அரசியல் சட்டம் செயல்படும் விதம் குறித்த விசாரணை செயது அவசியமானது என்று கருதப்படுகிற மாற்றங்களைத் தெரிவிப்பதற்காக ஒரு ராஜாங்கக் கமிஷனைப் பத்தாண்டுகளின் முடிவில் நியமிப்பதென்பது மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத் தின் மீது ஒரு கடப்பாட்டை விதிக்கும் ஷரத்தாக 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. அதற்கேற்ப 1928 இல் சர். ஜான் சைசனின் தலைமையில் ஒரு ராஜாங்கக் கமிஷன் நியமிக்கப்பட்டது.
கமிஷனின் உறுப்பினர்களில் இந்தியர்களும் இடம் பெறுவர் என்று இந்தியர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்போது இந்தியாவுக்கான அயல் துறைச் செயலாளராக இருந்த லார்டு பிர்கென்ஹட் கமிஷனில் இந்தியர்கள் சேர்க்கப்படுவதை எதிர்த்தார், அதை ஒரு நாடாளுமன்றக் கமிஷனாக ஆக்க வேண்டுமென்று? வலியுறுத்தினார். இதனால் காங்கிரசும் லிபரல்களும் ஆத்திரமடைந்த துடன் அதை ஓர் அவமானமாகவும் கருதினர். அவர்கள் கமிஷனை பகிஷ்கரித்ததுடன் அதற்கு எதிராகப் பெரும் கிளர்ச்சியிலும் ஈடுபட்டனர்.
இந்த எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்துவதற்காக, கமிஷனின் பணிகள் முடிவுற்ற பின்னர், இந்தியாவுக்கான புதிய அரசியல் சட்டம் நிர்ணயிக்கப்படும் முன்னர் இந்தியர்களின் பிரதிநிதிகள் ஒரு விவாதத்திற்கு அழைக்கப்படுவர் என்று மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கேற்ப, நாடாளு மன்றத்தின் பிரதிநிதிகளுடனும் மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத்துடனும் ஒரு வட்டமேசை மாநாட்டில் பங்குகொள்ள இந்தியர்களின் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டனர்.
1930 நவம்பர் 12 அன்று மாட்சிமை பொருந்திய ஐந்தாவது ஜார்ஜ் மன்னர், இந்திய வட்டமேசை மாநாட்டை முறையாகத் துவக்கிவைத்தார். இந்தியர்களின் கண்ணோட்டத்தில் அந்த வட்ட மேசை மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவமாக இருந்தது. இந்தியாவுக்கான ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் விஷயத்தில் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் எனும் இந்தியர் களின் உரிமையை மாட்சியை பொருந்திய மன்னரின் அரசாங்கம் அங்கீகரித்ததில்தான் அதன் முக்கியத்துவம் பொதிந்துள்ளது. தீண்டப் படாதவர்களைப் பொறுத்தவரை அது அவர்களது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் இரண்டு பிரதிநிதி களின் மூலம் தனித் தனியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தீண்டப்படாதவர்கள் முதன்முதலாக அனுமதிக்கப்பட்டனர். நானும் திவான் பகதூர் ஆர். சீனிவாசனுமே அப்பிரதிநிதிகள். தீண்டப்படாத வர்கள் இந்துக்களிலிருந்து ஒரு தனிப்பட்ட கூறாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் கலந்தாலோ சிக்கப்படும் உரிமையையும் பெற்றிருக்கிறார்கள் என்ற முக்கியத் துவம் கொண்டவர்களாகவும் கருதப்பட்டனர் என்பதையே இது அர்த்தப்படுத்திற்று.
அந்த மாநாட்டின் பணிகள் ஒன்பது கமிட்டிகளுக்குப் பிரித்துத் தரப்பட்டன. இக் கமிட்டிகளில் ஒன்று சிறுபான்மையினர் கமிட்டி என்று அழைக்கப்பட்டது. வகுப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மிகக் கடினமாக பணி அதற்கு ஒதுக்கப்பட்டது. இக் கமிட்டியே மிக முக்கியமான கமிட்டி என்பதை உணர்ந்த பிரதமர் மறைந்த ராம்சே மேக்டொனால்டு அதன் தலைவர் பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டார். சிறுபான்மையினர் கமிட்டியின் நட வடிக்கைக் குறிப்புகள் தீண்டப்படாதவர்களுக்கு மகத்தான முக்கியத் துவமுடையவையாகும். ஏனெனில் காங்கிரசுக்கும் தீண்டப்படாத வர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பல விஷயங்களும், அவர்களுக் கிடையில் கசப்புணர்வுக்கு இட்டுச்சென்ற விஷயங்களும் அக்கமிட்டி யின் நடவடிக்கைக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
வட்டமேசை மாநாடு கூடியபோது, தீண்டப்படாதவர்களைத் தவிர மீதமுள்ள வகுப்பார் முன்வைத்த அரசியல் கோரிக்கைகள் அனைவரும் அறிந்தவை. உண்மையில் 1919 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் அவர்களை சட்டரீதியான சிறுபான்மையினராக அங்கீ கரித்ததுடன், அவர்களது பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து சம்பந்தப் பட்ட ஷரத்துக்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அவர்களைப் பொறுத்தவரை அந்த ஷரத்துக்களை விஸ்தரிப்பது அல்லது அவற்றின் வடிவத்தை மாற்றியமைப்பதுதான் பிரச்சினையாக இருந்தது. தாழ்த்தப் பட்ட வர்க்கத்தினரைப் பொறுத்தவரை நிலைமை வேறுவிதமாக இருந்தது.
1919 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்திற்கு முன்னதாக வெளிவந்த மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை, அவர்களது பாது காப்புக்கு அரசியல் சட்டத்தில் வழி காணப்பட வேண்டும் என்று ஐயத்திற்கிடமற்ற விதத்தில் கூறியிருந்தது. ஆனால் துரதிருஷ்டவச மாக அரசியல் சட்டத்தின் விளக்கங்கள் உருவாக்கப்பட்டபோது, நியமனத்தின் மூலம் சட்ட மன்றங்களில் அடையாளப் பிரதிநிதித் துவம் வழங்குவதைத் தவிர அவர்க்ளுடைய பாதுகாப்புக்காக எந்த வித ஷரத்துக்களையும் உருவாக்குவது கடினம் என்பதைக் கண்டது. இந்துக்களின் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான தங்களது பாதுகாப்புக்காகத் தீண்டப்படாதவர்கள் அவசியம் என்று கருதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதுதான் செய்யப் படவேண்டிய முதலாவது விஷயமாகும். வட்ட மேசை மாநாட் டின் சிறுபானமையினர் கமிட்டிக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித் ததன் மூலம் நான் அதைச் செய்தேன். என்னால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு கருத்தை வழங்குவதற் காக அக்குறிப்பின் வாசகத்தை இங்கு மீண்டும் வழங்குகின்றேன்:
சுயாட்சி உரிமை பெற்ற இந்தியாவின் வருங்கால அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் அரசியல் ரீதியான பாதுகாப்புக்காக இந்திய வட்டமேசை மாநாட்டுக்கு வழங்குப் பட்ட திட்டம்.
சுயாட்சி உரிமைபெற்ற இந்தியாவில் பெரும்பான்மை ஆட்சி யின் கீழ் தங்களை உட்படுத்திக்கொள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினர் சம்மதிக்கக்கூடிய நிபந்தனைகள் வருமாறு:
சுயாட்சி உரிமைபெற்ற இந்தியாவில் பெரும்பான்மை ஆட்சியின் கீழ் தங்களை உட்படுத்திக்கொள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் சம்மதிக்கக்கூடிய நிபந்தனைகள் வருமாறு:
நிபந்தனை எண்: 1
சமமான குடியுரிமை
பரம்பரைக் கொத்தடிமைகள் என்ற தங்களது இப்போதைய நிலையில் பெரும்பான்மை ஆட்சிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் சம்மதிக்க முடியாது. பெரும் பான்மை ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் தீண்டப்படாமை என்ற அமைப்பிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவது ஒரு நிறை வேற்றப்பட்ட உண்மையாக இருக்கவேண்டும். அது பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு விடப்படக்கூடாது. நாட்டின் இதர பிரஜை தகுதியுள்ள சுதந்திரக் குடிமக்களாக தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் ஆக்கப்பட வேண்டும்.
