையங்கத்துடன் சேர்த்து மொத்தம் 18 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் தொல்லியல், சங்க இலக்கியம், தொல் காப்பியம், நீதி இலக்கியம், வணிகம், இலக்கியத் திறனாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, மார்க்சீய வாதிகளின் பங்களிப்பு போன்ற கட்டுரைகள் அடங்கும். 

முதல் கட்டுரை : ‘இலங்கை வணிகக் குழுக்களும் எறிவீரபட்டினங்களும்’ என்ற கட்டுரையில் எறிவீரபட்டினங்களின் செயல்பாடுகள் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஆறுகல்வெட்டுகளும் எறிவீரர்களைப் பற்றியே பேசுகின்றன. இவை இலங்கையைச் சேர்ந்தவை. எறிவீரர்களின் வணிகப் பட்டினங்கள் உருவானசூழல், அவர்கள் வணங்கிய தெய்வங்கள், சக வீரர்கள் காப்பாற்றியமை போன்ற வீரதீரச் செயல்கள் பற்றிப் பேசுகின்றன.

பட்டினங்களிலுள்ள கடிகைத் தாவளம் என்ற சந்தையில் எப்பொழுதும் வீரர்கள் காவல் காத்தனர். வணிகர்களது பயணத்தின்போது பாதுகாவலாக வீரர்கள் துணை புரிந்தனர். எதிரிகளைத் தங்கள் வல்லமையால் அழிக்கும் திறன் படைத்தவர்கள் எறிவீரர்கள். வணிகப் பெரு வழிகளில் இருந்த வணிக ஊர்களிலிருந்து அடிமைத் தாவளங்களுக்கும் பிற சந்தைகளுக்கும் ஏற்றுமதிக்கும் காவல்

புரிந்து துணை நின்றவர்கள் எறிவீரர்கள் ஆவர். பொலனருவையிலுள்ள வேளைக்காரப் படையினர் அங்குள்ள தளதாயப் பெரும்பள்ளி என்ற புத்தப் பள்ளியைக் காப்பதில் உறுதி எடுத்துக்கொண்ட செய்தியும் கூறப்பட்டிருக்கிறது. அங்கு ஐஞ்ஞூற்றுவர் என்ற வணிகப் பிரிவின் பெயரில் அஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளி ஒன்று இருந்தது என்பன போன்ற வணிகம், வணிகர்கள், வணிக நகரங்கள், பட்டினங்கள், படையினர் அவர்கள் காவல் காத்த தீரச் செயல் போன்ற மிக நுணுக்கமான செய்திகளைக் கொண்டு இருக்கிறது இக்கட்டுரை.

‘தொல்காப்பியம், சங்க இலக்கியம் திணையியல் நோக்கு’ - என்ற கட்டுரையில் திணை, குடும்பம், நிலம், இனம், குடியிருப்பு, ஒழுக்கம்பற்றி மிகச் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. தொல்காப்பி யத்தில் திணையியல் நோக்கில் பெயர் சுட்டும் மரபு எவ்வாறு அணுகப்பட்டுள்ளது என்பதை இளம் பூரணர், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார், சிவத்தம்பி ஆகியோர் கருத்துக்களையெல்லாம் கூறி மிக விரிவாக ஆழமாக ஆய்வு செய்திருக் கிறார். இறுதியாகக் கூறும் போது,

அகமும் புறமும் இணைந்து வரும் அகக் கவிதை மரபில் உவமைப்படுத்தப்படும் புறப்பகுதியும், உவமைப்படுத்துவதற்குரிய அகப்பகுதியும் அமைகிற போது புறப்பகுதியில் பாடப்படுபவர் பெயர் சுட்டப் பெறுவதே சங்க அகக் கவிதையின் இயல்பான திணையியல் நெறியாக உள்ளது. இதன் நீட்சியே பட்டினப்பாலையாகும். அதுபோலவே, அகப் பாட்டின் புறப்பகுதியிலும் பாடாண் திணை பற்றிய புறக்கவிதையின் அகப்பகுதியிலும் இயற் பெயரைச் சுட்டிப் பாடும் மரபே தொல்காப்பியத் திணையியல் மரபு - என்கிறார் ஆசிரியர்.

‘ஆசாரக் கோவையை முன்வைத்துப் பிராமணர்களின் தேச வழமைகளும் குடிவழமைகளும்’ - என்ற கட்டுரையில் - ஆசாரக் கோவை என்பது ஒழுக்கங்களின் தொகுதி. அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், வாழ்வியல் நெறிகள் தொகுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இதில் கூறப்பட்டுள்ள ஆசாரங்கள் பெரும்பாலானவை சுக்ரஸ்மிருதிகளில் கூறப்பட்டிருக்கின்றன. பல்வேறு வடமொழி தர்ம சூத்திரங்களின் அடிப்படையில் இந்நூல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது. காலைக் கடனில் தொடங்கி அன்று நடைபெறும் அத்தனை செயல்களிலும் எவ்வா றெல்லாம் ஆசாரம் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று கூறுகிறது. அதுவும் பிராமணர்களின், தேச, குடி வழமைகள்பற்றிக் கூறப்பட்டிருக்கிறதாகக் கூறுகிறார். எனவே இது ஆசாரக் கோவை என வழங்கப் பெற்றிருக்கிறது.

