1857 ஆம் ஆண்டின் கலகத்தினால் ஏற்பட்ட செலவின் காரணமாக ஏற்கனவே கலகலத்துப் போயிருந்த ஏகாதிபத்திய நிதியமைப்பின் நிலைமை, அந்தத் தடுமாறிக் கொண்டிருந்த அமைப்பைப் புணரமைப்பது தொடர்பான பிரச்சினையைப் போன்று அடுத்த பத்தாண்டுகளில் பொறுப்புள்ள அதிகாரிகளின் கவனம் வேறு எந்தப் பிரச்சினையிலும் அக்கறை எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவ்வளவு மோசமாக இருந்தது. புனரமைப்பதற்கு எது சிறந்தவழி என்ற கருத்து வேறுபாடு வெகுகாலம் நீடித்த போதிலும் கூட, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் மிகத் தெளிவானவையாக இருந்தன.

ambedkhhar 350இந்திய நிதியமைப்பின் வீழ்ச்சிக்குச் சாட்சிகளாக இந்திய நிதியமைப்புடன் தொடர்புடைய அனைவரும் அந்த அமைப்பின் ஒரே மிகப் பெரிய குறைப்பாட்டைத்தான் சுட்டிக் காட்டினர். மாகாண அரசாங்கங்களில் தோன்றிய பொறுப்பற்ற ஊதாரித்தனமே அது. இத்தீமையைக் களைவதற்காகச் சில பொறுப்புள்ள அதிகாரிகள் ஒரு புறத்தில் பின்வரும் யோசனைகளைத் தெரிவித்தனர்.

“இந்திய நிதியமைப்பின் மகத்தான் கூட்டுப்பங்கு மூலதனத்தில் ஸ்தல அரசாங்களையும் பங்காளிகளாகச் சேர்த்துக் கொள்ளுதல். ஆகவே, இந்திய அரசாங்கத்துடன் மாகாணத்தின் நலன்களையும் செயலூக்கமான ஒத்துழைப்பையும் இணைத்தல். சிக்கனத்தில் கொஞ்சமும் அக்கறையின்றித், தங்களது எஜமானர்களின் வழிவகைகளைப் பயன்படுத்தி ஒப்பீடுகளின் மூலம் தங்களது சொந்தத் தேவைகளை உயர்த்திக் கொள்வதைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஏஜென்ட்டுகளாகவும் வேலையாட்களாகவும் வைத்திருப்பதற்குப் பதிலாக மற்றவர்களுக்கும் சலுகைகளை வழங்குதல்.”

(தலைமைத் தளபதி மேதகு டபிள்யூ. ஆர். மான்ஸ்பீல்டின் நடவடிக்கைக் குறிப்பு 1867, அக்டோபர் 17 ஆம் தேதியிட்டது. ஸ்தல அரசாங்கங்களுக்கு நிதி அதிகாரங்களை விஸ்தரித்தல் சம்பந்தமான ஆவணங்கள் போன்றவை. பக்.99-103)

இக்கருத்து, படிப்படியாக, ஒருங்கிணைந்த இந்தியாவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலங்களாக (சி.எஃப்.1867, ஆகஸ்ட் 17 ஆம் தேதியிட்ட கர்னல் ஸ்ட்ராச்சியின் குறிப்பு. ஜே.எஃப்.லின்லேயின் மாகாண நிதி ஏற்பாடுகளின் வரலாற்றில் – சுருக்கங்களின் பட்டியல். பக்.3.) மற்றும் சிறந்த கருத்துகளின் ஒரு கணிசமான அமைப்பாக உருப்பெறுவதற்கு இட்டுச் சென்றது. ஏகாதிபத்திய அமைப்புக்குப் பதிலாக ஒரு சமஷ்டி அமைப்பை ஏற்படுத்தி, அமெரிக்காவில் உள்ள மைய அதிகார அமைப்பைப் போன்று இந்தியாவிலும் மைய அமைப்பின் நிதி நிலைமையைக் கிரகித்துக் கொள்வதே நோக்கமாக இருந்தது.

சமஷ்டித் திட்டம் நிறைவேற்றுவதற்கு இந்தியாவின் வருவாய்களை ஒரே வருமானமாகக் கருதக்கூடாது. ஏகாதிபத்தியக் கருவூலத்தில் கொண்டு சேர்த்துப் பின்னர் அதை வெவ்வேறு மாகாண அரசாங்கங்களிடையே வினியோகம் செய்தல் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாகாணமும் தனது வருவாய்களை அதன் வசமே வைத்திருக்கவும், அதைக் கொண்டு செலவினங்களைச் சமாளிக்கவும் அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் தனக்கென்று தனிப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்கும், தேவைப்பட்டால், சில நேர்மையான தரங்களை ஆதாரமாகக் கொண்டு மத்திய அரசாங்கத்தின் செலவினங்களில் தங்கள் பங்காக மாகாணங்கள் தரும் பங்களிப்புகளும் மத்திய அரசாங்கத்தின் வசம் சேர்க்கப்படும். இவ்வாறு சமஷ்டித் திட்டத்தின் கீழ் ஏகாதிபத்திய மற்றும் மாகாணங்களுக்கிடையிலான முறையான பங்கீட்டுடன் கூடிய ஒருங்கிணைந்த ஏகாதிபத்திய பட்ஜெட்டை, சேவைகள் மற்றும் வருவாய் ஒதுக்கீட்டில் உண்மையான பங்கீட்டை ஆதாரமாகக் கொண்டு தெளிவான முறையில் மத்திய பட்ஜெட் என்றும் மாகாண பட்ஜெட் என்றும் உருவாக்குவதன் மூலம் மாற்றியமைக்க வேண்டும்.

