சென்ற இதழில் வெளிவந்த க. நெடுஞ்செழியன் பேட்டி இந்த இதழிலும்...

தலித் அரசியலைப் பற்றி தங்கள் கருத்தென்ன?

இது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய செய்தி. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் - தென்னகத்தைப் பொறுத்தவரையில் தீண்டாமைக்கு உரியவர்களாகக் கருதப்பட்டவர்கள் ஈழவர்கள். அதுவும் இவர்கள் போர்க்கலை ஆசிரியர்களாக விளங்கியவர்கள். நாடார்கள் அல்லது ஈழவர்கள் என்று சொல்லக்கூடிய இந்த மக்கள், தமிழினத்திற்கு போர்க்கலையை வழங்கிய ஆசிரியர்கள். போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். கள் என்பது போரோடு தொடர்புடையது. பதிற்றுப்பத்தில் ஒரு பாடலின் தலைப்பே ‘தசும்பு துளங்கு இருக்கை'. அப்படி என்றால் கள்ளை எடுத்துச் செல்லக்கூடிய பெரிய தாழியை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும்போது, கள் பொங்குவதற்கு ஏற்பவும் வண்டியின் அசைவுக்கு ஏற்றபடியும் அந்த கள் தாழியும் அசைகிறதாம். அந்த அசைவைப் பாராட்டக் கூடிய வகையில் ‘தசும்பு துளங்கு இருக்கை' என்ற பாட்டு இருக்கின்றது.

அரசர்கள் போருக்குப் போகும்போது வீரர்களோடு கள் குடிப்பதும், வீரர்களுக்குக் கள்ளைப் பரிமாறுவதுமே ஒரு துறையாக நம் இலக்கியங்கள் பாராட்டுகின்றன. வெற்றி பெற்ற பிறகும் இப்படிப் பெருஞ்சோறு போடுவதும், கள் வழங்குவதும் இலக்கியங்களில் போற்றப்படுகின்றன. இப்படி தமிழ் மரபு அறிவு மரபாகவும், வீர மரபாகவும் இருந்தது. அதியமான் இறந்தபின் அவனுக்கு நடுகல் எடுத்தனர். அந்நடுகல்லின் முன் கள்ளைப் படைத்தனர். அப்படி சிறியதொரு கலயத்தில் கள்ளை வைத்துப் படைப்பதைப் பார்த்த அவ்வையார், எல்லாருக்கும் குடம் குடமாகக் கொடுத்தவனுக்கு இந்த சின்னக் கலயத்தில் கள் வைத்திருக்கிறீர்களே! இது போதுமா? என்று கேட்டார். அப்படி இந்தக் கள்ளோடு தொடர்புடையது தமிழர் வாழ்க்கை. கள்ளை இறக்கும் தொழிலைச் செய்தவர்கள் அந்த ஈழவ மக்கள். இந்தக் கள் இறக்குகின்ற காரணத்தினாலேயே அவர்களைத் தீண்டத்தகாகதவர்களாக ஒதுக்குகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், பறையர்கள் தீண்டத்தகாதவர்களாக நமது வரலாற்றில் இடம் பெறவில்லை. ராஜராஜன் கல்வெட்டில் தீண்டத்தகாதவர்களாக ஈழவர்களைக் குறித்துதான் கல்வெட்டு வருகின்றது.