‘உரோம நாட்டுடனான கிறித்துவக்காலத் தொடர்பு - மேலும் ஒரு சான்று?’ - என்ற கட்டுரையில் தமிழகத்திற்கு ரோமானிய நாட்டு உடனான தொடர்பு, மெகஸ்தனீஸ், தாலமி, பிளைனி, ஸ்டார்போ, பெரிப்ளூஸ் போன்றோரது குறிப்புகள், செங்கடல் துறைமுகப் பகுதியில் கணன், சாதன், சொற்பூமன், பனைஓரி என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் பானை ஓடுகள் கிடைத்தமை பற்றியும் வணிகத் தொடர்புபற்றியும் கூறிய பின் உரோமனிய நாட்டில் பேப்பரசுதாளில் எழுதப் பட்ட கடன் பத்திரம் கிடைத்திருப்பது பற்றியும் அதிலுள்ள செய்தி பற்றியும் கூறியிருக்கிறார் ஆசிரியர். கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஒரு வணிகர் வணிகம் செய்யக் கடன் அளித்தவருக்கு எழுதிக் கொடுத்த கடன் பத்திரமே அது. கிரேக்க மொழியில் அப்பத்திரம் எழுதப்பட்டுள்ளது. கடன் பெற்றவர் அந்தக் கடனை அடைக்கவில்லை என்றால், அவ் வணிகர் முசிறியிலிருந்து ஏற்றிச் செல்லும் வணிகப் பொருட்களைக் கடனளித்தவர் சொந்தமாக்கிக் கொள்ளலாம் - என்ற வாசகங்களையே அப்பத்திரம் கொண்டிருக்கிறது.

கருத்தியான் என்ற தலைப்பிலான முழுமை பற்றி ஒரு குறு நகைச்சுவை நாடகத்தின் படி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாடகத்தின் நில வரிகளைக் குறிப்பிட்டு அது இந்தியா அல்லது இலங்கையிலிருந்து வந்தவர்களைக் குறிக்கப் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார். மிக அரிய தகவல்களை இக்கட்டுரை தாங்கியிருக்கிறது.

நடுகல் கல்வெட்டுகளில் நாடும் அரசியலும் - என்ற கட்டுரையில் நாடு என்பது பற்றிய ஆய்வுகள் அண்மைக் காலத்தில் பெருகி வந்திருப்பதாகக் கூறுகிறார் ஆசிரியர். நாடு என்பது பழங்குடி நிலம், வேளாண்மைக்கென உருவாக்கப்பட்ட நிலப்பகுதி என்பது பற்றியும் சிற்றூரைக் குறித்தது பற்றியும் முல்லை நிலப்பகுதியில் காட்டுநாடு, மிளை நாடு, வாழ்நாடு என்று வழங்கியமை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. நாடு என்பது குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் பொருந்தியதை ஒரு சங்கப்பாடல் துணையுடன் நிறுவுகிறார் ஆசிரியர். நடுகற்களில் பல்வேறு நாடுகள் குறிக்கப்பட்டிருக் கின்றன. நாடாள, ஊராள என்று கூறப்பட்டிருப் பதையும் மங்கலம் என்ற பெயர்களிலுள்ள ஊர்கள் பற்றியும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும் கூறியிருக் கிறார். ஒவ்வொரு நாட்டையும் ஒரு தலைவன் ஆண்டதையே நடுகற்கள் கூறுகின்றன. இவர்கள் பல்லவர்களது ஆட்சிக்குப் பின்னர் அவர்களது சிற்றரசர்களாகக் காணப்பட்டனர். தருமபுரிப் பகுதி பின்னாளில் குழப்பம் மிக்கதாகவே இருந்தது. பிரிட்டிஷ் அரசு வரும் வரை கூறாக்க நிலை அரசியலே இருந்தது என்கிறது இக்கட்டுரை. இது இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத நிலையே இருந்தது. கங்கர், பாணர், பல்லவர் போன்ற அரசர்களது புறப் பகுதியாக விளங்கியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் தெளிவான நாட்டுப் பிரிவுகள் கூறப்படவில்லை. அத்தகைய நிர்வாக முறை முற்றுப் பெற்றிருக்கவில்லை. ஆனால் களப்பிரர் காலத்தில் பல கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சியமைக்கப்பட்டிருந்தது.

