police Vs public 450தமிழகத்தில் மதவாத அமைப்புகளான இந்துமத சங்கப்பரிவார அமைப்புகள் காலூன்றிட எல்லா வகையான யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர். அனைத்துத் தரப்பு மக்களையும் அணுகிட அவர்களின் பல்வேறு அமைப்புகள் தங்களிடம் உள்ள பரப்புரை யுக்திகளைப் பின்பற்றித் தங்கள் கொள்கைகளைப் பரப்பிடும் பணியின் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனப் பணி யாளர்கள் மத்தியில் அவர்களுடைய தொழிற்சங்க அமைப்பான பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் 2012-இல் துண்டறிக்கை விநியோகத்தை நடத்தி னார்கள்.

அந்நிறுவனத்தில் திராவிடத் தொழிற் கழகத்தின் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளருமான தோழர் பெல் ம.ஆறுமுகம் அவர்கள் இந்துத்துவக் கும்பலின் நச்சு விதைக்குப் பதிலடி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டு அம்முயற்சியை முறியடித்தார்கள். மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.எம்.எஸ். நியூஸ் என்ற செய்தி இதழினை அம்பேத்கர் ஜெயந்தி சிறப்பிதழ் என்று பெயரில் வெளியிட்டுள்ளார்கள். அதிலேயும் தீண்டாமைக்கு இந்து மத சாஸ்திரங்களில் இட மில்லை என்றும் சாமியார்கள், சங்கராச்சாரி யார்கள் எல்லாம் சேர்ந்து இந்து மத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும் அதனால் தீண்டாமை ஒழிந்து விட்டதாகவும் கதை விட்டிருக்கிறார்கள்.

அதில் பல்வேறு உண்மைக்கு மாறான பல்வேறு வரலாற்றுப் பிழைகள் அடங்கிய செய்தி களைக் கண்டவுடன் அதற்கு எதிர்வினையாற்றிடத் தோழர் ம. ஆறுமுகம் அவர்களால் எழுதப்பட்ட, “வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு” என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு கள் அடங்கிய இந்நூலைக் காட்டாறு, வாசகர் களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திராவிடர்கழகச் செயலவைத் தலைவர் தோழர் சு.அறிவுக்கரசு அவர்கள், “இந்துமத வர்ணாசிரமப் பாறையைப் பிளந்து தூள்தூளாக்கும் வல்லமை யுடன் வடித்துத் தரப்பட்டுள்ள நூல். பொய் ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறச் செய்து மெய்போல ஆக்கிவிடலாம் என முயலும் பிற்போக்குத்தனமான இந்துமதப் பாதுகாவலர் களின் முகத்திரையைக் கிழித்து அவர்களை அம்மணப்படுத்தும் அற்புத நூலை திருச்சி தோழர் பெல்- ம.ஆறுமுகம் எழுதியுள்ளார். அவர் வாழும் இடங்களில் பிற்போக்காளர்கள் எடுத்திடும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர் வினையாற்றிடும் அற்புதமான ஆற்றலுள்ள போர்வீரர். அவருடைய ஆக்கங்கள் அச்சில் வருவது முன்பே நிகழ்ந்ததுதான். அந்த வகையில் படைக்கலன்களின் பட்டறையில் இதுவும் இணைகிறது, பாராட்டுகள். இந்த உரையில் இருந்து இந்நூலின் கருத்து வீச்சை நன்கு அறிய முடியும்.” என்று பதிவு செய்துள்ளார்.

இந்நூலை எழுதிய தோழர் பெல் ம.ஆறுமுகம் அவர்கள் இந்நூலின் என்னுரையில்,  “ இந்து மதக் காவலர்கள் சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் பழைய தொகுப்பு களை மீண்டும் தேடி எடுத்துத் தற்போதுள்ள நிகழ்வுகளையும் அத்துடன் இணைத்துப் புத்தகமாக வெளியிடத் துணிவு பெற்றோம்” என்கிறார்.

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு என்ற நூல் 25 கருத்து ஆழமிக்க அத்தியாயங் களுடன் 141 பக்கங்களைக் கொண்ட இந்துத் துவாவை முறியடிக்கும் அறிவாயுதமாக இந்நூலை உருவாக்கியுள்ளார்.

தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லையா?

“தீண்டாமை என்பது ஆதியில் இல்லை. இடையில் எப்படியோ வந்து புகுந்துவிட்டது. இந்து மதத்தின் எந்த சாஸ்திரத்திலும் புனித நூலிலும் தீண்டாமை குறிப்பிடப்படவில்லை” என்று இராம. கோபாலன் அய்யர்வாள் ‘இந்து மித்திரன்’ என்ற இதழில் எழுதியிருப்பதாக பெல் நிறுவனத்தில் இந்து முன்னணிக்காரர்கள் துண்டறிக்கை ஒட்டியிருந்தார்கள்.

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து அதன் கொள்கைகளைத் தொழிலாளர்கள் மத்தியில் பரப்பி, தொழிலாளர்களுக்கு மதவெறி ஊட்டுவதற்காக ‘பாரதீய மஸ்தூர் சங்கம்’ என்ற தொழிற்சங்கத்தைத் துவக்கியவர் தத்தோபந்த் தெங்கடி என்பவர். அவருடைய நினைவுநாளில் பெல் நிறுவனத்தில் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு துண்டறிக்கை வெளியிட்டார்கள். அதில்,

“தெங்கடி ஜி யும் அம்பேத்கரும் பல நாட்கள் சமுதாயப் பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாகவும் அம்பேத்கர் அவர்கள் இந்துமதக் கோட்பாடுகள் எதிலும் தீண்டாமை சொல்லப்படவில்லை என்பதை ஹிந்து சன்னியாசிகள் துறவியர் ஒன்றுகூடி பகிரங்கமாக அறிவித்துவிட வேண்டும் என்று விரும்பியதாகவும், அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது எனத் தீர்மானம் இயற்றப்பட்டதாகவும்”,

பி.ஹெச்.இ.எல்.-லில் 13.10.2014-இல் துண்டறிக்கை வெளியிட்டார்கள். அதேபோல 2017-இல் அம்பேத்கர் சிறப்பிதழ் வெளியிட்டு மறுபடியும் அதையே சொல்கிறார்கள். “சாதுக்கள் சன்னியா சிகள் தீர்மானம் இயற்றி தீண்டாமையை ஒழித்து விட்டார்கள்” என்பதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் சொல்லிக்கொண்டே வருகிறது. இதற்குப் பதிலடியாக, அவர்கள் துண்டறிக்கை வெளியிட்ட அதே வாரத்தில் ராஞ்சியில் நடந்த மதவிழா ஒன்றில் பூரி சங்கராச்சாரி நிச்சலானந்தா பேசும்போது,

“பகவத்கீதை 16 வது அத்தியாயத்தில் வர்ணாஸ்ரமம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனிதகுலத்தின் நன்மைக்காக உருவாக்கப் பட்டவைகள். அவரவர்கள் அவரவர்க்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்தான் வர்ணமுறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ணமுறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகத் தற்போது நடந்து வருகிறது. அதாவது சனாதனிகள் கோவிலுக்குள் நுழையத் தடை இல்லை. ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோயிலுக்குள் நுழையலாம்? வர்ணாசிரமக் கொள்கையின்படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய முடியும். அப்படி இருக்க தூய்மைப்படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். இது சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.”

என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் கூறியதாவது,

“சங்கராச்சாரியாரின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அவர் சாஸ்திரத்தை மேற்கோள் காட்டிப் பேசினார்” என்று கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொய்யான பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்நூலின் 23 ஆம் பக்கத்தில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொடர்பான செய்தியில் தாழ்த்தப்பட்ட இனத்தின் தலைவர் தோழர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தில் நீக்கமற நிறைந்துள்ள சாதிய, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி, மனம் நொந்துபோன நிலையில் “பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் சாகும்போது இந்துவாகச் சாகமாட்டேன்” என்று அறிவித்து, தானும் தன்னைச் சார்ந்தவர்களும் இந்துமதத்தைவிட்டு வேறு மதத்திற்கு மதம் மாறப்போவதாக அறிவித்தார்.

