அஜந்தா போவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலையில் அவுரங்காபத்தில் போய் இறங்கினேன். சாம்பல் நிறத்தில் காலைப் பொழுது இருந்தது. என்னை இறக்கிவிட்ட பேருந்து சென்றதும் சாலையின் மறுபுறத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான விளம்பரப் பலகையொன்று முதன்முதலில் என் கண்களில் பட்டது. மகாராட்டிரா முழுவதும் இருக்கும் பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து அரசே நடத்தக்கூடிய பண்பாட்டுத் திருவிழா பற்றிய விளம்பரப் பலகை அது. அன்று எனக்கு அது புதிய செய்தியாகவும், வியப்பளிப்பதாகவும்கூட இருந்தது என்று நினைக்கிறேன்.

அவுரங்காபாத்தின் வெதுவெதுப்பான, மஞ்சள் நிறத்திலிருந்த காவி வெயிலை அனுபவித்தபடி - ஓர் இளம் மராட்டிய கவிஞரோடு சாலையோரத்து கடையொன்றில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது அவ்விழாவினை குறித்து விசாரித்தேன். அக்கவிஞர் விவரிக்க விவரிக்க என்னுள் கற்பனையில் காட்சிகள் விரிந்தன. மராட்டிய இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களும், கவிஞர்களும், கலைஞர்களும் அங்கே வந்து போனதாக சொன்னார் அவர். ஒரு வாரம் முன்னால் வந்திருந்தால் அவர்களைப் பார்த்துப் பேசியிருக்கலாம், கலை நிகழ்ச்சிகள் பலவற்றைப் பார்த்து மகிழ்ந்திருக்கலாம் என்றார். நம் மாநிலத்தில் ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சி இல்லை என்று எனக்கு அப்போது தோன்றியது. நம்மைச் சுற்றியிருக்கின்ற பல மாநிலங்களிலும் இது போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் இருப்பதாக அறிந்தபோது ஆதங்கம் மேலும் அதிகமானது. தமிழத்தின் எல்லா வகையான கலைகளையும் ஒருங்கிணைத்து ‘சென்னை சங்கமம்' என்கின்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு கலைத் திருவிழா நடப்பதற்கான முயற்சி, தற்போது தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை சங்கமம் நடத்தப்பட்ட விதம் மற்றும் அதன் நோக்கம் குறித்துப் பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன. அவசர அவசரமாக, சரியான திட்டமிடல் இன்றி, போதிய பரப்புரை இன்றி, இவ்விழா நடத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்கட்டும். தமிழ் அடையாளத்தைப் பறை சாற்றுகிற கலைகளையும், கலைஞர்களையும் ஒருங்கே திரட்டி இப்படி பெரிய விழா வினை தலைநகரில் நடத்துவதையும் அக்கலைகளுக்கும், கலைஞர்களுக்கும், உரிய அங்கீகாரத்தை உருவாக்கித் தர முயல்வதையும் பாராட்டத்தான் வேண்டும். இப்படி பாராட்ட நினைப்பதுகூட இன்னும் சிறப்புடனும், அதிக அக்கறையுடனும் இவ்விழா வினை அடுத்து வரும் ஆண்டுகளில் நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஊடகங்களும், அரசும் திரைப்படக் கலைஞர்களுக்கே எப்போதும் தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன. மனித உரிமைகளுக்காகவும், மானுட அறத்துக்காகவும் எழுதி வருகின்ற ஒரு படைப்பாளியை விடவும், பாலியல் வல்லுறவு காட்சியிலும், கொலை கொள்ளை காட்சியிலும் நடிக்கின்ற ஓர் எதிர் நாயகனுக்கே இங்கு மதிப்பு அதிகம். எங்கோ ஒரு தமிழ் நாட்டு கிராமத்தில், காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு பறையடித்து ஆடும் பறையிசைக் கலைஞரை விடவும், ஜீன்ஸ்சையும் ஷீவையும் அணிந்து கொண்டு பறையடிப்பது போல் நடிக்கின்ற ஒரு நடிகருக்கே இங்கு முக்கியத்துவம். திரைப்படங்கள் உருவாக்கித் தருகின்ற மிக மலிவான அறிமுகத்தையும், பிரபலத்தையும் கருத்தில் கொண்டு எல்லா அரசுகளும் அதில் நடிப்பவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்குப் பரிசு வழங்கும் விழா அரசால் நடத்தப்படுகிறது. அதைப் போலவே சிறந்த இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் விழாவும் நடத்தப்படுகிறது.