(அ) தீண்டப்படாமை ஒழிக்கப்படுவதை உறுதி செய்யவும் பிரஜா உரிமையில் சமத்துவத்தை உருவாக்கவும் பின்வரும் அடிப்படை உரிமையை இந்தியாவின் அரசியல் சட்டத்தின் ஓர் அங்கமாக ஆக்க பிரேரணை செய்யப்படுகிறது.
அடிப்படை உரிமை
”இந்தியாவிலுள்ள மாநிலங்களின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின்முன் சமமானவர்கள், சமமான குடியுரிமைகளைப் பெற்றவர்கள். தீண்டப்படாமையின் காரணமாக நாட்டின் எந்த ஒரு பிரஜைக்கு எதிராகவும் நடப்பிலுள்ள எந்த ஒரு சட்டம், விதிமுறை, ஒழுங்கு, சம்பிரதாயம் அல்லது சட்டத்தின் விளக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு தண்டனை, குறைபாடு, ஊனம் ஆகியவற்றைத் திணிக்கவோ அல்லது வேறு படுத்திக்காட்டவோ, இந்த அரசியல் சட்டம் நடப்பிற்கு வந்த நாளிலிருந்து இந்தியாவில் எந்தப் பயனும் இல்லாது போகும்.(யு.எஸ்.ஏ அரசியல் சட்ட திருத்தம் XIV மற்றும் அயர்லாந்து அரசாங்கத்தின் சட்டம் 1920, 10 மற்றும் 11, ஜியோ V சி.எச்.67, பிரிவு 5 (2) எல்லா அரசியல் சட்டகளிலும் இவ்வாறு தான உள்ளது. பேராசிரியர் கெய்ததின் குறிப்புகளைக் காண்க. ஒ.எம்.டி. 207பக். (56).)
ஆ. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்க சட்டத்தின் பிரிவுகள் 110 மற்றும் 111ஐப் பயன்படுத்தி நிர்வாக அதிகாரிகள் இப்போது அனுபவித்து வரும் விலக்குகள் மற்றும் விதிவிலக்குகளை ஒழிக்கவும், நிர்வாகச் செயல்பாடுகளுக்கான அவர்களது பொறுப்புகளை ஐரோப்பிய பிரிட்டிஷ் பிரஜையின் விஷயத்தில் இப்போது இருப்பதைப் போன்று ஒரே மாதிரியானதாக்கப்பட்ட வேண்டும். எல்லா அரசியல் சட்டங்களிலும் இவ்வாறுதான் உள்ளது.
நிபந்தனை எண்: 2
சம உரிமைகளை சுதந்திரமாக அனுபவித்தல்
சம உரிமைகளுக்கான ஒரு பிரகடனத்தினால் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு எந்தவிதப் பயனும் இல்லை. சமமான பிரஜா உரிமைகளைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பிரயோகிக்க முயலு வார்களேயானால் அவர்கள் ஆசாரமான சமுதாயத்தின் மொத்த சக்தியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதி ஐயமெதுவும் இருக்க முடியாது. உரிமைகள் சம்பந்தமான இரு பிரகடனங்கள் வெறும் வாய்வார்த்தைகளாக இல்லாமல் அன்றாட வாழ்வின் எதார்த்தங்களாக இருக்க வேண்டுமானால் தாங்கள் இப்பிரகடனப் படுத்தப்பட்ட உரிமைகளை அனுபவிப்பதில் ஏற்படும் தலையீடு களினால் தோன்றும் துன்பதுயரங்களிலிருந்து போதுமான பாதுகாப் பளிக்கப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் கருது கின்றனர்.
அ. ஆகவே குற்றங்கள், நடைமுரை மற்றுமொ தண்டனைகள் சம்பந்தப்பட்ட 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின் பாகம் XI உடன் பின்வரும் பிரிவை சேர்க்க வேண்டுமென்று தாழ்த்தப் பட்ட வர்க்கத்தினர் பிரேரணை செய்கின்றனர்:
பிரஜா உரிமையில் அத்துமீறும் குற்றம்
“எல்லா வர்க்கங்களைச் சேர்ந்த நபர்களுக்கும் பிரயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான காரணங்களைத் தவிர தீண்டப்படாமை என்ற எந்த ஒரு முன் நிபந்தனையைப் பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபருக்கும் எந்தவிதமான தங்குமிடங்களையும், அனுகூலங்களையும், வசதிகளையும், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், சாலைகள், நடைபாதைகள், தெருக்கள், குளங்கள், கிணறுகள் மற்றும் நிலம், வான் அல்லது நீர்வழிப் போக்குவரத்துக்கள், தியேட்டர்கள் அல்லது இதர பொதுப் பொழுதுபோக்குமிடங்கள், புகலிடங்கள் அல்லது வசதிகள் ஆகியவை பொதுமக்கள் பயன் நபருக்கு யார் மறுத்தாலும் அவர் மேற்கூறப்பட்ட இரு விளக்கங்களுக்காகவும் ஐந்தாண்டுக் கால சிறைத் தண்டனக்கும் அபராதம் செலுத்துவதற்கும் உள்ளாவார்.”( பொதுவாக யு.எஸ். சடங்களும் ஏப்ரல் 9,1866 மற்றும் மார்ச் 1, 1875 ஆம் தேதிய சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்களும் நீக்ரோக்களின் விடுதலையைக் கருத்தில் கொண்ட அவர்களுடைய நலனுக்காக இயற்றப்பட்டவை.)
ஆ. தங்களது உரிமைகளை அமைதியான வழியில் அனு பவிப்பதில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு ஆச்சாரமான தனிநபர் கள் ஏற்படுத்தும் தடைகள் மட்டுமே ஒரே அச்சுறுத்தல் அல்ல. தடை களின் பொதுவான வடிவம் சமூக பகிஷ்காரம் ஆகும். ஆசாரமான வர்க்கங்களின் கரங்களில் உள்ள வெல்லற்கரிய ஆயுதம் அதுவே யாகும். அதைக்கொண்டு, தீண்டப்படாதவர்களின் எந்த ஒரு நட வடிக்கையையும் – அது அவர்களுக்கும் ஜீரணிக்கமுடியாத விஷய மாக இருக்கும்பட்சத்தில் – அவர்கள் அடக்கி ஒடுக்கிவிடுகின்றனர். அது எவ்வாறு செயல்படுகிறது, அது எந்த சந்தர்ப்பங்களில் நடை முறைக்குக் கொண்டுவரப்படுகிறது போன்றவை 1928ல் பம்பாய் அரசாங்கத்தினால் “தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் (தீண்டப்படாத வர்கள்) மற்றும் மாகாணத்தில் உள்ள பூர்வகுடி இனங்களின் கல்வி, பொருளாதார சமூக நிலைமையை விசாரிப்பதற்கும் அவர் களுடைய மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய் யவும்” நியமிக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையில் நன்கு விளக்கப் பட்டுள்ளன. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி வருமாறு:
தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரும் சமூக பகிஷ்காரமும்
“102. பொது உபயோக வசதிகளனைத்தையும், பயன்படுத்து வதற்கான உரிமைகளைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்குப் பெற்றுத் தருவதற்குப் பல்வேறு பரிகாரங்களை நாம் பரிந்துரை செய்திருந்தபோதிலும், இன்னும் பல காலத்திற்கு அவற்றை அவர்கள் பிரயோகிப்பதில் சிரமங்கள் அவர்களுக்கெதிராக ஆசாரமான வர்க்கங்களின் பகிரங்க வன்முறையாக இருக்கும் என்று அஞ்சுகிறோம். ஒவ்வொரு கிராமத்திலுமொ தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் ஒரு சிறிய சிறுபான்மை யினராகவே உள்ளனர். அவர்களை எதிர்த்து ஆசாரமானவர்கள் மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர்.