தீண்டத்தகாதச் சேரி, பறைச்சேரி என்று ஒரு கல்வெட்டு வருகிறது. இன்னொரு இடத்திலே ஈழவச்சேரி, பறைச்சேரி என்று வருகின்றது. அப்போது யார் தீண்டத்தகாதவர்? அந்த மக்கள் தங்கள் தீண்டத்தகாமையை, சமூக இழிவைப் போக்க தங்களை ஒன்றிணைத்துப் போராடினர். நீங்கள் எங்களைக் கோயில்களில் நுழைய விடவில்லையென்றால், நாங்களே எங்களுக்கு தனிக் கோயில்களைக் கட்டிக் கொள்கிறோம் என்று தனிக் கோயில்களைக் கட்ட ஒரு வைகுந்தர் வந்தார், ஒரு நாராயண குரு வந்தார். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு கள் இறக்குவதற்கு இருந்த தடை நீங்கிய பிறகு இச்சமூகம் வணிகச் சமூகமாக மாறுகிறது. அதே போல தனக்கு இழைக்கப்பட்ட சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட அது போராடுகிறது. கேரளாவில் பொதுச் சாலைகளில் நடப்பதற்கானப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம். அதைத் தொடங்கியவர்கள் மாதவன் என்னும் வழக்கறிஞர், காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஜோசப் முதலானோர். அவர்கள் பெரும்பாலும் ஈழவர்களே. அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் நாடார்களின் பங்கு அதிகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கான தடையாக மட்டும் இல்லை அது. பொதுவாக எல்லாருக்கும் இருந்த தடை அது.

அதே போல பெண்கள் மேலாடை அணிந்து கொள்ளக்கூடிய உரிமை, வேதமாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்டவரால் தொடங்கப்பட்டாலும், அந்தப் போராட்டம் பிற்காலத்தில் நாடார் குல மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஏனென்றால், நாடார் குலப் பெண்களுக்கு கக்கத்தில் தண்ணீர் தூக்கிக் கொண்டு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. சும்மாடு வைத்து தலையில்தான் தண்ணீர் குடம் தூக்க வேண்டும். அப்படித் தண்ணீர் குடம் தூக்கிக் கொண்டு வரும்போது, தங்களுடைய மார்பகத்தை மறைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக, கக்கத்தில் தண்ணீர் கொண்டு வந்ததால் தண்டிக்கப்பட்டனர். இப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகம் தமிழகத்தில் நாடார் சமூகத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இன்றைக்கு அது எப்படி வணிகச் சமூகமாக தென்னகத்து யூதர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வணிகச் சமூகமாக மாறியது? தன்னுடைய தடைகளை உடைத்து அது எப்படி தலைநிமிர்ந்தது? அப்படிப்பட்ட ஒரு மன உறுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வரவேண்டும். அப்படி வருகின்றபோதுதான் அது தலித் அரசியலாக மாறுமே தவிர, வேறுவகையில் மாறாது. அடுத்தவர்கள் உதவி செய்து நாம் தடைகளை உடைக்க முடியும் என்று சொல்ல முடியாது.

இன்றைக்கு ஒரு நல்ல வாய்ப்பாக தொல். திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்கள் தலையெடுக்கத் தொடங்கிய பிறகு, சமூக ஒத்திசைவை நோக்கி இந்தச் சமூகங்கள் முன்செல்வதைப் பார்க்க முடிகின்றது. இது ஒரு மகிழ்ச்சியான மாற்றம்தான். விடுதலைச் சிறுத்தைகள் தங்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக அணிவகுப்பு நடத்தத் தொடங்கிய பிறகு, அதே போல இங்கு தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக களமிறங்கிய பிறகு, வன்முறைகள் குறைவதைப் பார்க்கின்றோம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து நம்மை நாம்தான் மீட்க முடியுமே தவிர, காத்துக் கொள்ள முடியுமே தவிர, வேறு ஒருத்தர் வந்து நமக்கு உதவி செய்ய முடியாது. தலித் அரசியல் என்பது நாம் தன்னிச்சையாக எழுந்து நமது இழிவை போக்குவதற்குப் பயன்படுவதற்கான அரசியலாக மாற்ற வேண்டும். அப்படி மாறும்போது, அந்த தலித் என்ற கருதுகோள்கூட இல்லாமல் போய்விடும். அதனுடைய தேவையை அது இழந்துவிடும்.

