periyar 391அரசியல் புரட்டுகள் நாளுக்கு நாள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி, மக்களை ஏமாற்றி நாட்டைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றது என்பதற்கு உதாரணம் இந்திய தேசிய காங்கிரஸ் என்பது. “இந்தியா பூர்ண சுயேச்சை அடைய வேண்டும் என்பது காங்கிரஸ் லட்சியம்” என்பதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதே போதுமான அத்தாட்சியாகும்.

மத சம்மந்தமான புரட்டுகளுக்கு மதிப்பு குறைந்த பின்பே தந்திரக்காரர்களும் சுயநலக் காரர்களும் ஏமாற்றி வயிரு வலிப்பவர்களும் இந்த அரசியல் புரட்டை இவ்வளவு ஆதிக்கத்திற்கு கொண்டு வர வேண்டியதாகி விட்டது.

இன்றைய தினம் இந்தியாவிலுள்ள மக்களில் லக்ஷத்தில் ஒருவருக்குக் கூட பூர்ண சுயேச்சை என்றால் என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன் உண்டு என்பன போன்ற விஷயங்கள் சிறிதும் தெரிந்திருக்காதென்றே சொல்லலாம். அது மாத்திரமல்லாமல் பூரண சுயேச்சைத் தீர்மானம் கொண்டு வந்தவர்களும் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தவர்களுமே அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு அல்லது தங்களுக்குள்ளாகவே விளக்கிக் கொண்டு அதைக் கொண்டு வந்தார்களா? என்று கூட சொல்ல முடியாது.

ஆனால் பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறியவுடன் காங்கிரசிலிருந்து ராஜினாமாக் கொடுத்த சில தேசீயவாதிகளுக்காவது தெரியுமா என்று கேட்கலாம். அவர்களுக்கும் தெரியாதென்றே சொல்லுவோம். பின்னை ஏன் ராஜினாமாக் கொடுத்தார்கள் என்றால், சர்க்கார் அடக்கு முறை வந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டுமே என்று பயந்து சைமன் கமிஷன் வந்தபோது சர்க்கார் இரண்டொருவரைப் பிடித்தவுடன் பயந்து கொண்டு காங்கிரசை ராஜினாமாக் கொடுத்து “நான் தான் ஹர்த்தால் செய்வதில்லை என்று முன்னமேயே சொல்லி விட்டேனே” என்று விளம்பரப்படுத்திய போது என்ன நாணையம் இருந்ததோ அந்த நாணையம் கொண்டு தான் அநேகர் இப்பொழுதும் ராஜினாமாக் கொடுத்தார்களே ஒழிய பூரண சுயேச்சையின் தத்துவம் தெரிந்து தேசீய வெறி கொண்டோ அல்லது பூரண சுயேச்சை வேண்டாமென்றோ அது சரியல்லவென்றோ தோன்றி ராஜினாமாச் செய்தவர்கள் அல்ல.

எனவே, சுயராஜ்ஜியம் என்பதற்கு எப்படி இது வரை அர்த்தமே இல்லாமல் இருந்ததோ அது போலவே இன்னும் அதைவிட மேலாகவே அர்த்தமில்லாமல் இது செலாவணியாய்க் கொண்டிருக்கின்றது. இந்த பூரண சுயேச்சைத் தீர்மானம் சென்னை காங்கிரசில் வந்தபோது திரு. காந்தி அதை விளையாட்டுப் பிள்ளைகள் நடவடிக்கை என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் 2 ´ம் கழித்து அந்த வார்த்தை விளையாட்டுப் பிள்ளைகளிடமிருந்து “மகாத்மாக்களிடம்” சென்று விட்டது.

இந்த இரண்டு வருஷ இடையில் பூரண சுயேச்சைக்கு எப்படி அவ்வளவு பெரிய அந்தஸ்து வந்து விட்டது என்பது “சிதம்பர” இரகசியமாய் இருக்கின்றது. அன்றியும் இன்றைய தினம் பூரண சுயேச்சை என்கின்ற வியாபாரத்திற்கு இன்றைய தினம் யார் யார் கூட்டாளிகள் என்று பார்த்தால் “ஜாதி மதங்களையெல்லாம் ஒழிக்க வேண்டும்” “சொத்து வித்தியாசங்களை யெல்லாம் ஒழிக்க வேண்டும்” என்கின்ற திரு. ஜவாரிலால் நேரும், ஜாதி மத வர்ணாசிரம தர்மங்களை யெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்கின்ற திரு. காந்தியும் முக்கிய கூட்டாளி களாவார்கள்.

இவர்களுக்கு எதிரியாக சின்ன நேருவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு எதிர்க்கும் “இந்த அரசாங்கத்தில் எவ்வித சம்மந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது.