‘சங்க இலக்கியத் திறனாய்வுகள்’ என்ற கட்டுரையில் இதுவரையில் ஆய்வு செய்த அறிஞர்களது பெயர்களையும் அவர்களது ஆய்வுகள் பற்றியும் கூறியிருக்கிறார் ஆசிரியர். ஆய்வு, ஒப்பாய்வு, திறனாய்வு - என்று திரும்பத் திரும்ப அமைந்துள்ளன. இதில் தவறில்லை என்றாலும் முன்னரே எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பைப் பின்னர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்பவர், தனது ஆய்வு முன்னதிலிருந்து எவ்வாறு மாறு படுகிறது, எதை முன்னெடுத்துச் செல்கிறது என்பது பற்றியெல்லாம் எதுவும் கூறுவதில்லை.

சென்ற ஆண்டில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் மறைவின் 25ஆம் ஆண்டை நினைவு கூரும் வகையில் தொல்லியல் அறிஞர் கே.இந்திர பாலா அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட நுயசடல ழளைவடிசiஉ கூயஅடையேனர (300 க்ஷஊநு - 300 ஊநு) என்ற நூலில் கல்வெட்டியல், தொல்லியல், சமுதாயவியல், வரலாற்றியல் போன்ற பல தளங்களுக்குத் தமிழ் ஆய்வு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தொல்லியல் அறிஞர்கள் பலரது கட்டுரைகளும் தமிழாய்வைப் புதிய கோணங்களுக்கு எடுத்துச் செல்கிறது என்பதையும் இளந்தமிழறிஞர்கள் தவறாது இத்தகைய நூல்களைப் படித்து தமது சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சங்க இலக்கியங்கள் எக் காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் என்பது பற்றியும் அதற்கான காரணங்கள் போன்றவற்றையும் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.

‘பல்லவர், சோழர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நீர் உரிமை’ பற்றிய மிகச் சிறப்பான கட்டுரை இது.

சங்க காலம் முதல் விவசாயத்தின் பரப்பு விரிந்துகொண்டே சென்றது. காடுகள் திருத்தப் பட்டு வளநிலங்களாக்கப்படுகின்றபோது மழை நீரைச் சேமித்து வைத்து ஏரி குளங்கள் வெட்டினர். மடை, தூம்பு போன்றவற்றை அமைத்துக் கால் வாய்கள் வெட்டி அந்த நீரை யார் யாரெல்லாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சட்ட திட்டங்களை உருவாக்கினர். அதனால் ஏரிக் கென்று தனி வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏரிப்பட்டியாக நிலமும், ஏரியைப் பாதுகாக்க பொன்னும் தானம் வழங்கப்பட்டிருந்தன. இத்தகைய தானங்களில் அரசகுலப் பெண்களும் அதிகாரிகள் மனைவியரும் ஈடுபட்டிருந்ததைக் காண முடிகிறது.

ஒரு நிலம் மற்றோர் உரிமைக்கு மாற்றப்படும் போது பிறர் யாரும் கால்வாய் வெட்டியோ, குற்றேத்தம் செய்தோ - அந்நீரைப் பயன்படுத்தக் கூடாது என வரையறுத்தனர். ஏரி குளங்களில் உடைப்பு ஏற்படுகின்றபோது அந்த உடைப்பை அடைத்துப் பாதுகாத்த முறைகள் பற்றிக் கல் வெட்டுகள் கூறுகின்றன. இதுபோன்ற பல தகவல் களைத் தாங்கி நிற்கிறது இக்கட்டுரை.

‘செக்கார் வணிகச் சமூகம்’, என்ற இச் சமூகத்தில் செக்கிற்கு உரிமையுடையோர், செக்கில் கூலி வேலை செய்தோர் என்ற பிரிவினை இருந்ததைப் பல கல்வெட்டுகளின் ஆதாரங்கள் மூலம் கூறி யிருக்கிறார் ஆசிரியர். வேளாண் தொழிலைப் போன்று செக்குத் தொழிலும் மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்யும் தொழிலாகக் கருதப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

செக்கிழார், செக்கார், சங்கரப்பாடியார் என்பதெல்லாம் எண்ணெய் வணிகர்களைக் குறிக்கும் சொல். பல கல்வெட்டுகள் பற்றிக் கூறிச் செக்குத் தொழில் பற்றியும் அத்தொழில் புரிந்தோர் சமூக வாழ்வியலில் பங்காற்றியது பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வேளாண் தொழில் செய்தோர் வேளாளர், செக்குத் தொழில் செய்தோர் செக்கார், பறையடிக்கும் தொழில் செய்தோர் பறையர் என்று தொழில் சார்ந்த சாதிப் பெயர்களால் மக்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்று கூறி, தொழிலால் ஏற்பட்ட சாதிப்பிரிவு, அதற் குள்ளும் பொருளுடைமையே ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கியது எனக் கூறி யுள்ளார் ஆசிரியர்.