இன்றைக்குத் தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் பெண்களை மிகக் குறைவாகக் கொண்டு போய் நிறுத்துகிறார்களே?

எப்பவும் ஒரு பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஆணுக்கு மட்டும்தான் பங்கு, பெண்ணுக்குப் பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. தமிழனுடைய பண்பாடு, நாகரிகம் என்பது பெண்ணை மய்யமாக வைத்து வந்ததுதான். மனைவி என்ற பொருளுக்கு நிகரான ஆண்பால் சொல் தமிழில் இல்லை. அதைப் போல இல்லாள் என்ற சொல்லுக்கு நிகரான ஆண்பால் சொல் தமிழில் இல்லை. மனைவி, இல்லாள் என்ற இரண்டு சொற்களுமே தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளமாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லக் கூடியவை. அப்படி இருக்கும்போது, பெண்ணை விட்டுவிட்டு ஒரு பண்பாட்டை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் புதுமை என்ற போர்வையில் இன்றைக்கு மணவிலக்கு என்பதும், மறுமணம் என்பதும், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமா என்றால் இல்லை.
இன்றைக்கு தமிழர் வரலாற்றில் மறுமணத்தைத் தடை செய்யக் கூடிய ஜாதி என்பது எதுவும் இல்லை.

கணவன் உயிரோடு இருக்கும்போதே அவனோடு வாழப்பிடிக்கவில்லையென்றால், ஊர்கூடி பஞ்சாயத்து செய்து இரண்டு பேரையும் பிரித்து, இரண்டு பேரையும் வேறுவேறு புதிய வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவது என்பது, இன்றைக்கும் கிராமங்களில் இருக்கக்கூடிய ஒரு நடைமுறை. இதை அறுத்துக் கட்டுவது என்று சொல்வார்கள். கணவன் உயிரோடு இருக்கும்போதே, வேண்டாதபோது, பிடிக்காதபோது மறுமணத்தை அங்கீகரித்த ஓர் இனம், கணவன் இறந்தபின் அவர்களுக்கு கைம்மையைத் தண்டனையாகக் கொடுத்திருக்குமா? இயல்பிலேயே மனித நேயமிக்க நெகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பண்பாடுதான் தமிழர் பண்பாடு. பெண்களில்லாமல், பெண்கள் பங்குபெறாமல் எப்படி ஒரு தேசிய விடுதலையோ, ஒரு தொழிலாளர் விடுதலையோ அல்லது மற்ற விடுதலையோ இல்லையோ சாத்தியமில்லையோ, அதைப் போலவே பண்பாட்டைப் பாதுகாப்பது என்பதிலும் பெண்களைப் புறக்கணித்துவிட்டு நாம் எண்ணிப் பார்க்க முடியாது.

தங்களுடைய சிறை அனுபவங்களைப் பற்றி கூறுங்கள்?

செய்யாத பழிக்குச் சிறை செல்வது என்பது கொடுமை. அப்படி ஒரு கொடுமைக்கு உள்ளாகும்போது, அதை ஏற்றுக் கொள்வது என்பது ஒரு கட்டாயம். என்ன காரணம் சொல்லி அந்த வழக்குக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என்று என்னைக் கைது செய்தார்களோ, அந்த வழக்குக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது, வேறு யாரையும்விட என் மனசாட்சிக்குத் தெரியும். அப்படி என் மனசாட்சிக்கே புதிராக அமைந்ததுதான் என்னுடைய கைது. இந்தக் கைதுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சிகளை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னை கர்நாடக காவல் துறை தேடிக்கொண்டு வந்தது என்று தெரிந்த பிறகு நான் முன் பிணையல் கேட்டு விண்ணப்பிக்கிறேன்.

