ambedkar periyar

BEWARE OF BRAHMINISM

தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக் கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத் திற்கு வர வேண்டுமென்பதைத் தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர் - காங்கிரஸ் - மறியல் முதலிய பிரசாரத்தின் கருத்தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத் தன்மையோ, அடிமைத் தன்மையோ ஒழியப் போவதில்லை என்பதும் நிச்சயமான உண்மையாகும்.

‘தேன் அழித்தவன் புறங்கை நக்க மாட்டானா’ என்பது போல் ‘பார்ப் பனர்களுக்கு போக முடியாத சமயத்தில் ஒன்று அரை உத்தியோகமோ, ஸ்தானமோ நமது கைக்கு வராதா’ என்று எண்ணுகின்ற தொண்டர்களும் சிலர் இருக்கலாம் என்றாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இது சமயம் ஏமாந்தால் கடைசியில் ஆபத்தாய் முடியும்.

உதாரணம் வேண்டுமானாலும் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விளங்கும். இப்போது, முனிசிபல் எலக்ஷனும், தாலூகா ஜில்லாபோர்ட் எலக்ஷனும் சமீபித்த உடனே எத்தனை ‘வரி செலுத்துவோர்’ சங்கம், ‘நகர நல உரிமை’சங்கம், ‘குடியானவர்கள்’ சங்கம், ‘ரோட்டில் நடப்பவர்கள்’ சங்கம், ‘ரயிலில் பிரயாணம் செய்கின்றவர்கள்’ சங்கம், ‘மதுவிலக்கு’ சங்கம், ‘சுகாதார’ சங்கம், ‘தொழிலாளிகள்’ சங்கம், ‘உழுது பயிர் செய்வோர்’ சங்கம், ‘வேலையற்றவர்கள்’ சங்கம் என்பவைகளாகிய அநேக சங்கங்கள் புறப்பட்டு வருகின்றதை கவனித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்.

1920- ´ த்திய சீர்த்திருத்தத்தின்போதும் சட்டசபை தேர்தலை உத்தேசித்து கிளப்பப்பட்ட காங்கிரஸ் கிளர்ச்சியானது ஒத்துழையாமையில் ஆரம்பித்து, தேர்தல்கள் வந்தவுடன் சட்டசபைப் பிரவேசமாக மாறி எலக்ஷன் முடிந்த உடன் எல்லாமுமே அடங்கிப் போய்விட்ட சங்கதி யாவரும் அறிந்ததே. இப்போதும் அதுபோலவே 1931ம் வருஷத்திய சீர்திருத்தத்தை எதிர்பார்த்து, சட்டசபை தேர்தல்களை உத்தேசித்து, ஒரு வருஷத்திற்கு முன்னால் இருந்தே போடுகின்ற கூச்சல் இது என்பதைத் தவிர மத்தியில் இந்த 5, 6 வருஷங்களாய் ஏதாவது நடவடிக்கைகள் நடந்ததா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இவற்றிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு தேர்தலின் போதும், சட்டசபை காலாவதி முடிவதற்கு ‘மூன்று நாள்’ இருக்கையில் காலம் சென்ற ‘தேசபக்த சிகாமணி’ மோதிலால் நேரு உள்பட, பல ‘தேசபக்த சீஷர்கள்’ பின்பற்றுபவர்கள் உள்பட அநேகர் சட்டசபையின் மீது ‘கோபித்து’ ராஜினாமா கொடுத்து விட்டுவந்து , மறுபடியும் மூன்று நாளில் அடுத்த காலாவதி தேர்தலுக்கு நின்றது முதலிய காரியங்களையும் யோசித்துப் பாருங்கள்.

இன்று தென் இந்தியாவிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவர்கள் எல்லோருமே 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே அந்த கூட்டத்தினரும், அதில் நேரில் கலந்து இருந்தவர்களும் பார்ப்பனர்களுமாகவே இருக்கின்றார்களா இல்லையா என்பதையும், மற்ற பொது ‘தேசீய’ ஸ்தாபனங்கள், கூட்டங்கள் ஆகியவைகளின் தலைவர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களும் அனேகமாய் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காங்கிரஸ்காரர்கள் என்கின்ற முறையில் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போயிருக்கும் பிரதிநிதிகளும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

