இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசியல் முறை ஏற்பட்ட பின் உண்டான கொடுமைகளில் எல்லாம் தலை சிறந்த கொடுமை சம்பளக் கொள்ளைக் கொடுமையேயாகும். இக்கொடுமைக்குப் பொறுப்பாளிகள் பிரிட்டிஷாரே என்று சொல்லிவிட முடியாது. இந்தியர்களும் சிறப்பாக இந்திய அரசியல் கிளர்ச்சிகளும் மற்றும் இந்திய தேசியமுமேயாகும்.

பிரிட்டிஷார் தாங்கள் அன்னியர் என்னும் பிரிவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், தேசியக் கிளர்ச்சியின் உள் தத்துவம் இன்னதென்று தெரிந்து அதற்கு இணங்கவும் தேசீயவாதிகள் என்பவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும் முற்பட்டதே பிரிட்டிஷ் அரசியல் தந்திரத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட கெடுதிகளுக்கெல்லாம் காரணம் என்று சொல்லலாம்.

இன்றைய தினம் உலகத்தில் எந்த தேசத்திலும் எவ்வளவு செல்வம் பொருந்திய தேசத்திலும் உள்ள அரசாங்க உத்தியோகங்களில் இந்தியாவில் இருந்துவரும் சம்பளக் கொள்ளைக் கொடுமை இல்லை என்றே சொல்லுவோம்.periyar anna veeramaniஇந்திய மக்களில் ஒரு மனிதனுடைய ஒரு நாளைய சராசரி வரும்படி 016 பை. என்று பொருளாதார நிபுணர்களால் கணக்கிடப் பட்டிருக்கிறது. இது இந்தியப் பொருளாதார நிபுணர்களும் இந்திய தேசீயவாதிகளும் அவர்களது தலைவர்களும் ஆகிய எல்லோராலும் இது ஒப்புக்கொண்ட விஷயமாகும்.

ஆகவே ஒரு மனிதனுடைய சராசரி வரும்படி மாதம் 1க்கு 2130 அல்லது 3 ரூபாய்க்கு உட்பட்டதேயாகும். மேலும் கூறவேண்டுமானால் இவ்வளவிற்கும் கூட மார்க்கமில்லாமல் இதைவிடக் குறைவான வரும்படி சம்பாதிக்கின்றவர்களும் உண்டு.

இந்தியப் பொருளாதார நிபுணர்கள் என்பவர்களாலும், இந்திய தேசீயத் தலைவர்கள் என்பவர்களாலும் ஆதரிக்கப்படும் தேசீயக் கைத்தொழில் என்பதின் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வரும்படி தினம் 016 பை. சில சமயங்களில் 010 அணா, சில சமயங்களில் இதைவிடக் குறைவும் ஆகும்.

எப்படியெனில் சுயராஜ்யத்துக்கு மார்க்கம் என்று சொல்லப்படும் கதர் நூல் நூற்பதின் மூலம் நபர் ஒன்றுக்கு தினம் ஒரு அணா, ஒண்ணரை அணாத்தான் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் "இந்த வரும்படிகூட கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் கஷ்டப்படும் பட்டினி கிடக்கும் மக்கள் கோடிக்கணக்காயிருக்கிறார்களாதலால் இதுவே கிடைத்தால் போதும்" என்று சொல்லப்படுகின்றது.