ஆனால், அரசும், ஊடகங்களும் எந்த விழாவுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன? திரைப்படங்களுக்குதான் எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு, முதல்வரும், அமைச்சர்களும் திரைப்பட விருது வழங்கும் விழாக்களுக்கு வந்து விடுகின்றனர். ஆனால், இம் மண்ணின் பண்பாட்டைத் தன் எழுத்தின் ஊடே உயிர்ப்பிக்கச் செய்யும் ஒரு படைப்பாளிக்கோ, கவிஞனுக்கோ, நாட்டுப்புறக் கலைஞனுக்கோ அந்த முக்கியத்துவத்தை அளிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தொப்புளைப் பார்த்து வாய்பிளக்கும் ஊடகங்களின் கேமராக்கள், நாட்டுப்புறக் கலைஞர்களின், படைப்பாளிகளின் முகங்களைக் கண்டு கண்மூடிக் கொள்கின்றன.

தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இலக்கியப் பரிசுகளை அளிப்பதற்கான விழாவுக்கு துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்ததால், அப்பரிசுகள் படைப்பாளிகளுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட அவலம்கூட, கடந்த ஆட்சியில் நடந்தது. இது ஒருபுறம் இருக்க, கலை என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பாடுவதும், ஆடுவதும்தான் என்ற உறுதியான எண்ணம் இன்னும் மாறாத பொதுபுத்தி கருத்தாகவும் இருக்கிறது. இன்று இதுபோன்ற நிலைகளிலிருந்து சற்றே மாறுபட்ட போக்கு தொடங்கியிருக்கிறது. தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக ‘அவ்வை', ‘குறிஞ்சிப்பாட்டு' போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தற்போது சுற்றுலா வளர்ச்சித் துறை, தமிழ் மய்யம் ஆகியவற்றின் உதவியோடு சென்னை சங்கமம் நடத்தப்பட்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள், கவிதை, நாட்டியம், பாட்டு என்று சுமார் எண்ணூறு கலைஞர்கள் பங்கேற்ற பல நிகழ்ச்சிகள் சென்னை சங்கமத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. மிக அவசரமாக, திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டிருக்கிறது என்றாலும் ஒரு நல்ல தொடக்கம் என்ற வகையில் இதை வரவேற்கலாம்; கூடவே சில ஆலோசனைகளையும் முன்வைத்து அதைச் செம்மையாக்க முயலலாம்.

சென்னை சங்கமத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் கனிமொழியை மய்யப்படுத்தியே எழுப்பப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் பார்வையோடு அணுகும் விமர்சனங்களாகவே அவை இருக்கின்றன. சில விமர்சனங்கள் மேல்தட்டுப் பார்வையுடன் வைக்கப்படுகின்றன. டிசம்பர் இசை சீசனில் இதை நடத்தலாமே? கூத்துப்பட்டறை, தட்சண் சித்ரா, தென்மண்டல கலாச்சார அமைப்பு ஆகியவைகளிடம் சென்னை சங்கமத்தை நடத்தித் தரும்படி கோரிக்கை விடப்பட்டதா? நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அவர்களின் ஊர்களிலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் சிறப்பு. எடுத்துக்காட்டாக, புரிசை கூத்துக் குழுவினரை சென்னையில் அழைத்து நடத்தச் சொல்வதை விடவும் புரிசையிலேயே நடத்தச் சொல்லலாம். இப்படிப் பல விமர்சனங்கள். இவைகளெல்லாம் இக்கலைகளுக்கான எதிர் மனோநிலையிலிருந்து பேசப்படும் கருத்துகளே.