‘இயந்திர மொழிபெயர்ப்பு’ - இயந்திர மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலுள்ள செய்திகளை மற்றோர் மொழிக்குக் கொண்டு செல்வது. இம்மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோருக்கு ஒரு மொழிக்கு மேல் பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறெனின் அவருக்குள் அம் மொழியின் அறிவு உறைந்துள்ளது என்று பொருள். ஒலியன், உருபன், சொல் ஆகியவை மொழியின் முக்கியமான அலகுகள். மொழியறிவு என்பது இவ்வலகுகளை உள்ளுக்குள் கொண்டிருப்பது என்பது மட்டுமல்ல. இவ்வலகுகளின் வகைப் பாட்டை அறிதலும் அடங்கும். இதுபோன்று இன்னும் பல நுணுக்கமான மொழியறிவின் வகைப்பாடுகள் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார் ஆசிரியர். இயந்திர மொழிபெயர்ப்பு செய்யவேண்டுமாயின் இந்த அறிவையெல்லாம் கணினிக்கு வழங்கவேண்டும். அகராதி பொருளை மட்டுமல்ல, சொல்லின் இலக்கண வகைப் பாட்டையும் அது உள்ளடக்கியிருக்கிறது. இரு மொழிகளிலும் உள்ள தனிச் சொற்களையும், கூட்டுச் சொற்களையும் கலவைச் சொற்களையும் அகராதியின் துணைகொண்டு உருவாக்கும் திறனையும், அவற்றைப் பிரித்தறியும் திறனையும் கணினிக்குக் கொடுக்கவேண்டும். இவ்வாறு மொழியியலின் கூறுகளையெல்லாம் கணினி யிடம் அளித்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று கூறுகிற ஆசிரியர் மிக முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

‘இயந்திர மொழிபெயர்ப்புக்குரிய சமூகத் தேவைகளும் நம்மிடம் உள்ளனவா?’ - என்பது தான் அது.

இயந்திர மொழிபெயர்ப்புக்குரிய சமூகத் தேவைதான் ஒரு துறையின் வளர்ச்சிக்கு உதவும் - எனக் கூறிட ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளும் ஆட்சிமொழியாக இடம்பெறுகிறபோது அந்த அவசியம் எழும் என்று வரப் போகிற மிக அவசியமானதொரு சமூகத் தேவைபற்றிய தனது தொலைநோக்குச் சிந்தனையை இடம்பெறச் செய்திருக்கிறார். தற்போது தமிழ்மொழிக்கும் மலையாள மொழிக்கும் உரிய மொழிபெயர்ப்புக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன என்றும் நாடாளுமன்றத்திற்கு இதன் தேவை அதிகம் என்றும் எந்த இந்திய மொழியில் எவர் பேசினாலும் தமது மொழியில் விவரங்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறார். இத்தகைய சமூகத் தேவைகள் இயந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம் என்று முடிகிறது இக்கட்டுரை.

‘பண்டைத் தமிழரின் இயற்கை பற்றிய இணைப்புச் சிந்தனைகளில் வெளிப்படும் குலக்குறி எச்சங்கள்’ - என்ற கட்டுரையில் தொல்பழங்குடி மனிதன் தனது சுற்றுப்புறச் சூழலில் காணக்கூடிய ஊர்வன, பறப்பன, நடப்பன, புல், பூண்டு போன்ற தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் கூறுகளோடு தன்னை இணைத்து நோக்கும் ஒரு இணைப்புச் சிந்தனை முறையோடு வாழ்ந்தது பற்றி ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் மானிடவியலார் உலகெங்கிலு முள்ள பல்வேறு இனக்குழுச் சமூகங்களின் நடத்தைகளை உற்றுநோக்கியும் மேலும் பல தரவுகளைக்கொண்டும் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். இக்கோட்பாடுகளுள் குலக்குறியியல் என்பது மனிதன் எவ்வாறு தாவரங்கள், விலங்கினங்கள் அடங்கிய பருவுலகமான இயற் கையின் அங்கமாகத் தன்னையும் இணைத்துக் கொண்டு அந்த அடிப்படையில் தனது பண்பாட்டைக் கட்டமைத்துக் கொண்டான் என்பதைத்தான் இக் கட்டுரையாசிரியர் விவாதித்திருக்கிறார். ஒரு இனக் குழு பல்வேறு பிரிவுகளாகப் பல்கிப் பெருகிய போது அவை ஒவ்வொன்றும் தன்னை இனம் காட்டிக் கொள்வதற்கு ஒரு குலக்குறியைத் தன்னோடு இணைத்துக் கொண்டது.

நற்றிணைப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தைத் தன் சகோதரியாகப் பாவித்தல், அதனைக் குடும்ப உறுப்பினராக மனிதப் பண்பேற்றம் செய்து அணுகுதல் போன்ற விவரங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல மற்றோர் இலக்கியமான பட்டினப்பாலையில் கடற்கரை நகரமான பண்டைய காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் வாள் சுறா என்னும் வலிமைமிக்க மீனை வேட்டையாடி அதன் இருபுறமும் இரம்பம் போன்ற முட்களைக் கொண்ட அதன் எலும்பைக் கடற்கரை மணலில் நட்டு வைத்து முழுநிலா நாளில் கடல் தெய்வத்தை வழிபட்ட காட்சி சித்திரிக்கப்பட்டிருப்பதையும் விவரமாகக் கூறிக் குலக்குறியியலில் காணப்படும் இயல்புகளில் ஒன்றாக இருந்ததையும் கடல் தெய்வம் குடியேறுவதற்குரிய ஊடகமாக அச்சுறாமுள் விளங்கியதையும் மிகச் சிறப்பாக எடுத்து வைக்கிறது இக்கட்டுரை.

