பொதுவாகக் குடும்பத்தில் கணவன் ஏதாவது ஒரு விசயத்தைக் குறித்து மனைவியிடம் கேட்கும்போது இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம், போய் உங்க வேலையைப் பாருங்கள் என்று கூறினால், கணவன் உடனே, “எப்படி நீ என்னை அப்படி சொல்லலாம்” என குதிப்பார்கள் அல்லது நமக்குச் சம்பந்தப்படாத விசயம் போலன்னு விட்டு விடுவார்கள்.

ஆனால் இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாள் இவருடைய மனைவி எதையோ பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு கழிப் பறைக்குச் செல்வதைக் கவனித்த இவர் என்ன அது என வினவியிருக்கிறார்? அவர் மனைவி மேலே கூறியது போல உங்க வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டாங்க. இவர் விடவே இல்லை பின் தொடர்ந்துச்சென்று என்னவெனப் பார்த்திருக் கிறார். ஒரு அசுத்தமான துணியை மாதவிடாய் உதிரத்தை உறிஞ்சுவதற்கு பயன்படுத்த அவர் எடுத்துச் செல்வதை உணர்ந்து கொண்டு ஏன் இதை பயன்படுத்துகிறாய்? தொலைக்காட்சி விளம்  பரத்தில் சானிட்டிரி நேப்கின்ஸ் காண்பிக்கிறார் களே அதை பயன்படுத்தலாமே என்று கூறியிருக் கிறார்.

அதற்கு அவர் மனைவி பயன்படுத்தலாம் தான். ஆனால் நம்வீட்டுக்கு பால் வாங்குவதை நிறுத்தினால் தான் சானிட்டிரி நேப்கின்ஸ் வாங்க முடியும் என்றும் ஒரு சானிட்டிரி பாக்கெட்டின் விலை 4 ரூபாய் என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட உடனே கடைக்கு சென்ற அக்கணவர் ஒரு சானிட்டிரி பாக்கெட்டை வாங்கியிருக்கிறார், அடிப் படையில் லேத் வெல்டர் என்பதால் அதனுடைய எடையை கணக்கிட்டுக் கொண்டே உள்ளே என்ன இருக்கிறது என ஆராய்கிறார்.

ஒரு பாக்கெட்டின் எடை சுமார் 10 கிராம், உள்ளே இருக்கும் பஞ்சின் விலையோ 10 பைசா தான் ஆனால் அதை 40 மடங்கு அதிகமான லாபத்தில் விற்பதை உணர்ந்து தன் மனைவிக்காக தானே சானிட்டிரி பேட் தயாரிக்கப் போவதாக முடி வெடுக்கிறார். அந்த நபர் தான் கோவை அருணாசலம் முருகானந்தம் .

இவரை இந்தியாவின் சிறகு மனிதர் (wing man) என்று அழைக்கலாம் என நான் கூறுவேன். ஏனென்றால், எந்த மனைவிக்காக சேனிட்டிரி பேட் தயாரிக்கத் தொடங்கிய முயற்சியில் ஈடுபட்டாரோ அவரே இவரைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாமல் சேனிட்டிரி நேப்கின் மற்றும் அதைத் தயாரிக்கும் இயந்திரம் இரண்டையும் தயாரித்து (98 இல் தொடங்கிய முயற்சி 2006 இல் முடிவுறுகிறது) காப்புரிமையும் பெற்றுவிட்டார்.  2006 ஆம் ஆண்டிலேயே அவ்வியந்திரத்திற்கு ‘சமூக மேம் பாட்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பு’ விருது கிடைத்தது. அதைக் கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்று கோடிகளில் புரள்வது எப்படி என இவர் கணக்கு போடவில்லை. அப்பொழுது சேனிட்டிரி நேப்கின் தயாரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகள் பயன் படுத்திய இயந்திரத்தின் விலை மூன்றரை கோடி, இவர் தயாரித்த இயந்திரத்தின் விலையோ 65,000 ரூபாய் தான்