சமஷ்டித் திட்டத்திற்கு ஆதரவாகப் பல அனுகூலங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. முதலாவதாக, வருவாய்களையும் சேவைகளையும் தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களை வழி நடத்திச் செல்லும் வழிவகைகள் தெளிவாக விளக்கப்படும் என்று கருதப்பட்டது. அதன்மூலம் ஒவ்வொரு அரசாங்கமும் அதற்கு ஒதுக்கப்படும் நிதிகளின் வரம்பிற்குள் தனது விவகாரங்களை நிர்ணயித்துக் கொள்வதற்கான பொறுப்பைக்  கொண்டிருக்கும். அதற்கு முன்னர் மாகாண அரசாங்கங்கள் தங்களது வருவாய் மற்றும் செலவினங்களுக்கான மதிப்பீடுகளை ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கணக்காக அனுப்பிக் கொண்டிருந்தன. தனக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வெவ்வெறு மாகாண மதிப்பீடுகளின் மொத்தத் தொகையைக் கொண்டு மாகாண அரசாங்களின் கணக்கைச் சமன்செய்யும் கடமையை மத்திய அரசாங்கம் கொண்டிருந்தது.

சமஷ்டித்திட்டத்தின் கீழ், மாகாண மதிப்பீடுகள் மாகாணத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட வரவு மற்றும் செலவுகளின் சமநிலையான கணக்காக இருத்தல் வேண்டும். தங்களது திட்டத்திற்கு சமஷ்டி அமைப்பின் ஆதரவாளர்கள் கூறியது போன்று இது ஒன்று மட்டுமே முக்கிய அனுகூலமானது அல்ல. ஏனெனில், தாங்கள் செலவழிக்கக் கூடிய நிதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஸ்தல அரசாங்கங்களின் ஊதாரித்தனமான செலவினங்களுக்கு வரையறைகளை நிர்ணயிக்கும் நடவடிக்கையாக மட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தின் அதிகரித்துவரும் செலவினங்களுக்கும் கூட வரையறைகளை நிர்ணயிக்கும் நடவடிக்கையாகவும்  இது முன்வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மொத்த செல்வாதாரங்களிலிருந்தும் வருவாயைப் பெறக்கூடிய நிலைமையிலிருக்கும் மத்திய அரசாங்கம் தனது சொந்த செலவினங்களில் ஊதாரித்தனமாக இருக்கவிரும்புகிறது என்ற உண்மையை சமஷ்டி அமைப்பின் ஆதரவாளர்கள் மறைக்க விரும்பவில்லை. ஆகவே வருவாய்களையும் சேவைகளையும் ஒதுக்கீடு செய்வது சம்பந்தப்பட்ட சமஷ்டித்திட்டம் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின்மீது சிக்கனத்தை அமல்படுத்தும் என்று அவர்கள் கருதினர். சிக்கனம் மற்றும் பொறுப்பின்பால் கொண்ட அக்கறையினால் மட்டுமன்றி, தாராளமான நிதிவசதியைப் பெறும் அக்கறையினாலும் கூட சமஷ்டித் திட்டத்தை அதன் ஆதரவாளர்கள் முன்வைத்தனர்.

அரசின் அதிகரித்துவரும் செலவினங்களுக்கான வருவாய்களுக்கு மிகக்குறைந்த ஆதாரங்களையே இந்தியா வழங்கிவந்தது என்பதை சமஷ்டி அமைப்பின் ஆதரவாளர்கள் மறுத்தனர். இந்திய நிதியமைப்பு என்ற படகில் நீர்புகுந்து அது முடக்கப்பட்டிருந்த போதிலும் கூட, வரி விதிப்புக்குப் பல ஆதாரங்கள் இருந்தன. அதன் வருவாயைக் கொண்டு படகை மீண்டும் மிதக்கவிடலாம் என்று அவர்கள் கருதினர். கிடைக்கக்கூடிய இந்த நிதி ஆதாரங்கள் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டன என்று அவர்கள் வாதிட்டனர்.

ஏனெனில், அவற்றைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்த ஏகாதிபத்திய அரசாங்கம் அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவ இடத்தின் காரணமாக நடப்பில் இருந்த அரசியல் சட்ட விதிகளின்படி அவ்வாறு செய்ய முடியாதிருந்தது. சமஷ்டித் திட்டத்தின் கீழ் கூறப்பட்டது போல, மாகாண அரசாங்கங்கள் வசம் வரிவிதிக்கும் அதிகாரங்களை ஒப்படைத்தாலோ அல்லது மறுபடியும் ஒப்படைத்தாலோ, ஏகாதிபத்திய் அரசாங்கத்தினால் தன்மையில் மிகவும் பிராந்தியமயமானது என்று கைவிடப்பட்ட வரிவிதிப்புக்கான இத்தகைய ஆதாரங்களை, ஒட்டுமொத்தமாக இந்திய நிதித்துறைக்கும் பெரும் நிவாரணமளிக்கும் விதத்தில் அவற்றை மாகாண அரசாங்கங்கள் பயன்படுத்த முடியும்.

சிக்கனம் மற்றும் தாராள நிதி உதவியின் நலன்களுக்காக மட்டுமன்றி, சமத்துவத்தின் நலன்களுக்காகவும் கூட சமஷ்டி அமைப்புக்கு ஆதரவளிக்கப்பட்டது. ஏற்கனவே நடப்பிலிருந்த அமைப்பு வெவ்வேறு மாகாணங்களையும் நேர்மையற்ற முறையில் நடத்திவந்தது என்று கூறப்பட்டது. மாகாணப் பயனீட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பொதுப்பணிகளையும் அளவுகோலாக எடுத்துக் கொண்டோமோனால் சமஷ்டி அமைப்பின் ஆதரவாளர்களுடைய விமர்சனங்களை ஆதாரமற்றவை என்று கூற முடியாது. மாறாகப், பின்வரும் புள்ளிவிவரங்கள் அவர்களுடைய வாதங்களின் பெரும்பகுதியை நியாயப்படுத்துகின்றன.

