கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய சட்டசபை வரவு செலவு திட்டத்தின் விவாதத்தின் போது ராணுவ சம்மந்தமாய் பேசிய பல இந்திய பிரதிநிதிகள் என்னும் கனவான்கள் ராணுவத்தை இந்திய மயமாக்க வேண்டும் என்றும், இந்தியர்களையே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் வாதம் செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேச மக்களையும் அடிமைகளாக்கி அத்தேச சரீர உழைப்பாளிகளினுடைய உழைப்பின் பயன்களை யெல்லாம் சோம்பேரிகளும், சூட்சிக்காரர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கும், மனிதர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் மதம், கடவுள், அரசன் என்னும் பெயர்களால் வேதம், விதி, சட்டம் என்பவைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமாயிருப்பது இந்த ராணுவ ஸ்தாபனமேயாகும். எப்படியெனில் கடவுள் கட்டளையால் ஏற்பட்ட வேதத்தின் கொள்கையை அனுசரித்துச் செய்யப்பட்ட சட்டத்தை நிர்வகித்து வரும் அரச ஆட்சிக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சிகளையும், சாதனங்களையும் அடக்கி, ஒடுக்கி அழிக்கவே ராணுவம் என்பது வெகு காலமாக இருந்து வருகின்றது.

இந்த ராணுவத்திற்கு ஏற்படும் செலவுகள் அவ்வளவும் சரீரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களின் உழைப்பின் பயனிலிருந்தே கொடுக்கப்படுகின்றன. (எப்படியெனில் ஒரு நாட்டிற்கு உழைப்பாளியின் உழைப்பின் பயனாய் அல்லாமல் வேறு வழியில் செல்வமேயில்லை.)

ராணுவச் செலவு மாத்திரமல்லாமல் ராணுவத்திற்காக சேர்க்கப்படும் மக்களும், உழைப்பாளிகளுடைய மக்களும், சகோதரர்களுமே யாவார்கள்,

periyar 389ஆகவே இதனால் ராணுவச் செலவும் உழைப்பாளிகளுடையது என்பதும், ராணுவ மக்களும் உழைப்பாளிகளின் சகோதரர்கள் என்பதும் தெளிவாய் விளங்குவதோடு எதற்காக இந்த ராணுவம் என்று யோசித்தால் மேற்கண்ட உழைப்பாளிகளாகிய தொழிலாள மக்கள் தாங்கள் உழைத்துப் பாடுபட்ட தொழிலின் பயனை அவ்வுழைப்பாளிகள் அடைய முடியாமல் அவர்கள் என்றென்றும் உழைப்பாளிகளாகவே இருந்து உழைத்துக் கொண்டே வருவதற்காக அவர்களை அடக்கி வைத்திருக்கும் காரியத்திற்கே பயன்படுத்துவதாகும் என்பதும் விளங்குகின்றது.

எப்படியென்றால் ராணுவம் என்கின்ற பெயரால் ஒரு கூட்ட மக்களை துப்பாக்கி, பீரங்கியுடன் வைத்திருக்காவிட்டால் உழைப்பாளியின் பயனை நோகாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோம்பேரிக் கூட்டமும், பணக்கார முதலாளி கூட்டமும், இவ்விரண்டு கூட்டத்தாலும் ஏற்படுத்தப்பட்டு ஆதரித்துக் காப்பாற்றி வரும் அரசாங்கமும் அரை நிமிட நேரமும் உலகிலிருக்க இடமேயில்லை.

இதிலிருந்து ஒரு ராணுவ வீரன் என்பவன் எப்படிப் பட்டவன்? ஒரு தொழிலாளி என்பவன் யார்? என்று பார்த்தால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு சகோதரர்களில் ஒருவன் பாடுபடவும், மற்றொருவன் அப்பாட்டின் பயனை அப்பாட்டாளி அடையாமல் பாடுபடாத சோம்பேரி அடைய உதவியாளனாயிருக்கவுமான வேலைகளுக்கமருகிறவர்கள் என்பது விளங்கும்.

ஆகவே ஒரு பாட்டாளி - ஒரு தொழிலாளி அவனது உழைப்பின் பயனை அவனே அடைய வேண்டுமானால் அவனது சகோதரனே ராணுவ வீரனாய் வந்து சுட்டுக் கொல்லும் கொடுமையை நிறுத்தினால் ஒழிய முடியவே முடியாது என்பதை உணர்ந்த எந்த உழைப்பாளியும் தன் சகோதரன் ராணுவத்துக்கு போவதற்கு சம்மதிக்கவே மாட்டான். அரசாங்கம் என்பதின் ரகசியமே இதில்தான் இருக்கின்றது.