டிசம்பர் சீசனில் உட்கார்ந்து பாடும் நிகழ்ச்சிகளோடு, எழுந்து ஆடும் நிகழ்ச்சிகளை இணைப்பது அடிப்படையிலேயே முரணானது! இவர்கள் இணைக்க நினைக்கும் செவ்வியல் கலையும், நாட்டுப்புறக் கலையும் முற்றிலும் வேறுவேறு தன்மைகளை, பின்னணிகளைக் கொண்டவை. நாட்டுப்புறக் கலைகளையும், தமிழ்ப் பாடல்களையும் கலையாகவே கருத இயலாத மனோபாவம் கொண்டவர்கள் நிறைந்திருக்கும் அமைப்புகளிடம் சென்னை சங்கமத்தை நடத்தத் தருவதை விடவும் கேலிக் கூத்தானது வேறு எதுவுமல்ல. தமிழ் மண்ணை அடையாளப்படுத்தும் கலைகளை தனித்த முக்கியத்துவத்துடன் தான் அணுக வேண்டும். அதுவே அக்கலைகளுக்கு தரப்படும் மரியாதை.

ஆனால், அவ்வகையான மரியாதைகள் எதையும் இச்சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் அக்கலைஞர்களுக்குத் தர மறுக்கின்றன. உட்கார்ந்தபடி வாசிக்கப்படும் பல்வேறு இசைக் கருவிகளுக்கும், பாடப்படும் இசைக் கலைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதன் மூலம் செவ்வியல் இசையென்று கர்நாடக இசையும் அதை சார்ந்தவைகளும் வளர்க்கப்பட்டுள்ளன. உழைக்கும் மக்களோடு இணைந்த, துள்ளல் இசை வடிவங்களையும், அசைவையும் கொண்டவைகள், கலை தீண்டாமையுடன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இசைக் கருவிகளுக்கு பலகாலம் பின்னால் தோன்றிய தீட்டு, தீண்டாமை ஆகிய கருத்துகள் அக்கருவிகளின் மீதும் அதை இசைக்கும் மக்களின் மீதும் சுமத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருகின்றன. இன்று அரசாலோ, பிற அமைப்புகளாலோ அக்கலைகளைக்கான நிகழ்த்து வெளியினை நகரத்திலும், பொதுவான கருத்தியல் தளத்திலும் உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள், இந்த மனோபாவத்தின் அடிப்படையிலேயே விமர்சிக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் அறிவு வாதம் போர்த்திக் கொண்டும், இனத் தூய்மை வாதம் போற்றிக் கொண்டும் இருவேறு வகைகளில் வருகின்றன. எல்லா வகையிலும் மேல் நிலையாக்கம் பெற்றவர்களே இவ்வகை விவாதங்களை முன்வைக்கின்றார்கள். இந்த விமர்சனங்களை முறியடிப்பதற்கான ஒரே வழி, தீர்க்கமாக அக்கலைகளுக்கு உறுதியான ஓர் இடத்தை நிகழ்ச்சிகளின் வழியே உருவாக்கி தருவதே.

சென்னை சங்கமத்தை ஒட்டியது போல வேறு சில பண்பாட்டுப் பணிகளை அரசு செய்ய வேண்டியுள்ளது. நாட்டுப்புறக் கலைகளைப் பயிலுவதற்கான ஒரு கல்லூரியும் பாடத் திட்டமும். நாட்டுப்புறக் கலை கருவிகள் செய்வதற்கான பயிற்சி, இக்கலைகளின் வரலாறு, மாற்றம், தற்போதைய நிலை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஆய்வுக் காப்பகம். ஆண்டுதோறும் இக்கலைஞர்களுக்கும், அவர் தம் படைப்புகளுக்கும் பரிசு. மேலும், அவர்களுக்கு மாத உதவித் தொகை. கூத்துக் கலையை தமிழ் மண்ணின் அடையாளக் கலையாக (கதகளி, யட்சகாணம் போல) மாற்றுவதற்கான முயற்சி போன்ற பணிகளே அவை.

தலித் எழுத்துகளின் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களும், விவாதங்களும் தலித் குறும்படங்களின் மீதும், ஆவணப் படங்களின் மீதும் வைக்கப்படுவது இல்லை. ஆனால், அவை மீதும் விவாதங்கள் வைக்கப்பட வேண்டும். இந்த எண்ணம் மிக ஆழமாக ஏற்படுவதற்கு, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மார்ச் 1,2,3 ஆகிய நாட்களில் நடத்திய ஆவணப்பட விழா உதவி செய்தது. இனவரைவியல் படங்களும், தலித் படங்களும், விடுதலை இயக்கப் படங்களும் அந்த மூன்று நாட்களும் திரையிடப்பட்டன.