பொதுப்பணிகளுக்கான ஒதுக்கீடு

1837-8 முதல் 1845-6 ஆம் ஆண்டுகளுக்கான சராசரி

மாகாணம் மக்களின் தொகை நிலப்பரப்பு சதுர மைல்கள் வருவாய்கள் நூறுகளில் ரூ. பொதுப்பணிகளுக்கான செலவினங்கள் நூறுகளில் ரூ.
வங்காளம் 40,000,000 1,65,443 10,239,500 1,79,812
வடமேற்கு மாகாணங்கள் 23,200,000 71,985 5,699,200 1,41,450
மதராஸ் 22,000,000 1,45,000 5,069,500 30,300

கல்கத்தா ரிவியூ 1851 தொகுதி 14 பக்கம் 466 லிருந்து தொகுக்கப்பட்டது

இவ்வாறு வங்காளத்தில் அதன் வருவாயில் 13/4 சதவிகிதமும் வடமேற்கு மாகாணங்களில் 21/2 சதவிகிதமும் மதராசில் ½ சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாகவும் பொதுப்பணிகளுக்கான ஒதுக்கீடு இருந்தது. மற்ற மாகாணங்களை விடச் சில மாகாணங்களின்பால் சாதகமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை ஏகாதிபத்திய அரசாங்கம் நியாயப்படுத்தியது. அதற்குக் காரணம் சலுகைகள் பெறும் மாகாணங்கள் தங்களுடைய கணக்குகளில் காணப்படும் இப்பற்றாக்குறைகளும் மிகுதி வருவாய்களும் அப்பட்டமான கட்டுக்கதைகள் என்பதைச் சுட்டிக் காட்டின. அவை மோசமானதொரு கணக்குமுறையின் விளைவேயாகும். அந்த முறை மோசமானதாக இருந்ததற்குக் காரணம் நாட்டின் நிதி சார்ந்த வரவு செலவுக் கணக்குகள் கணக்குவழக்குகளின் இனங்களுக்கேற்றவாறு இல்லாமல், ஒரு பொதுவான நிதி அமைப்பு இல்லாதிருந்த 1833 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போல் மாகாணங்களின் நடைமுறையில் இருந்த முறைகளுக்கேற்பத் தொடர்ந்து காட்டப்பட்டு வந்ததேயாகும். 1833 – ஆம் ஆண்டின் சட்டம் இயற்றப்பட்டதுடன் அந்தக் கணக்குமுறை இச்சட்டத்தின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் ஏற்புடையவையாக இல்லாதிருந்தது.

கணக்குகளின் பொதுவான இனங்களில் அகில இந்திய இனங்களிலிருந்து மாகாண இனங்கள் பிரிக்கப்பட்டிருக்குமேயானால் இது ஒரு பொருட்டாக இருந்திராது. இது இல்லாதிருந்த காரணத்தினால், இந்த அமைப்பின் தீமைகள், உண்மையில் ஒரு அகில இந்திய சேவைக்கான செலவினங்களை மாநிலத்தின் பிரத்தியேகக் கணக்கில் எழுதப்பட்டதன் மூலம் மோசமடைந்துவிட்டன. ஆகவே மாகாணங்கள் பற்றாக்குறைகளையே தொடர்ந்து காட்டி வந்தன. அதே சமயம் தப்பித்து வந்த இதர மாகாணங்கள் தொடர்ந்து மிகுதி வருவாயைக் காட்டி வந்ததனால் தங்களுக்கு அனுகூலமான சலுகைகளைக் கோரிப் பெற்றன. பம்பாய் மாகாணத்தின் சமஷ்டி அமைப்பு ஆதரவாளர்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டிக் காட்டினர்.

தனது கணக்கு வழக்குகளில் மிகுதி வருவாயைத் தனது வரலாற்றில் பம்பாய் ஒருபோதும் காட்டவில்லையாதலால். அந்த மாநிலத்தின் கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் சட்டை செய்வதே இல்லை. ஆனால், இந்தியக் கடற்படையின் செலவினங்களை அந்த மாகாணத்தின் தலையில் கட்டும் அடாவடித்தனமான கணக்குமுறைகளினால்தான் பற்றாக்குறை ஏற்பட்டது என்பதை உணர்ந்திருந்தால் அந்த மாநிலத்தின் நிலைமை மேம்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கணக்கு அமைப்பின் தீங்கு விளைவிக்கும் அம்சங்களில் இத்தகைய மோசமான வழிமுறைகள் மட்டுமே அடங்கியிருக்கவில்லை.

இந்த அமைப்பின் கீழ் ஒரு சேவைக்கான செலவினங்களை ஒரு மாகாணத்தின்மீது சுமத்துவதும், அந்த மாகாணத்தின் வருவாயை வேறொரு மாகாணத்தின் கணக்கில் சேர்ப்பதும் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. பின்வரும் பட்டியலிலிருந்து அத்தவறான கணக்குமுறையினால் மதராஸ் மாகாணத்தின் பற்றாக்குறைகள் எவ்வாறு அதன்மீது திணிக்கப்பட்டன என்பதைக் காணலாம்.

இராணுவம் குவித்து வைக்கப்பட்டதற்கான செலவு கைப்பற்றப்பட்ட பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட வருவாய்கள்

பற்று          தொகை ரூ.

மதராஸ்       79,83,000

வரவு வைக்கப்பட்டது    தொகை ரூ.

பம்பாய்             ……   20,00,0000

வங்காளம்          ……   1,04,22,870

அதே நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. பக். 475

இத்தகையதொரு கணக்கு முறையில் அடங்கியிருந்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தங்களது தட்டத்திற்காக சமஷ்டி அமைப்பின் ஆதரவாளர்கள் கூறிய அனுகூலங்கள் கற்பனையானவையோ அல்லது அற்பமானவையோ அல்ல என்பது ஐயத்திற்கிடமற்றதாகும். நடைமுறையில் இருந்த குழப்பங்களுடன் ஒப்பிடும்போது சமஷ்டி மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கிடையிலான செயல்பாடுகளைப் பிரிப்பது மட்டுமே கூட அனுகூலமானதாகவே இருக்கும். அதன் விளைவாக ஒரு நேர்மையான பலன் ஏற்படவில்லை என்றாலும் கூட, அத்தகைய ஒரு நேர்மையான பலன் ஏற்படுவதற்கு ஒரு வழி பிறந்தது.