பேகனின் மயிலுடன் கூடிய தொடர்பு, பாரியின் முல்லைக் கொடித் தொடர்பு, மன்னர்கள் காவல் மரங்களைத் தங்கள் குடிச்சின்னங்களாகக் கருதியமை போன்ற தகவல்களைக் கொண்டிலங்குகிறது.

‘வரலாற்றுப் பின்புலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் - சங்க இலக்கியம் - ஒப்பீட் \டாய்வு’ - என்ற கட்டுரையில் ஆசிரியர் விரிவாகவும் தெளி வாகவும் தமது ஒப்பீட்டாய்வை நிகழ்த்தியுள்ளார். எழுத்து, சொல், பொருள் - என்ற அதிகாரங்கள் தொல்காப்பியரால் எழுதப்பட்டதாக ஏற்கப்படு கிறது. இருப்பினும் எழுத்து, சொல் - இரண்டும் அறிவியல் முறையிலான வரையறைக்குப் பொருந்தியும், முரணின்றியும் அமைந்திருப்பதை மறுப்போர் இல்லை. ஆனால் வாழ்வியல் தொடர்பான பொருளதிகாரத்தையும், அதில் கூறப்பட்டிருக்கின்ற விவரங்களையும் - வரலாற்று வளர்ச்சி நிலையில் வைத்தே மதிப்பிட வேண்டியுள்ளது எனத் தொடங்கி - சங்க இலக்கியங்கள் உள்ளடக்கியிருக்கும் பல்வேறு கூறுகளைத் தொல்காப்பியத்தில் காண முடியவில்லை என்கிறார் இக்கட்டுரை ஆசிரியர்.

1.     சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்ட வளர்ச்சிப் போக்குகள்.

2.     தொல்காப்பியம் அகம், புறம் ஆகிய வற்றில் கூறப்பட்டுள்ளவை சங்க இலக்கியத்திற்கு இயைபாக அமையவில்லை.

3.     தொல்காப்பியக் குறிப்புகள் - சங்க இலக்கியத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளன - என்பது போன்று பல கருத்துக்களைத் தம் ஆய்வு முடிவாகக் கூறியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

சங்க இலக்கிய காலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிப் போக்குகளே அதிகமாக தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படுகிறது. நான்கு வகை சமூகப் பாகுபாடுகளைக் கூறும் தொல் காப்பியத்தின் சமூக அமைப்பு சங்க இலக்கிய காலத்திற்கு முற்றிலும் முரணானது என்கிறார்.

தொல்காப்பியம் கூறும் கல்வி, சங்க இலக் கியத்தில் கூறப்படவில்லை. சங்க இலக்கியம் கூறும் வீரம் தொல்காப்பியத்தில் சேர்க்கப்பட வில்லை.

சங்க இலக்கியப் பாடல்களின் உணர்வுகளை உள்வாங்காத தொல்காப்பியப் பொருளதிகாரம் என்பன போன்ற பல முரண்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் இக்கட்டுரையாசிரியர்.

‘சங்க இலக்கிய ஆய்விற்கு மார்க்சியர்களின் பங்களிப்பு’ என்ற கட்டுரையில் மார்க்சிய ஆய்வாளர்களது தமிழ் இலக்கியப் பங்களிப்பு ஏராளமாக நிகழ்ந்திருப்பதுபற்றி விவரிக்கப்பட்டு இருக்கிறது. ஏராளமான ஆய்வுகள் பிறரால் நிகழ்த்தப்பட்டிருந்தபோதிலும் அவையெல்லாம் ரசனை அடிப்படையிலும், மொழி நடை, உருவம், உத்தி ஆகியவை பற்றியதாக மட்டுமே உள்ளன. இதன் விளைவாகப் பல புலமைவாதக் கட்டுரை களும், புதிர் வாதக் கட்டுரைகளும் இன்று ஏராள மாக வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சங்க இலக்கியம்பற்றிப் புதிய அணுகுமுறை மார்க்சிய ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. எந்த வொரு நிகழ்ச்சியையும் பொருளையும், அதன் சுற்றுப்புறத்துடன் பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதே மார்க்சிய அணுகுமுறையாகும். மனிதனது அனைத்து நடவடிக்கைகளும் சுற்றுச் சூழலின் விளைவாகும் என்ற நோக்கத்தின் அடிப் படையில் ஆய்வு செய்வதே பொருள் முதல்வாத அணுகுமுறை எனப்படுகிறது. இந்த அணுகு முறையைத் தான் மார்க்சிய அறிஞர்கள் மேற் கொள்கின்றனர் என்று கூறிப் பலரது ஆய்வுகள் பற்றித் தெரிவிக்கிறது இக்கட்டுரை.