கடைசியாக சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவர்களும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். இவைகளை எடுத்துக் காட்டுவது வாசகர்களுக்கு ஒரு சமயம் பார்ப்பனத் துவேஷமாய் காணப்பட்டாலும் படலாம். என்றாலும் தொண்டர்கள் என்பவர்கள் மாத்திரம் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல்லாதார்களா? அல்லவா? என்பதையும், அத்தொண்டர்களின் ஜீவனம் பெரிதும் அக்காங்கிரஸ் சம்மந்தத்தின் பேரினாலேயே இருக்கின்றதா? இல்லையா? என்பதையும், இத்தொண்டர்களுக்கு காங்கிரசினால் ஜீவனம் இல்லாவிட்டால் இவர்கள் அங்கு இருப்பார்களா? என்பதையும், இவர்கள் காங்கிரசின் மூலம் ஜீவிப்பதைத் தவிர வேறு வழியில் பாடுபட்டுப் பிழைக்க 100க்கு 10 பேராலாவது முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஒரு விஷயத்தையும் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம். அதென்னவென்றால்:-

பார்ப்பனர்களின் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களே காங்கிரசில் தலைவர்களாயிருக்கவும், பார்ப்பனரல்லாதார்களில் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்கள் அதுபோல் காங்கிரசில் சேராமலிருக்கவும் காரணம் என்ன? பார்ப்பனரல்லாத வகுப்போ, ஜாதியோ, அதாவது வயிற்றுப் பிழைப்பை காங்கிரசின் மூலம் நடத்துகின்றவர்கள் தவிர மற்ற பார்ப்பனரல்லாதார் சமூகமே ‘தேசத்துரோகிகளா? அல்லது ‘குலாம்களா? அல்லது ‘நக்கிப்பொறுக்கிகளா?’ என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாளர்கள் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட் ரமணய்யங்கார், பாஷ்யம்அய்யங்கார், ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன், மகாலிங்கய்யர் ஆகியவர்களுக்கு இருக்கும் ‘சுயராஜ்ய தாகம்’ ‘சமதர்ம உணர்ச்சி’ முதலியவைகள் திருவாளர்கள் வெரிவாட செட்டியார், இரத்தின சபாபதி முதலியார், டாக்டர் நடேச முதலியார், தம்மண்ண செட்டியார், குமார சாமி செட்டியார், காயாரோகணம் பிள்ளை முதலியவர்களுக்கு ஏன் இல்லை. முற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் தான் யோக்கியர்கள், நாணையக்காரர்கள், தேசபக்தர்கள், தியாகமூர்த்திகள் ஆகியவர்களா? பிற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் அந்தப்படி அல்லாதவர்களா? அல்லது தேசத்தின் பேரால் பணம் சம்பாதித்து அதனால் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களா?                             

இவைகள் ஒருபுறம் இருந்தாலும், இன்று தமிழ் நாட்டு காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவரிடமாவது, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடமாவது இன்று காங்கிரசில் வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்களில் 100க்கு 5 பேருக்காவது நம்பிக்கையோ, அல்லது மரியாதையோ இருக்கின்றதா? என்று காங்கிரஸ் பக்தர்களையும் தொண்டர்களையும் கேட்டுப் பாருங்கள். பார்ப்பனரல்லாத தொண்டர்கள் ஒவ்வொரு வரும் அவர்களிடம் அடியோடு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லுவார்கள், சொல்லுகிறார்கள்.

அப்படியிருக்க அவர்களை தலைவர்களாக்கியதும், தலைவர்களாகக் கொண்டாடுவதும், அவர்களது தலைமையில் தொண்டாற்றுவதுமான காரியம், வெறும் - பரிசுத்தமான வயிற்றுப் பிழைப்பு நாடகமாக இராமல், கடுகளவாவது நாணையமோ, சுயமரியாதையோ உடைய தேசியமாகவோ, தேசபக்தியாகவோ இருக்க முடியுமா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

சைவ மடங்களில் வெட்டிச் சோறு இல்லாவிட்டால் அங்கு எப்படி நூற்றுக்கணக்கான மொட்டைப் பண்டாரங்கள் இருக்கமுடியாதோ அது போலவே, காங்கிரஸ் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்க இடம் இல்லா விட்டால் இன்று இத்தனை தேச பக்தர்கள் ,தேசிய வீரர்கள் , தொண்டர்கள், காங்கிரசில் இருந்து ‘தொண்டாற்ற’ முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்று காங்கிரசில் வயிறு வளர்ப்பவர்களில் 100க்கு 90 பேர் இதில் வந்து சேர்வதற்கு முன் எங்காவது நாணையமான, கௌரவமான தொழிலில் ஈடுபட்டு தாராள முறையில் சுதாவில் வயிறு வளர்த்தார்களா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