எந்தவகையிலேனும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் எந்த ஒரு உத்தேச அத்துமீறலிலிருந்தும் தங்களது நலன்களையும் கௌரவத்தையும் பாதுகாப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆசாரமான வர்க்கத்தினர் வன்முறையைப் பயன்படுத்து வதன் மீது போலீசார் வழக்குத் தொடரும் அபாயம் இருப்பதால் ஓரளவுக்கு வன்முறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளை வாக இத்தகைய சம்பங்கள் அரிதாகவே நிகழ்கின்றன.
”தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இன்றைய பொருளாதார நிலைமையிலிருந்து இரண்டாவது சிரமம் தோன்றுகிறது. மாகாணத் தின் பெரும்பாலான பகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்குப் பொருளாதார சுதந்திரமே இல்லை. ஆசாரமான வர்க்கத்தினரின் நிலங் களில் குடியானவர்களாகச் சிலர் தங்கள் விருப்பம் போல் பயிரிடுகின்றவர். மற்றவர்கள் ஆசாரமான வர்க்கத்தினரால் வேலைக்கமர்த் தப்பட்ட பண்ணைத் தொழிலாளர்களாக ஈட்டும் பொருளை நம்பி வாழ்கின்றனர், மீதமுள்ளவர்கள் கிராம ஊழியர்கள் என்ற முறையில் தங்களுக்கு செய்யப்படும் சேவைகளுக்குப் பகரமாக ஆசாரமான வர்க்கங்கள் வழங்கும் உணவு அல்லது தானியங்களை நம்பி உயிர் வாழ்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் துணிந்து தங்களது உரிமைகளைப் பயன்படுத்த முனையும்போது ஆசாரமான வர்க்கத் தினர் அந்த தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு எதிராகத் தங்களது பொருளாதார வலிமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி தங்களது நிலங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரை வெளியேற்றிய, அவர்களை வேலையிலிருந்து நிறுத்திய, கிராம சேவர்கள் என்ற முறையில் அவர்கள் பெற்று வந்த ஊதியங்களை நிறுத்திய எண் ணற்ற சம்பங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக பயன்படுத்தப்படும் நடைபாதைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரைத் தடுக்கவும் வாழ்வுக்குத் அத்தியா வசியப் பொருட்களை கிராம வணிகர் அவர்களுக்கு விற்பதைத் தடுப்பதையும் உள்ளிட்ட ஒரு பரவலான அளவில் இந்த பகிஷ்கரிப்பு அடிக்கடி திட்டமிடப்படுகிறது.
சாட்சியங்களின் கூற்றுப் படி சில சமயங்களில் மிகச் சாதாரணமான காரணங்களே கூட தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு எதிராக சமூக பகிஷ்காரத்தைப் பிரகடனம் செய்வதற்குப் போதுமானவையாகும். பொதுக் கிணற்றைப் பயன்படுத்தும் தங்களது உரிமையைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பிரயோகிப்பதைத் தொடர்ந்தே இத்தகைய பகிஷ்கரிப்புகள் அடிக்கடி நடைபெறுகின்றன. தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் பூணூல் அணிந்து கொண்டாலோ, சிறுநிலப் பகுதியை வாங்கி விட்டாலோ, நல்ல உடைகளை அல்லது அணிகலன்களை அணிந்து கொண்டாலோ, அல்லது பொதுவான தெருவழியாக குதிரைமீது மணமகனை அமரவைத்து கல்யாண ஊர்வலம் ஒன்றை நடத்தி விட்டாலோ மிகக் கடுமையான பகிஷ்கரிப்பு பிரகடனப்படுத்தப் பட்ட சம்பவங்களும் ஏராளமாக உள்ளன.
“தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரை அடக்கி ஒடுக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களிலேயே சமூக பகிஷ்காரம் என்ற இந்த ஆயுதத்தைவிடப் பயனுறுதியானது வேறு எதுவும் இருக்குமா என்பது நமக்குத் தெரியாது. பகிரங்கமான வன்முறை என்ற வழி முறைகூட இதன்முன்பு மங்கிவிடுகிறது. ஏனெனில் அது மிகவும் மோசமான, அழிவுகரமான பலன்களை விளைவுகளை ஏற்படுத்து கிறது. தொடர்பு சுதந்திரம் என்ற தத்துவத்துக்கு ஒத்துப் போகின்ற சட்டரீதியான வழிமுறை என்று கருதப்படுவதால் அது மிகவும் ஆபத்தானதாகிறது. தங்களது மேம்பாட்டிற்கு அவசியமான பேச்சு சுதந்திரம் செயல் சுதந்திரம் ஆகியவற்றைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினருக்கு நாம் உத்தரவாதம் செய்ய வேண்டுமானால் பெரும் பான்மையினர் புரியும் இக்கொடு மையை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.”
தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் கருத்தில், தங்களது உரிமை களுக்கும் விடுதலைக்கும் எழுந்துள்ள இந்த வகை அச்சுறுத்தலைக் சமாளிக்கும் ஒரேவழி, சமூக பகிஷ்கரிப்பை சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக ஆக்குவதேயாகும். ஆகவே, 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின் குற்றங்கள், நடை முறைகள் மற்றும் தண்டனைகள் சம்பந்தமான பாகம் XI இல் சேர்க் கப்பட்டுள்ள ஷரத்துக்களுடன் பின்வரும் பிரிவுகளையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
I.பகிஷ்கரிப்பு ஒரு குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது
1) பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒரு நபர் மற்றொருவரைப் பகிஷ்கரிப்பதாகக் கருதப்படுவார். யாரொருவர் (அ) எந்த ஒரு வீட்டையோ அல்லது நிலத்தையோ வாடைக்குவிடவோ அல்லது பயன்படுத்தவோ அல்லது கைக்கொள்ளவோ மறுக்கிறாரோ, அல்லது மற்றொரு நபருடன் செயல்தொடர்பு கொள்ளவோ, கூலிக்கு வேலை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ, அல்லது அவருக்கு எந்தவித வேலையையும் செய்யவோ அவரிடமிருந்து சேவையைப் பெறவோ, அல்லது வியாபாரத்தின் சாதாரணப் போக்கில் பொதுவாகச் செய்யப்படும் இத்தகைய விஷயங்கள் குறித்த நிபந்தனைகளில் பேரில் மேற் கூறப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறுப்பவர் அல்லது.
ஆ) அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட எந்த ஒரு அடிப்படை உரிமை அல்லது இதர பிரஜா உரிமைகளுக்கு முரணாக இல்லாத சமுதாயத்தில் நடப்பிலுள்ள சம்பிரதாயங்களுக்கு உரியமதிப்பளிப்பத்து யாரொருவர் சமூக, தொழில் ரீதியான அல்லது வர்த்தக உறவுகளிலிருந்து ஒதுங்கியிருக்கிறாரோ அத்தகைய நப ருடன், அல்லது
இ) அவருடைய சட்டரீதியான உரிமைகளைப் பிரயோகிப்பதில் அத்தகைய இதர நபருடன் எந்தவகையிலேனும் தீங்கு செய் தாலோ, தொந்தரவு செய்தாலோ அல்லது தலையிட்டாலோ. (இதுவும் பின்வரும் ஷரத்துக்களும் 1922 ஆம் ஆண்டின் பர்மா பகிஷ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டுப் பொருத்தமான ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.)