இந்தப்படியான தினம் 016 பை. வரும்படி என்பதுகூட மாதம் 1000, 10000 ரூபாய்கள் வரும்படி உள்ளவர்களின் சம்பாதனைத் தொகையையும் தினம் கால் அணா, அரை அணா வரும்படி உள்ளவர்களது சம்பாதனைத் தொகையையும் கூட்டி சராசரி வகுத்துவந்த தொகையே மேற்சொன்ன (016 பை) வரும்படியாகும். இதை அனுசரித்தே ஒரு மனிதனின் நித்திய வாழ்க்கைக்கு இன்றைய நிலைமையில் சராசரி தேவை எவ்வளவு ஆகுமென்று கணக்குப் பார்த்தால் மேற்கண்ட 016 பையே போதும் என்று சொல்லக்கூடிய அனுபவத்தில்தான் அதிகமான மக்கள் இருந்துவருகிறார்கள். இதைவிடக் குறைந்த அளவிலும் ஜீவித்து வருகின்றவர்கள் கோடிக்கணக்கில் இருந்து வருகிறார்கள் என்பது மிகைபடுத்திச் சொல்வதாக ஆகாது. இதற்குக் காலநிலையும் அனுகூலமாய்த்தான் இருக்கிறது.

இன்று அரிசி ரூபாய் 1க்கு பட்டணம் படியில் 8 படி கிடைக்கின்றது. இந்தியாவுக்குள் எந்த ஊரிலும் ரூபாய் 1க்கு 7 படிக்குக் குறைவில்லாமல் கிடைக்கலாம். ஒரு படி அரிசி போட்டுச் சமைத்தால் சராசரி மக்கள் 8 பேர் சாப்பிடலாம். இதில் அபிப்பிராய பேதமே இருக்கக் காரணமில்லை. அப்படியானால் ஒவ்வொரு மனிதனின் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் சேர்த்து அரிசியும் மற்ற ஆகாரச் சாமான்களும் சேர்த்து கணக்குப் பார்த்தால் மேல் குறிப்பிட்டதான தினம் ஒண்ணரையணா வரும்படி சராசரி மக்களுக்கு போதுமானதென்றே சொல்லலாம். மற்றபடி துணி, வீடு, வைத்தியம், படிப்பு ஆகியவைகளுக்கு இதில் பணம் மீதியில்லை. ஆனதினால் தான் இந்தியாவில் தரித்திரர்கள், ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதாகும்.

இப்படிப்பட்ட நிலை உள்ள இந்த தேசத்தில் அரசியல் உத்தியோகங்களில் சேர்ந்துள்ள ஜனங்களுக்கு 1க்கு 100, 500, 1000, 2000, 5000, 10000, 20000 ரூபாய்கள் என்கின்ற கணக்கில் சம்பளங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தப்படி கொடுக்கப்படும் பணங்கள் மேல் கண்டபடி தினம் 1க்கு சராசரி ஒண்ணரையணா வரும்படி உள்ள மக்களிடம் வரியாக வசூலித்தே கொடுக்கப்படுகிறது. இவ்வளவு அதிகப்படியான சம்பளங்கள் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்குச் சரியான காரணங்கள் எதும் சொல்லப்படவில்லை. சொல்லப்படவில்லை என்பது மாத்திரம் அல்லாமல் இந்தப்படி ஏன் கொடுக்கப்படுகின்றது என்று கூட சமீபகாலம் வரை எந்த தேசீய வாதிகளும் தேசீய கிளர்ச்சிக்காரர்களும் தேசீயத் தலைவர்களும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும் கவலை கொண்டு கவனித்தவர்களும், கேட்டவர்களும் அல்ல. மேலும் இவர்கள் அதிகச் சம்பளங்களைப்பற்றி கண்டிக்காமல் கவலைப்படாமல் இருந்தார்கள் என்று மாத்திரம் சொல்லுவதற்கில்லாமல் இருக்கிற சம்பளம் போதாதென்றும் இன்னும் அதிகச் சம்பளம் வேண்டுமென்றும் கேட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன.

சம்பளக் கொடுமை ஒருபுறமிருக்க மற்றொரு புறம் இப்படிப்பட்ட சம்பளங்கள் உள்ள உத்தியோகங்களும் நாளுக்கு நாள் பெருக்கப்பட்டு வந்து சுமார் 30, 40 வருஷங்களுக்கு முன் இருந்த சம்பளங்கள் 100க்கு 100 ரூ. வீதம் உயர்த்தியும், சில உத்தியோகங்களுக்கு 100க்கு 300 வீதம் உயர்த்தியும் வந்திருப்பதுடன் இப்படிப்பட்ட உத்தியோகங்களின் எண்ணிக்கையும் 100க்கு 100வீதமும், சில விஷயங்களில் 100க்கு 300, 400 வீதமும் உயர்த்தப்பட்டு விட்டது.

