வைத்திய உதவி
இன்றைய நிலையில் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள்பட்ட ஜனங்களுக்கு பொது வைத்திய உதவி பொறுப்புள்ளதாகவும், போதுமானதாகவும் இல்லை என்பதைக் குறிக்க வருந்த வேண்டியிருக்கின்றது. ஈரோட்டிலிருந்த முனிசிபல் ஆஸ்பத்திரியானது சுமார் 12-வருஷங்களுக்கு முன் சர்க்கார் ஆஸ்பத்திரியாக மாறின போது முனிசிபல் நிர்வாகத்தைவிட சர்க்கார் நிர்வாகம் சற்று மேலாகவே இருக்குமென்று ஜனங்கள் கருதினார்கள். அந்தப் படியே சில காலம் நடந்தும் வந்தது.
ஆனால் நாளாக நாளாக அந்த ஆஸ்பத்திரிக்கு பொது ஜனங்களுடைய தயவைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கின்ற மாதிரியிலேயே அதன் மேலதிகாரிகளால் நடைபெற்று வருவதாய் காணப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் சர்க்கார் நிர்வாகமேயாகும். ஈரோடு ஆஸ்பத் திரி டவுன் ஜனங்கள் 35000 பேருக்கும், சமீப சுற்றுப் பக்கத்து ஜனங்கள் சுமார் 20000 பேருக்குமாக 50000 பேருக்கு மேல் பயன்பட வேண்டிய தாய் இருந்து இவர்களில் பெரிதும் ஏழைமக்களுக்கு ஆகவே இந்த ஆஸ்பித் திரி இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் ஒரு சர்க்கார் சம்பள டாக்டர் இருக்கிறார் என்றாலும் கௌரவ டாக்டர்கள் என்பதாக இரண்டு மூன்று பிரைவெட் டாக்டர்களை நியமித்திருப்பதால் சம்பள டாக்டருக்கும் சம்பளமில்லாத டாக்டர்களுக்கும் மற்றும் தங்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் உள்ள ஆசையாலும், பொறாமையாலும் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் சிகிச்சை பெரிதும் பாதிக்கப்படுவதோடு நோயாளிகள் விஷயத்தில் யாருக்கும் பொருப்பில்லாமல் கடன் கட்டுகிறமாதிரியில் நடை பெறுகின்றது. பணம் கிடைக்கக்கூடிய வைத்தியம் - பணக்காரன் வைத்தியம்- நாளை மறுநாள் தன்னையே குடும்ப வைத்தியராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வைத்தியம் முதலாகிய இவைகள் தான் சிறிது கவலையாய் கவனிக்கப்படுகின்றதே தவிர ஏழைகள் தொழிலாளிகள் பாடு கஷ்டம்தான்.
கௌரவ வைத்தியர்களை ஏற்படுத்தியதின் பயனை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பிரைவேட் டாக்டர்கள் பிரைவேட்டாக பணம் வாங்கிக்கொண்டு செய்யும் வைத்தியத்திற்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொடுக்க பயன்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். மற்றும் பிரைவேட் டாக்டர்கள் தங்கள் தொழிலை விர்த்தி செய்து கொள்ள ஆஸ்பத்திரி பயன்படுத்தப்படுகின்றது என்றும் சொல்ல வேண்டும்.
இது எப்படியோ போகட்டும் என்றாலும் பொது ஜனங்களுக்கு இதனால் இருக்கும் அசௌகரியம் மிகவும் கவனிக்கத்தக்கதாய் இருக்கின் றதுடன் மற்றொரு விஷயம் என்னவென்றால் குதிரை கீழேதள்ளியது மல்லாமல் குளியும் தோண்டிற்றாம் என்பதுபோல் பெண்கள் சம்பந்தமான குழந்தைகள் சம்மந்தமான வைத்தியம் பார்க்கும் லேடி (பெண்) டாக்டர் ஸ்தானம் ஒன்று சுமார் 25 வருஷ காலமாக இந்த ஆஸ்பத்திரிக்கு இருந்து வந்தது இந்த கௌரவ டாக்டர் முறை அதிலும் போய் புகுந்து அந்த சம்பள டாக்டரையே எடுத்து விடும்படி செய்துவிட்டது. இப்போது ஈரோட்டிற்கு பெண் டாக்டர் இல்லை.