எங்கோ இரண்டு ஒன்று மூளையிலுள்ள கோளாறாலோ வேறு காரியங்களை எதிர்பார்த்தோ இந்த கூட்டத்தில் சேர்ந்திருப்பதாலேயே அவர்களை உதாரணமாகக் கொண்டு வராதீர்கள். அதிகம் பெயர்களின் யோக்கியதைகளையே கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இவற்றையெல்லாம் ‘குடி அரசு’ ஆரம்பித்த காலத்திலேயே பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் மேடை மேடையாய் கூப்பாடு போட்டிருந்தாலும் இப்போதும் அதை ஏன் திருப்புகிறோம் என்றால், உண்டியல் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு மேடையேறி கள்ளு, சாராயக்கடைகளில் குடிகாரர்களும், கீழ்மக்களும், வெறிகாரர்களும் பேசுவதுபோல் வாயில் வந்த படி மற்றவர்களைப் பேசும் இழிதன்மையின் யோக்கியதையையும் காரணங்களையும் மக்களுக்கு எடுத்துக் காட்டவே நாம் எழுத நேரிடுகின்றது.

காங்கிரஸ் தொண்டர்கள் என்பவர்கள், காந்தி பக்தர்கள் என்பவர்கள், அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் என்பவர்கள் வெளிப்படையாய் தேர்தல் கூலிகளான பிறகும், கூலிக்கு மற்றவர்களை வையத் தொடங்கிய பிறகு அவர்களது யோக்கியதையை பொது ஜனங்களுக்கு வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை.

காந்தியைக் கும்பிடுவதிலோ, அவர்மீது புகழ் மாலை பாடி ஜீவனம் செய்வதிலோ நமக்கு பொறாமையில்லை. கல்லைக் கும்பிட்டு அதன்மீது புகழ்மாலை பாடி அதன் பெயரை சொல்லிக் கொண்டு வயிறுவளர்க்கும், முட்டாள்தனத்தை விட, இதை நாம் அதிகமாக குற்றம் சொல்லவரவில்லை. ஆனால், அதற்காக தேர்தலில் ஏன் பிரவேசிக்க வேண்டும் என்று தான் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

ஏற்கனவே இருக்கின்றவர்களை விட இவர்கள் தரகர்களாயிருந்து வேலை செய்வதன் மூலம் கொண்டு வந்து நிறுத்தப்படுபவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்று சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். தொண்டர்களுக்கு கூலி கொடுத்து, அல்லது கூலி கிடைக்கச் செய்து மற்றவர்களை வாய்கொண்டமட்டும் வையச் சொல்லுகின்றார்கள் என்பதைத் தவிர வேறு என்ன அதிகமான யோக்கியதை இருக்கின்றவர்களுக்கு இவர்கள் கங்காணிகளாக இருக்கின்றார்கள்?

எந்த காங்கிரஸ் – கதர் - மறியல் தொண்டருக்கும் தேர்தலைப்பற்றி பேசவும், பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப் பற்றி வசைபாடவும் என்ன அவசியம் இருக்கின்றது? சர்க்காராரை வைதுவிட்டு வயிறு வளர்ப்பதில் அக்கரை இல்லை. மற்றபடி தேர்தல் ஸ்தாபனங்களில் இருக்கும் நபர்களைப் பற்றி பேச வேண்டிய காரியம் எதற்கு? அதுவும் பார்ப்பனர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எதிர் அபேக்ஷகர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு பேசுவது என்றால் யார் சகிப்பார்கள்? அந்தப்படி எதற்காக சகித்துக் கொண்டு இந்த இழிவான வேலையில் ஒரு கூட்டம் பிழைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

மனிதர்களுடைய சொந்த குணங்களின் உண்மையை இருபுறமும் சொல்லுவதைப் பற்றி நமக்கு சங்கடம் இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கக்ஷிக்காரர் இந்தக் கக்ஷிக்காரர் என்றும் காங்கிரஸ் கக்ஷிக்காரர் அல்ல என்றும் சொல்லுவதனால் அதில் நாணையம் உண்டா என்றும் பாருங்கள்.