ஒரு நடைமுறை சாத்தியமான பிரேரணை என்ற வடிவில் அந்த சமஷ்டித்திட்டம் அதிகாரிகளின் முன்வைக்கப்பட்டபோது அது ஒரு தீர்மானகரமான எதிர்ப்பைத் தோற்றுவித்தது. ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் உடனடியாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் பெரும்பாலும் சிவில் பணிகளில் இருந்த ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறை சாத்தியம். சமயோசிதம் என்ற இரு கோணங்களிலிருந்து அவர்கள் சமஷ்டித் திட்டத்தின் மீதான தங்களது தாக்குதலைத் தொடுத்தனர்.

“இந்தியாவின் வருவாய்களையும் செலவினங்களையும் ஒரு குறிப்பிட்ட மாகாணத்திற்குச் சொந்தமானது என்று சூழ்நிலைக்கேற்றவாறு கூறமுடியுமா?” என்று ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் வினவினர். அவர்கள் வலியுறுத்தியதாவது.

“இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரம் தொடங்கியதிலிருந்து… தலைமாகாணங்கள் மற்றும் மாநிலங்களின் நலன்களும் விவகாரங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது இருந்து வந்துள்ளன. ஒன்று மற்றதன் மீது அடிக்கடி அதிகாரம் செலுத்தி வந்தன. அவற்றைப் பிரிக்க முடியாத அல்லது ஒன்றின் பிடியிலிருந்து மற்றதை விடுவிக்க முடியாத விதத்தில் இப்போது அவை இருந்தன. அதில் ஏற்படுத்தப்படும் எந்த மாற்றங்களும் இப்போது நடப்பிலிருக்கும் வசதியின்மைகளை விட மிக அதிக அளவிலான வசதியின்மைகளையே கொணரும். வங்காள மாகாணத்தின் ராணுவம் கங்கையின் கீழ்ப்பகுதிகளைச் சேர்ந்த வளமான மாகாணங்களில் நிறுத்தி வைக்கப்படவில்லை, மாறாக பஞ்சாபின் ஏழ்மையான மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்த ராணுவம் அந்த மாகாணம் முழுவதையுமே பாதுகாத்து வந்தது. மதராசின் ராணுவம் அந்த மாகாண எல்லைகளுக்குள் நிறுத்தி வைக்கப்படவில்லை. மதராஸ் மாகாணத்தைத்தவிர, தக்காணம், மத்திய மாகாணங்கள், பிரிட்டிஷ் பர்மா ஆகிய பகுதிகளின் பாதுகாப்பையும் மேற்கொண்டிருந்தது. அதேபோன்று, பம்பாய் ராணுவம் அதன் சொந்த மாகாணத்தைத் தவிர ராஜபுதன மாநிலம் மற்றும் மால்வாயையும் பாதுகாக்கும் பொறுப்பேற்றிருந்தது. கீழ்மாகாணங்கள் அல்லது வங்காளமே மிகவும் வளமானவையாக இருந்தன. தங்களது சொந்த வருவாய்களைத் தவிர அவை பெருமளவில் சுங்க வருமானங்களையும் பெற்றுவந்தன. அவற்றின் ஒரு பகுதிதான் அந்த மாகாணத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.

ஆனால், பெரும்பகுதி வங்காளமாகாணத்தின் இதரபகுதிகளுக்கும் கூடச் சொந்தமானதாக இருந்தது. வங்காளத்தின் அபினும் கூட முழுவதுமாக வங்காளத்துக்குச் சொந்தமானதல்ல. அதில் பெரும்பகுதி வடமேற்கு மாகாணங்களில் பயிரிடப்பட்டன. பம்பாயில் கிடைத்த அபின் வருவாய், அந்த மாகாணத்துக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. பம்பாய் மாகாணத்தின் எல்லைகளுக்கு அப்பால் பயிரிடப்பட்டுவந்த அபின், எந்தப் பிரதேசத்தில் விளைந்தாலும், அது எந்த மாநிலத்தின் வருவாயில் சேர்க்கப்பட்டாலும் அது வங்காளத்துக்குச் சொந்தமானதாக இருந்தது.

மதராஸ் மற்றும் பம்பாயின் உப்பு வரிகளின் சிலபகுதி, மத்திய இந்தியாவின் உபயோகத்திற்கான உப்பின் மீது விதிக்கப்பட்டவையாகும். அந்த வருவாயைக் கண்டிப்பாக இந்திய அரசாங்கத்தின் கணக்கில் வரவு வைக்கவேண்டியிருந்து. இத்தகைய சம்பவங்கள் பலவாக இருக்கக்கூடும், நிதியை முழுவதுமாக ஸ்தலமயமாக்கும் கண்ணோட்டத்துடன் இந்த விஷயங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் பல பிரச்சினைகள், ஒருவேளை பல சச்சரவுகளும் கூட எழக்கூடும்…” (1868 நவம்பர் 7 ஆம் தேதியிட்ட சர் ரிச்சர்டு டெம்பிளின் குறிப்பு, ஸ்தல அரசாங்கங்களுக்கு நிதி சார்ந்த அதிகாரங்களை விஸ்தரித்தல் சம்பந்தமான ஆவணங்கள் போன்றவை. பக். 197-208)

இதே போன்று அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்டு லாரன்ஸ் பின்வருமாறு எழுதினார்.

“பிரிட்டிஷ் இந்தியாவின் செல்வாதாரங்களை ஒட்டு மொத்தமானதாகக் கருதவேண்டுமேயன்றி, அது கிடைக்கும் குறிப்பிட்ட மாகாணத்திற்குச் சொந்தமானதாகக் கருதக்கூடாது என்பதை அனுபவம் காட்டியுள்ளது. இந்த விதி வேறுவிதமானதாக இருக்குமேயானால், ஒவ்வொரு மாகாணமும் நியாயமாகக் கோரக்கூடிய வருவாய்கள் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். ஒவ்வொரு மாகாணத்தின் கணக்கிலும் செலவினங்களின் எந்த இனங்களைப் பற்றுவைப்பது? உதாரணமாகத் துப்புரவுக் காரணங்களுக்காக மலைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எல்லா ராணுவத்தினரின் செலவுகளையும் பஞ்சாபின் தலையில் கட்டுவதா? அதே போன்று, வட மேற்கு எல்லையின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொத்தத் துருப்புகளுக்கான செலவினங்களை வேறொரு மாநிலத்தின் கணக்கில் பற்று வைப்பதா? பம்பாய் மாகாணத்திற்குச் சொந்தமான துருப்புகள் ராஜபுதனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான செலவினங்களை பம்பாயில் தலையில் கட்டுவது சரியா, அல்லது அதற்கான செலவுகளை எந்த வகையில் சமாளிப்பது? மறுபுறத்தில், நம்மிடம் இவ்வாறு கேட்கக் கூடும்.