உதாரணமாக மேல் நிலையில் ஹைகோர்ட் ஜட்ஜிகள் 5 பேர் இருந்து வந்ததற்கு பதிலாக இன்று 15, 16 ஹைகோர்ட் ஜட்ஜிகளும், மந்திரிகள் 2 பேர் இருந்து வந்ததற்குப் பதிலாக 7 மந்திரிகளும் இதுபோலவே கீழ் நிலைகளிலும் ஜில்லாவுக்கு 2 முன்சீப்புகளுக்குப் பதிலாக 6, 7 முன்சீப்புகளும், ஜில்லாவுக்கு 2 டிப்டி கலெக்டர்களுக்குப் பதிலாக 4, 5 டிப்டி கலெக்டர்களும் இப்படியாக ஒவ்வொரு இலாக்காவிலும் சம்பளத் துகையும், உத்தியோக எண்ணிக்கையும் பெருகி ஜனங்களுக்காக அரசாங்க நிர்வாகமும், உத்தியோகமும் சம்பளமும் என்று சொல்லுவதற்கே இல்லாமல் அரசாங்கத்துக்காகவும், உத்தியோகஸ்தர்களுக்காகவும் அவர்களது சம்பளத்துக்காகவும் ஜனங்கள் இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

இப்படியெல்லாம் அரசாங்க உத்தியோக சம்பளக் கொடுமை ஏற்பட்டும் மக்களுடைய கல்வி, அறிவு, நாணையம், ஒழுக்கம், ஒற்றுமை, கூட்டுறவு முதலிய அவசியமானவைகளில் ஏதாவது விருத்திகள் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் ஒரு துறையிலாவது உண்மையான விருத்திக்கு அறிகுறி கூட இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் முன்பு இருந்ததைவிட அனேக துறைகளில் கீழ்நோக்கி இருக்கின்றது என்று சொல்வதற்குக் கூட பல காரணங்கள் இருந்துவருகின்றன.

இந்தப்படியான உத்தியோகப் பெருக்கமும், சம்பள உயர்வும், சேர்ந்து இன்று நம்நாட்டில் உள்ள எல்லா மக்களையும் தங்கள் வாழ்க்கைக்கு உத்தியோகத்தையே எதிர்பார்க்கும்படிக்கும், செல்வம் சேர்ப்பதற்கு சம்பளத்தையே ஆதாரமாகக் கொள்ளும்படிக்கும் அதற்கே ஒவ்வொருவரும் தங்களை தயார் செய்துகொள்ளும்படியும் தூண்டி வருகின்றதே ஒழிய பாடுபட்டு வாழ எந்த மனிதனையும் தூண்டச் செய்யவில்லை. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இன்று சோம்பேரி வாழ்க்கையில் வாழ ஆசைப்படுவதும் மொத்த ஜனத்தொகையில் சரீரத்தில் பாடுபட்டு வேலை செய்பவர்களைவிட சோம்பேரிகளே கணக்கில் மிகுந்திருக்க நேரிட்டதும் இதனாலலேயேதான் என்பது நமது உருதியான அபிப்பிராயமாகும்.