அப்போது என் மீது என்ன பிரிவில் வழக்கு இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. கர்நாடகக் காவல் துறை என்னைத் தேடிக்கொண்டு வந்தது என்பது மட்டும்தான் தெரியும். நான் வழக்கறிஞரிடம் சொன்னபோது முன் பிணையல் வாங்கிவிடலாம். அவர்கள் வழக்குக்கட்டை கொண்டு வருவார்கள், அதைவைத்து நாம் வழக்கை நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லி முன்பிணையல் போட்டோம். அவர்கள் நம்மை விட கெட்டிக்காரர்களாக இருந்துவிட்டார்கள். வழக்குக் கட்டைக் கொண்டு வரவில்லை. அதனால் எந்தப் பிரிவு என்றுகூட தெரியவில்லை. முன்பிணையல் கிடைக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமி, தமது நண்பர் பேராசிரியர் அருணா ராசகோபாலை கூப்பிட்டு என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். இவர் விளக்கிக் கூறியிருக்கிறார். கிருஷ்ணசாமி அப்போது உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் நெடுஞ்செழியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த பேராசிரியர், சிறந்த ஒரு தமிழறிஞர். அவரை உங்கள் காவல் துறை கைது செய்ய தேடி வந்ததாகத் தெரிகிறது. அவருடைய பணி இப்படிப்பட்டது என்று என்னைப் பற்றி ஒரு பன்முகக் குறிப்புகள் எல்லாம் கொடுத்து, ஒரு கடிதம் எழுதி அவர் நேராகப் போகாமல் தன்னுடைய நண்பர் பேராசிரியர் அருணா ராசகோபாலிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். மூத்த பத்திரிகையாளரும் ‘தலித் வாய்ஸ்' இதழின் ஆசிரியருமான வி.டி. ராஜ்சேகரும் அருணா ராசகோபாலும் அந்த உள்துறை அமைச்சரை சந்திக்கப் போகிறார்கள்.

அப்படிச் சந்தித்தபோது, என்னுடைய பின்னணியை அறிந்த உள்துறை அமைச்சர் தவறு நடந்திருக்கிறதே என்று வருந்தி, அந்த காவல் துறை ஆய்வாளரை வழக்குக் கட்டை கொண்டு வரச்சொல்லி தொலைபேசி செய்திருக்கிறார். அந்த மாநில உள்துறை அமைச்சர் தொலைபேசி செய்து அந்த வழக்கு கட்டைக் கொண்டு வரச்சொல்லியும்கூட, ஒரு காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரியும் அந்த அதிகாரி வழக்குக் கட்டைக் கொண்டு போய் கொடுக்கவில்லை. போனவர்கள் போய் ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு இனி உங்கள் பேராசிரியரை கைது செய்ய மாட்டார்கள்; நீங்கள் தைரியமாகப் போய் உங்கள் பேராசிரியரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பியுள்ளார். இவர்கள் வந்து சொன்ன பிறகு அந்த மாநில அமைச்சர் கூறியது போல, காவல் துறை என்னைத் தேடிக்கொண்டு வரவில்லை.

அப்படி இருக்கும்போதுதான் அந்த வழக்கினுடைய கோப்பு, உள்துறை அமைச்சரிடமிருந்து சட்டத்துறை அமைச்சரிடம் போய் சேருகிறது. போய் சேர்ந்த பிறகு காவல் துறை அதிகாரிகள் தங்களுடைய விருதிற்காகவும், பதவி உயர்வுக்காகவும் என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி என்னைக் கைது செய்வதற்கான அனுமதியை வாங்கிவிடுகிறார்கள். தமிழக காவல் துறை என்னைக் கைது செய்வதற்குத் தடையாக இருக்கிறது. உதவி செய்யவில்லை, ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கர்நாடக காவல் துறை வருத்தப்பட்டு பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்திருந்தது (நாளிதழில் வந்த செய்தியைப் படித்துக் காட்டுகிறார்). காலையில் 7 மணிக்கு நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்த என்னை கர்நாடக காவல் துறையைச் சேர்ந்தவர்கள், பெரியார் கல்லூரியில் ஒரு மாணவருக்கு பி.காம். பிரிவில் இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்து ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும் வெளியே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுபோய் நேராக தஞ்சாவூருக்கு அழைத்துப் போனார்கள். அங்கிருந்து ஒரு பன்னிரெண்டு மணிவாக்கில் நேராக பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

