உயர்திரு. சொ.முருகப்பர் அவர்களுக்கும் திரு.மரகதவல்லிக்கும் மணம் நடந்த செய்தி மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றது.
திரு.முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையை பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.
நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலானதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்த தியாக புத்தியும் வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகதவல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929)
***
தமிழர் சங்கம்
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றி வருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமூக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்கு தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப் பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மது பானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது, கலப்பு மணம், மறுமணம் ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமூக சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும், திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்நாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.
‘சமய’ப் பற்றில் மூழ்கி, ‘பரலோகத்திற்கும்’, ‘பரலோகக் கடவுளுக்கும்’ பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும், ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929)