II. பகிஷ்கரிப்புக்கான தண்டனை
எந்த ஒரு நபரும் சட்டரீதியாகச் செல்வதற்கு உரிமை பெற்ற எந்த ஒரு செயலை செய்ததனாலும், அல்லது சட்டரீதியாக செய்யத்தவறுவதற்கு உரிமைபெற்ற எந்த ஒரு செயலையும் செய்யத் தவறியதனாலும் அல்லது சட்டரீதியாகச் செய்யக் கடமைப்பட்டிராத எந்த ஒரு செய்லையும் செய்ய எந்த ஒரு நபரையும் தூண்டும் ஆவலுடன் அல்லது அவர் சட்டரீதியாகச் செய்வதற்கு உரிமையுள்ள எந்த ஒரு செயலையும் செய்யத் தவறு வதற்கும் அல்லது அத்தகைய நபரின் உடலுக்கு மனத்திற்கு, புகழுக்கு அல்லது உடமைக்கு, அல்லது அவருடைய வியாபாரத்தில் அல்லது வாழும் வகையில் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் அத்தகைய நபரை அல்லது அத்தகைய நபரிடம் அக்கறை கொண்ட எந்த ஒரு நபரையும் பகிஷ்கரிப்பது சிறைத்தண்டனைக் குரியதாகும். இரு விளக்கங்களின்படியும் அது ஏழாண்டு சிறைத்தண்டனையாகவோ அல்லது அபராதமாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்கும்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் யாருடைய தூண்டுதலின் பேரிலும் செயல்படவில்லை அல்லது வேறொரு நப ருடன் சேர்ந்து கூட்டாக இக்குற்றத்தைப் புரியவில்லை அல்லது எந்த ஒரு சதித்திட்டத்தையும் தொடர்ந்து இது நடைபெறவில்லை அல்லது எந்தஒரு உடன்படிக்கை யின் பேரில் அல்லது கூட்டாக பகிஷ்கரிப்பு நடத்தப்பட வில்லை என்பதில் நீதிமன்றம் திருப்தியடையுமானால் இப்பிரிவின்கீழ் எந்த ஒரு குற்றமும் நடைபெற்றதாகக் கருதப்படமாட்டாது.
III. பகிஷ்கரிப்பைத் தூண்டுவதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கான தண்டனை
அ) யாரொருவர் ஒரு பிரேரணையை பகிரங்கமாக செய்கிறாரோ அல்லது பிரசுரிக்கிறாரோ அல்லது சுற்றுக்கு விடுகிறாரோ, அல்லது
ஆ) வேண்டுமென்றே எந்த ஒரு அறிக்கை, வதந்தி அல்லது செய்தியை தயாரித்து, பிரசுரித்து அல்லது சுற்றுக்கு விடுகிறாரோ அல்லது அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக்க் கருதுவதற்குக் காரணத்தைச் செய்கிறாரோ, ஏற்படுத்துகிறாரோ அல்லது
இ) வேறு எந்த வகையிலேனும் எந்த ஒரு நபரை யும் அல்லது நபர்களின் வர்க்கத்தையும் தூண்டிவிடு கிறாரோ அல்லது ஊக்குக்கிறாரோ அவர் ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டைனையைப் பெறுவார் அல்லது அபராதத்தைச் செலுத்துவார் அல்லது இரண்டையும் அனுபவிப்பார்.
விளக்கம்: இங்கு குறிப்பிட்ட தன்மை கொண்ட எந்த ஒரு செயலினாலும் ஒரு நபர் பாதிக்கப்பட்டாலோ அல்லது பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு இருந்தாலோ இப்பிரிவின் கீழ் ஒரு குற்றம் புரியப்பட்டதாகக் கருதப் படும். அந்த நபரின் பெயரோ அல்லது வர்க்கமோ குறிப்பிடப்படமாட்டாது. ஆனால் அவருடைய செயல் அல்லது ஏதேனும் குறிப்பிடப்பட்ட விதத்தில் செயல்படுத்துவதி லிருந்து ஒதுங்கியிருத்தலே குறிப்பிடப்படும்.
IV. பகிஷ்காரம் செய்வதாக அச்சுறுத்துவதற்கு தண்டனை
எந்த ஒரு நபரும் தாம் சட்டரீதியாக செய்ய உரிமை பெற்றுள்ள எந்த ஒரு செயலையும் செய்ததன் விளைவாக அல்லது தாம் செய்யத் தவறுவதற்குச் சட்டரீதியாக உரிமை பெற்றுள்ள எந்தஒரு செயலையும் செய்யத் தவறியதற்காக அல்லது தாம் சட்டப் படி செய்யக் கடமைப்பட்டிராத எந்த ஒரு செய்லையும் செய்வதற்கு எந்த நபரையும் தூண்டும் எண்ணத்துடன் அல்லது தாம் சட்டப் படி செய்ய உரிமையுள்ள எந்தச் செயலையும் செய்யத் தவறுவதற் காக அத்தகைய நபரை அல்லது அத்தகைய நபரின் மீது அக்கறை கொண்ட எந்த ஒரு நபரையும் பகிஷ்கரிப்பு செய்வதாக அச்சுறுத் துவது ஐந்தாண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுக்கும் உரியதாகும்.
விதிவிலக்கு: பின்வருபவை பகிஷ்கரிப்பு அல்ல
1. நியாயமான தொழிலாளர் பிரச்சினையைத் தொடர்ந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும்
2. வியாபாரப் போட்டியின்போது செய்யப்படும் எந்த ஒரு செயலும்
குறிப்பு: இக்குற்றங்களனைத்தும் வழக்குரிமைக்குட்பட்ட குற்றங்களாகக் கருதப்படும்.
நிபந்தனை எண் – 3
வேறுபடுத்திக் காட்டுவதற்கு எதிரான பாதுகாப்பு
வருங்காலத்தில் இயற்றப்படக்கூடிய சட்டம் அல்லது பிறப் பிக்கப்படக்கூடிய நிர்வாக உத்தரவின் மூலம் பாகுபாடு காட்டப் படுவோமோ என்ற அச்சத்தை தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் கொண் டிருக்கின்றனர். ஆகவே தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கெதிராக வேறுபாடு தெரியச் செய்யும்விதத்தில் பாகுபடுத்தும் அதிகாரத்தை சட்டமன்றத்துக்கோ அல்லது நிர்வாகத்துக்கோ சாத்தியமில்லை என்று சட்டம் கூறாதவரையில் பெரும்பான்மை ஆட்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள அவர்களால் முடியாது. ஆகவே, இந்தியாவின் அரசியல் சட்டரீதியான சட் டத்தில் பின்வரும் சட்டமுறையான ஷரத்துக்கள் சேர்க்கப் பட வேண்டும் என்ற பிரேரணை செய்யப்படுகிறது:
”இந்தியாவின் டொமினியனின் அதிகார எல்லைக்கு உட்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் தீண்டப்படாமை என்ற எந்த ஒரு முந்தைய நிபந்தனையையும் பொருட் படுத்தாமல் நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை அத்து மீறும் விதமாக இந்தியாவிலுள்ள எந்த ஒரு சட்ட மன்றமோ அல்லது நிர்வாகமோ ஒரு சட்டத்தை இயற் றவோ அல்லது ஓர் உத்தரவைப் பிறப்பிக்கவோ, விதி அல்லது ஒழுங்குமுறையை ஏற்படுத்தவோ தகுதி பெற்றதாகாது.
1). ஒப்பந்தங்களைச் செய்து நடைமுறைப்படுத் தவோ, வழக்குத் தொடரவோ, உடந்தையாக இருக் கவோ, சாட்சியம் கூறவோ, மரபுரிமையாகப் பெறவோ, வாங்கவோ, குத்தகைக்கு விடவோ, விற்கவோ, நிலம் அல்லது தனிப்பட்ட உடைமைகளைக் கையகப்படுத் தவோ அல்லது மாற்றிக் கொடுக்கவோ.
2) சிவில் மற்றும் ராணுவப்பணியில் நுழைவதற் கான தகுதியைப் பெறவும், நாட்டின் எல்லா வர்க்கங் களையும் சேர்ந்த பிரஜைகளின் உரிய, போதுமான பிரதி விதத்தில் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறை களைத் தவிர எல்லாக் கல்வி நிறுவங்களிலும் சேரு வதற்கான தகுதியைப் பெறவும்.