எனவே இன்று ஒரு உழைப்பாளியின் உழைப்பானது உழைப்பாளியைப் பட்டினி போடுவது மாத்திரமல்லாமல் அவனையே சுடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் இரண்டு வருஷ காலமாய் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு ஆகிய கிளர்ச்சிகளில் தடி-அடிபட்டவர்களும், தடியால் அடித்தவர்களும் யார் என்று பார்த்தோமானால் இருவரும் சகோதரர்களே ஆவார்கள். ஆனால் அடித்தவர்களுக்கு எஜமானன் அரசாங்கம் அடிபட்டவனுக்கு எஜமானன் முதலாளியும் சோம்பேரியான பார்ப்பானும் ஆவார்கள். இருவர் போட்டியின் பயனாய் இரு கூட்டத்திற்கும் ஆளுகளாய் இரு சகோதரர்கள் அடிபட்டார்கள் என்பது தான் உண்மையான முடிவு.

இதுபோலவே தான் ஒரு தேசத்துக்கும், மற்றொரு தேசத்துக்கும் சண்டை வந்தால் இரு தேச சகோதரர்களும் இருதேச முதலாளிகளுக்காக, அரசர்களுக்காக ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்று கொள்ளுகிறார்கள். இரு சகோதரர்களுக்கும் போதை உண்டாகும்படி தேசாபிமானம் என்கின்ற கள்ளை ஊற்றுவதுடன் இரு சகோதரர்களில் மற்றொரு சகோதரர்களாகிய உழைப்பாளிகளின் உழைப்பின் பயனாய் சேர்த்த பணத்தையே கூலியாகக் கொடுத்து கோயில்களில் நிரபராதியான ஆடுகளை கடவுள் பக்திக்காகப் பலி கொடுப்பதுபோல் யுத்தரங்கத்தில் தேச பக்திக்காக பலி கொடுத்து விடுகின்றார்கள். இந்தப்படி பலியான மக்களின் சகோதரர்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்று பார்த்தால் அவர்கள் மறுபடியும் பாடுபட்டு உழைத்து மறுபடியும் இப்பேர்ப்பட்ட யுத்தம் ஏற்பட்டால் அதில் பலி கொடுப்பதற்காக சகோதரர்களையும், அவர்களுடைய செலவுக்கு பணங்களையும் கொடுத்துக் கொண்டு வருவதைத் தவிர வேறு வேலை கிடையாது.

இந்தக் காரியமேதான் இன்றோ, நேற்றோ இருந்து மாத்திரமல்லாமல் ராமாயண பாரதகாலம் என்பது தொட்டு அக்றோணி, வள்ளம், மூலபெலம் என்பதாக கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்ததாக சொல்லப்படுவதுமாகும். இதனால்தான் ராணுவத்திலிருப்பவர்களுக்கு வீரர்கள் என்றும், ராணுவத்தில் யுத்தத்தில் சாகின்றவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைக்குமென்றும் சொல்லி ஏமாற்றுவதுடன் அவர்களிடம் வேறு எவ்வித வேலையும் வாங்காமல் வளகிடாய்கள் போலவும் சும்மா வைத்து வளர்த்து வருவதுமாகும்.

இப்படிப்பட்ட காரியத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்தாபனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கருதாமல் அதை இந்திய மயமாக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்ததும், தங்கள் தங்கள் வகுப்புக்கு இந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதங்கள் நடந்ததும் மிகவும் வருந்தத்தக்கதேயாகும். ஒரு சமயம் அந்த பதவியையும், பணத்தையும் இந்தியர்கள் அடைவது நன்மையல்லவா என்று சிலர் கேட்கலாம். இந்தக் காரியத்தில் இந்தியர்கள் என்பது இந்த நிலையில் சிறிதும் பொருந்தாது என்றே சொல்லுவோம். ஏனெனில் இது சமயம் உலகத்திலுள்ள ராணுவ வீரர்கள் என்பவர்கள் எல்லாம் தங்களுடைய உண்மையான நிலையை உணர்ந்து தேசம் என்றும், சட்டம் என்றும், நீதி என்றும், பாதுகாப்பு என்றும் சொல்லிக் கொண்டு தங்கள் சகோதரர்கள் உழைப்பிலேயே சாப்பிட்டுக் கொண்டு தங்கள் சகோதரர்களையே அடக்கி ஒடுக்கி சுட்டுக்கொண்டு வருகிறோம் என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டு வருகின்றார்கள்.

