ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்று சொல்லப்படும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, தாலூகாபோர்டு, கிராமப் பஞ்சாயத்து முதலியவைகள் அரசாங்கத்தின் நேர் பார்வையிலிருந்து "ஜனநாயகத்துவத்"திற்கு மாற்றப்பட்டதின் பயனாக, சுமார் இந்த 30 வருஷ காலத்தில் பொது ஜனங்களுக்கு ஏதாவது பயனேற்பட்டதா அல்லது அரசாங்க மேற்பார்வையின் கீழ் இருந்தை விட மோசமான நிலையில் இருக்கின்றனவா என்பது யோசிக்க வேண்டியதும், அதன் உண்மையைப் பாமர மக்கள் அறியும்படி செய்ய வேண்டியதும் அவசியமான காரியமாகும்.

நம்மைப் பொருத்தவரை ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் கலந்திருந்ததைக் கொண்டும், சில ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குத் தலைமை வகித்து நிர்வாகப் பொருப்பை ஏற்றிருந்ததைக் கொண்டும் ஏற்பட்டுள்ள அனுபவத்தையும் மற்றும் அனேக ஸ்தல ஸ்தாபன நிர்வாக விஷயங்களைப் பார்த்தும், கேட்டும் உள்ள அனுபவத்தைக் கொண்டும், ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்பது பொதுஜனங்கள் ளகையில் இருப்பதைவிட, அரசாங்கத்தின் நேர்ப் பார்வையிலிருந்து வந்ததும், இனியும் அப்படியே இருந்து வருவதும் மேலானது எனக் கூறுவோம்.

அரசாங்க நேர்ப்பார்வையினால் முதலாவது அனுகூலம் என்னவென்றால் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் இன்று "ஜனநாயகத்தின்" கீழ்நடைபெறும் செலவுத் தன்மையில் பகுதி செலவிலேயே நடைபெறக் கூடும் என்பதும், நாணைய விஷயமும் நீதிநிர்வாகப் பாரபக்ஷமற்ற விஷயமும் இன்றுள்ள ஜனநாயக ஆட்சி, நீதி, நிர்வாகம், நாணையம் ஆகியவைகளைவிட பலபங்கு மேலான யோக்கிய முறையில் நடைபெறக் கூடும் என்றும் சொல்லுவோம்.

periyar 340ஏனெனில் ஸ்தல ஸ்தாபன நிர்வாகப் பொறுப்பிலிருப்பவர்களில் 100க்கு 90 பேர் அந்நிர்வாகத்தை துஷ்ப்பிரயோகம் செய்தும் மனப்பூர்வமாய் மனதாரத் தெரிந்து பொருளாதாரத் துறையில் தாருமாறாகவும், கவலையற்றும் கையாடுதல்கள் உள்பட நாணையக் குறைவாக நடந்தும் வருகின்றார்கள் என்று நாம் எழுதினால் அதை கண்டு நமது தோழர்கள் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, நம்மை குற்றம் காணமாட்டார்கள் என்றே கருதுகின்றோம். உதாரணமாக ஸ்தல ஸ்தாபன கன்ட்ராக்டுகள் பெரிதும் அதன் கௌரவ நிர்வாகிகளான அதன் தலைவர்கள், அங்கத்தினர்கள் ஆகியவர்களின் சொந்தப் பொருப்பிலும், சுயநல வேட்கையிலுமே நடைபெறுகின்றன என்பது சிறிதுகூட ரகசியமான காரியமல்ல.

ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகள் விஷயத்திலோ சகிக்க முடியாத அக்கிரமங்கள் நடைபெறுவதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமென்று எவரும் விரும்பமாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.

ஏனெனில் அரசாங்க மேற்பார்வை ஸ்தாபன சிப்பந்தி களுக்காவது, வேஷத்திற்காகிலும் ஒருவித யோக்யதாம்சமும், அனுபோகமும் ஒழுங்கு முறையும் கவனிக்கப்படுகின்றது. ஸ்தலஸ்தாபன சிப்பந்திகளுக்கு இவற்றில் எதுவும் சரியாக கவனிக்கப்படுவதில்லை. பி.ஏ.க்கள் மாதம் 20 ரூபாய்க்கு திண்டாடும்போது எஸ்.எஸ்.எல்.சி. ஆள்கள், சில சமயங்களில் பாஸ் பண்ணாத ஆள்கள் இந்தக் காலத்தில் நியமிக்கப்பட்டு மாதம் 100 ரூ. 150 ரூ. சம்பளங்களுக்கு எவ்வித ஒழுங்கு முறையும் கவனிக்கப்படாமல் இஷ்டம் போல் சம்பளங்கள் உயர்த்தப்படுவதையும் பார்த்தால் பொதுஜனங்களின் வரிப்பணம் ஸ்தல ஸ்தாபனங்களின் பேரால் ஜனநாயகத்தில் எவ்வளவு தூரம் பாழாக்கப்படுகின்றது என்பது சுலபமாய் விளங்கும்.