இவ்வறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவரும் தங்கள் மதத்தில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்துமதவாதிகள் அவரது முயற்சிக்குப் பலரும் உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தனர்.  அவர்களை பார்த்து,

“உங்களுடைய மதம்தான் எங்களுடைய மதம் எனில் உங்களுடைய உரிமைகளும், எங்களுடைய உரிமை களும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை அப்படியா இருக்கிறது? இல்லையே! அவ்வாறிருக்கும் போது நீங்கள் எட்டி உதைப்பதையும், அவமதிப்பதையும் பொறுத்துக்கொண்டு எந்த அடிப் படையில் எங்களை இந்துமதத்தில் இருக்கச் சொல்கிறீர்கள்? ஒரே மதத்தைப் பின்பற்றும் இரண்டு பேர்களிடையே வேறுபாடு காட்டும் மதம் ஒருதலைச் சார்பானதல்லவா? தன்னைப் பின்பற்றுகின்ற கோடிக் கணக்கானவர்களை கிரிமினல் குற்றம் செய்தவர்கள் போலவும், நாயினும் இழிந்தவர்களாகவும் நடத்தி, தாங்க முடியாத இயலாமைகளை அவர்கள் மீது திணித்துத் துன்புறுத்துகின்ற மதம் எவ்வகையிலும் ஒரு மதமன்று. இக்கொடிய அமைப்பைப் போற்றுகின்ற எதுவும் மதம் என எப்படிப் பெயர் பெற முடியும்?”

என்று முழங்கினார் அம்பேத்கர். இதற்கு மாற்று ஏற்படாக ஒரு திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்துமதவாதிகளுக்கு முன் நிபந்தனை யாக வைத்தார்.

“சாதி இந்துக்களின் மனமாற்றத்திற்காக நான் இன்னும் அய்ந்து முதல் பத்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியும். ஆனால் இதற்கிடையில் ‘கேசரி’ பத்திரிக்கை வட்டத்தாரால் மிகச் சிறந்த இந்துவாகக் கருதப்படுகின்ற தீண்டப்படாதவரான கே.கே.சகத்தை, மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள், ‘சங்கராச்சாரி’ பதவியில் ஓராண்டுக் காலத்திற்கு அமர்த்த வேண்டும். மனம் மாறியதற்கும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அடையாளமாக ஒரு நூறு சித்பவன் பார்ப்பனக் குடும்பங்கள் புதிய சகத் சங்கராச்சாரியின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.”

என்று அம்பேத்கர் கூறினார்.

அப்படி அவர் அறிவித்து இருபது ஆண்டுகள் கழித்தும் அந்த நிலை உருவாகவில்லை. அதனால் தான் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கத்தில் இணைந்தார்.

இதுநாள் வரையிலும் அம்பேத்கரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததோடு சங்கராச்சாரி பொறுப்பில் உள்ளவரே தீண்டாமைக்கு சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று முழங்குகிறார். தலித்துகளும், சூத்திரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்கிறார். இந்நூலின் மூலம் இந்துத்துவவாதிகளின் உண்மையான கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் தோழர் ஆறுமுகம்.

ஜெகஜீவன்ராம், ஜித்தன்ராம் மான்ஜிக்கு நடந்த அவமானம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்து தொடர்ந்து மத்திய அரசில் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய துறை களுக்கு மந்திரியாக இருந்த தோழர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு காசி இந்து பல்கலைக்கழகத்தில் அவர் திறந்த சம்பூர்ணானந்த் சிலை தீட்டாகி விட்டதாகக் கூறி கங்கை நீரை ஊற்றிக் கழுவிய கொடுமைக்கும்....!

2014 இல் பீகார் முதலமைச்சர் ஜித்தன்ராம் மான்ஜி தாழ்த்தப்பட்டவர் என்கின்ற காரணத்தால் கோவிலைத் தீட்டுப் போக்கிய சாதிய வன்கொடு மைக்கும், ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி அமர்ந்த நாற்காலியில் உயர்ஜாதி நீதிபதி ஒருவன் அமர மாட்டேன் என்று அடம்பிடித்து அந்த நாற்காலியை கங்கை நீரைக்கொண்டு சுத்தம் செய்து அதன்பிறகு தான் அமர்ந்தானே!