சங்க இலக்கியம் பற்றி இத்தகைய கண் ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் கலாநிதி.க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, பேராசிரியர் நா.வானமாமலை, பெ.மாதையன் ஆகியோர் ஆவர். இவர்களது ஆய்வுகள் மரபுவழி கண்ணோட்டத்திற்கு மாறானவையாகத் திகழ்கின்றன என்கிறார் கட்டுரையாசிரியர். மேற்கூறிய அறிஞர்களின் அணுகுமுறையைப் பின்பற்றி எழுதப் பட்ட கா.சுப்பிரமணியம் அவர்களின் சங்க கால சமுதாயம் என்ற நூல் சிறப்பாக அமைந்தது பற்றியும் இவ்வாய்வு பேராசிரியர் நா.வானமாமலை அவர் களின் வழிகாட்டுதலின்படி அமைந்தது என்றும் கூறுகிறது இக்கட்டுரை. மேலும் க.கைலாசபதி, சிவத்தம்பி, நா.வானமாமலை ஆகியோரது ஆக்கபூர்வமான கட்டுரைகள் வெளிப்படுத்திய புதிய வெளிச்சங்கள் தொடர்பான பல புதிய செய்திகளை முன்னெடுத்து வைத்திருக்கிறார் கட்டுரையாசிரியர்.

திருவள்ளுவர் கால மெய்யியல்

திருவள்ளுவர் மருதத் திணையில் நிகழும் உழவைப் போற்றுகிறார். பாலைத் திணையின் வேட்டை வாழ்வைப் போற்றவில்லை. முல்லைத் திணை கால்நடை மேய்ப்பு வாழ்வை, பயன் தரு வாழ்வு என்ற நிலையில் மட்டும் அனுசரித்தார். வஞ்சி மற்றும் உழிஞைத் திணைகள் சார்ந்த கொடுங்கோன்மை அற்ற பேரரசனை வியந்தார் என்று தொடங்கும் இக்கட்டுரை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, மணிமேகலை போன்ற நூல்கள் குறிப்பிடும் தத்துவப் போக்கினைப்பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார் இக்கட்டுரையாசிரியர்.

தொல்காப்பியப் புறத்திணைகளில் பேசப் படாத வணிகத்தில் நடுவுநிலைமை கொண்ட பொருள் வணிகத்தைத் திருவள்ளுவர் போற்றிய தையும், சங்க கால வணிகர் அண்டை நாடுகளுக்குச் சென்றதால் அங்கெல்லாம் கிடைக்கின்ற வணிகச் சான்றுகள்பற்றியும் சுட்டிக்காட்டுகிறார். தொல் காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் படைப்புக் கடவுளாகப் போற்றப்பட்ட கடவுளர்களையும், சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் உலகப் பொருள்களும், உடலும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பதுபற்றிப் பாடியுள்ளமையையும் கருத்து முதல் வாதிகளான சில மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை. சாதவாகன மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த பௌத்த அறிஞர் நாகார்ஜுனர் (கி.பி.175) சூன்யவாதத்தைத் தொடங்கி வைத்தார். அவர் வழியில் பல அறிஞர்கள் பஞ்ச பூதங்கள் சூன்யமானவை என்று விவரித்தனர். இதனை மணிமேகலை சுட்டுணர்வு என்றது. இந்த நேரத்தில் அலெக்சாண்டிரியா மற்றும் ரோம் நகர்களில் உலகாயத நெறியினர் மோஸஸ் காலத்தி லிருந்தே வாழ்ந்து வந்தனர். மண், நீர், தீ, காற்று என்ற பூதப் பொருள்களால் உணர்வு உண்டாகி வருகின்றது என்றனர். தமிழகத்தில் கரூரில் உலகாயத - நெறியினர் வாழ்ந்தது பற்றி மணிமேகலை காட்டுகிறது.

அப்பாலைத் தத்துவம், படைப்புக் கடவுள் வாதத்தைக் கொண்டது சைவம், வைணவமாக வேர் கொண்டு அது தழைத்தது. இதில் நியாய வைசேடிகம் மற்றும் சாங்கியம் ஆகியவற்றின் சுபாவக் கோட்பாடுகளையும் உட்கொண்டு திகழ்ந்தது. பூதப் பொருட்கள் கடவுளின் ஆணைக்கு உட்பட்டது என்றனர். இது கண்டு சமணரும் பௌத்தரும் தங்கள் மத நிறுவனங்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தினர். இந்த நெறி திருவள்ளுவர் காலத்தில் ஏற்பட்டிருந்தது. உலகாயதம் பொருளைப் போற்றிய படி பல புதிய பரிமாணங்களைக் கொண்டு நிலவியது என்று முடிகிறது இக்கட்டுரை.