மற்றும் சிப்பந்திகள் தேர்தல் (எலக்ஷன்)களில் சம்மந்தப்பட்டதற் காகவும், அங்கத்தினர்கள் தயவிற்காகவும் மற்றும் தலைவர்கள் பலர் தாட்சண்யங்களுக்காகவும் உத்தியோகங்களை உற்பத்தி செய்வதும், அவர்களுக்கு தங்கள் இஷ்டப்படி சம்பளங்கள் அள்ளிக் கொடுப்பதுமாகிய காரியங்களைப் பார்த்தால் அரசாங்க நேர்முக நிர்வாகம் 10 மடங்கு மேலானதென்றே ஏன் சொல்லக் கூடாது.

ஸ்தல ஸ்தாபனங்களில் உத்தியோகங்கள் உற்பத்தி செய்யும் போதும், உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கும் போதும், கிரேடுகள் ஏற்படுத்தி உயர்த்தப்படும் போதும், பெரிதும் வரி செலுத்துவோரின் பண விஷயத்தில் தங்களுக்கு கடுகளவாவது பொருப்பு நாணையம் கவலை ஆகியவை இருக்க வேண்டாமா என்று கவனிக்கும் அங்கத்தினர்கள், ஸ்தல ஸ்தாபனங்களில் 100க்கு 5 பேராவது உண்டா என்று கண்டுபிடிப்பது மிக கடினமான காரியமே யாகும். இப்போது உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் சிப்பந்திகளை ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய செலவில் 3ல் 1 பாக செலவில் சிப்பந்திகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு இன்றைய ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகளின் யோக்கியதையையும், நாணையத்தையும் விட பல மடங்கு அதிகமுள்ளவர்களாகவும் இருக்கக்கூடும் என்பதிலும், நமக்கு சந்தேகமில்லை.

இப்படி யெல்லாம் நாம் எழுதுவதால் அரசாங்க நேர்ப்பார்வையில் உள்ள ஸ்தாபன நிர்வாகங்களும், சிப்பந்திகளும் அவர்களது யோக்கியதைகளும் மேன்மையானதென்றோ, நாணையமானதென்றோ, நீதியானதென்றோ சொல்லுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அரசாங்க நிர்வாக ஊழல்களும், சிப்பந்திகள் யோக்கியதையும், நாணயக் குறைவும் நமக்கு நன்றாய்த் தெரியும். இவ்விஷயத்தில் நமக்கு 30, 40 வருஷ அனுபவமுண்டு என்றாலும் குறிப்பிட்ட இரண்டொரு விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் அட்டெண்டர் முதல் ஹைக்கோர்ட் ஜட்ஜி வரையிலும் இந்தியர்களைவிட ஆங்கிலேயர்கள் நாணையமும், யோக்கியப் பொருப்பும், நடுநிலையுமுள்ளவர்கள் என்பதை நாம் மறைக்க முயலவில்லை. எப்படி யிருந்த போதிலும் அரசாங்க நேர்முக நிர்வாகம் பொது ஜனங்களுக்கு பொருப்புடையதாக இல்லை என்கின்ற ஆதாரத்தைக்காட்டி கிளர்ச்சி செய்து அடைந்த ஜனநாயக ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் அரசாங்க நேர்ப் பார்வை நிர்வாகத்தைவிட கேவலமாக நடைபெறுகின்றது என்பதைக் காட்டுவதற்காகவே இவற்றை எழுதுகிறோம்.

மற்றும் தேர்தல்களில் நடக்கும் நீதிக் கொடுமையும், நாணையக் குறைவும் ஒருபுறமிருக்க, ஸ்தல ஸ்தாபனங்களில் அதன் அங்கத்தினர்களுக்குள் ஏற்படும் கட்சிப் பிரதிகட்சி உபத்திரவங்களால் நிர்வாகம் கெடுதல், நஷ்டமடைதல் முதலாகிய காரியங்கள் அரசாங்க நேர்முக ஆட்சியில் இருக்க முடியாது. சமீபகாலமாக அதாவது சுமார் 20 வருஷ காலமாக அரசாங்க ஸ்தல ஸ்தாபன இலாக்கா "ஜனநாயக" மந்திரிகள் கைக்கு வந்த பின்பு ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இருந்த இருக்க வேண்டிய யோக்கியதைகள் அனேகம் அடியோடு குறைந்து போய்விட்டன. சாதாரணமான மீன் கடைகள், கள்ளுக்கடைகள் என்று சொல்லும்படியான இடங்களில் நடக்கும் நடவடிக்கைகள், வார்த்தைப் பிரயோகங்கள் ஆகியவைகள் பெரிதும் பெருகி வருகின்றன. எங்காவது ஒன்று இரண்டு ஸ்தல ஸ்தாபனங்கள் சற்று கௌரவமாய் நடைபெறுகின்றது என்று சொல்லப்படுமானால் அவை பெரிதும் தலைவர் என்று சொல்லும்படியானவரின் ஏதேச்சாதிகாரத்திலும், அத்தலைவருடைய சுயநல லாபத்திற்கும் அனுகூலமாய் நடந்து வருவதாய் இருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு தனி விசேஷத்துவமாய் இருக்கலாம். நாம் 100க்கு 90 எண்களைப் பொருத்தே எழுதுகிறோம்.