எந்தவிதமான அன்னிய அண்டை அயலார்களும் இல்லாமல், பணிவான அடக்கமான மக்களைக் கொண்ட, குறைந்தபட்ச ராணுவக் கொத்தளங்களே அவசியமாக உள்ள வங்காளம், ஏன் அதன் உபரி வருவாய்களைப் பெறக்கூடாது? வடமேற்கு மாகாணங்கள், பஞ்சாப், மத்திய இந்தியா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துருப்புகள், ரோகில் லாக்கள், மராட்டாக்கள், பிண்டாரிகள் போன்றவர்களில் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான செலவினங்களில் தனது பங்கை ஏன் வங்காளம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற இக்கேள்விக்கு இன்னொரு பரிமாணமும் உள்ளது. ஒவ்வொரு மாகாகணமும் தனக்கென சொந்தமாக ஒரு நிதியமைப்பைக் கொண்டிருக்க வேண்டுமெனில் இப்பிரச்சினை களனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டியிருக்கும்.” (1867 நவம்பர், 22ஆம் தேதியிட்ட நடவடிக்கைக் குறிப்பு. ஒபிசிஐடி பக்.104-7)

அவரது கருத்துப்படி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை.

செலவினங்களை வேறுபடுத்தி ஸ்தலமயமாக்குவதும், வருவாய்களை மாகாண மற்றும் மத்திய வருவாய்கள் என்று பிரிப்பதும் சாத்தியமானாலும் கூட, அவ்வாறு செய்வது உசிதமானதாயிராது என்று ஏகாதிபத்தியவாதிகள் கூறி வாதிட்டனர். இப்போது நடப்பிலுள்ள நிதி அமைப்பின் கீழ் அவர்கள் கூறியதாவது.

“இந்தியா முழுவதன் நிதிச் செல்வாதாரங்களைப் பற்றி முடிவு செய்யக்கூடிய ஏகாதிபத்திய அரசாங்கம், அவற்றை, அவை எங்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறதோ அங்கு உடனடியாக எடுத்துச் செல்லமுடியும். உண்மையிலேயே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்கள் உள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் சில தீமைகள், தேவைகள் சில அபாயங்கள் இருக்கக்கூடும். நாட்டின் செலவில் அவற்றைத் திருத்தி, பரிகாரம் காணுவது மத்திய அரசாங்த்தின் கடமையாகும். ஒரு பகுதியை உருவாக்கி மேம்படுத்துவது தேசிய முக்கியத்துவமுடையதாக இருக்கக்கூடும. ஆயினும் அதற்கான செலவினங்கள் நியாயமற்றமுறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஆதாயமானதாகத் தோன்றக்கூடும்.

ஒரு சாலை, ஒரு கால்வாய், பருத்தி அல்லது காப்பி அல்லது தேயிலை விளையக்கூடிய பகுதியிலிருந்து ஒரு இருப்புப்பாதை போன்றவற்றை அமைப்பது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், வர்த்தகத்துக்கும் ஜீவாதார முக்கியத்துவமுடையதாக இருக்கக்கூடும். ஆயினும் அத்தகைய ஒரு பணிக்கான செலவினங்கள், வருங்காத்தில வளர்ச்சியடையக் கூடிய அந்த மாவட்டத்தின் இப்போதைய வருவாயைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் அல்லது அண்மையில் போரிட்டுப் பிடிக்கப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான அல்லது திருப்தியுறாத மாநிலங்களில் அந்த மாநிலங்களுக்குத் தேவைப்படுவதுபோல் தோன்றும் வருவாய்களைவிட அதிகத் தொகைகளை தார்மீக, சமூகக் காரணங்களுக்காக ஒதுக்கீடு  செய்வது அவசியமென்று மத்திய அரசாங்கம் கருதக் கூடும். குழப்பங்களுக்கான அல்லது அபாயங்களுக்கான காரணங்களை அகற்றுவதும் அந்த மாகாணங்களை சாம்ராஜ்யத்தின் ஏற்கனவே தீர்க்கப்பட்ட, அமைதிப்படுத்தப்பட்ட, மீட்கப்பட்ட பகுதிகளுடன் ஒரளவுக்கு இணக்கமாக இருக்கச் செய்வதுமே அதன் நோக்கமாகும், சாம்ராஜ்யத்தின் பழைய மாகாணங்கள் புதிய மாகாணங்களை வென்று கைப்பற்றுகின்றன.

தாங்கள் வென்று கைப்பற்றும் பகுதிகளை நாகரிகப்படுத்துவது பழைய மாகாணங்களின் கடமை ஒரு நாட்டைப் பிடித்து நம்முடன் இணைத்துக் கொண்டபின், அதனுடைய சொந்தச் செல்வாதாரங்களையே அது நம்பியிருக்கச் செய்யும் உரிமை நமக்கில்லை வென்று கைப்பற்றும் போது சில கடமைகளும் அதன் உரிமைகளும் கூடவே வந்து விடுகின்றன.”