இரண்டாம் நாள் முழுவதும் தலித் ஆவணப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட்டன. அம்பேத்கர் பற்றிய ஜாபர் படேலின் ஆவணப்படம் அவற்றில் சிறப்பான ஒன்றாக இருந்தது. ஆனால், அதில் பேசுகிறவர்களின் பெயர்களோ, ஆங்கிலத்தில் உரையாடல்களோ இல்லாதிருந்ததால், ஒன்ற முடியவில்லை. அம்பேத்கர் படித்த பள்ளியின் காட்சிகளும், நாடாளுமன்றத்தில் அவர் இருக்கும் காட்சிகளும் அரியவையாகத் தோன்றின. ஆர்.பி. அமுதன் இயக்கிய ‘பீ', ‘செருப்பு'. ஓம்பிரகாஷ் இயக்கிய ‘தலித் பூமி', ஆர்.ஆர். சீனிவாசன் இயக்கிய ‘தீண்டப்படாத தேசம்', பாரதி கிருஷ்ண குமார் இயக்கிய ‘ராமையாவின் குடிசை' போன்ற படங்கள் தலித் சிக்கல்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவதாக இருந்தன.

இலக்கியம் போலன்றி இவ்வகைப் படங்கள் சில அமைப்புகளின் கொள்கைகளை சார்ந்தும், தொண்டு நிறுவனங்களின் நிதியுதவி பெற்றும் எடுக்கப்படுகின்றன. இவற்றோடு இதன் இயக்குநர்களில் பலரும் தலித் வாழ்வனுபவம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இந்த அம்சங்கள் குறும்படங்களின் ஆக்கத்திலும், ஆவணப்படங்களின் ஆக்கத்திலும் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இப்படங்கள் சிலவற்றில் இயல்பான வெளிப்பாட்டுத் தன்மை இல்லை. ஆவணப்படங்களின் கருத்தியலும், குறும்படங்களின் கருவும், சாரமும் நிதியுதவி செய்கின்ற தொண்டு நிறுவனங்களின் தலைமையினாலேயே தீர்மானிக்கப்படுவதால், இவற்றை இயக்குகின்ற படைப்பாளி படத்தின் மய்யத்திலிருந்து விலக்கப்படுகிறார். அதனோடு படம் தனது உண்மைத் தன்மையையும் இழந்து விடுகின்றது. தொண்டு நிறுவனங்களின் உயிர் வாழ்தலுக்கு ஏற்ப பிரச்சினையின் அளவு கேமராக்களின் உதவியோடு பெரிதாக்கவோ, காட்சியிலிருந்து விலக்கவோ (Out of Focus) படுகின்றது.

இதனால் பெரும்பாலான தலித் ஆவணப்படங்களும், குறும்படங்களும் அவற்றை எடுத்த தொண்டு நிறுவனங்களின் கொள்கை விளக்கப்படங்களாகவே இருக்கின்றன. மேலும், இப்படங்கள் சகிக்க முடியாத அருவருப்பையும், கதறலையும், துக்கத்தையும், இழிவையும் மட்டுமே காட்ட முயல்கின்றன. தலித்துகளின் மறுபக்கங்களும், மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும், வெற்றிகளும் இல்லை. தன்னியல்பான படைப்பாளுமையுடன், சுதந்திரத்துடன், தலித் வாழ்வியலை முழுமையாய் உணர்ந்து உள்வாங்கிக் கொண்டவர்களாலேயே தலித்துகளின் மறுபக்கங்களை சொல்லும் படங்கள் சாத்தியமாகும். அதுபோன்ற படங்கள் ஒரு சிலராலேயே இங்கு எடுக்கப்பட்டுள்ளன. சிலருக்கு இவ்வகைப்படங்கள் அடையாள அட்டைக்கும், நிறுவனங்களிடமிருந்து பண ஈட்டலுக்கும் மட்டுமே உதவுகின்றன.