3) ஒவ்வொரு இனம், வர்க்கம், ஜாதி, நிறம் அல்லது சமயத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரஜைகளுக்கும் ஒரே மாதிரியாகப் பிரயோகிக்கப்படுத்தக்கூடிய அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளைத் தவிர, தங்கு மிடங்கள், அனுகூலங்கள், வசதிகள், கல்வி நிறுவனங் கள், சாலையோர விடுதிகளில் சலுகைகள், நதிகள் நீரோடைகள், கிணறுகள், குளங்கள், சாலைகள், பாதை கள், தியேட்டர்கள், பொதுவான பொழுதுபோக்குமிடங் கள் ஆகியவற்றை முழுமையாகவும் சமஅளவிலும் அனுபவிப்பதற்கான உரிமை பெற்றிருத்தல்.
4) பொதுமக்களுக்காகவும் அல்லது ஒரே நம்பிக்கை மற்றும் மதத்தைக் கொண்டிருக்கும் நபர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட, பரா மரிக்கப்படும் அல்லது உரிமம் வழங்கப்பட்ட எந்த ஒரு மதம்சார்ந்த அல்லது தரும ஸ்தாபனத்தின் அனுகூலங் களைப் பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்ளவல்ல, தகுதி யுடையவர் என்று கருதப்படுதல்.
5) ஏனையோருக்கு இல்லாத எத்தகைய தண்டனைக் கும் அபராதத்துக்கும் தீண்டாமை காரணமாக உட் படாதிருத்தல், இதர பிரஜைகள் அனுபவிப்பது போன்று, தனி நபர் மற்றும் ஆஸ்தியின் பந்தோ பஸ்துக்கான எல்லா சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் முழுமையான மற்றும் சமமான பயன்களைக் கோரிப் பெறுதல்.
நிபந்தனை எண். 4
சட்டமன்றங்களில் போதுமான பிரதிநிதித்துவம்
தங்களது வளவாழ்வை எய்தும் காரணத்திற்காக சட்டமன்ற மற்றும், நிர்வாக செயல்பாடுகளில் செல்வாக்குச் செல்த்துவதற்குப் போதுமான அரசியல் அதிகாரத்தைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் ருக்கு வழங்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் தேர்தல் சட்டத்தில் பின்வரும் ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டுமென்று கோருகின்றனர். அப்போதுதான் அவர்களுக்குப் பின்வரும் உரிமைகள் கிட்டும்:
1. நாட்டின் மாகாண மற்றும் மத்திய சட்ட மன்றங்களில் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை.
2. (அ) வயது வந்தோருக்கு வாக்குரிமை மூலமும், (ஆ) முதல் பத்தாண்டுகளில் தனித் தொகுதிகள் மூலமும் அதன் பின்னர் இட ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதி கள் மூலமும் தங்கள் சொந்த நபர்களைத் தங்களது பிரதி நிதிகளாகத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும் உரிமை.
வயது வந்தோர் வாக்குரிமை இல்லாத கூட்டுத் தொகுதிகளை தாழ்த்தப்பட்டோர் மீது அவர்களது விருப்பத்திற்கு மாறாக திணிக்கலாகாது.
பின்குறிப்பு: இதர வகுப்பினருக்கு அனுமதிக்கப்படும் பிரதிநிதித் துவத்தின் அளவு தெரியவரும்வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக் கான போதிய பிரதிநிதித்துவத்தை அளவுசார்ந்த விகிதத்தில் விளக்க முடியாது. தங்களுக்கு அனுமதிக்கப்படுவதை விட எந்த ஒரு வகுப் பினருக்கும் விசேட விகிதங்களில் திர்வு காணப்படும் பிரதிநிதித் துவத்திற்கு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் சம்மதிக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு பாதக மான நிலையில் வைக்கப்பட அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார் கள். எப்படியாகினும் பம்பாய் மற்றும் மதராசின் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு உரிய மதிப்பளிக்கப்படவேண்டும். மாகாணங்களில் இதர சிறுபான்மையினருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதிநிதித் துவத்தின் அளவைப் பொருட்படுத்தாது இது செய்யப்பட வேண்டும்.
நிபந்தனை எண். 5
அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம்
சட்டத்தைக் தவறாகப் பயன்படுத்தி அல்லது தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட தனி அதிகாரங்களைத் தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினருக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தி, நீதி, நேர்மை, நல்ல மனசாட்சி ஆகியவற்றுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல் ஜாதி இந்துக் களுக்கு சாதகமாக அரசுப் பணிகளைத் தங்களது ஏகபோகமாக்கிக் கொண்டுள்ள உயர்ஜாதி அதிகாரிகளின் கரங்களில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பெரும் இன்னலை அனுபவித்து வந்துள்ளனர். அரசுப் பணிகளில் ஜாதி இந்துக்களின் ஏகபோகத்தை ஒழிப்பதன் மூலமும் அப்பணிகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினருக்கும் போதுமான பங்கு கிடைக்கும் விதத்தில் அரசுப் பணிகளுக்கான தேர்வை முறைப்படுத்துவதன் மூலமும்தான் இத் தீங்கு தவிர்க்கப்படமுடியும். இதற்காக அரசியலமைப்பின் ஒரு பகுதியாக சட்டமாக இயற்றப்படுவதற்கு தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினர் பின்வரும் பிரேரணைகளைச் செய்ய வேண்டியுள்ளது:
1) இந்தியாவிலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் பொதுசேவைகளுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யவும் கட்டுப்படுத்தவுமான பொறுப்பை மேற்கொள்வதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்று நிறுவப்படும்.
2) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த ஒரு உறுப்பினரும் சட்டமன்றத்தில் நிறை ஒரு உறுப்பினரும் மூலம் தவிர வேறு எந்தவகையிலும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார். அதேபோன்று அவரது பணிஓய்வுக்கும் பின்னர் அரசாங்கத்தில் வேறு எந்தப் பதவிக்கும் அவர் நியமிக்கப்பட்ட மாட்டார்.
3) வகுத்தளிக்கப்படும் திறமை சோதனைகளுக்கு உட்பட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை வருமாறு:
அ). எல்லா வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் உரியமுறையில் பொதுப்பணிக்கு ஆட்களை சேர்த்தல், மற்றும்
ஆ). எந்த ஒரு குறிப்பிட்ட பணி சம்பந்தமாகவும் பல்வேறு வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தில் இப்போ துள்ள அளவுக்கேற்ப வேலைவாய்ப்பில் அவ்வப்போது முன்னுரிமையை முறைப்படுத்தல்.
நிபந்தனை எண். 6
ஊறு விளைவிக்கத்தக்க செயல்பாடுகள் அல்லது நலன்களை அசட்டை செய்தலுக்கெதிரான பரிகாரம்
வருங்காலத்தில் பெரும்பான்மை ஆட்சியானது ஆசார மானவர்களின் ஆட்சியாக இருக்கும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு அத்தகையதொரு பெரும்பான்மை ஆட்சி தங்களிடம் பரிவுடன் நடந்து கொள்ளாது என்றும் தங்களுடைய நலன்களுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தங்க ளுடைய ஜீவாதராத் தேவைகள் அசட்டை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதையும் கவனத்தில் கொள்ளதிருக்க முடியாது என்று தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் அஞ்சுகின்றனர். இதற்கு எதிராக வகை செய்யப்பட வேண்டும், ஏனெனில் குறிப்பாக, எவ்வளவுதான் போதுமான அளவுக்குப் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தாலும்கூட, எல்லா சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் சிறு பான்மையினராகவே இருப்பர். அரசியல் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைகள் தீர்க்கும் வழிமுறைகளைத் தாங்கள் பெறவேண்டியது மிகவும் அவசியம் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினர் கருதுகின்றனர். ஆகவே இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பின்வரும் ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று பிரேரணை செய்யப்படுகிறது:
“1. ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாணத்திற்காக வும், இந்தியாவிலும் இந்தியாவிற்காகவும் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றம் மற்றும் நிர்வாக அமைப்பு அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பும், தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் கல்வி, சுகாதார ஏற்பாடுகள், அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்தல், மற்றும் அவர்களின் சமூக, அரசியல் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட இதர விஷயங்களுக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்வது அவற்றின் கடமையும் கடப்பாடாகவும் இருக்கும். அவர் களை ஒருதலைப்பட்சமாகப் பாதிக்கும் எதையும் செய்யக்கூடாது.