ஸ்தல ஸ்தாபனங்கள் மந்திரிகள் ஆட்சிக்கு வந்தபின் அதிக மோசமானதற்குக் காரணம் சொல்ல வேண்டுமானால் உண்மையான ஜனநாயகத்துக்கு மக்களை தகுதியாக்காமல் பாமர மக்கள் பெயரால் ஒரு சிலர் அதிகாரமும், பதவியும் பணமும் அனுபவிக்கத்தக்க மாதிரியான "ஜனநாயகம்" பெற்றதாலும், அப்படிப் பெற்றவர்கள் "ஜனநாயக ஆட்சியை" தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கருத்தில் கட்சிபேரால் நிர்வாகம் செலுத்த வேண்டியதாக ஏற்பட்டதினாலும், அதற்கு கௌரவமும், பிடிப்பும் இல்லாமல் போக நேரிட்டுவிட்டது. நமக்குத் தெரிய ஸ்தல ஸ்தாபனங்களில் மனதார பணத்தைக் கையாடினவர்களையும் பொய் கணக்கு எழுதி பணத்தை எடுத்துக் கொண்டவர்களையும் கட்சி காரணமாக என்று கேள்வியும் கேட்பாடும் இல்லாமல் விட்டுவிடப்பட்டிருக்கிறது.

நிற்க, பொது முறையில் சமீபத்தில் நடந்த கல்கத்தா முனிசிபல் மேயர் தேர்தல் முதலிய பல தேர்தல்களைப் பார்த்தாலும் ஜனநாயகம் எப்படி இருக்கின்றது என்பதும் ஒருவாறு அறியலாம். ஜனநாயகம் என்பதும், ஜனநாயகத்துவத்திற்கு உட்பட்ட அரசர்கள் ஆட்சி என்பதும், குடியாட்சி என்பதும் ஆகிய ஆட்சிகளெல்லாம் இன்றைய உலகில் கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் மக்களுக்கு ஒரே பலனைத் தான் கொடுத்து வருகின்றன. ஆனால் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கலாம். பயன் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. இக்கஷ்டங்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால் இந்த 10 வருஷ காலமாக எப்படி ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள் "பொது ஜனங்"களிடம் இருந்து சிறிது சிறிதாக பிடுங்கப்பட்டு விட்டதோ, அது போலவே இப்பொழுது இருக்கும் மற்றும் சில அதிகாரங்களும் கூடிய சீக்கிரத்தில் பிடுங்கப்பட்டு கடைசியாக மற்ற இலாக்காக்களைப் போலவே சகலமும் அரசாங்க நேரடியான ஆதிக்கத்திற்குப் போய் இப்போது இருப்பதுபோன்ற பொது ஜனங்களின் சம்மந்தத்தில் இருப்பதை மாற்றிவிட வேண்டியதே அவசியமாகும்.

ஏனெனில் பொது ஜனங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை ஸ்தல ஸ்தாபனம், ஜனநாயகம் என்னும் பேரால் ஜனநாயகத்துவம் அறியாத அதற்கு லாயக்கில்லாத மக்களிடம் போய்ச் சேரும்படியான மாதிரியில் ஏற்பாடுகள் செய்து அவர்கள் வசம்விட்டுப் பாமர மக்களை (ஏற்கனவே அரசாங்கம் உருஞ்சுவது ஒரு புறமிருக்க) இவர்கள் ஒருபுறம் உருஞ்சும்படி செய்வது மிகப் பரிதாபகரமான காரியமாகும்.

சமீப காலத்தில் சில முனிசிபாலிட்டிகளிலும், ஜில்லா போர்டுகளிலும் ஏற்பட்ட சம்பவங்களையும், அது விஷயமாய் ஸ்தல ஸ்தாபன இலாக்கா நடந்து கொண்ட மாதிரியையும், அதனால் பொதுஜனங்கள், பாமர மக்கள் எப்படி எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் உணர்ந்தே நாம் இப்படி எழுதுகின்றோம்.