விழாவின் இறுதி நாளில் திரையிடப்பட்ட ‘பிளாச்சிமடா', ‘அவள் எழுதுகிறாள்' போன்ற படங்கள் மிகவும் தனித்து தெரிந்தன. படமாக்கிய விதத்திலும், காட்சிகளின் அமைப்பிலும், தெரிவிலும் இப்படங்கள் சிறப்பாக இருந்தன. மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டிருந்த ‘பிளாச்சிமடா 1000 நாட்கள்' ஆவணப்படம் கேரளாவின் பிளாச்சிமடா பகுதியில், கோக் நிறுவனத்தின் தொழிற்சாலையால் ஏற்பட்டிருக்கும் சூழல் சீர்கேட்டையும், அதை எதிர்க்கும் போராட்டங்களையும் விளக்கியது. அப்படம் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை அம்பலமாக்குகிறது. ‘கோக்' நிறுவனம் அங்கே தனது தொழிற்சாலையை நிறுவ ஒப்புதல் அளித்தது கம்யூனிஸ்டுகளின் அரசுதான். ஆனால், அதை அவர்களிலேயே ஒரு அணியினர் எதிர்க்கின்றனர். அவர்களே எதிர்ப்பதும் அவர்களே ஆதரிப்பதுமாக அங்கே கண்ணாமூச்சி தொடர்கிறது. மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும் இன்று கம்யூனிஸ்டுகள் இதே மாதிரியான ஒரு கண்ணாமூச்சியைதான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பிளாச்சிமடா 1000 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு கோக் நிறுவன செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. மீண்டும் அதே இடத்தில் செயல்படுவோம், பிளாச்சிமடா தொழிற்சாலையை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது கோகோ கோலா! ம்... கோக் குடித்துக் கொண்டே போராட்டத்தைக் கொண்டாடுங்கள் தோழர்களே!

கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பட்டினிப் போராட்டத்திற்குப் போயிருந்தேன். தங்களை ‘கணிக்கர்' என்று அழைத்துக் கொள்கின்ற குடுகுடுப்பை தொழில் செய்யும் பழங்குடி சமூக மக்களின் போராட்டம் அது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள் அம்மக்கள். ஆனால், அவர்களுக்கு பழங்குடி இனச்சான்று இதுவரையிலும் அரசால் வழங்கப்படவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் அன்று காலை எட்டு மணிக்கெல்லாம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து சேர்ந்து விட்டனர். பெண்கள், குழந்தைகளோடு வந்திருந்தனர். சிவந்த நிறத்தில் நெடுநெடுவென்ற உயரம். கூர்மையான நாசி. முறுக்கிவிடப்பட்ட மீசை. ஆண்கள் எல்லோருமே இப்படிதான் இருந்தனர். பெண்களும் அதைப் போன்ற தோற்றத்துடன் தெரிந்தனர். நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று எல்லார் வீட்டு முன்பாகவும் சொல்கிறோம். எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்களின் வீடுகளின் முன்னால் நின்றும்கூட சொல்கிறோம்.

ஆனால், எங்களுக்கு மட்டும் நல்ல காலம் இன்னமும் பிறக்கவில்லை என்றனர் அம்மக்கள். அவர்களில் சிலர் பாரதியின் ‘புதிய கோணங்கி' பாடலை மேற்கோள் காட்டியும் பேசினர்.

பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டிருந்தாலும், இந்த பட்டினிப் போராட்டத்தின் முடிவில் தங்களுக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில் தெரிந்தது. தாம் பிடிக்கும் எலிகள், பூனைகள், பறவைகளோடு நல்ல வாக்கு சொல்லி இலவசமாகப் பெறும் அரிசியைக் கொண்டு அரைவயிற்றையும் கால் வயிற்றையும் நிரப்பும் அம்மக்கள், தமது பட்டினிப் போராட்டத்தினால் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பது ஒரு பெரிய நகை முரண். அவர்கள் மட்டுமல்ல, பல ஏழை மக்களும் அம்மாதிரியான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றனர். நாள்தோறும் வகைவகையாய் தின்று கொழுத்துள்ள அதிகார வர்க்கத்தின் முன் தனது பட்டினியை - ஒரு போராட்ட ஆயுதமாய் பயன்படுத்துவது உண்மையாகவே முரண்தான். மாறாக, அம்மக்கள் அந்த அலுவலகத்துக்கு முன்பாக தமது மரபார்ந்த உணவு வகைகளை சமைத்து தின்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அவர்கள் தமது நீண்ட போராட்டத்தில் கண்டனக் கூட்டம், கோரிக்கை மனு அளித்தல், மாநாடு என்று பலவற்றைப் பார்த்துவிட்டிருக்கின்றனர். அதிகாரிகள் இவர்களுக்கு உரிய விடையைச் சொல்லவில்லை.

