4வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடத்துவது பற்றி நிர்வாக சபைக் கூட்ட நிகழ்ச்சியும், மகாநாடு நாகப்பட்டிணத்தில் நடத்த முடிவு செய்து வேண்டிய ஏற்பாடுகளை தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்று நடத்தும் விஷயமும், மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கும் சேதியில் இருந்து அறியலாம்.
பல காரணங்களால் 2, 3 வருஷமாய்த் தவிர்க்கப்பட்டு விட்டது என்பது உண்மை.
ஆனாலும், ஜில்லா, தாலூகா என்னும் பேர்களால் அனேக மகாநாடுகள் நடந்து வந்திருப்பதோடு, பிரசாரம் என்னும் பேரால் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் 1000, 2000, 3000 பேர் கொண்ட கூட்டங்களாகக் கூட்டப்பட்டு காரியங்கள் நடைபெற்றே வந்திருக்கின்றனவே ஒழிய, மற்றபடி இயக்க வேலை என்பது ஒன்றும் தவக்கப்பட்டுவிடவில்லை.
இயக்கத்தின் பேரால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் மதக் கலப்பு, ஜாதிக் கலப்பு, விதவை மணம், காதல் மணம் என்கின்ற பேர்களால் நடந்து வந்திருக்கின்றன; நடந்தும் வருகின்றன.
இயக்கப் பிரசாரமானது சமூக சம்பந்தமான சமத்துவ பிரசார மாத்திர மல்லாமல், பொருளாதார சம்பந்தமான விஷயங்களிலும் சமத்துவத்துக்கு ஒரு அளவு பிரசாரம் செய்து வந்திருக்கிறது.
ஜாதி, மதம், கடவுள்கள் ஆகியவை சம்பந்தமான உணர்ச்சிகளால் ஏற்பட்டிருக்கும் கெடுதிகளை விளக்கி, அவைகளில் இருந்து மக்களை மீளும்படி செய்ய வேண்டிய பிரசாரத்தில், சாதாரணமாக இன்றைய நிலையில் எவ்வளவு தூரம் போக முடியுமோ, அதற்கு மேலாகவே மக்கள் மனதில் பதியும்படியான பிரசாரம் தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் நடைபெற்று வந்திருக்கிறதுடன், மக்கள் மனதிலும் படியும்படி செய்யப் பட்டுமிருக்கிறது.
இவற்றின் பலனாக இந்த இயக்கம் ஒரு அளவுக்கு பாமர மக்கள் இயக்கமாக ஆகி இருக்கிறது என்பதுடன், இத் துறையில் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்பவர்களுக்கும் ஒழுங்காகவும், பத்திரமானதாகவும் வழி திறக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, இப்பேர்ப்பட்ட நிலையில் உள்ளதும், இவ்வளவு பிரயோஜனகரமானதுமான இந்த இயக்கத்துக்கு 4வது மகாநாடு என்னும் பேரால், நாகையில் கூடப்போகும் ஒரு மகாநாடு மிகவும் முக்கியமான மகாநாடு என்று நாம் சொல்ல வேண்டியதில்லை.
இதற்கு முன் கூட்டப்பட்ட மகாநாடுகள் மூன்றும் ஒன்றுக்கொன்று விசேஷமாகவே கூட்டப்பட்டு வந்திருப்பதுடன், கொள்கைகளிலும் முன்னேற்றமாகவே இருந்து வந்திருக்கின்றன.
இவைகளுக்குக் காரணம் மகாநாட்டைக் கூட்டியவர்களும், இயக்கப் பிரமுகர்களும் மாத்திரமல்லாமல், பொது ஜனங்களும் சிறப்பாக ஆங்காங்குள்ள உணர்ச்சிமிக்க வாலிபர்களுமாவார்கள்.
ஆகவே இம்மகாநாட்டைச் சீரும் சிறப்புடன் நடத்திக் கொடுத்து, மக்களுக்கு உணர்ச்சியும் ஊக்கமும் உண்டாக்குவது நாகப்பட்டினம் வரவேற்புக் கமிட்டியாருடையவும், சிறப்பாக தோழர்கள் காயாரோகணம் பிள்ளை (சேர்மென்), சாமியப்ப முதலியார் (ஜில்லா போர்ட் பிரசிடெண்ட்) முதலியவர்களுடைய கடமை என்று இருந்தாலும், ஜில்லா வாலிபர்கள் அவர்களுக்குப் பக்கபலமாய் இருந்து நடத்திக் கொடுக்க வேண்டியதாகும் என்று கேட்டுக் கொள்ளுவதுடன் மற்ற ஜில்லா வாலிபர்களும் மாகாணம் எங்கும் இருந்து பதினாயிரம் பிரதிநிதிகளுக்கு கம்மி இல்லாமல் வரும்படியாக ஆங்காங்கு வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு துணைத் தலையங்கம் 02.06.1935)