பெங்களூருக்குப் போய் சிறையில் நான் அடைக்கப்பட்ட பிறகு, தான் சிறையிலிருந்த போதும் தன்னுடைய
துன்பத்தைப் பெரிதாக எண்ணாமல் என்னுடைய கைதைக் கண்டித்தும், என்னுடைய விடுதலையை வற்புறுத்தியும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன், தன்னுடைய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சவுந்தர ராசன் வழியாக அப்போதைய முதல்வராக இருந்த கிருஷ்ணா அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் அவர்களுக்கு கிடைத்த உடனேயே கர்நாடக முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக இருந்த சீனிவாசலுவிடமிருந்து சிறை அதிகாரிக்குத் தொலைபேசி வந்திருக்கிறது. சிறை அதிகாரிகள் உடனடியாக என்னை அழைத்துவரச் செய்து, உங்களுக்கு என்ன வகையான உதவி வேண்டும், என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன் பக்கத்தில் நூலகம் இருக்கிறது, யோகா பயிற்சிக்கான வாய்ப்பு அங்கே இருக்கிறது.
அதனால் நான் இருக்கக்கூடிய அறையிலேயே (அட்மிஷன் ரூம்) தங்குவதற்கு வாய்ப்பு கொடுங்கள் எனக்கு அதுபோதும் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், சிறப்பு வகுப்பு நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டிருந்தது. கர்நாடக நீதிமன்றத்தில் நான் சிறப்பு வகுப்பு கேட்டேன். நான் வருமானவரி செலுத்துபவன், ஓர் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி என்று சொன்ன பிறகும், உங்கள் வழக்கறிஞர் மூலமாக நீங்கள் விண்ணப்பியுங்கள் என்று சொல்லி மறுத்து விட்டார்கள்.

மனிதன் தன்னை மொழிப்பற்றாளனாக, அவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், எந்த மொழியைச் சார்ந்தவனாக இருந்தாலும், தன் மாநிலத்தின் மீதும், தன் மக்களின் மீதும், தன் மொழியின் மீதும் பற்று வைக்க வேண்டும் என்றால், அவன் கொஞ்ச நாளைக்கு கர்நாடக மாநிலத்துக்குப் போய் இருந்துவிட்டு வந்தால் போதும். கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளிலிருந்து சாதாரண மக்கள் வரையிலும் தாங்கள் கன்னடியர்கள் என்று அவர்கள் கொள்ளக்கூடிய பெருமிதமானது, உண்மையிலேயே மற்றவர்கள் பின்பற்றத்தக்க பெருமிதம் அது. நம் ஊரில் மொழிக்காகப் போராட்டம் நடத்துவது போன்று அந்த ஊரில் போராட்டம் நடத்தவில்லை. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பது போல் அவர்கள் யாரும் முழக்கம் இடவில்லை. ஆனால், அவர்கள் அதைச் செயல்முறைப்படுத்துகிறார்கள்.