இந்திய ஜனங்களுக்கு கடுகளாவாவது இந்த உணர்ச்சி வர வேண்டுமானால் முதலில் அவர்களுக்குள் இருந்து வரும் ஜாதிப்பிரிவு உணர்ச்சியும் மதப்பிரிவு உணர்ச்சியும் மறைந்தாக வேண்டும், இவ்விரண்டு உணர்ச்சியும் மறைந்தாலொழிய அதிலும் குறிப்பாக ஜாதிப்பிரிவு உணர்ச்சி ஒழிந்தாலொழிய ஒரு சமூகம், அல்லது ஒரு மனிதன் ராணுவத்திற்கு லாயக்கில்லை என்றே சொல்லுவோம். ஏனென்றால் இந்திய வருணதருமப்படியும், ஜாதி தருமப்படியும் ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு லக்ஷியம் இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட இவர்கள் ராணுவத்திற்கு போனால் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளுவார்களே ஒழிய எதிரிகளை சுடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் அருமையான காரியமாகும்.

இதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுவோம். அதாவது போலீசுக்கு ஆள்களைச் சேர்த்து பயிர்ச்சி கொடுத்து வரும் வேலூரில் உள்ள போலீசு சிப்பாய்களை அவர்களது மேல் அதிகாரியானவர் எல்லா போலீஸ்காரர்களும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்காக உடனே இரண்டு “மேல்ஜாதிக்கார” போலீஸ்காரர்கள் ராஜீனாமா செய்து விட்டார்கள் என்றும், இதைப் பற்றி சட்டசபையில் கேள்விகேட்டு அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் சுதேசமித்திரன் என்னும் ஒரு “தேசியப் பத்திரிகை” 11-3-33ந் தேதி தனது நிருபர் பெயரால் ஒரு நீண்ட வியாசம் எழுதி இருக்கின்றது.

இந்தக் காரியம் ஒன்றா சுதேசமித்திரனின் தேசியத்திற்கு விரோதமானதாக இருந்திருக்க வேண்டும், அல்லது பொது ஜனங்களுக்கே இது ஒரு விரோதமான காரியமாய் இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ராணுவத்தை இந்த ஜனங்களைக் கொண்ட இந்திய மயமாக்கலாமா என்பது தான் நமது கேள்வி. இது சமயம் வேலூர் போலீசார் வெட்டிசாதம் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேரியாய் இருக்கின்ற சமயமானதால் இரண்டு போலீசுக்காரர்கள் ராஜீனாமாக் கொடுத்து விட்டதினால் ஒன்றும் முழுகிப் போய்விட வில்லை. தவிரவும் இந்த சமயம் பழசு போனால் புதிசு தானாக வரக்கூடிய சமயமுமாகும்.

ஆனால் யுத்தத்துக்கு தயார் செய்யப்பட்ட ஒரு நெருக்கடியான சமயத்தில் இம் மாதிரியான ஒரு நிலைமை அதாவது ஒரு யுத்தத்துக்குப் போன இடத்தில் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு ராணுவ அதிகாரி அந்தப்படி உத்திரவு போட்ட உடன் இந்த இந்திய மயமாக்கிய போர்வீரர்கள். (வேலூரில் செய்தது போலவே) உடனே ராஜிநாமாக் கொடுத்து விடுவார்களேயானால் யுத்தத்தின் தன்மை என்னவாய் முடியும் என்பதை சற்று இந்திய தேசியவாதிகளும், இந்தியா சட்டசபை பிரதிநிதிகளும், தேசியப் பத்திராதிபர்களும் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

இந்தியன் என்பவனுக்கு ஒவ்வொரு வருணத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் சாப்பாட்டில் ருசி வேறு, சமையல் செய்வதில் பக்குவம் வேறு, சமையல் செய்வதற்கு சமையல்காரனுடைய ஜாதி வேறு, சமையல் செய்ய வேண்டிய இடம் வேறு, சமைக்கப்படவேண்டிய சாமான்கள் வேறு, சாப்பிடுவதற்கு இடம் வேறு என்று இப்படிப்பட்ட அநேகமான வேறுவேறுகள் வேண்டுமானால் பிறகு இதற்குத் தகுந்த மனச்சாட்சிகளும் வேறு வேறு வேண்டுமா? ஆனால் இதை விசாரித்து நடவடிக்கை நடத்தி நீதி செலுத்த சட்டசபை மெம்பர்களும் வேறு வேறு வேண்டியிருக்குமானால் இவை சாத்தியப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சாத்தியப்பட்டாலும் இந்த யோக்கியதை கொண்ட ராணுவத்தையுடைய ஆட்சி உருப்படி ஆகுமா? என்று கேட்கின்றோம்.