பள்ளிக் கூடம், கோர்ட்டு, சட்டசபை ஆகியவைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் அதிகமாக பூமி சொத்து வைத்திருப்பவர்கள் இடம் உள்ள சொத்துக்கள் எல்லோருக்கும் போய்ச் சேரும்படி பார்க்க வேண்டும்” என்றும் சொல்லும் திரு. சுபாஷ் சந்திரபோசும், பெரிய நேரு விடம் போட்டிப் போட்டு எதிர்க்கும் அரசாங்கத்தின் தயவாலேயே தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டு எல்லோரிடமும் இருக்கும் சொத்தும் தனக்கே வந்து சேரும்படியான காரியம் நாணயமற்ற முறையில் அனுபவத்தில் செய்து கொண்டிருக்கும் திரு. சீனிவாசய்யங்காரும் பூரண சுயேச்சை வியாபாரத் திற்கு போட்டி வியாபாரக் கூட்டாளிகளாவார்கள்.

மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு அதற்கு ஆதாரமான எந்த காரியங்களும் யாரும் பிரவேசித்து எவ்வித மாறுதலும் செய்யக் கூடாது என்று மதத்தின் பேரால் மனுதர்ம சாஸ்திரத்தின் பேரால் வாதாடும் திரு. சத்தியமூர்த்தியும் அந்த மனுதர்ம சாஸ்திரமே உலக வாழ்க்கைக்கு கடவுளால் அளிக்கப்பட்டது என்கின்ற திரு. ராஜகோபாலாச்சாரியும் மேற்கண்ட இரண்டு வியாபாரக் கம்பெனிகளுக்கும் கஷ்டக் கூட்டாளிகளாவார்கள், (மற்றவர்களைப் பற்றி இப்போது சொல்லாமல் நிறுத்தி விடுகின்றோம்) இதிலிருந்து பூரண சுயேச்சை வியாபாரம் எவ்வளவு புரட்டானது என்பதை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்.

நிற்க, இதற்கு இப்போது அவசரமான திட்டம் ஒன்று அதாவது சட்டசபை பகிஷ்காரம் இதற்கு பூரண சுயேச்சைக்கு ஓட்டுக் கொடுத்தவர்களுக்குள்ளாகவே மூன்று வித அபிப்பிராயம். அதாவது ஒன்று சட்ட சபை பகிஷ்காரம் என்பது; இரண்டு சட்டசபை, பள்ளிக் கூடம், கோர்ட் ஆகிய மூன்றும் செய்தால்தான் ஒப்புக் கொள்வோம் இல்லாவிட்டால் ஒன்றும் வேண்டாம் என்பது; மூன்று பகிஷ்காரம் எல்லாம் பார்த்து தோல்வி அடைந்தாய் விட்டது.

ஆதலால் பகிஷ்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது. இன்னமும் இது போல பலதுமிருக்கலாம். எப்படி இருந்தாலும் சிலர் சட்டசபை ராஜீநாமா கொடுத்து விட்டார்கள் என்றாலும் ராஜீநாமாவில் நூற்றுக்கு தொண்ணூருக்கு மேல் பட்டது இரண்டு காரணங்களாலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது ஒன்று வழக்கம் போல் சட்டசபைகளுக்கு காலாவதி ஆகும் போது ராஜீநாமாவோ வெளியேற்றமோ செய்து விட்டு தேசீய வீரர்களாகி பாராட்டப் பட்டு அடுத்த தேர்தலில் அதிக ஓட்டு சம்பாதிக்கலாம் என்று நம்பிக் கொடுப்பது போல் ராஜீநாமா கொடுத்தது.

இரண்டு, சென்ற தேர்தலின் போது திரு. சீனிவாசய்யங்கார் சுயராஜ்யக் கட்சிக்கு ஆள்கள் சேர்க்கையில் “எப்படியாவது காங்கிரசில் உத்தியோகம் ஒப்புக் கொள்ளும்படி செய்து விடுகின்றேன்” என்று ரகசியமாய் உறுதி கொடுத்ததை நம்பி பல ஆள்கள் போய் அதில் சேர்ந்தது போல் சமீபத்தில் வைசிராயுடன் ராஜி பேசி ஏதாவது ஒரு முடிவு ஏற்பட்டு நமக்கு அதிக ஓட்டு கிடைக்கும்படியும் சிரமமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைக்கும்படியும் திரு. காந்தி செய்து விடுவார் என்கின்ற ஜாடை அவரது சிஷ்யர் காட்டியதை நம்பி ராஜினாமாக் கொடுத்து விட்டுக் காத்திருப்பது என்பது.