கல்வி இல்லாதவர்கள் எல்லாம் சரீரத்தால் பாடுபடவேண்டியவர்கள் என்றும் ஏதோ இரண்டு எழுத்துக்கூட்டிப் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லாம் அறிவினால் வேலை செய்ய வேண்டுமே ஒழிய, சரீரத்தால் பாடுபட முடியாதவர்கள் என்றும் நினைக்கத்தக்க மனப்பான்மை ஏற்பட்டிருக்கின்றது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களே பாடுபட வேண்டியவர்கள் என்பதாக ஆகிவிட்டதால் தொழில்முறை மேன்மையடையாமல் போக ஒரு காரணமாகி விட்டது. படித்தவர்கள் உத்தியோகத்தையே பிரதானமாகக் கருதி அதிலேயே பிரவேசித்து விட்டதால் போட்டி அதிகம் ஏற்பட்டு உத்தியோகத்தின் யோக்கியதை குறைந்ததுடன் அதற்கு வேண்டிய ஒழுக்கம், நாணையம், நீதி முதலியவைகளும் குறைய நேரிட்டு விட்டன. இதன் பயனாய் ஜனங்களுக்கு இரண்டுவிதக் கெடுதிகள் ஏற்பட்டு விட்டன. ஒன்று அதிகவரிக் கஷ்டம், அதாவது ஏழைகள் பாடுபடுபவர்கள் சம்பாதிக்கும் செல்வம் எல்லாம் இச்சோம்பேரிக் கூட்டங்களுக்கு சம்பளத்திற்காக அழ நேரிட்டு வரிகளாகக் கொடுத்துவருவதும், இரண்டு, அரசாங்க நிர்வாக ஒழுக்கக் குறைவு ஏற்பட்டு ஜனங்களுக்கு நீதி, சமாதானம், பத்திரம் ஆகியவைகள் இல்லாமல் போனதும் ஆகும். ஆக இந்த இரண்டு காரியங்களே இன்று இந்திய மக்களின் வாழ்க்கைக்கு பெருத்த கஷ்டமாக இருந்து வருகின்றன.

இவை இரண்டும் சரிப்பட்டு விடுமேயானால் அரசியலில் இந்தியாவுக்கு எவ்வித குறைவும் இல்லை என்று ஒருவாரு சொல்லலாம். ஆனால் இந்திய அரசியல் கிளர்ச்சியில் இந்த இரு குறைகள் நீங்குவதற்காக இதுவரை எவ்வித கிளர்ச்சியும் செய்ததும் இல்லை, இன்றும் செய்யப்படுவதாகவும் தெரியவில்லை. அது மாத்திரமல்லாமல் இதுவரை நடந்து வந்த அரசியல் கிளர்ச்சியானது பெரிதும் இவ்வித அதிக சம்பளம் பெறவும் யோக்கியமும், நாணையமுமாய் நடந்து கொள்ள முடியாத உத்தியோகங்களைப் பெருக்கி அவற்றைப் பெறவுமே செய்யப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.

இந்தியாவில் இன்று பல அரசியல் கக்ஷிகள் இருக்கின்றன என்றாலும் அவற்றினுடைய முக்கியமானதும் முதன்மையானதும் ஒன்றே ஆனதுமான உத்தேசமெல்லாம் இப்படிப்பட்ட சம்பளமும் உத்தியோகமும் பெருவதல்லாமல் வேறொன்றும் இல்லை என்பது உண்மையான அபிப்பிராயமாகும்.