”2. எந்த ஒரு மாகாணத்திலும் அல்லது இந்தியா விலும் இந்தப் பிரிவின் ஷரத்துக்கள் மீறப்படும் இடங்களில், எந்த ஒரு மாகாண அதிகார அமைப்பின் எந்த ஒரு செயல் அல்லது முடிவை எதிர்த்து கவுன்சிலிலுள்ள கவர்னர்-ஜெனரலுக்கு முறையீடு செய்யலாம். இந்த விஷயத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு பொதுவான அதிகார அமைப்பின் எந்தஒரு செயல் அல்லது முடிவையும் எதிர்த்து வெளி யுறவுத்துறைச் செயலருக்கு முறையீடு செய்யலாம்.(பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டம் 1867, பிரிவு 93.)
”3. இத்தகைய ஒவ்வோரு சந்தர்ப்பத்திலும் கவுன் சிலில் உள்ள கவர்னர் ஜெனரலுக்கோ அல்லது அயல் துறைச் செயலருக்கோ, மாகாண அதிகார அமைப்போ அல்லது மத்திய அதிகார அமைப்போ, இப்பிரிவின் ஷரத்துக்களை உரிய முறையில் பிரயோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தோன்றினால் அப்போது இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தந்த சந்தர்ப்பத்திற்குத் தேவைப் படும் சூழ்நிலைகளைப் பொறுத்து மட்டுமே கவுன்சிலில் உள்ள கவர்னர் ஜெனரல் அல்லது அயல்துறைச் செய லாளர் ஒரு மேல் முறையீடு உரிமை பெற்ற அதிகார அமைப்பாகச் செயல்பட்டு, அவர்கள் தகுதியானது என்று கருதும் முறையில் பிரயோகிப்பதற்கான பரிகார நட வடிக்கைகளை மேற்கொள்ளுதல். எந்த அதிகார அமைப் பிற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டதோ அதன்மீது அவர்களது முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்குமாறு கட்டளையிட முடியும்.”
நிபந்தனை எண். 7
துறை சார்ந்த சிறப்பு அக்கறை
தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ஆதரவற்ற, நலக்கேடான, சத்தற்ற நிலைமைக்கு அந்தஸ்தில் சமத்துவத்தையோ அல்லது நடத்தப்படுவதில் சமத்துவத்தையோ கொண்டிருக்க தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரை அனுமதியாத ஒட்டுமொத்த ஆசாரமான மக்களின் விடாப்பிடியான எதிர்ப்பே காரணமாகும். அவர்களது பொருளாதார நிலைமையைப் பற்றிய வரையில், அவர்கள் ஏழ்மையில் வாடுகின்றனர் அல்லது அவர்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர் வர்க்கத் தினர் என்று மட்டும் கூறுவது போதாது. ஆனால் அவர்களைப் பற்றிய இந்த இரு கருத்துக்களுமே உண்மையானவை. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ஏழ்மைக்கு முக்கியக் காரணம் சமூக ரீதியில் அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களேயாகும். பொருளீட்டுதற்கான பல தொழில்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போகின்றன. இந்த உண்மைதான் சாதாரண ஜாதி இந்துத் தொழிலாளியிடமிருந்து தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இதுவே அடிக்கடி இந்த இரு பிரிவாருக்கும் இடையில் குழப்பங்களுக்கும் மூலகாரணமாகி விடுகிறது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கெதிராகக் கடைப்பிடிக்கப்படும் கொடுமைகளின், அடக்குமுறையின் வடிவங்கள் மிகவும் பலதரப்பட்டவை என்பதையும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ஆற்றல் மிகவும் குறைவு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக நமக்குக் கிடைக்கும் புள்ளிவிபரங்கள், இந்தியா வெங்கிலும் இவை சாதாரணமாக நடக்கக்கூடியவையேயாகும் என்பதைக் காட்டுகின்றன. அவை 1892 நவம்பர் 5 ஆம் தேதியிட்ட மதராஸ் அரசாங்கத்தின் வருவாய் வாரியத்தின் நடவடிக்கைக் குறிப்புகளின் சுருக்கம் எண். 723 இல் நன்கு விவரிக்கப்படுகின்றன. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி வருமாறு:
“134 இதுவரை சுட்டுக்காட்டப்பட்டவை, அடக்கு முறையின் ஒரு சில வடிவங்கள் மட்டுமேயாகும். அவற்றை மேலோட்ட மாகவேணும் குறிப்பிட்டாக வேண்டும். கீழ்சாதிக்காரர்களின் கீழ்ப்படியாமையைத் தண்டிப்பதற்காக அவர்களது எஜமானர்கள்
அ) கிராம நீதிமன்றங்கள் அல்லது குற்றவியல் நீதிமன்றங் களில் பொய்வழக்குத் தொடருதல்.
ஆ) பறையர்களின் கால்நடைகள் வெளியே போகாதவாறு பார்த்துக்கொள்ளவும், அவர்கள் கோயிலுக்குச் செல்லும் வழியில் தடை ஏற்படுத்தவும் பறைச்சேரியைச் சுற்றிலும் உள்ள அரசாங்கப் புறம்போக்கு நிலங்களை அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துப் பெற்று விடுதல்.
இ) பறைச்சேரிக்கு எதிராக அரசாங்கக் கணக்கில் ஏமாற்றுத் தனமாக மிராசி பெயர்களைப் பதிவு செய்தல்
ஈ) குடிசைகளைத் தரைமட்டமாக்கி பின்கட்டில் உள்ள செடி கொடிகளை அழித்தல்.
உ) நினைவுக்கெட்டாத காலந்தொட்டே உள் குத்தகை தாரராக உள்ளவர்களுக்கு குடியிருப்பு உரிமையை மறுத்தல்.
ஊ) பறையர்களின் பயிர்களை வலுக்கட்டாயமாக அறு வடை செய்தல், எதிர்த்தால் அவர்கள்மீது திருட்டுக் குற்றமும் கலக மும் செய்ததாகக் குற்றம் சுமத்துதல்.
எ) பொய்யான தகவல்களைக் கொடுத்து அவர்களைப் பத்திரங்களில் கையெழுத்திடச் செய்து அவர்களைப் பின்னர் அழித்து விடல்.
ஏ) தங்களுடைய வயல்களிலிருந்து நீர் செல்வதைத் துண்டித்துவிடல்.
ஐ) நிலச் சொந்தக்கார்ருக்குத் தரவேண்டிய பாக்கித் தொகைக்காக சட்டரீதியாக தாக்கீது ஏதுமின்றி கீழ்க் குடிதாரர் களின் சொத்துக்களை ஜப்தி செய்தல்.
“135. இத்தகைய கொடுமைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன என்று கூறப் படலாம். நீதிமன்றங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் முதலாம் சார்லஸ் மன்னரை எதிர்த்து காமன்ஸ் சபையின் உரிமைகளை ஆத ரித்த ஜான் ஹேம்டனைப் போன்றவர்கள் இல்லை. நீதிமன்றங் களுக்குச் செல்ல ஒருவருக்குத் துணிவு இருக்க வேண்டும்; வழக் கறிஞர்களை அமர்த்திக் கொள்ளப் பணம் இருக்கவேண்டும்; நீதி மன்றச் செலவின்ங்களைச் சமாளிக்க வேண்டும். வழக்கின்போதும் மேல்முறையீடுகளின்போதும் வாழவழிவகைகள் இருக்க வேண் டும். மேலும் பெரும்பாலான வழக்குகள் முதல் நீதிமன்றத்தின் முடிவுகளைப் பொறுத்தே உள்ளன; இந்த நீதிமன்றங்களில் தலைமை வகிக்கும் நீதிபதிகள் சில சமயங்களில் ஊழல் செய்யும் அதிகாரி களாக உள்ளனர். அவர்கள் பொதுவாக, இதர காரணங்களுக்காகத் தாங்கள் சார்ந்திருக்கும் பணம் படைத்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின ராக இருப்பதால் அவர்களுக்குப் பரிவு காட்டுகின்றனர்.