ஒரு மனிதனுடன் கூட இருந்து உண்ணுவதால் தனது யோக்கியதை கெட்டுபோய் விடுகின்றதென்று ஒருவன் தனது உத்தியோகத்தை ராஜினாமாக் கொடுத்து விட்டு ஓடுவதும் இதை விசாரித்து இந்தப்படி உத்திரவு போட்ட மேலதிகாரியின் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தேசியப் பத்திரிகை எழுதுவதுமானால் இந்த நாட்டுக்கு ஒரு சுயராஜ்யம் வேண்டுமா? அல்லது இந்த நாட்டை நான் கொல்லையிலும் நெருப்பு வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டு பாலைவனமாக ஆக்கிவிட வேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்.

அன்னிய ஆட்சி இருக்கும் போதே ஏற்கெனவே இந்த நாட்டை ஜமீன்தாரர்களும், சோம்பேரிகளான பார்ப்பனர்களுமே ஆளுகிறார்கள். இனி சுயாட்சி என்பது கிடைத்து தட்டிப் பேசவே ஆளில்லாத நிலையில் சாட்சிக்குக்கூட ஒரு அன்னியன் இங்கில்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடுமானால் இந்த நாட்டு உழைப்பாளி மக்களின் கதி—- தாழ்த்தப்பட்ட மக்களின் கதி என்ன ஆவது என்பது தான் நமது கவலை இந்த நாடு சமதர்ம நாடு ஆக வேண்டுமானால், இந்த நாட்டில் முதலாளிகளையும், மேல் ஜாதிக்காரர்கள் என்னும் சோம்பேரிகளையும் காப்பாற்றும், பாதுகாக்கும் அரசியலும், மற்றப் பாதுகாப்புகளும் அடியோடு அழிக்கப்பட வேண்டுமானால் ராணுவத்தை இந்திய மயமாக்குவது என்பது ஒருநாளும் கூடாத காரியமேயாகும்.

இந்திய மயமாக்க வேண்டும் என்று சொன்னவுடனே வகுப்புவாரி உரிமை வந்தே தீரும். ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு சிப்பாய்-ராணுவ அதிகாரி ஏற்பட்டே தீரும். அதிலும்கூட இப்போதைய போலவே சூட்சிக்காரர்களும், தந்திரக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களும் அதிகமான எண்ணிக்கை ஸ்தானங்களை எப்படியாவது கைப்பற்றியே தீருவார்கள். இவர்கள் எப்பொழுதும் உழைப்பாளிகள் மேலும், பாட்டாளிகள் மேலும் சமதர்மத்துக்கு வாதாடுபவர்கள் மேலுமேதான் இவர்களது துப்பாக்கியையும், மிஷின் பீரங்கிகளையும் திருப்புவார்களே ஒழிய ஒரு நாளும் ஏழைகளை வஞ்சித்து அவர்களது உழைப்பைக் கொள்ளை கொள்கின்றவர்கள் மீதும் அவர்களை அடக்கி வைத்திருப்பவர்கள் மீதும் திருப்பவே மாட்டார்கள். ஆதலால் இந்த நிலையில் இந்தியா ஒரு நாளும் சமதர்ம நாடாக முடியவே முடியாமல் போய்விடும்.

ரஷியா முதலிய சில நாடுகளில் இன்று ஏதாவது ஒரு அளவில் சமதர்மங்கள் விளங்குகின்றன என்றால் அங்குள்ள ராணுவ வீரர்கள் தங்களில் ஆளுக்கு ஒரு சமையல் அறையும், சாப்பாட்டு இடமும் தேடுகின்றவர்களாய் இல்லாமல் இருந்ததுடன் அவர்களது சகோதரர்கள் மீது துப்பாக்கியைத் திருப்பாமல் அவர்களை வஞ்சித்து ஏமாற்றி அவர்களது உழைப்பை உண்டுவந்த முதலாளிகள், ஜமீன்தாரர்கள் சோம்பேரிகள் குருக்கள்மார்கள் மீது திருப்பியதினாலும் அந்தப்படி அவர்கள் திருப்பி இராவிட்டாலும் தங்களது சகோதரர்கள் மீது திருப்ப மறுத்ததாலுமே ஒழிய வேறில்லை.

ஆகையால் இந்தியாவுக்கு சுயராஜியம் தேடவும் ராணுவத்தை இந்திய மயமாக்கவும் முயற்சிக்கும் தேசியவாதிகளும் தேசபக்தர்களும் தேசப்பிரதிநிதிகளும் மகாத்மாக்களும் தயவு செய்து முதலில் சமையல் கூடங்களையும் சாப்பாட்டு மண்டபங்களையும் எல்லாருக்கும் ஒன்றாக ஆக்க முயற்சிப்பார்களாக.

(குடி அரசு - தலையங்கம் - 19.03.1933)