அந்த அதிகாரிகளில் சிலர் என்னை ஒரு எதிரியாகவே பார்த்தார்கள். முதன் முதலில் கைது செய்த கொஞ்ச நாளில் வழக்கறிஞர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். நான் போய் வழக்கறிஞர்களை சந்திக்கிறேன். சிறையினுடைய மூத்த அதிகாரிகளின் முன்னிலையில்தான் வழக்கறிஞரைச் சந்திக்க முடியும். அப்போது, அங்கிருந்த ஓர் அதிகாரி, இவன் நம்மையெல்லாம் அழிக்க வந்தவன். பெங்களூரையே வெடிவைத்துத் தகர்க்க வந்தவன், ஆபத்தானவன் என்று என்னை ஒருமையில் அறிமுகப்படுத்திய கொடுமையும்கூட நடந்தது. அது ஒருபுறம். ஆனால், அதற்குப் பிறகு நம்மைப் பற்றித் தமிழக பத்திரிகைகள் எழுதிய பிறகு, தமிழகத் தலைவர்களெல்லாம் முயற்சிகள் எடுத்த பிறகு சிறைக் கொடுமைகள் இல்லை. இதற்கிடையில் தி.மு.க. சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞரும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் வீராசாமியும் ஒரு வழியாக முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியெல்லாம் சேர்ந்து வெற்றி பெறுவதற்கு, முப்பத்தியிரண்டு மாதங்கள் ஆகிவிட்டன என்பதுதான் கொடுமை.

தமிழகத் தலைவர்களின் இடைவிடாத முயற்சி தொடர்ந்தும்கூட பல்வேறு வகையான முயற்சிகள், நேர்காணல்கள், அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தல் எனப் பல்வேறு முயற்சிகள். இதில் வைகோ அவர்களின் பங்கு மிகவும் மகத்தானது. அதை மறக்கவே முடியாது. இரவு பதினொரு மணிக்கு டெல்லியிலிருந்தபடி கர்நாடக முதலமைச்சரை மறுநாள் ஒன்பது மணிக்கு சந்திக்க முன் அனுமதி வாங்கி, காலையில் நாலரை மணிக்கு எழுந்து விமான நிலையத்துக்கு வந்து, அய்ந்தரை மணி விமானத்தில் ஏறி, ஒன்பது மணிக்கு அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த தரம்சிங்கை அவர்களுடைய வீட்டிலேயே சந்தித்து, பிணையில் அவர்களை விடுவிக்க நீங்கள் உதவ வேண்டும் என்று வைகோ அவர்கள் வேண்டுகோள் வைத்தார். அதைப்போல பொது உடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் எல்லாம் என்னுடைய விடுதலையின் பொருட்டு எடுத்துக் கொண்ட முயற்சிகள், உண்மையிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.

அடுத்த மாநிலம், செய்யாத குற்றத்திற்கான சிறை, அந்த சோறு சோறாகவே இருக்காது. கிராமத்தில் சோறு கொஞ்சம் முன்னாலேயே வடித்துவிட்டால் பிள்ளைகளைத் திட்டுவார்கள். என்ன சோற்றை இப்படி வடித்திருக்கிறாய், புழுக்கை புழுக்கையாய் இருக்கிறதே அப்படி என்று சொல்வார்கள். கஞ்சிப்பசையே இல்லாத சோறு. அதிலேயும் அதைப் போடும்போது கைதிகள்தான் சோறு பரிமாறுவார்கள். ஒரு கைதி தன்னைப் போல் இருக்கக்கூடிய சக கைதிக்கு வயிறு நிரம்ப அவனுக்குச் சோறு போடுவானா? என்றால் போட மாட்டான். அவனைப் பட்டினியாகப் போடுவதில் இவனுடைய பங்களிப்புதான் அதிகமாக இருக்கும். பற்றாத உணவு. கொஞ்சம் சோறும், கொஞ்சம் களியும் கொடுப்பார்கள். பகலில் சாப்பிட வேண்டும் என்றால், பதினோரு மணிக்கெல்லாம் களி உருண்டை வந்துவிடும். அது விடியற்காலை நாலு மணிக்கு அல்லது அய்ந்து மணிக்குச் செய்ததாக இருக்கும். பகல் ஒரு மணிக்குச் சாப்பிடும்போது, அந்தக் களியின் மேற்பரப்பு நன்றாகக் காய்ந்து இறுகிப் போய் இருக்கும். காய்ந்துபோன ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரிப்பதற்கு எவ்வளவு சங்கடப்படுவோமோ, எவ்வளவு சங்கடப்பட்டு அந்தத் தோலை உரிப்போமோ, அதுபோல அந்தக் களியின் மேல் தோலை உரித்து, அதன் உள்ளே இருக்கும் பகுதியை யெல்லாம் நன்றாகப் பிசைந்து, அந்த குழம்பு நீர்த்துப்போன குழம்பு, எப்படி நீர் மோர் தயாரிக்கும்போது தண்ணீர் மேலேயும், மோர் கீழேயும் இருக்குமோ, அதைப் போல குழம்பும் நீர்த்துப் போய் இருக்கும். மேலே இருக்கக்கூடிய அந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிட்டு, அடியில் இருக்கும் அந்தக் கொஞ்சம் குழம்பை தொட்டுக்கொண்டு களியும், கூழும் சாப்பிட்டேன். வயிறு நிரம்ப வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கூழைச் சாப்பிடத் தொடங்கினேன்.