மற்றபடி இச்சட்டசபை கலைக்கப்பட்ட தேதி முதல் தங்களது ராஜினாமா அமுலுக்கு வரத்தக்கது என்பது போன்ற ராஜினாமாக்களைப் பற்றியும் “நான் காங்கிரசின் பேரில் வந்ததால் காங்கிரசு கட்டளையை ஏற்று ராஜினாமா செய்து விட்டு நாணயத்தைக் காப்பாற்றி தனி உரிமையில் நிற்கின்றேன்” என்பவர்களைப் பற்றியும் நாம் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக நாம் நினைக்கவில்லை.

ஆகவே இவ்வளவுதான் தீர்மானமானதற்குப் பின் ஏற்பட்ட நிலைமையாகும். இது எப்படியோ இருக்கட்டும். இந்த தீர்மானத்திற்கு என்னதான் அர்த்த மென்று பார்க்கலாம் என்றாலோ திரு. காந்தியார் திரு. ரவீந்திரநாதருடன் பேசியதில் தனக்கு ஒரு கொள்கையும் சொல்ல முடியவில்லை என்றும் என்ன செய்வது என்பது தனக்கு சிறிதும் இன்னும் ஜாடைகூட தோன்றவில்லை என்றும் சொல்லிவிட்டார்.

திரு. ஜவாரிலால் அவர்களோ ருஷ்யாவிற்கு போய் விட்டு வந்தவர் என்கின்ற ஒரு அரட்டலைத் தவிர வேறொரு காரியத்தையும் அவரிடம் காண முடியவில்லை. இந்த யோக்கியதை உள்ள இவர்கள் தான் இந்தியா அரசியலை நடத்துகின்றவர்களாக இருக்கின்றவர்கள்.

இது திரு காந்தியை எந்த விதத்திலாவது பின்பற்றலாமா என்பதிலும் அவருக்கு ஏதாவது ஒரு இயக்கத்தை நடத்த ஆற்றலுண்டா என்பதிலும் கவனம் செலுத்திப் பார்ப்போமானால் நம்மைப் பொருத்தவரையில் அதாவது அவருக்கு பரம பக்தனாகவும் சிஷ்யனாகவும் இருந்த அனுபவத்தைக் கொண்ட வரையில் மேல் கண்ட இரண்டு விஷயத்திலும் அவரிடம் நமக்கு நம்பிக்கை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் முதலாவ தாக அவர் ராம ராஜ்யத்தை விரும்புபவர். அதாவது ஒவ்வொரு மனிதனும் அவனவன் பிறவிக்கு உரித்தான தொழிலையே செய்ய வேண்டுமென்பவர். தவிர ஆயிரம் வருஷத்திற்கு முன் மக்கள் இருந்த நாகரீக நிலைமைக்கு போக வேண்டும் என்பவர். புதிய ஆராய்ச்சி உலகம் இன்னது என்பதைப் பற்றி கவலையே இல்லாமலிருப்பவர். இரண்டாவதாக மண் குதிரையை நம்பினதுபோல் நடுத்தூக்கில் விட்டுவிட்டு ஓடிப் போகின்றவர்.

இந்த இரண்டு காரியமுமே அவரை பின்பற்றுவதற்கு அனுகூலமில்லாதது என்போம். ஆனால் அவரிடம் பணம் உள்ளவரையிலும், அவருக்கு பணம் வசூல் செய்ய சக்தியும் வழியும் சௌகரியமும் இருக்கும் வரையிலும், அவர் பெயரைச் சொன்னால் ஓட்டும் செல்வாக்கும் கிடைக்கும் என்கின்ற மயக்க முள்ள வரையிலும் அவருக்கு சிஷ்யர்களும் பின்பற்றுகின்றவர்களும் இருந்து தான் தீருவார்கள்.

அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. ஏனெனில் மோசமும் விவசாரமும் சிறந்து விளங்கும் இடங்கள் புண்ணிய ஸ்தலங்களாகவும் பித்தலாட்டங்களும் அயோக்கியத் தனங்களும் கூடா ஒழுக்கங்கள் என்பவைகளும் தலை சிறந்து விளங்கும் நபர்கள் ஆச்சார்ய சுவாமிகளாகவும் மடாதிபதிகளாகவும் விளங்கி சிஷ்யர்களையும் பின்பற்றுபவர்களையும் ஏராளமாகக் கொண்டு பணம் ஏராளமாய் வசூலிக் கும் சக்தி இருக்கும் போது திரு. காந்திக்கு அவ்வித அனுகூலங்கள் இருப்ப தில் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்று சொல்ல வேண்டும்.

( தொடரும் )

குறிப்பு : தொடர்ச்சி 23.02.30 இதழ் தலையங்கம்

(குடி அரசு - தலையங்கம் - 02.02.1930)

Pin It