“உச்ச அரசாங்கத்தின் வருவாய்களிலிருந்து கிடைக்கும் அனுகூலங்களைக் கட்டுப்படுத்தவும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் குறிப்பிட்ட வருவாயின் வீதாசரத்தில் ஒதுக்கீடும் செய்யும் குறுகிய மனப்பான்மை கொண்டு அளவிடுபவர்களின் கொள்கைகளின் மீது துணிந்து எனது ஐயப்பாடுகளைத் தெரிவிக்கிறேன்” என்று மதராஸ் கவுன்சிலின் தலைவரான லார்டு ஹேப்பியர் மெர்சிஸ்டன் எழுதினார். “மாறாக, அது ஏழைகளுக்கு உதவும்போது வசதி படைத்தவர்களுக்கு ஏற்படும் திருப்தியாகவும், இளைஞர்களைப் பாதுகாக்கும்போது முதியவர்களுக்கு ஏற்படும் திருப்தியாகவும் கெட்டதைத் திருத்தும்போது நல்லதுக்குக் ஏற்படும் திருப்தியாகவும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஒன்றுபட்ட இந்தியா என்ற பெருமைவாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவதில் அனைவரும் ஒத்துழைக்க முடியும். ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தின் நிதியாதாரங்களைக் கையாளக்கூடிய ஒரு மத்திய அரசாங்கத்தினால் மட்டுமே இந்த இலக்குகளை எய்த முடியும்.” (சி.எஃப்., 1868 பிப்ரவரி 15ஆம் தேதியிட்ட அவரது நடவடிக்கைக் குறிப்பு பாரா. 9., பி.சிஐடி. பக். 186-190)

மேற்கூறப்பட்டது போன்ற வாதங்கள் அல்லது சொற் பொழிவுகள் ஏகாதிபத்தியவாதிகளின் லட்சியத்திற்கு ஒருபோதும் உதவியிருக்க முடியாது என்பது தெளிவு. வருவாய்களையும் செலவினங்களையும் ஏகாதிபத்திய மற்றும் மாகாண இனங்கள் என்று பிரிப்பதில் உள்ள சிரமங்களை வலியுறுத்துவது ஒருபுறமிருக்க, ஏகாதிபத்தியவாதிகள் கூறி வந்ததைப் போன்று அக்கடமை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட முடியாததல்ல. ராணுவத்திற்கான செலவினங்களை ஒதுக்கீடு செய்வதிலிருந்த சிரமத்தை, ராணுவத்தை மத்தியப்படுத்தி அதற்கான செலவினங்களுக்கு மத்திய அரசாங்கத்தைப்  பொறுப்பாக்கியிருப்பதன் மூலம் எளிதில் போக்கியிருக்கமுடியும். அதே அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிராந்தியத்தின் பொறுப்பில் விடப்பட்ட எல்லாச் சேவைகளும், ஆனால் அச்சேவைகள் தன்மையில் சாம்ராஜ்யம் முழுமைக்கும் அனுகூலமானவையாக இருக்கும்பட்சத்தில் அவற்றை மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் எளிதில் இணைத்திருக்கமுடியும்.

அதே போன்று, மத்திய மற்றும் ஸ்தல அரசாங்கங்களுக்கிடையில் நடப்பிலுள்ள வருவாய் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வது நடைமுறை சாத்தியமேயாகும். மாகாணத்தின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்திருந்த ஒரு பகுதியின் அல்லது நாடு முழுவதிலும் அதன் ஒரே சீரான நிர்வாகம் நம்பியிருக்கும் அதிகபட்ச வருவாய் ஆதாரங்களைப் பயன்படுத்துவதைத் தக்க வைத்துக்கொள்ள மத்திய அரசாங்கத்தை அனுமதித்திருக்கக் கூடும். மறுபுறத்தில், தங்களது பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட அத்தகைய நிதி ஆதாரங்களைச் செலவிட அல்லது ஸ்தலக் கண்காணிப்பை ஆதாரமாகக் கொண்ட வருவாயைச் செலவிட மாகாண அரசாங்கம் அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணமாக, சுங்க வரிகளை ஒரு மத்திய செல்வதாரமாக எளிதில் ஆக்கியிருக்கக்கூடும். அதற்குக் காரணம், அது சட்டமியற்றுவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு பொதுவான, ஒரே சீரான வருவாயை மத்திய வருவாய் ஆதாரமாகக் கருதியிருக்கக் கூடும். அதேபோன்று உப்பு வருவாய்க்கும் அதே அந்தஸ்தை வழங்கி இருக்கக்கூடும். தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளுக்கான செலவினங்களைச் சமாளிப்பதற்குப் போதுமான செல்வாதரங்களைச் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் வழங்கியிருக்கக் கூடிய விதத்தில் வருவாய் ஆதாரங்களைப் பிரிப்பதைச் செயல்படுத்துவது கடினமாக இருந்திருக்கும் என்பது உண்மைதான். மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களிலிருந்துதான் பங்களிப்பையும், அல்லது மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்தான பங்களிப்பையும் கொண்ட நிதிகளில் ஒரு குறிப்பிட்ட சீரமைப்பு செய்வது இன்றியமையாததாக இருந்திருக்கக்கூடும். வருவாய்கள் அல்லது செலவினங்களை ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் ஏறக்குறைய பாகுபாடான கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதை அகற்றுவதும் சாத்தியமில்லாது இருந்திருக்கக் கூடும்.

ஏகாதிபத்திய பட்ஜெட்டை மத்திய மற்றும் பல மாகாண பட்ஜெட்டுகள் என்று பிரிக்கும் பிரச்சினையில் உள்ள சிரமங்களையும் பாகுபாடுகளையும் ஒப்புக்கொள்ளும் அதே சமயம், அது திருப்திகரமான தீர்வு காண வல்லதாக உள்ளது. என்பதனையும் கூறியாகவேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் விடுத்த சவாலுக்கு பதிலளித்த கவர்னர் செஸ்னி நடப்பிலுள்ள செலவு இனங்களை ஏகாதிபத்திய மற்றும் மாகாண இனங்கள் என்று பிரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி மேற்கொண்டார். தமது இந்திய அரசமைப்பில் அவர் கூறுவதாவது:

“பங்களிப்புகள் தேவைப்படும் ஏகாதிபத்தியச் செலவினங்களில் பின்வரும் இனங்கள் அடங்கியிருக்கும் 1.உள்துறை செயலரினால் வினியோகிக்கப்படும் உள்துறை நிர்வாக அமைப்பு மற்றும் செலவினங்கள்: 2.இந்தியக் கடன் மீதான வட்டி, 3.இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்துறை அமைப்புகள், 4.ராஜியத்துறை அமைப்பு, 5.ராணுவம், 6.ஏகாதிபத்திய சேவைகள். தபால் அலுவலகம் தந்தித்துறை, 7.ரயில்வே மூலதனத்திற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட வரி, அத்துடன் சேர்க்கப்படவேண்டியது 8.சில பின்தங்கிய மாநிலங்களுக்கு உதவியாக வழங்கப்படும் மானியங்கள் (தங்களது செலவுகளைத் தற்போது அவை செலவழிப்பதில்லை).”