2018 இல் இன்றைய இந்தியக் குடியரசு தலைவர் தோழர் இராம்நாத் கோவிந்த் ஒரு இந்துக் கோவிலினுள் அனுமதிக்காமல் அவரின் துணைவியாரோடு நடைபாதையில் அமர்ந்து வழிபடச் செய்ததும் இவர்கள் தீண்டாமை இல்லாத இந்து மதம் என்று பொய்யுரைக்கும் கும்பலை நோக்கி இந்நூல் கீழ்க்காணும் கேள்வியை முன்வைக்கிறது.

பிரதமராகவே இருந்தாலும், பாதுகாப்பு மந்திரியாக இருந்தாலும், ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சராகவே இருந்தாலும், நீதிபதியாகவே இருந்தாலும் நீங்கள் தீண்டத்தகாதவர்கள் தான். அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லா விட்டாலும் அழுக்கு வேட்டியைத் துவைத்துக்கட்ட வக்கில்லாவிட்டாலும் ஒரு பரதேசிப் பார்ப் பானைவிட நீங்களெல்லாம் கீழானவர்கள்தான் என்கின்ற மனப்பான்மை இருக்கிறதே, அந்தத் திமிர்த்தனத்தை ஒழித்துக் கட்ட ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் செய்தது என்ன?

பெரிய மனிதர்களின் தீண்டாமை வெறி

இந்துமதத் தீண்டாமையை ஒழிக்க சங்கராச் சாரியிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த தோழர் காந்தியாரிடம் “தீண்டாமை சாஸ்திர சம்மதமானது; அதனை ஒழிக்க நான் சம்மதிக்க மாட்டேன்.” என்று கூறி கும்பகோணத்திற்கு வந்த காந்தியாருக்குத் தனது சீடர்களை விட்டுக் கறுப்பு கொடி காட்டச் செய்தாரே, அவருக்கு சாஸ்திரம் தெரியாதா?

காஞ்சி சங்கரமட சங்கராச்சாரி கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் இருந்தபோது, தன் சாதிக்காரன் சமைத்ததைத் தான் உண்பேன் என்று அடம்பிடித்ததால் பார்ப்பன கான்ஸ்டெபிளை வைத்துச் சமைத்த உணவைச் சாப்பிட்டாரே அது தீண்டாமை இல்லையா?

இந்துமத உயர்வைத் தூக்கிப்பிடிக்கிற இன்னொரு மனிதரான திலகர், தாழ்த்தப்பட்டவர் களை காங்கிரஸ் மாநாடு நடந்த பந்தலுக்கு உள்ளேயே அனுமதிக்ககூடாது என்றவர்தானே?

பூனாவில் கிறிஸ்துவ மிஷினரி நடத்திய ஒரு விழாவில் பங்குகொண்ட திலகர் கிறிஸ்துவப் பாதிரியார் அனைவருக்கும் வழங்கிய தேநீரையும், பிஸ்கட்டையும் உண்டார் என்பதற்காக சாதி விலக்கம் செய்யப்பட்டார். அப்படி சாதிவிலக்கம் செய்ததை எதிர்த்துப் பேசாமல் அதற்குப் பரிகாரம் செய்தவர் திலகர். தீண்டாமை வெறி பிடித்த திலகருக்கே சாதிவிலக்கமா?

1920 இல் அண்ணல் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ என்ற பத்திரிக்கையைத் துவங்குகிறார். அந்தப் பத்திரிக்கை வெளிவருவது பற்றி காசுகொடுத்து விளம்பரம் கொடுத்தபொழுது திலகர் நடத்திய ‘கேசரி’ என்ற பத்திரிக்கை அதனை வெளியிட மறுத்துவிட்டது. ஒரு தீண்டத்தகாதவன் நடத்து கின்ற பத்திரிக்கை விளம்பரம் வெளியிடுவதை தீட்டு என்று கருதியது அந்தக் கேசரி.

இவர்கள் திலகரையும் தலைவராக ஏற்றுக் கொள்வார்களாம் அம்பேத்கரையும் இவர்கள் மதித்து தீண்டாமையை ஒழிக்க உதவினார்களாம் எவ்வளவு இரட்டை வேடம்?- என்பவை போன்ற கேள்விகளை இந்நூல் எழுப்புகிறது.

