periyar with kid on stageகோவை மகாநாட்டில் பார்ப்பனரல்லாதாரில் சிலர், காங்கிரசில் சேர்ந்து அதைக் கைப்பற்றி காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு செய்து வரும் கொடுமைகளையாவது செய்யாமல் தடுக்கலாம் என்பதாக பேசின காலத்திலும் எழுதின காலத்திலும் நாம் அதை ஒப்புக்கொள்ளாமல் ஆnக்ஷபித்து வந்தது யாவருக்கும் தெரிந்திருக்கலாம்.  நாம் ஆnக்ஷபித்ததாவது, காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை நிறுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணங்கொண்டல்ல, மற்றென்னவென்றால், காங்கிரசை நாம் கைப்பற்ற முடியாது என்றும், காங்கிரசுக்கு நம்மில் யாராவது போனால், பார்ப்பனர்களுக்கே அதிக பலம் ஏற்படும் என்றும், எப்படியாவது அதற்குள்ள செல்வாக்கை ஒழிக்க அதிலுள்ள அயோக்கியத்தனத்தையும், அக்கிரமத்தையும் வெளியில் இருந்து கொண்டு வெளியாக்குவது தான் மேல் என்றும் சொன்னோம்.  பாமர மக்கள் எல்லாரும் இதை ஒப்புக் கொண்டார்களாயினும், படித்த கூட்டத்தாரில் பலரும் அரசியல் வாழ்வுக்காரரும் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை.  அதற்காகவே நாம் வேண்டுமென்றே நடுநிலைமை வகித்ததோடு, நாம் சொன்னது சரியா தப்பா என்று அறிய ஒரு சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டுமென்று கருதியே அத்தீர்மானம் நிறைவேறவும் சம்மதித்தோம்.  இப்போது அதுபோலவே நடந்து வருகிறது.

என்னவெனில், பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேர விடாமல் தடுக்கப் பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள்.  அதாவது, திருச்சி தாலூக்கா காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி ஸ்ரீமான் துரைசாமி உடையார் “காங்கிரசில் அங்கத்தினர்களைச் சேர்க்கும்  இரசீது இல்லை உடனே அனுப்புங்கள்.  அல்லது இரசீது தானாவது அச்சடித்துக் கொள்ள அனுமதியுங்கள்” என்று சென்னை காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியிருந்தாராம்.  அதற்கு ‘நாங்களும் உமக்கு இரசீது புஸ்தகம் அனுப்ப மாட்டோம், நீயும் அச்சடித்துக் கொள்ளக் கூடாது.  ஒரு கமிட்டி நியமித்திருக்கிறோம்.  அவர்களிடம் தேவைக்குத் தக்கபடி வாங்கிக்கொள்’ என்று ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பதில் எழுதியிருக்கிறாராம்.  இதன் கருத்து என்ன?  இது வரையில் இருந்து வந்த வழக்கம் பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேர உத்தேசித்தவுடன்  மாறுபடுவானேன்?  தவிர கமிட்டி மெம்பர்களின் யோக்கியதையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.  ஒருவர் ஸ்ரீமான் கே.வி. ரங்கசாமி அய்யங்கார் எம்.எல்.ஏ, ஒருவர் ஸ்ரீமான்.என். சுப்பரமணிய ஐயர் எம்.எல்.சி, மற்றொருவர் சனாப் சைது முர்த்துசா சாயபு எம்.எல்.ஏ மற்றொருவர் ஸ்ரீமான் வீரப்பன், மற்றொருவர் ஸ்ரீமான் நரசு பிள்ளை ஆகிய இவர்களில், ஸ்ரீமான் வீரப்பன் ஊரில் இல்லாதவர்.  ஸ்ரீமான் நரசு பிள்ளை இதைப்பற்றியே கவலையே இல்லாதவர்.  ஜனாப் சைதுமுர்த்தூசா சாயபு பார்ப்பனர்களையே நம்பி அவர்கள் இஷ்டப்படி விட்டு வருபவர். மீதியுள்ளவர்கள் ஒரு ஐயங்கார், ஒரு ஐயர் கனவன்களேயாவார்கள்.  இவர்களுடைய தயவு பெற்றுத்தான், அதாவது இவர்களிடம் தேவையைச் சொல்லி என்பதின் இரகசியம் என்னவென்றால் யார் யார் சேருகிறார்கள் அவர்கள் பெயர் என்ன?  எத்தனைப் பேர்?  என்பதாகக் கேட்டு அவர்கள் இஷ்டப்பட்டால் எண்ணிக்கை அளவு இரசீது கொடுப்பது இல்லாவிடில் இல்லை என்கிற கருத்துதான். 

நாம் எத்தனை அங்கத்தினர்களை சேர்த்தோமோ அத்தனை அங்கத்தினர்களை அவர்களும் சேர்த்ததாக பெயர் பண்ணி தாங்களே மெஜாரிட்டியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே நிர்வாகம் செய்யத் துணிந்து விட்டார்கள்.  இந்த நிலையில் எப்படி நாம் கைப்பற்ற முடியுமென்பது வாசகர்களுக்கு விளங்காமல் போகாது.  இது ஒருபுறமிருக்க, காங்கிரசு என்பது பார்ப்பனர்கள் வாழ்வுக்கு அவர்கள் இஷ்டப்படி நடத்தத் தேசத்தின் பேராலும் தேச மக்களின் முட்டாள்களின் பேராலும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சுயநல ஸ்தாபனம் என்பது இப்பொழுதாவது விளங்குகிறதா?  இல்லையா?  என்று கேட்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

Pin It