‘நாகரிக வாழ்க்கையின் தொடக்க காலம் பெருங்கற்காலம்’ - என்ற கட்டுரையில் பெருங்கற் காலத்தை இரண்டு பிரிவுகளாகக் காட்டியிருக் கிறார் ஆசிரியர். 1. இரும்பின் பயன் தெரியாத பெருங்கற்காலம் 2. இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்காலம் தாண்டிக்குடி என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வில் மேற்கூறிய இரண்டு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்கள் நிலவியது தெரியவந்திருக்கிறது. இக்கால மக்களது கல்லறைகள் பலவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. சுவஸ்திகா அமைப்பிலும், சதுரம், செவ்வக, வட்ட, முக்கோண வடிவிலான கல்திட்டைகள் போன்ற அமைப்பு களின் நுட்பங்கள் பற்றி விவரிக்கிறது இக்கட்டுரை. கட்டடக் கலையின் ஆதாரமாக விளங்கிய இந்தப் பெருங்கற்காலக் கல்லறைகளே, பிற்காலத்தில் குடைவரைக் கோயில்கள், கற்றளிகள், சிற்பங்கள் ஆகியவை வளர வழிவகுத்தன என்கிறார் இக் கட்டுரையாசிரியர்.

புதிய கற்காலத்தில் மட்கலங்கள் செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றாலும் பெருங்கற்காலத்தில்தான் சக்கரத்தின் துணையுடன் உலோகப் பாத்திரங்களைப் போன்று அமையத்தக்க தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது.

தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பெருங்கற்காலம் பற்றிய குறிப்புகள் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, மணிமேகலையில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பல்வேறு முறைகள் கூறப்பட்டிருக்கின்றன. பெருங்கற்காலத் தினைச் சேர்ந்த பானை ஓடுகளில் குறியீடுகளும், சங்ககாலத் தமிழ் எழுத்தான தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கின்றன. உதாரணமாக வல்லம் அகழாய்வில் கீழ்மட்டத்தில் கீறல் குறியீடு களும் அதற்கு அடுத்த காலகட்டத்தில் தமிழ் - பிராமி எழுத்துக்களும் பானை ஓடுகளில் கிடைத் திருக்கின்றன. ஆனால் பிராமி எழுத்துக்கள் கீறல் குறியீடுகளின் வளர்ச்சியே என்கிறார் கட்டுரை யாசிரியர். பெருங்கற்கால அகழாய்வுகளில் தாய்த் தெய்வம் என்று கருதத்தக்க சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. இக்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. ஈமத்தாழிகளில் நெல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. ஏராளமான மட்கலன்கள், மணிகள் ஆகியவை ஏராளமாகக் கிடைத்திருக் கின்றன. பல அகழாய்வுகளில் விவசாயத்திற்குப் பயன்படும் உபகரணக் கருவிகள் கிடைத்திருக் கின்றன. இவ்வாறாக பெருங்கற்கால சமூகம் நாகரிக வாழ்க்கையின் வளர்ச்சியையும் திருப்பு முனையையும் எடுத்தியம்புகின்றது எனலாம்.

‘செம்புலம்’ - என்ற கட்டுரை, குறுந்தொகையிலுள்ள 40-வது பாடலில் கூறப்படும் செம்புலம் பற்றி ஆய்வு செய்கிறது. செம்புலம் என்பதற்குப் பல அறிஞர்களின் உரை, நிகண்டுகளின் உரை ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, இறுதியில் செம்புலம் என்பது பாலை நிலம் என்பதாகும் என அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் கட்டுரையாசிரியர். இறுதியில் செம்மண் நிலமான செம்மையான நல்ல நிலத்தில் பெய்த மழை நீரைவிட, பாலை நிலத்தில் பெய்த / பெய்யும் மழை நீர் மிகத் தேவையான ஒன்று. பாலை நிலம் மழை நீருக்காக ஏங்கக் கூடியது. பாலை நிலத்திற்கு மழை நீரைவிட வேறொன்றும் மேன்மையானதாக இருக்க முடியாது. அந்நிலத்தில் பெய்த மழை நீரில் ஒரு துளியும் விரயமாக வாய்ப் பிருக்காது. ஆக செம்புலம் என்பதற்குப் பயிரிடப் பக்குவமான நல்ல நிலம் என்கிற பொருள்களை யெல்லாம் விடவும் பாலை நிலம் என்பதே கூடுதல் பொருத்தமுடையது. எங்கோ இருக்கின்ற மழை நீரானது, எங்கோ இருக்கின்ற மண்ணில் வீழ்ந்து இரண்டும் இணைந்து புதிய பயனுள்ள ஒன்றாக ஆதல் என்பதாகத்தான் இப்பாடலின் இறுதியடிகள் முடிகின்றன என்கிறது இக்கட்டுரை.