”136. அதிகார வர்க்கத்துடனான இந்த வர்க்கத்தினரின் செல்வாக்கை மிகைப்படுத்தமுடியாது. இந்திய நாட்டவரிடம் இவர் களது செல்வாக்கு மிக மிக அதிகமானது. ஐரோப்பியர்களுடன் இன் னும் அதிக அளவில் உள்ளது. மிக உயர்ந்த பதவியிலிருந்து மிகக் குறைந்த பதவிவரை இந்த வர்க்கத்தினரின் பிரதிநிதிகளே அதிகமாக உள்ளனர். தங்களது நலன்களைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு பிரே ரணையும் இல்லாவிடினும்கூட அப்பிரேரணையின் தொடக்கம் முதல் அது செயல்படுத்தப்படும் வரை அவர்களால் பெருமளவுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியும்.”
இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளின் முன்னணி யில் இக்கடமை முன்வைக்கப்படாவிடில், வாய்ப்புக்களில் சமத் துவத்தை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து நிச்சயமான கொள்கை மற்றும் தீர்மானகரமான முயற்சியின் மூலம் நடைமுறையில் நன வாக்காவிடில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் மேம்பாடு என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. இந்த இலக்கை எய்துவதற்காகத் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் பிரேரணை என்னவெனில், இந்திய அரசாங்கச் சட்டத்தில் ஒரு பிரிவைச் சேர்ப்பதன் மூலம் தங்களது பிரச்சினை களைக் கவனிக்க ஒரு துறையை என்றென்றைக்குமாக பராமரிக்க வேண்டியதன் அரசியல் சட்டரீதியான கடப்பாடாக இந்தியாவின் அரசாங்கத்தின் மீது அரசியல் சட்டரீதியான சட்டம் திணிக்க வேண்டும் என்பதேயாகும். அது பின்வருமாறு அமைந்திருக்கும்:
“1. இந்த அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அதேசமயத்தில் அதன் ஓர் அங்கமாக, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் நலன்களைக் கண்காணிக்கவும் அவர்களுடைய வளவாழ்வை ஊக்கு விக்கவுமான நோக்கத்திற்காக ஓர் அமைச்சரின் பொறுப்பில் ஒரு துறை இந்திய அரசாங்கத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
“2. மத்திய சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் காலம் வரை அந்த அமைச்சர் பதவியில் நீடிப்பார்.
“3. அவருக்கு சட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் எந்த ஒரு அதிகாரத்தையும் கடமைகளையும் பிரயோகிப்பதில், தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கு எதிரான சமூக அநீதி, கொடுமை அல்லது அடக்குமுறை சம்பந்தப்பட்ட செயல்களைத் தடுக்கக்கூடிய நடவடிக்கை களைத் தயாரித்தளித்து பயனுறுதியுடன் செயல்படுத்தவும், ஒருங் கிணைக்கவும் தேவை என்று கருதப்படக்கூடிய எல்லா நடவடிக்கை களையும் மேற்கொள்வது அந்த அமைச்சரின் கடமையாக இருக்கும்.
“4. “கவர்னர்-ஜெரனலுக்கு பின்கண்டவை சட்டரீதியானதாக இருக்கும்:
அ) கல்வி, சுகாதாரம் போன்றவை சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டமியற்றுதலையும் தொடர்ந்து எழக்கூடிய, தாழ்த்தப் பட்ட வர்க்கத்தினரின் வளவாழ்வு சம்பந்தமாக அனைத்து அல்லது எந்த அதிகாரங்கள் அல்லது கடமைகளை அமைச்சருக்கு மாற்றித் தருதல்.
ஆ) அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் அவருடைய ஒத்துழைப் புடன் செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் வளவாழ்வு செயலகங்களை நியமித்தல்.
நிபந்தனை எண். 8
தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரும் அமைச்சரவையும்
சட்டமன்றங்களில் உறுப்பினர்களைப் பெற்றிருப்பதன் மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் செல்வாக்கைச் செலுத்துவதற்கு எப்படி தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் அதிகாரம் பெற்றிருப்பது அவசியமோ அதுபோல அரசாங்கத்தின் பொதுவான கொள்கையை வகுக்கும் வாய்ப்பையும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பெற்றிருப்பது விரும்பத் தக்கதாகும். அமைச்சரவையில் அவர்கள் இடம்பெற்றிருந்தால் மட் டுமே இதை அவர்களால் செய்யமுடியும். ஆகவே இதர சிறுபான்மை யினருக்கு இணையாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப் படும் தங்களது தார்மீக உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் கோருகின்றனர். இந்த நோக் கத்தைக் கருத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பிரேரணை செய்வதாவது:
தமது மந்திரிசபையில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் பிரதி நிதித்துவத்தைப் பெறமுயலுவதற்கு கவர்னர் மற்றும் கவர்னர் ஜெனரலின் மீது ஒரு கடப்பாடாக அறிவுறுத்தலின் ஒப்பந்தப் பத்திரத் தில் சேர்க்க வேண்டும்.
II
தீண்டப்படாதவர்களின் இந்தக் கோரிக்கைகள் என்ன வாயிற்று, சிறுபான்மையினர் கமிட்டியின் உறுப்பினர்கள் அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொண்டனர் என்பதை வட்டமேசை மாநாட்டுக்கு சிறுபான்மையினர் கமிட்டி வழங்கிய அறிக்கையைப் பரிசீலனை செய்தால் புரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை இங்கு வழங்குகிறேன்.
“5. ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும் தொகுதி களின் நிர்ணயிக்கப்பட்ட வீதாசாரங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும் என்று பல்வேறு கமிட்டிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு சிறுபான்மை வகுப்பிற்கு ஒதுக்கப்படும் தனித்தொகுதிகளின் எண்ணிக்கையானது எந்த வகையிலும் மக்கள் தொகையில் அதன் வீதாசாரத்திற்குக் குறைவாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதை எய்தக்கூடிய வழிமுறைகள் முக்கியமாக மூன்று ஆகும்: 1. நியமனம் 2. வாக்காளர் தொகுதிகள் மற்றும் 3. தனித் தொகுதிகள்.
“6. நியமனம் செய்வது ஒரு மனதாக எதிர்க்கப்பட்டது.
“7. வகுப்புகளுக்குத் தொகுதிகளின் ஒரு வீதாசாரத்தை ஒதுக்குவது என்ற ஷரத்துடன் கூட்டுத் தொகுதிகள் பிரேரணை செய்யப்பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல்களுக்குக் கூடுதல் ஜனநாயக வடிவத்தை வழங்க முடியும். அதேசமயம் தொகுதி முறையின் நோக்கமும் எய்தப் பெறும். இத்தகையதோரு தேர்தல் முறை சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தரும் அதேசமயம் அப்பிரதிநிதித்துவம் உண்மையானதாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அது வழங்கவில்லை. ஆனால் அது தனது செயல்பாட்டில் நியமனம் அல்லது பெரும்பானமை வகுப்பினரால் சிறுபான்மை இனப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை அர்த்தப் படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டன.
