தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் மருத்துவத் துறையில் மனிதர்களின் வேலைப் பளு பாதியாகக் குறையும் என்று ஆரம்பக் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்மார்ட் ஸ்தெடாஸ்கோப் முதல் மருத்துவமனையில் அவசரப் படுக்கை வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையைக் கணித்து முன்கூட்டியே கூறுவது வரை செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நடத்தப்படும் திரையிடல் (screening) பாதுகாப்பானது. இது கதிரியக்கவியலாளர்களின் (radiologists) வேலை பளுவைப் குறைக்கிறது என்று இது பற்றிய விரிவான ஆய்வுகள் கூறுகின்றன. உலகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில் மார்பகப் புற்றுநோய் முக்கிய இடம் பெற்றுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 2.3 மில்லியன் பெண்கள் இந்த நோய்க்கு புதிதாக ஆளாகின்றனர். துல்லியமான திரையிடல் இதை முன்கூட்டியே கணித்துக் கூறி, உயிரிழப்புகளைக் குறைக்க உதவுகிறது. முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படுவதால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்க முடியும். இரண்டு கதிரியக்கவியலாளர்கள் இணைந்து பணிபுரிவதற்குச் சமமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திரையிடல் பரிசோதனைகள் செயல்படுகிறது என்று ஆரம்பகட்ட ஆய்வுகள் கூறுகின்றன.mammogramமுடிவுகள் தவறாகப் போவதில்லை

தவறான முடிவுகளை இது குறைக்கிறது. 80,000 பெண்களிடம் நடத்தப்பட்ட இது பற்றிய ஆய்வு, லேன்சட் ஆங்காலஜி (Lancet Oncology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோயை மாமொகிராம்களில் (Mammogram) சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க நடந்த ஆய்வின் முடிவுகள் துல்லியமாக இருந்தன.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சராசரி 54 வயதுடைய பெண்களிடம் இத்தொழில்நுட்பத்தின் துணையுடன் செயல்படும் திரையிடலைப் பயன்படுத்தி புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதில் பாதி ஸ்கேன்களின் பரிசோதனைகள் இரண்டு கதிரியக்கவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. மீதி பாதி செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் திரையிடல் தொழில்நுட்பத்தால் நடத்தப்பட்டன. பிறகு இவற்றின் முடிவுகள் மற்ற நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 244 பேருக்கு அதாவது 28% பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு திரையிடல் மூலம் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 203 பேருக்கு 25% பெண்களுக்கு வழக்கமாக நடைபெறும் வழிகள் மூலம் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

41% திரையிடல் பரிசோதனைகள் நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இதில் 19 பேருக்கு ஆக்ரமிப்பு (invasive) வகை மற்றும் 22 பேருக்கு சிட்டு (Situ) வகை நோயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும் நிலையில் இருப்பதே ஆக்ரமிப்பு புற்றுநோய். நோயை உருவாக்கும் செல்களின் வளர்ச்சி எபிதீலியல் செல்களுக்கு ஆழமாக பரவாத நிலை அல்லது நோய் மற்ற உடற்பகுதிகளுக்குப் பரவாத நிலை சிட்டு புற்றுநோய்.

பரிசோதனை நேரம் குறையும்

தவறான முடிவுகள் மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரே அளவில் 1.5% என்ற அளவில் கிடைத்தன. கதிரியக்கவியலாளர்கள் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எடுத்த 36,886 ஸ்க்ரீனிங் முடிவுகளைப் பரிசோதித்தனர். இது கதிரியக்கவியல் நிபுணர்களுக்கு 44% திரையிடல் சோதனை முடிவுகளைப் பரிசோதிக்கும் வேலை பளுவைக் குறைத்தது. வழக்கமான ஸ்க்ரீனிங் முடிவுகளை இரண்டு முறை பரிசோதிக்கும்போது கிடைக்கும் அதே முடிவுகளே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியபோதும் கிடைத்தது.

இது தகுதியான கதிரியக்கவியலாளர்கள் பல நாடுகளிலும் இல்லாத பற்றாக்குறை பிரச்சனையைப் போக்க பெரிதும் உதவும். நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கே பயன்படுத்தி திரையிடல் சோதனை முடிவுகளை மதிப்பிடுவது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். வேலைப் பளு குறைவதால் நிபுணர்கள் மேம்பட்ட நோய்க்கண்டறிதலில் ஈடுபட முடியும். இதனால் நோயாளிகளின் காத்திருப்பு காலம் குறையும் என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் ஸ்வீடன் நுரையீரல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் கிரிஸ்டினா லேங் (Dr Kristina Lång) கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பங்கள்

இந்த கண்டுபிடிப்பு மகத்தானது என்றாலும் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்படும் முடிவுகளின் துல்லியத் தன்மை பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று லண்டன் குவின் மேரி பல்கலைக்கழக புற்றுநோய் திரையிடல் துறை பேராசிரியர் ஸ்டீபன் டஃஃப்பி (Stephen Duffy) கூறுகிறார். காலத்திற்கு ஒவ்வாத பழைய தகவல் தொழில்நுட்ப முறைகள் அகற்றப்பட வேண்டும்.

இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்போது ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களின் நேரம் மிச்சமாகும் என்று மார்பகப் புற்றுநோய் இப்போது என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான தகவல் தொடர்புத்துறை தலைவர் டாக்டர் கட்ரீனா தேம்சினேட் (Dr Kotryna Temcinaite) கூறுகிறார்.

இந்த கண்டுபிடிப்பு ஊக்கமளிப்பது; நிபுணர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது; திறனை மேம்படுத்தும்; விரைவான முடிவுகளை எடுக்கலாம். நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை புற்றுநோய் தீர்வில் மேலும் தீவிரமாகப் பயன்படுத்த இந்த கண்டுபிடிப்பு தூண்டுதலாக அமையும். இதனால் நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிக்கலாம். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் பல பெண்களின் உயிரைக் காக்க முடியும் என்று கதிரியக்கவியலாளர்களுக்கான ராயல் கல்லூரி தலைவர் டாக்டர் காத்தரீன் ஹேலிடே (Dr Katharine Halliday) கூறுகிறார்.

உலகளவில் மார்பகப் புற்றுநோய் பெண்களில் அதிக உயிரிழப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம். இதற்கான சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/aug/02/ai-use-breast-cancer-screening-study-preliminary-results?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It