‘ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் தமிழ்ச் சமூகம் - சில குறிப்புகள்’ : ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் 1587-இல் போர்ச்சுகீசியரும் 1607-இல் டச்சுக்காரர்களும் அதிலிருந்து 1800 வரை உள்ள காலகட்டத்தில் ஆங்கிலேயர்களும் நாட்டில் புகுந்தனர். அக்காலகட்டத்தில் போர்களும் பூசல் களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு கிராமமும் ஒரு கிராமப் பொருளாதார அலகாகவும், சுய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டவையாகவும், விவசாய உற்பத்தி, அதைச் சார்ந்த வாழ்க்கை என நிலவியதால் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது. அதனால் சுரண்டப்பட்ட விவசாயிகளும் இருந்தனர். நிலப் பிரபுக்கள் மூன்று வகையாக இருந்தனர்.

1. தனிப்பட்ட நிலவுடைமையாளர் 2. மடங்கள் 3. கோயில்கள் இவர்களுக்கெனக் கூலி உழைப் பாளர்கள் இருந்தனர். மூன்று வகையான உற்பத்தி முறைகளும் நிலவின.

1. வாரம் 2. குத்தகை 3. பண்ணை.

ஆங்கிலேயர் வருகைக்கு முந்திய தொழில், வர்த்தகம், நிலப்பிரபுத்துவம் சார்ந்த கைவினைஞர் கிராமத்தோடு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலைமை நீடித்தது. இச்சமூகத்தில் கிராமப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆட்சியாளர்களே கை வினைஞர்களின் குடிப்பெயர்ச்சியைக் கட்டாய மாக்கினர். சமூகம் சாதிகளாகக் கட்டமைக்கப் பட்டிருந்தது. வலங்கை - இடங்கை சாதிப் பிரிவு 10-ஆம் நூற்றாண்டு முதல் மோதலைக் கடைப் பிடித்து வந்திருக்கிறது. இந்தப் பாகுபாட்டில் இருந்து தம்மை மேலானவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

இவ்வாறு தமிழ்ச் சமூகம் ஆங்கிலேயர் வருகைக்கு முன் பல வட்டார ஆட்சியாளர்களின் அரசு நிர்வாகத்தின் கீழ்ப் பிளவுபட்டுக் கிடந்தது. விஜய நகர மன்னர்கள் காலத்தில் தோன்றிய நாயக்க மன்னர்கள் நிலையற்ற அரசு, நவாப்களின் படையெடுப்பு போன்றவற்றால் சமூகம் சீரழிந்து கிடந்தது. இத்தகைய சூழலில் திப்புவையும் மராட்டியர்களையும் வென்ற, பாளையக்காரனின் ஆட்சியை வீழ்த்தி ஆங்கிலேயர்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்ற வரலாற்றுச் செய்திகளை பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரவுகள் மூலமாகப் படம் பிடித்துக்காட்டியிருக் கிறார் இக்கட்டுரையின் ஆசிரியர்.

‘குறுந்தொகையில் கடலோதப் பதிவுகள்’ என்னும் கட்டுரையில் கடலோத நிகழ்வு எவ்வாறு இலக்கியப் படிமமாகப் பதிவாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். கடலோதம் என்பது என்ன என்பதை விளக்கிய பின் சூரிய ஓத அளவானது, நிலவின் ஓத அளவில் 46ரூ அளவினதே என்கிறார். அமாவாசை நாளிலும் பௌர்ணமி நாளிலும் நிலவு ஓதப் பெருமமும் சூரிய ஓதப் பெருமமும் ஒன்றுகின்றன என்பன போன்ற பல வானியல் தொடர்பான நிகழ்வுகள் எவ்வாறு கடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் நுட்பமாகக் கூறப்பட்டிருப்பதுடன், அது போன்ற பதிவுகள் குறுந்தொகையில் காணப்படு வதைத்தான் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

குறுந்தொகைப் பாடல்களில் 65 பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்கள். அவற்றில் 9 மற்றும் 340 ஆம் பாடல்களில் ஓதம் பற்றிய காட்சிகளும் ஓத உயர்வின்போது கயம் நிறைவதும் அதில் மகளிர் குளிக்கும் காட்சியும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.

உயர் ஓதத்தின் போது கடற்கரைத் தாழம் பூவும் நீரின் உயரத்திற்கேற்ப பெயர்கிறது. தாழ் ஓதத்தின் போது அது மீண்டும் அதற்கேற்ப மீளும். இச்செய்திகள் உவமைக்காகக் கூறப்பட்டனவேயன்றி கோட்பாட்டு நெறியுடையவை அல்ல என்று வானியல் மற்றும் கடலியல் தொடர்பான அறிவியல் தொழில்நுட்பச் செய்திகளுடன் ஒரு அறிவுபூர்வமான கட்டுரையாகத் திகழ்கிறது இக்கட்டுரை.

மொத்தத்தில் இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் மாணவர்கள் மட்டுமின்றிப் பேராசிரியர்களும், ஆசிரியர்களும், கற்றோரும், அறிவு சார்ந்த அனைவராலும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் அமைந்துள்ளன என்பது வெளிப்படை.

சமூக விஞ்ஞானம் செம்மொழிச் சிறப்பிதழ்

எண் 16, ஜானிஜான்கான் சாலை,

இராயப்பேட்டை,

சென்னை - 14

விலை : ரூ.30.00

Pin It