1833-இல் விக்டோரியா மகாராணி உடன் ஏற்பட்ட உடன்படிக்கை அதில் பார்ப்பனர்கள் பெற்ற தனிச் சலுகைகள். 1871 இல் திருச்செந்தூர் கோவிலில் கோவில் நுழைவு உரிமை வேண்டும் என்று நாடார்கள் தொடர்ந்த வழக்கில் இலண்டன் பிரிவி கவுன்சிலில் நாடார்களுக்கு அனுமதி இல்லை என்று பெற்ற தீர்ப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் மகாத் மாநகராட் சிக்கு சொந்தமான குளத்தில் அண்ணல் அம்பேத்கரும் அவரது தொண்டர்களும் நீர் அருந்தினார்கள் என்பதற்காக அந்தக் குளம் தீட்டாகி விட்டதாகக் கூறி ஆயிரத்தி எட்டு குடங்களில் மாட்டுச் சாணம், மாட்டின் சிறுநீர், பால், தயிர் என அனைத்தையும் கலந்து அதனை குளத்தில் கரைத்து தீட்டுப் போக்கினார்களே அது தீண்டாமை இல்லையா?

இப்படி ஏராளமான உதாரணங்கள் உங்கள் இந்து மதத்தில் தீண்டாமைக்கான ஆதாரம் இருக்கும்போது இந்துமத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரமே இல்லை என்பது வடிகட்டின பித்தலாட்டம் இல்லையா?  

அவ்வாறு ஆதாரம் இல்லை என்று நீங்கள் கூறுவதை ஒத்துக்கொண்டால் அப்படி ஆதாரம் எதுவும் இல்லாமலேயே தீண்டாமையைக் கடைப் பிடித்து, இந்தியச் சமுதாயத்தில் நான்கில் ஒரு பகுதி மக்களைக் கொடுமைப்படுத்திய கூட்டத்திற்கு என்ன தண்டனை விதிப்பது?

மேலே கண்ட கேள்விகள் மூலம் இந்துமத அடிப்படைவாதிகளையும், இந்துமத அமைப்பு களையும், பகுத்தறிவுச் சாட்டை கொண்டு சுழற்றிச் சுழற்றித் தாக்குகிறார் நூலாசிரியர். தீண்டாமையை ஒழிக்க உண்மையான வழிகாட்டும் தலைவர்களின் கருத்துகளைப் பாருங்கள்.

தோழர் பெரியார்

“ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. சாதிப்பட்டங்கள் சட்டப் பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும். புதிதாக மணம் புரிவோர் அத்தனைபேரும் கலப்பு மணங்கள் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில் ஒரே சாதிப்பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனை களையும் கட்டுத் திட்டங்களையும் விதித்து அத்தகைய திருமணம் செய்பவர்களுக்கு சமுதாயத்தில் செல்வாக்கில்லாமல் செய்ய வேண்டும். சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல், முதலிய சின்னங்களையும், சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். காவல் துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக் குத்தர வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரஹாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனியாகச் சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.” - தோழர் பெரியார் (`விடுதலை` 10.01.1947)  

தோழர் அம்பேத்கர்

“சாதியும், தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரே ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் எனில் அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பது தான். இந்தக்கருத்தை வைத்துப் பார்த்தால் சாதியை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கமுடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்கமுடியாது, இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன. சேர்ந்தேதான்  விழும்.”- இந்நூலில் பக்கம் எண் 90.

பொய்வேடம் தரித்து, போலியான சமத்துவமுகம் காட்டி, திராவிட இன மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி, இங்கே காலூன்றத் துடிக்கும் மனிதகுல விரோதப் பார்ப்பன, வேத, சனாதன இந்துமதத்தை தோலுரித்துக் காட்டிய தோழர் பெல் ம.ஆறுமுகம் அவர்களைப் பாராட்டுவதுடன் (இம்மாத இறுதியில் அவர் பணி ஓய்வு பெறுகிறார்) அவர் ஆக்கித்தந்துள்ள இந்த நூலை திராவிட இன மக்கள் வாங்கிப் படித்துப் பரப்பிட வேண்டுமாய் காட்டாறு குழு கேட்டுக் கொள்கிறது.  

நூல் கிடைக்குமிடம்:

வைக்கம் வீரர் பதிப்பகம், ஆ  65, அண்ணா நகர், கட்டம் 3 திருச்சி - 620 026

தொடர்புக்கு: 94421 48697,

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It