தங்கள் மீதான வழக்கு தற்பொழுது எந்த நிலையில் உள்ளது?

பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் என் பிணையலுக்காக மூத்த வழக்கறிஞர்கள் நடராசன் அவர்களும் ச.க. மணி அவர்களும் முயற்சி செய்தனர். நம் வழக்கறிஞர்கள் முன்பாகவே என் கைது தொடர்பாகக் காவல் துறை அதிகாரியைக் கடிந்து கொண்டார் நீதிபதி. அப்படிக் கடிந்து கொண்டாலும் என் பிணையல் மறுக்கப்பட்டது. பிணையலை மறுத்த நீதிபதி தீர்ப்பின் நகல் கிடைத்த ஆறு மாதங்களுக்குள் வழக்கை முடித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அமர்வு நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சிறையில் இருந்த அனைவரும் அவர் நல்லவர்; அவரிடம் உங்கள் வழக்கு நடப்பது உங்களுக்கெல்லாம் மிகவும் நல்லது என்றெல்லாம் கூறினார்கள். அந்த அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் வழக்கை நடத்த அம்மாநில காவல் துறை என்ன காரணத்தினாலோ முயற்சிக்கவில்லை. நீதிபதியின் தொடர்ந்த கண்டிப்பான உத்தரவால் விசாரணை தொடங்கியது. அதுவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய ஆறு மாதம் முடிந்த பிறகு காவல் துறை சாட்சிகளே மாறிமாறி அடையாளம் காட்டியது,

வழக்கு ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்பதை வெளிப்படுத்திவிட்டது. இதனால் அந்த நீதிபதியிடமிருந்து பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி, தற்போது சிறைச்சாலையின் எதிரில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றிவிட்டனர். இச்சிறப்பு நீதிமன்றம் நகரை விட்டு வெகு தொலைவில் இருப்பதாலும், வரும் வழி போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக இருப்பதாலும் எங்களுக்கு வாதாட இருந்த வழக்கறிஞர்களால் வழக்கு மன்றத்திற்கு வாதாட வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் உயர் நீதிமன்றம் நகரத்தில் உள்ள ஒரு வழக்கு மன்றத்தில் வழக்கை நடத்த மறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வந்து பத்து மாதங்களாகியும் இன்னும் வழக்கு விசாரணைக்கு வராமல் உள்ளது. நீதிமன்றத்திற்காக ஒவ்வொரு முறையும் பெங்களூர் சென்று வரவேண்டியுள்ளது. என் மீது சுமத்தப்பட்ட ஒரு பொய்யான வழக்கிற்காக ஏறத்தாழ எட்டு லட்ச ரூபாய் செலவழித்தும் வழக்கும் நடக்கவில்லை; அலைச்சலும் ஓயவில்லை, இதனால் ஓய்வூதியப் பயன்களைக்கூட பெறமுடியாத நிலையே தொடர்கிறது.

-பூங்குழலி
Pin It