இதுவும் இதர முயற்சிகளும், நடைமுறை சாத்தியமான நிலைமையிலிருந்து பார்க்கும்பொழுது தங்களது வாதம் தோற்கவே செய்யும் என்பதை ஏகாதிபத்தியவாதிகளைப் புரிந்து கொள்ளச் செய்தது. ஆகவே, நடைமுறை சாத்தியமான நிலையிலிருந்து சமயோசிதமான நிலைக்கு தங்களுடைய வலியுறுத்தலை அவர்கள் மாற்றிக் கொண்டனர். சமஷ்டித் திட்டத்தைத் தாக்குவதற்கு ஒரு சிறந்த அடிப்படையை சமயோசிதத் தன்மை வழங்கியது.

ஏகாதிபத்திய அரசாங்கத்தைப் போன்று ஒரு சமஷ்டி அரசாங்கம் திறமையாக இயங்க முடியுமா? அதனுடைய அந்தஸ்து உயர்ந்திருக்குமா? இப்போதைய ஏகாதிபத்திய அமைப்பைப் போன்று அதன் மதிப்பு மகத்தானதாக இருக்குமா? 1857 ஆம் ஆண்டில் கலகக்காரர்களின் கரங்களிலிருந்து பிரிட்டிஷாருக்கு இந்த நாட்டைப் பெற்றுத் தந்தது ஏகாபத்திய அமைப்புத்தான் என்ற கருத்து மக்கள் மனங்களில் பசுமையாக இருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

அப்போராட்டத்தில் ஏகாதிபத்திய அமைப்பின் தாக்குப்பிடித்து நிற்கும் சக்தி நிரூபிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற கால கட்டம் முழுவதிலும் ஏகாதிபத்திய அமைப்புக்கு வலிமையளித்தது எது என்பதை எண்ணிப்பார்க்குமாறு ஒரு தந்திர நடவடிக்கையாக ஏகாதிபத்தியவாதிகள் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர். சாம்ராஜ்யத்தின் வருவாய்களையும் செலவினங்களையும் நிர்வகிப்பதில் கட்டுப்பாடு செலுத்தும் பொறுப்பை ஏகாதிபத்திய அரசாங்கத்தின் வசம் ஏகாதிபத்திய நிதியமைப்பு ஒப்படைத்திருந்த காரணத்தினால்தான், கலகம் போன்ற ஓர் அவசர நிலையில் ஏகாதிபத்திய அரசாங்கம் எல்லா வருவாய் ஆதாரங்களையும் உயிர்ப்பித்தது.

செலவினங்களுக்கான எல்லா வழிகளையும் அடைத்து, பகை நடவடிக்கைகளை, உறுதியுடன் தடுத்துநிறுத்தும் முக்கிய நோக்கத்திற்கான செலவினங்களில் கவனத்தைச் செலுத்த முடிந்தது என்ற விஷயத்தை வலியுறுத்த அவர்கள் தவறவில்லை. ஏகாதிபத்திய நிதி அமைப்பின்றி அரசாங்கம் அரைகுறை ஆர்வமுடைய, தயக்கம் காட்டக்கூடிய அல்லது பகைமையான பங்காளிகளுடன், ஒரு வேளை போராட்டத்தில் நேரடியாக அக்கறைகொள்ளாத அல்லது அதற்கான தேவையில் நம்பிக்கை கொள்ளாத, அதிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கெஞ்சும் அல்லது தாமதிக்குமாறு கேட்டுக்கொள்ளும் பங்காளிகளுடன் இணைந்து செயல்படவேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த விரும்பினர்.

மேலும் அரசாங்கத்தின் திறமையை உயர்த்துவதில் மட்டுமின்றி உயரளவிலான மதிப்பைப் பராமரிப்பதிலும் கூட ஏகாதிபத்திய நிதி நிர்வாகம் ஜீவாதாரமானது என்பதை எடுத்துக் கூறினர். கடனானது வருவாயின் அளவைப் பொறுத்திருந்தது. வருவாயைத் துண்டாடுவது மதிப்பைக் குறைப்பதற்கு ஒப்பானது என்றும் வாதிடப்பட்டது.

ஆசிய அரசாங்கத்திற்கான தனது நெறிமுறைகளில் ஒரு மிக உயர்ந்த இடத்தை மதிப்புக்கு வழங்கியிருந்த ஐரோப்பியப் பாரம்பரியத்தை ஒருதரப்பாக மீறுவதாகவும் கூட சமஷ்டித் திட்டத்தின் மீது குறை கூறப்பட்டது. நிதியை மத்தியப்படுத்தாமல் மத்திய அரசாங்கம் தனது மதிப்பைப் பராமரிக்க முடியும் என்பதை ஏகாதிபத்தியவாதிகளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது, ஏனெனில், ஏகாதிபத்திய நிதி அமைப்புதான் அரசியல் மற்றும் நிர்வாக விஷயங்களில் கடிவாளங்களை ஒன்று சேர்த்து ஏகாதிபத்திய அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைத்தது. அது ஒரு கொள்கையை வகுக்கவும், தனக்குத் திருப்தி ஏற்படும் விதத்தில் அதைச் செயல்படுத்தவும் அரசாங்கத்திற்கு ஏதுவாக்கியது. தனக்குக் கீழுள்ள ஸ்தல அரசாங்கங்களிடமிருந்து ஓய்வூதியம் பெறும் நிலையில் அது இருக்குமானால், மத்திய அரசாங்கத்தின் மதிப்பை யாரால் உயர்த்தி பிடிக்க முடியும்?