உண்மையில் இது ஒருவகையான வகுப்புவாரிப் பிரதிநிதித் துவமேயாகும் என்பதும் நடைமுறையில் வகுப்புவாரித் தொகுதிகளின் கூடுதல் நேரடி வடிவத்திற்கு எல்லாவிதமான ஆட்சேபனை களையும் கொண்டிருந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
”8. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே ஒரு கோரிக்கை தனித் தொகுதிகளேயாகும் என்பதை விவாதம், உறுதிப் படுத்தியது. இத்திட்டத்திற்கான பொதுவான ஆட்சேபனைதான் முன்னதாக இந்தியாவில் பெரும் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தது. தீர்வு காண்பதற்கு மிகவும் கடினமான பிரச்சினையை அது உள்ளடக்கியிருந்தது. அதாவது பல்வேறு மாகாணங்களிலும் மத்தி யிலும் வகுப்புவாரியாக ஒதுக்கீடு செய்யப்படுமானால், சுதந்திரமான அரசியல் கருத்தின் அல்லது உண்மையான அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு இடமிருக்காது. மேலும் இப்பிரச்சினை இந்து மக்கள் தொகையிலிருந்து தாங்கள் கழிக்கப்பட்டு, தேர்தல் காரணங்களுக்காக ஒரு தனிப்பட்ட வகுப்பினராகத் தங்களைக் கருத வேண்டுமென்ற தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரது பிரதிநிதிகளின் கோரிக்கையினால் மிக மோசமான சிக்கலுக்குள்ளாகியது.
“9. வகுப்புவாரியாகத் தொகுதிகள் பிரிக்கப்படுவதற்கு எதிராகத் தோன்றியுள்ள மிகத் தெளிவான ஆட்சேபனைகளைச் சமாளிப்பதற்காக ஒரு பகுதி மட்டுமே – உதாரணமாக 80 அல்லது 90 சதவிகிதம் மட்டுமே – ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மீதமுள்ளவை பகிரங்கமான தேர்தல் மூலம் நிரப்பப்ட வேண்டும் என்றும் யோசனை வழங்கப்பட்டது. ஆயினும் இது தங்களுக்குத் தேவையான உத்தரவாதங்களை வழங்கும் என்று சில வகுப்பினரால் கருதப்படவில்லை.”
“10. உபகமிட்டியின் ஓர் உறுப்பினரான மவுலானா முகமது அலி பிரேரணை செய்த திட்டத்தின்படி – இவரது மரணத் திற்காக வருந்துகிறோம் – எந்த ஒரு வகுப்புவாரி வேட்பாளரும் கூடு மானவரை குறைந்தபட்சம் 40 சதவிகித வாக்குகளைப் பெறாவிடில் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது; இதர வகுப்பினரின் வாக்குகளும் கூட? கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகையதொரு திட்டம் வகுப்பு வாரிப் பதிவேடுகளைப் பராமரிப்பதை அவசியமாகும். ஆகவே தனி தொகுதிகளுக்கு எதிராக வலியுறுத்தப்பட்டது போன்ற ஆட்சேபனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப் பட்டது.
“11. ஆண்களைப் போன்று அதே அடிப்படையில் தேர்த லுக்குத் தகுதியுடையவர்களாக இருக்கக்கூடிய பெண்களின் சார்பாக, தனித் தொகுதிகள் அல்லது கூட்டுத் தொகுதிகளில் வேட்பாளர்களின் ஒதுக்கீடுகளுக்கான எந்த ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்பட? வில்லை. ஆனால் அரசியல் வாழ்வில் பெண்கள் செயலூக்கமான பாத்திரத்தை வகிக்கும் கருத்தை பொதுமக்கள் மனத்தில் பிரபலப் படுத்துவதற்காகவும் சட்டமன்றத்தில் அவர்களுக்கு இடைக்காலப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகவும் முதல்மூன்று கவுன்சில் களில் மொத்த இடங்களில் 5 சதவிகிதத்தைப் பெண்களுக்காக ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. அவர்களது இடங்கள் வீதாசாரப் பிரதிநிதித்துவத்தினொ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப் பினர்களின் வாக்குகளைக்கொண்டு நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது.
“12. புதிய அரசியல் சட்டம் வெற்றிகரமாகச் செயல்படு வதற்கு மாகாண நிர்வாக அமைப்பில் முக்கியமான சிறுபான்மை வகுப்பினர் பிரதிநிதித்துவம் பெறுவது மகத்தான நடைமுறை முக்கியத்துவமுடைய விஷயமாகும் என்ற உபகமிட்டியின் பரிந்துரை எண் 2 (மாகாண அரசியல் சட்டம்) மீது ஒரு பொதுவான உடன்பாடு நிலவியது. மேலும் இதே அடிப்படையில் மத்திய நிர்வாக அமைப்புகளில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தங்களது பிரதிநிதித் துவத்திற்காக சிறிய சிறுபான்மை இனத்தவரின் சார்பாக ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அல்லது இது சாத்தியமில்லை என்று காணப்பட்டால், ஒவ்வொரு மந்திரிசபையிலும் சிறுபான்மை யினரின் நலன்களைப் பாதுகாக்கும் சிறப்பான கடமையைப் பெற்ற அமைச்சர் இடம்பெற வேண்டும் என்றும் கோரப்பட்டது.”
(ஆறாவது வரியில் வரும் முகம்மதியர்கள் என்ற சொல் லுக்கு பின்னால் டாக்டர் அம்பேத்கரும் சர்தார் உஜ்ஜல சிங்கும் “இதர முக்கிய சிறுபான்மையினர்” என்ற சொற்களைச் சேர்த்தனர்.) இதுபோன்ற ஒரு திட்டத்தின் கீழ் கூட்டுப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளின் செயல்பாடுகளில் உள்ள சிரமங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
“13. நிர்வாகத்தைப் பொறுத்தவரை, மாகாண மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வைச் செய்யும் பொறுப்பு அரசுப் பணித் தேர்வாணைக் குழுக்களிடம் ஒப்படைப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. திறமையின் உகந்த தரத்தைப் பராமரிக்க வகை செய்யும் அதேசமயம் பொதுப்பணிகளில் நேர்மையான, போதுமான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற பல்வேறு வகுப்பினரின் கோரிக்கைகளுக்கும் இணக்கமாக நடந்துகொள்ளுமாறு அதற்கு அறிவுறுத்தப்பட்டது.
“16. உடன்பாட்டிற்கான எந்த ஒரு வாய்ப்பையும் கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு தேர்தல் கோட்பாட்டை வகுப்புகளின் மீது திணிக்கமுடியாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஏதேனும் சில அம்சங்கள் அவற்றின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். ஆகவே ஓர் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் தனித் தொகுதிகள் அவற்றின் குறைபாடுகள் மற்றும் சிரமங்களுடன் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் தேர்தல் ஏற்பாடுகளின் அடிப்படையாகத் தக்க வைத்துக் கொள்ளப்படும் என்பது தெளிவாக இருந்தது. இதிலிருந்து வீதாசாரப் பிரச்சினை தோன்றும். இத்தகைய சூழ்நிலைகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் கோரிக்கைகள் போதுமான அளவுக்குப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கும்.
“18. நியாயமான விதத்தில் தங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதவரை இந்தியாவுக்கான எந்த ஒரு சுயாட்சி உரிமையுள்ள அரசியல் சட்டத்திற்கும் தங்களால் சம்மதமளிக்க முடியாது என்ற தங்களது அறுதியான முடிவில் சிறுபான்மையினரும் தீண்டப்படாத வர்க்கத்தினரும் உறுதியாக இருந்தனர்.”
மத்திய அரசாங்கத்தின் வடிவம் மற்றும் செயல்பாடுகளை விவாதிப்பதற்கான வட்டமேசை மாநாட்டினால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு கமிட்டியான சமஷ்டிக் கட்டமைப்புக் கமிட்டியானது, சமஷ்டி சட்டமன்றங்களின் இளைபு சம்பந்தமாக தீண்டப்படாதவர்களின் பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டியிருந்தது. மாநாட்டுக்கு அது அளித்த அறிக்கையில் கூறியதாவது:
“சிறுபான்மையினரின் உபகமிட்டியினுடைய எந்த ஒரு அறிக்கையையும் பொறுத்து, சாத்தியமானால் இரு சபை களிலும் நிச்சயமாகக் கீழ்சபையில், குறிப்பிட்ட சிறப்பு நலன் களுக்கு அதாவது, தாழ்த்தப்பட்டவர்க்கத்தினர், இந்தியக் கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் நிலப்பிரபுக்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவதிற்கான ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவியது.”
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 3)