நிற்க உலகத்தில் இந்தியாவைப்போல் மற்றும் எத்தனையோ தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் அரசியல் கிளர்ச்சிகள் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. அரசாங்கத்தைக் கைப்பற்றி பூரண சுயேச்சை என்னும் பேரால் பொதுஜனங்களால் பல நாடுகளில் அரசாங்கம் நடைபெற்றும் வருகின்றன. அப்படிப்பட்ட தேசங்களின் செல்வ நிலைமைகள் இந்தியாவைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகவும் இருக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி வரும்படி தினம் ஒன்றுக்கு 016. ஆனால் இங்கிலாந்து அமெரிக்கா முதலிய நாட்டு மக்களின் சராசரி வருமானம் 180, 200 ரூபாய்களாகும். இந்த தேசத்தின் வரி வருமானம் வருஷம் 200 கோடி ரூ. ஆனால் இங்கிலாந்து தேசத்தின் வருமானம் வருஷம் ஒன்றுக்கு 1200 கோடி ரூபாய்களாகும். அப்படிப்பட்ட தேசங்களில் அரசாங்க உத்தியோகங்களின் சம்பளங்களைப் பார்த்தோமேயானால் நமது நாட்டு சம்பளத்தின் கொள்ளை போகும் முறையும், கொடுமையும் பாடுபடும் ஏழை ஜனங்களை பாடுபடாத சோம்பேரிகள் எப்படி வஞ்சிக்கிறார்கள் என்கின்ற உண்மையும் ஆகியவைகள் எளிதில் புலப்படும். இந்தியா வைசிறாய் என்கின்ற உத்தியோகத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயானால் இந்தியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்ட்ரேலிய முதலிய பல தேசங்களின் ஆக்ஷிக்கு மேலதிகாரியாய் இருந்து இந்திய வைசிறாயையும், இன்னும் பல வைசிராய்களையும் நியமிக்கவும் நீக்கவும் அதிகாரமுள்ள பிரிட்டிஷ் தலைமை அதிகாரிக்கு மாதம் 5000 ரூ. சம்பளமேயாகும்.

பிரஞ்சு தேசத்து குடி அரசுத் தலைவருக்கு அதாவது அரசர் இல்லாமல் அரசருக்கு பதிலாய் இருந்து அந்த தேசத்துக்கும் மற்றும் அதன் ஆக்ஷிக்குக் கீழ்ப்பட்ட ஏனைய தேசங்களுக்கும் தலைவராக இருப்பவர்களுக்கு மாதம் 1க்கு 1500 ரூபாய் சம்பளமே கொடுக்கப்பட்டு வருகின்றது. நம் நாட்டு நிர்வாக சபை அங்கத்தினர்கள் மந்திரிகள் ஆகியவர்கள் சம்பளங்கள் அமெரிக்கா கவர்னர்கள் சம்பளங்களை விட அதிகமாகவும், பிரிட்டிஷ் தலைமை அதிகாரி நிர்வாக சபை அங்கத்தினர்கள் மந்திரிகள் ஆகியவர்கள் சம்பளங்களை விட 100க்கு 100பங்கு 150 பங்கு அதிகமாகவும் இருந்து வருகின்றன. மேல்நாட்டு அரசாங்கங்களின் வரி வரும்படி நம் நாட்டு வரி வரும்படியைவிட 5, 6 மடங்கு அதிகமாகவும், அந்நாட்டு மக்களின் வரும்படி நம் நாட்டு மக்களின் வரும்படியைவிட 20 பங்கு 30 பங்கு அதிகமாகவும் இருக்க உத்தியோக சம்பளங்கள் மாத்திரம் அந்நாட்டு சம்பளங்களைவிட இந்தியாவில் பலமடங்கு அதிகமாய் இருந்தால் இந்த அரசாங்க நிர்வாகமும் உத்தியோக சம்பளமும் தேசத்தின் நிலைமையும் ஜனங்களுடைய ÷க்ஷம லாபங்களையும் அனுசரித்து நடத்தப்படுகின்றது என்று எப்படி சொல்லக்கூடும். ஆகவே இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள எல்லாவித அரசியல் கிளர்ச்சிகளையும் தகர்த்து ஒழித்து எறிந்து விட்டு இந்தக் கொள்ளை போன்ற சம்பளக் கொடுமையை ஒழிப்பதற்கு முயற்சித்தல் அதுவே இந்திய நாட்டு ஏழை மக்களுக்குச் செய்த அளவிட முடியாத நன்மையாகும்.