காங்கிரஸ் கக்ஷிக்காரர் என்றால் என்ன அருத்தம்? ‘தொண்டர் களுக்கு சோற்றுக்கு கொடுக்கின்றவர்’ என்பதைத் தவிர வேறு என்ன விதமான நல்ல அபூர்வ- பொது நன்மைக்கு ஏற்ற நாணையமான குணம் இருந்தது – இருக்கின்றது - இருக்கும் என்று சொல்ல முடியும்? அளவுக்கு மிஞ்சினால் எதுவும் கெடுதி என்பதை உணராமல் மக்கள் எல்லோரையும் மூடர்கள் என்று எண்ணிக் கொண்டு வேலை செய்வது என்பது என்றைக்கானாலும் ஒரு நாளைக்கு வெளியாக்கப்படவேண்டியதாய் தான் முடிகிறது.

ஆதலால் பொது ஜனங்கள் பார்ப்பன தந்திரத்தைக் கண்டும், பார்ப்பனக் கூலிகளின் நாடகத்தைக் கண்டும் ஏமாந்து போக கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

நிற்க பல ‘தேசபக்தர்கள்’ தாங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததை பிரமாதமாகப் பேசி மக்களை ஏய்க்கின்றார்களாம். அனேகருக்கு வீட்டுச் சாப்பாட்டை விட இப்போதைய ஜெயில் சாப்பாடு நல்ல சாப்பாடு என்பதையும்,வீட்டிலிருப்பதை விட அங்கு சௌக்கியம் அதிகம் என்பதையும் யாவரும் அறியாமல் இல்லை. இதற்கு மற்றொரு உதாரணமாக 5.11.31ந் தேதியின் ‘இந்தியா’ வாரப் பத்திரிக்கையில் உண்மையில் நடந்ததாக எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘வேலையில்லா திண்டாட்டத்துக்கு பரிகாரம்’ என்ற தலைப்பின் கீழ்.

‘ஒரு அதிகாரி ஒருவனுக்கு 12 மாதம் தண்டனை விதித்தார். அதற்கு எதிரி பிரபுவே உமக்கு வந்தனம். எனது கஷ்டத்தை கொஞ்ச காலத்திற்குத் தீர்த்து வைத்தீர்கள். என்னைப்போல் வேலையில்லா மல் திண்டாடும் ஒவ்வொருவரும் இதை அடைவது நலம் என்று சொல்லி அதாவது (ஒரு வருஷத்திற்காவது தனக்கு சாப்பாட்டிற்கு வழியேற்றப்பட்டதே என்று) சந்தோஷப்பட்டான்

என்பதாகும்.

இந்தப்படி விஷயங்களைப் பச்சையாய் எடுத்துச் சொல்லுவதில் சிலருக்கு சங்கடம் இருக்கலாம். உண்மையாய், யோக்கியமாய் வேலை செய்கின்ற தொண்டர்களைப் பற்றி நாம் யாதொன்றும் கற்பிக்க வரவில்லை. அப்படிக்கில்லாமல் மேல் கண்டபடியெல்லாம் பேசுவதும், உண்மைக்கு விரோதமாக துவேஷ புத்தியுடன் சுயநலத்துக்கு விஷமப் பிரசாரம் செய்வதும், மற்றும் ஒருவருக்கொருவர் உள்ள சொந்த மனஸ்தாபங்களில் புகுந்து ஒருவரிடம் கூலி வாங்கி மற்றவர்களை வைய உபயோகித்துக் கொள்வதுமான ‘தேச சேவை’யைக் கண்டிக்காமல் இருப்பது பயங்காளித் தனமாகும் என்பதோடு, ஒழுங்குக்கும் சமாதானத்திற்கும் பங்கமேற்படுத்துவதுமாகும் என்றே வெளிப்படுத்துகிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி இதை முடிக்கின்றோம். அதா வது:- இந்தமாதிரி ‘தேசீயத் தொண்டர்’களைச் சுவாதீனம் செய்து, அவர்களை ஏவி விட்டு, தங்கள் பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் காரியம் செய்கின்றவர்களுக்கு இன்று சற்று சந்தோஷமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய, நாளைக்கு இதே தொண்டர்களை சற்று அதிகக் கூலி கொடுத்து வாங்கி, இவர்கள் மீதே உசுப்படுத்தி விடுவது என்பது பிரமாதமான காரியம் அல்லவென்பதை நினைவிலிருத்தும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.11.1931)

Pin It