முரண்பாடுகள் நிலவிய காலத்திலிருந்து ஒதுங்கி நின்று பார்க்கும்போது சமஷ்டி ஆதரவாளர்கள் மீது இவ்வளவு எளிதான வெற்றி பெறுவதற்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கு சமயோஜித நிலையிலிருந்து வாதிடுவதில் என்ன பலம் இருந்தது என்று எவரும் வியக்கக்கூடும். அமெரிக்கா, ஜெர்மனி, அல்லது வேறு இடங்களில் உள்ளது போன்ற சமஷ்டி அரசாங்கங்கள் தங்களது செயல்பாடுகளில் திறமையின்மை மதிப்பின்மை அல்லது கௌரவமின்மை இருக்கவே செய்யும் என்று கருத்துக்கு ஆதரவளிப்பதில்லை. இந்த மனச் சோர்வளிக்கும் தீய அறிகுறிகளனைத்தையும் அவர்களுடைய வரலாறு பொய்யாக்கியுள்ளது.

இந்தியாவில் இக்கருத்து வேறுபாடு பரவியகாலத்தில் சமஷ்டி அமைப்பின் வரலாறு பெரும்பாலும் வெற்றுப் பக்கங்களாகவே இருந்தன. ஏனெனில், சமஷ்டி அமைப்பு என்ற கருத்தே அதனுடைய ஆரம்பக் கட்டத்தில் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆயினும் மக்கள் ஏகாதிபத்தியவாதிகளையே ஆதரித்தனர். அதற்குக் காரணம் சமஷ்டி அமைப்புக்கு ஆதரவான வாதங்களுக்கு அவர்கள் வரலாற்றிலிருந்து உதாரணங்களை பெறமுடியவில்லை என்பதல்ல, அக்காலத்துச் சம்பவங்கள் அவர்களை ஏகாதிபத்திய அமைப்பை ஆதரிக்குமாறு செய்தது என்பதேயாகும்.

1857 ஆம் ஆண்டின் கலகத்திலிருந்து இந்தியாவை ஏகாதிபத்திய அமைப்பு காத்தது. அது மீண்டும் நடைபெறுமோ என்ற பயத்திலிருந்து அவர்கள் ஒரு அமைப்பைக் குலைக்க அவர்கள் சம்மதிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது சரியானதல்ல. அதனுடைய குறைபாடுகளை நன்கு உணர்ந்திருந்த அவர்கள், அதற்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த முயற்சியிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஏகாதிபத்திய அமைப்புக்கு மக்கள் அளித்த ஒரு தரப்பான ஆதரவு மிகவும் பலத்ததாக இருந்தது அதன் பல குறைபாடுகளினால் தான் அந்த அமைப்பின் திறமை குன்றியிருந்ததாக அவர்கள் அறிந்திருந்தபோதிலும் மாண்புமிகு மேஜர் சர்.எச்.எம்.டுராண்டின் கூற்றுக்களை அவர்கள் அனுதாபத்துடன் செவிமடுத்தனர். அவர் எழுதினார்:

“…. இந்திய அரசாங்கத்தின் நிதித்துறைக் கட்டுப்பாடு அதன் முயற்சிகளில் தேவையற்ற காலத்திற்கு நீடிக்கிறது. பரிதாபத்திற்குரிய விதத்தில் தோல்வியடைகிறது என்ற கூற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று இப்போது நான் உறுதியுடன் அறுதியிட்டுக் கூறுகிறேன். மாறாக எந்தக் கட்டுப்பாடும் அரைகுறையாகத் தோல்வியடைவது... என்பது விதிகள் தவறானவை என்பதற்கு ஆதாரமல்ல. ஆனால், அவற்றைத் தளர்த்துவது பொருத்தமற்றது.

விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடத்த வேண்டும் என்பதை உறுதியுடன் இந்திய அரசாங்கமும் ஸ்தல அரசாங்கமும் செயல்படுத்த வேண்டும் என்பது நிர்வாகங்களில் ஒன்று கீழ்ப்படியாததாக இருக்கிறது என்கிற காரணத்தினால் மத்திய அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பது என்பது, ஒரு ராணுவப்பிரிவு தவறாக நடந்து கொள்கிறது என்பதற்காகப், போருக்கான விதிமுறைகளையும் தலைமைத் தளபதியின் அதிகாரங்களையும் பறித்துக் கொள்வது போன்றதாகும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த வகையில் இந்தியாவையும் அல்லது ராணுவங்களையும் ஆளும் ராஜதந்திரத்தை நான் ஐயுறுகிறேன். (1867 அக்டோபர் 7 ஆம் தேதியிட்ட நடவடிக்கைக் குறிப்பு. பக். 94-7)

ஏகாதிபத்தியவாதிகளின் வெற்றி ஒரு புறமிருக்க, வெற்றியடையவேண்டிய ஒரு லட்சியத்தை சமஷ்டி ஆதரவாளர்கள் இழந்து விட்டனர். ஏகாதிபத்திய அமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அக்காலத்து உணர்வுகள் ஆதரவாக இருந்தபோதிலும், அதற்குச் சம்பவங்களின் போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கு சக்தியில்லாமல் இருந்தது. மிக மோசமான வறுமையில் சிக்கியிருந்த ஏகாதிபத்திய அரசாங்கத்தை அதிலிருந்து மீட்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான ஒரு வழிமுறையாக சமஷ்டி நிதியமைப்பை ராஜதந்திரம் ஆதரிக்கவில்லை. ஆனால், அதற்கான வழிமுறை ஏகாதிபத்திய நிதியமைப்புதான் என்பது ஐயத்திற்கிடமானது என்பதை நிதித்துறையினர் விரைவிலேயே புரிந்து கொண்டனர்.

 (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 11)

Pin It