மந்திரிகளுக்கு 5000 ரூ சம்பளம் என்கின்ற திட்டம் இல்லாதிருக்குமானால் நமது நாட்டு காங்கிரஸ், மிதவாதி சங்கம், ஜஸ்டிஸ் கக்ஷி ஆகியவைகளின் ஒழுக்கமும் நாணையமும் இவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் போயிருக்காது என்பதுடன் நிர்வாகங்களும் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் ஏற்பட்டிருக்காது. கக்ஷிகளின் மற்றக் கொள்கைகள் எப்படி இருந்தாலும் அரசியல் ஆதிக்கம் கைக்கு வந்தால் தங்கள் அதிகாரத்துக்குள் இருக்கப்பட்ட உத்தியோகங்களின் சம்பளங்களை நாட்டின் தகுதிக்கு ஏற்ற இன்ன அளவுக்கு குறைத்து விடுகின்றோம் என்றும் தங்கள் அதிகாரத்துக்குள் கட்டுப்படாத சம்பளங்களைக் குறைக்க அதிகாரம் பெருவதற்கு கிளர்ச்சி செய்கின்றோம் என்றும் சொல்லி அந் நிபந்தனையின் மேல் எந்தக் கட்சி புறப்பட்டாலும் அத்துடன் நமக்கு எந்தவிதப் பிணக்கும் இருப்பதற்கில்லை. அன்றியும் அக்கொள்கைகள் ஈடேற அவற்றுடன் ஒத்துழைக்கவும் ஆ÷க்ஷபணை இல்லை.

ஜஸ்டிஸ் கட்சி கூட தாங்கள் மறுபடியும் மந்திரிகளாய் வர நேரிட்டால் மந்திரிகள் சம்பளம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் 1000 ரூபாய்க்கு மேற் போகாமல் அதற்குள்ளாகவே குறைத்துக் கொள்ளுகிறோம் என்றும் இந்த விகிதமே மற்ற உயர்ந்த சம்பளங்களையும் குறைத்து விடுகிறோம் என்றும் சொல்லி அந்தப்படி நடக்க முன்வருவார்களானால் அதற்காகவே அதை இன்றைய நிலைக்கு தீவிரக்கட்சி என்று கூட சொல்லிவிடலாம். அன்றியும் அது வெற்றி பெரும் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அப்படிக்கில்லாமல் அதாவது சம்பளத்தில் குறைத்துக் கொள்ளாமலும் மற்ற உயர்ந்த சம்பளங்களைக் குறைக்காமலும் இருந்து கொண்டு இவர்கள் ஜனங்களுக்கு எவ்வித நன்மை செய்கிறோம் என்ற சொல்வதாய் இருந்தாலும் இவர்களுக்கு ஜன சமூக ஆதரவு கிடைப்பது கஷ்டமான காரியமேயாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது நாட்டைப் பற்றி பொருப்பிருந்து உண்மையாய் அது தேசத்து மக்களுக்கு உழைப்பதாயிருக்குமானால் தீண்டாமையை விலக்குவேன் என்பதாலும் தீண்டாத ஜாதியார்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறேன் என்பதாலும் இந்தியா பூராவும் கதர்மயம் ஆக்கிவிடுவேன் என்பதாலும் ஜனங்களை ஏமாற்றிவிடலாம் என்கின்ற எண்ணத்தை விட்டுவிட்டு இந்தக் கொள்ளையாம் சம்பளக் கொடுமையை அடியோடு ஒழித்து விடுவோம், நாங்களும் மந்திரிகளாக நேர்ந்தால் 1000 ரூபாய்க்கு கீழாகவே சம்பளம் பெருவோம் என்று உறுதி கூறிவிட்டு வரப்போகும் தேர்தலில் தலைகாட்டட்டும். அப்படிக் கில்லையானால் அது எவ்விதத்திலும் பயனுள்ளதென்றோ நாணையமானது என்றோ சொல்லிக்கொள்ள சிறிதும் யோக்யத்தை அற்றதாகிவிடும்.

ஆதலால் அரசியலின் பேரால் வாழ்க்கை நடத்த எண்ணி இருக்கிறவர்கள் தேர்தலில் நின்று பயனடையக் கருதி இருக்கின்றவர்கள் இதைக் கவனித்து நடந்து கொள்ளுவார்களாக.

(புரட்சி தலையங்கம் 17.06.1934)

Pin It