கணிக்கர் இனம் ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில்தான் உள்ளது. அம்மக்கள் குள்ளமான, கருத்த உடல் அமைப்பு கொண்டவர்கள், வேட்டைக்காரர்கள். ஆனால், நீங்களோ சிவந்த உயரமான உடலமைப்புக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் பேசும் மொழி வேறு நீங்கள் பேசும் மொழி வேறு, கம்பளத்து நாயக்கர்கள்தான் குடுகுடுப்பைகாரர் இனம். அவர்கள் தென் தமிழ் நாட்டில்தான் அதிகம். எனவே, நீங்கள் குடுகுடுப்பைகாரர்கள் இல்லை என்று அதிகாரிகள் சொல்லி விட்டு தமது கோப்புகளையும், வாய்களையும் மூடிக் கொண்டனர். கணிக்கர் இல்லை என்றால், நாங்கள் யார் என்பது அம்மக்களின் கேள்வி. நீங்கள் சவுராட்டிரர்கள், எனவே பிற்படுத்தப்பட்டவர்களின் பிரிவில் வருவீர்கள் என்று அதிகாரிகள் தற்போது கண்டறிந்து சொல்கிறார்கள். சவுராட்டிராவிலிருந்து கர்நாடகம், ஆந்திரா வழியாக தமிழகம் வந்த நாடோடிகள்தான் நாங்கள். எமது மொழியில் கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய அனைத்துமே கலந்துள்ளன என்று அம்மக்கள் சொல்கிறார்கள். நீண்டுக் கொண்டே போகின்ற அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கால், அச்சமூகத்தில் வேறெவரைக் காட்டிலும் பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அக்குழந்தைகள் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. சாதி சான்றிதழ் இல்லாததால், அம்மாணவர்களின் மேற்படிப்பு இடையிலேயே நின்றுவிடுகிறது. அதனால் அந்தக் குழந்தைகளில் ஆண்கள் குடுகுடுப்பை தொழிலுக்குப் போய்விடுகிறார்கள்; குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். நாடோடி வாழ்க்கைக்கு அவர்களின் மனம் பழகிவிடுகிறது.

சிறுமிகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு, தன் காலத்தை கழிக்கத் தொடங்கிவிடுகின்றனர். வண்ண வண்ணத் துணிகளில் ஒட்டுபோட்டு பைகளையும், குடைகளின் மேல் போர்த்தும் குஞ்சம் வைத்த வலைகளையும் செய்ய கற்றுக் கொள்கின்றனர்.

அன்று உண்ணாவிரதப் பந்தலில் இருந்த எல்லா பெண்களும், பேச்சு நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே அழகான பைகளை தைத்துக் கொண்டிருந்தனர். சான்றிதழ்கள் வழங்கப்படாமல் சாதியற்ற சமூகமாக (அப்படி ஒன்று இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை!) வைக்கப்பட்டிருக்கும் அச்சமூகம் அரசாலும், அதிகாரிகளாலும் நாடோடி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது! அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாழாக்கப்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் கல்வி என்பது மற்ற இனப் பிள்ளைகளுக்குப் பொருந்தும் எனில்,அந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்தானே? ஆனால், அம்மாதிரியான உரிமைகளைப் பெற்று முன்னேற்றம் அடைவதற்கு அரசும், அதிகார வர்க்கமும் அவர்களுக்கு மதில் சுவராக நிற்கின்றன. அம்மக்கள் நாடோடிகளா, பழங்குடிகளா என்று கண்டறிந்து சொல்ல முடியவில்லை என்றால், இவ்வளவு பெரிய அரசு நிர்வாக எந்திரம் எதற்கு? ஆனால், நமக்கு ஒரு வியப்பு இருக்கிறது. உண்மையான பழங்குடி இன மக்களுக்குச் சான்று தர மறுக்கின்ற அதிகாரிகளால், போலியான சான்றுகளை மட்டும் எப்படி தரமுடிகிறது?

தென்பகுதிகளில் மட்டும் அல்ல, வடதமிழகத்திலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும்கூட குடுகுடுப்பைக்காரர்களும், வேறு சில பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு தமிழகம் முழுவதுமாக எங்கெல்லாம் பழங்குடிகள் இருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்கு ஒரு குழுவினை அமைத்து, அதன் அறிக்கையின் பேரில் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

Pin It