முடிவாக ஒரு விஷயத்தைக் குறித்துவிட்டு இதை முடிக்கின்றோம். அதாவது திருச்சி முனிசிபல் சேர்மனை அரசாங்கம் விரும்பாமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கியாய்விட்டது. பொது ஜனங்கள் இப்போது அவரையே விரும்பி மீண்டும் தேர்ந்தெடுத்து அரசாங்கத்தை அவமானப் படுத்திவிட்டார்கள். இது அரசாங்க முடிவுக்கு விரோதமாக ஜனங்கள் நடந்து கொண்ட காரியம் என்று அரசாங்கம் சொல்லி விடலாம். ஆனால் பொதுஜனங்கள் விரும்பாமல் மதுரை ஜில்லா போர்டு தலைவரை நீக்கிவிட பெரும்பான்மையோர் சம்மதித்து அபிப்பிராயத்தை முறைப்படி தெரிவித்தார்கள். இதை அரசாங்கம் லட்சியம் செய்யாமல் பொது ஜனங்களை அவமானப்படுத்தி விட்டதுடன் அவருக்கு (அப்படிப்பட்ட மதுரை ஜில்லா போர்டு தலைவருக்கு) ஒரு உத்தியோகத்தை சிருஷ்டித்து பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டும் வருகின்றது. போறாக் குறைக்கு திருநெல்வேலி, நீலகிரி (ஒத்தை) ஆகிய சேர்மென்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி சேர்மனையே மறுபடியும் பொதுஜனங்கள் தெரிந்தெடுப்பார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இதனாலும் அரசாங்க ஸ்தல ஸ்தாபன இலாக்கா மற்றொரு தடவை பொது ஜனங்களால் அவமதிக்கப்பட்ட அவமானத்திற்கு ஆளாகலாம். இந்தக் காரியங்கள் நியாயத்தையும் நிர்வாக ஒழுங்கையும் ஆதாரமாகக் கொண்டு நடைபெற்றவைகளா அல்லது கக்ஷி ஜாதி அபிமானம் சுயநலம் ஆகியவைகளை லக்ஷியமாக கொண்டு நடை பெற்றவைகளா என்று பார்த்தால் நியாயத்தைவிட கக்ஷியும் ஜாதி அபிமானமே அதிகமாய் தாண்டவமாடி இருக்கிறது என்பது நமது அபிப்பராயம். ஆனால் நிர்வாகிகளிடம் (ஸ்தல ஸ்தாபன தலைவர்களிடம்) பல ஒழுங்குத் தவருதல்கள் இருந்திருக்கலாம் என்றாலும் அவ்வித ஒழுங்குத் தவருதல்களை விட பலமடங்கு அதிகமான ஒழுங்குத் தவருதல்கள் (நாணையத் தவரான குற்றங்கள்) செய்தவர்களையெல்லாம் சும்மா விட்டு விட்டு ஒருவர் இருவர் ஒழுங்குத் தவறுதல்கள் (அதுவும் சட்டத் தவருதல்கள்) செய்ததை மாத்திரம் கவனித்தால் அது வாதத்திற்கு சமாதானமாகுமே ஒழிய நியாயத்திற்குச் சமாதானமாகாது.

ஆதலால்தான் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் மேற்பார்வை கூட அரசாங்கத்தின் நேரடியான பார்வைக்குள் போய்விட வேண்டுமென்று விரும்புகின்றோம். ஏனெனில் ஸ்தல ஸ்தாபனங்கள் எப்படி சிலருடைய (செல்வவான்கள் படித்தவர்கள் ஆகியவர்களுடைய) நன்மைக்கு பயன்படுகின்றனவோ அதுபோலவேதான் ஸ்தல ஸ்தாபன நிர்வாக இலாக்காவும் பிரபுக்கள், ஜமீன்தாரர்கள், செல்வவான்கள், படித்தவர் ஆகியவர்களுடைய நன்மைக்காக இருந்து வருகின்றது. இதுவரையில் இந்த இரண்டு துறையும் அரசாங்க நேரடி மேற்பார்வை, நேரடி நிர்வாகம் என்று சொல்லப்படுவதை விட ஏழை மக்களுக்கு, உழைப்பாளிகளுக்கு எவ்வித நன்மையும் அதிகமாய்ச் செய்து விடவில்லை என்பதுடன் பல தீமைகளும் செய்யாமல் இருக்கவில்லை என்று விசனத்துடன் கூறி முடிக்கிறோம்.

(புரட்சி தலையங்கம் 03.06.1934)

Pin It