பொதுவாக இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் கௌரவ உத்தியோகங்கள் எந்த நிலைமையில் எவ்வளவு கண்ணியத்தில் நடைபெறுகின்றன என்பதை நாம் எடுத்துக்காட்டத் தேவையில்லை. அதிலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக் கலாம் என்றும், என்ன தப்பு செய்தாலும் தொழில் மரியாதையை அனுசரித்து மேல் அதிகாரிகளும் சகோதரத் தொழிலாளிகளும் அத் தப்பிதத்தை வெளிக்குக் காட்டாமல் ஆதரித்தே ஆகவேண்டும் என்கின்ற கொள்கை யுடைய டாக்டர் உத்தியோகம் ஒரு கௌரவ உத்தியோகமாக இருந்தால் அதன் கொடுமையை யாரால்தான் வர்ணிக்கமுடியும்? ஆதலால் இன்று மேல்கண்ட 50ஆயிரம் ஜனங்கள் கொண்ட ஈரோட்டில் குழந்தைகளும் பெண்களுமான சுமார் 30ஆயிரம் பேர்களுக்கு வைத்தியம் மிகவும் பரிதாபகரமாகவே இருந்து வருகின்றது. இங்கு மிஷின் ஆஸ்பத்திரி ஒன்று இருக்கின்றது என்றாலும் அது ஒரு மத சம்பந்தமானதும், மதப் பிரசாரத்தைக் குறிக்கொண்டதும், பொது ஜனங்களுக்கு எவ்விதத்திலும் பொறுப்புக்குக் கட்டுப்படாததுமாகும்.
ஆதலால் அதைப்பற்றி நாம் பேசுவதற்கு நமக்கு எவ்வித அரு கதையும் உரிமையும் கிடையாது.
நிற்க, இன்றைய மக்கள் சாவுகளிளெல்லாம் அதிகமான சாவும், அநியாயமான சாவும், காயலாவும், பெண்கள் பிரசவ சாவும் காயலாவு மேயாகும். அதோடு பிரசவ குழந்தைகள் வியாதியும் பெண்கள் வியாதியுமே இயற்கையிலே அதிகமாயிருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.
இது சமயம் ஈரோட்டில் பிரசவக் கேசுகளைக் கவனிக்க எப்படிப்பட்ட ஏழையானாலும் வீடுகளுக்கு யாராவது வரவேண்டுமானால் 5ரூபாய், 10 ரூபாய் கொடுக்காமல் முடியவே முடியாது. முனிசிபல் மருத்துவச்சிகளின் ரேட்டோ, சர்க்கார் டாக்டர், கௌரவ டாக்டர்கள், பிரைவேட் டாக்டர்கள் பீசுகளைவிட அதிகமாகவும் நோயாளிகளிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ளுவதும் அதிகாரம் செலுத்துவதுமான காரியங்கள் அதிகமென்றே சொல்ல வேண்டும். ஆகையால் இந்த நிலையில் பெண்கள் வைத்திய வசதிநிலை இது சமயம் ஈரோட்டில் மிகவும் மோசமாகவே இருந்து வருகின்றது. இந்த ஆண் பெண் வைத்திய வசதி விஷயங்களிலும் இதில் நடக்கும் கொடுமை விஷயங்களிலும் இன்னும் அநேக உண்மைகளை எடுத்துக்காட்டலாம் என்றாலும் அவை கிணறு வெட்டப் பூதம் புரப்பட்டது போல் ஆகிவிடுமாதலால் பொதுவாக இக்கஷ்டங்களைப்பற்றி சர்க்காருக்கு முனிசிபாலிடியார் எடுத்துச் சொல்லி அவர்கள் செவிசாய்க்காமல் போனால் உடனே முனிசிபாலிடி சார்பாகவாவது ஒரு லேடி டாக்டரை இந்த ஊருக்கு வரவழைத்து ஒரு சிறிய கட்டடத்தில் மருந்துகள் வைத்துப் பெண்களுக்கும் சிறப்பாக பிரசவப் பெண்களுக்கும் இலவச வைத்திய வசதி கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோருகின்றோம்.
ஈரோடு முனிசிபாலிடியில் இப்பொழுதுள்ள இரண்டு மருத்துவச்சி களையும், எடுத்துவிட்டால் மாதம் 60ரூ. மீதியாகும். 20ரூ. அல்லது 25 ரூபாயில் ஒரு மருத்துவச்சியும் மாதம் 50 அல்லது 60 ரூபாயில் ஒரு லேடி அசிஸ்டெண்ட சர்ஜனைப் போட்டு விட்டால் முனிசிபாலிடிக்கு இப்பொழுதிருப்பதைவிட மாதம் 20 அல்லது 25 ரூபாய்தான் அதிக செலவாகும். மருந்துகள் அவரவர்களே வாங்கிக் கொள்ளுவார்கள். ஏழைகளுக்கு ஏதோ மாதம் 5 அல்லது 10 ரூபாய் மருந்துகள் வாங்கினால் சரி செய்து கொள்ளலாம். இது முக்கியமான விஷயமானதால் முனிசிபல் கௌன்சிலர் கனவான்கள் இதை அவசியம் கவனிப்பார்கள் என்று கருதுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.04.1933)