மாறாக என்ன செய்தார் தெரியுமா? வங்கிகள் மூலம் கடனுதவி ஏற்பாடு செய்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறு வனங்களுக்கும் இயந்திரங்களைக் கொடுத்து, கூடவே 3 மணி நேரத்தில் தொழில் பயிற்சியும் கொடுக்கிறார். ஒரு இயந்திரத்தின் மூலம் பத்து பெண்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இப்பொழுது சொல்லுங்கள். பெண்கள் உயர, பொருளாதாரத் தற்சார்பு மற்றும் தனிநபர் சுகாதார மேம்பாடு என்று இரண்டு சிறகுகளைத் தந்து அதற்கு  இயக்கமே நடத்திக் கொண்டிருக்கும் இவரை இந்தியாவின் சிறகு மனிதர் WING MAN) என அழைக்கலாம் தானே.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 23 மாநிலங்களில் இத்திட்டம் தற்போது நடை முறையில் உள்ளது. இந்தியாவில் ஏழ்மையில் உள்ள மாநிலங்களான பீஹார், மத்தியப்பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேஷம் ஆகிய வற்றில் இவரது திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதன்  மூலம் தமிழ்நாட்டிற்கு வந்தாரை மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து சென்றோர்கூட வடமாநிலத்த வரை வாழவைத்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.

100 மில்லியன் இந்தியப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உண்டாக்குவதும், 100ரூ சேனிட்டிரி நேப்கின்ஸ் உபயோகிப்பவர்களாக இந்தியப் பெண்களை மாற்றுவதும், 106 நாடுகளில் இதை விரிவு படுத்துவதுமே இவரது லட்சியம். நியாயப்படி பார்த்தால் இவரது வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளுக்காக என்னவெல்லாம் செய்தார் என்று கோலிவுட்காரர்கள் தான் தமிழில் சினிமாவாக எடுத்திருக்கனும். ஆனால் பாலிவுட் என அழைக்கப்படும் ஹிந்தி திரைத்துறை (PAD MAN) என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறது. டிரெய்லர் பார்த்த வரையில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை தமிழ்நாட்டுக்காரராக காண்பித்த மாதிரி தெரியவில்லை. மற்ற விசயங்களை படம் வந்தபிறகு விவாதிக்கலாம்.

இந்தியாவில் உள்ள 15 சதவீதப் பெண்கள் தான் சானிட்டிரி நேப்கின்கள் உபயோகிக்கின்றனர் மீதமுள்ள 85 சதப் பெண்கள் மரத்தூள், காய்ந்த இலை, சாம்பல், செய்தித்தாள், மணல், பழையதுணி இவற்றையே மாதவிடாய் சமயத்தில் உபயோகிக் கின்றனர். சுகாதாரமற்ற மாதவிடாய் பராமரிப்பால் சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection), கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (cervical cancer), இனப் பெருக்க உறுப்புக்குழாய் தொற்று (Reproductive Tract Infection) ஆகியவை உண்டாகின்றன. இன்னும் சொல்லப்போனால் மகப்பேறு இண்மைக்கு கூட இது வழிவகுக்கிறது.

இதைப்பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், உபயோகித்த துணிகளை அலசி, (தண்ணீர் பற்றாக் குறைக்கு மத்தியில்) மற்றவர்கள் கண் பார்வையில் படக்கூடாது என்கிற கண்ணோட்டத்தில் மற்ற துணிகளுக்கு அடியில் போட்டு காய வைக்கிறார்கள்.  (முறைப்படி இத்துணிகளை வெயிலில் தான் காய வைக்க வேண்டும், அப்பொழுது தான் கிருமிகள் நீங்கும்) சரியாக உலராத துணிகளை அப்படியே எடுத்து அதற்கென இருக்கும் மறைவிடத்தில் வைத்து விடுவர். இந்தத் துணியை எடுத்து மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் போது பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று உண்டாகிறது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் முதலில் மாதவிடாய் என்றால் என்ன? அந்தச் சமயத்தில் நம் உடம்பை எவ்வாறு பேணவேண்டும்? எந்த கால கட்டத்தில், எதற்காக சேனிட்டிரி நேப்கின்ஸ் தயாரிக்கப் பட்டது? போன்ற  செய்திகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

மாதவிடாயை ஆங்கிலத்தில் மென்சஸ் (Menses, Mensturation) என கூறுவார்கள். பிறக்கும்போதே அனைத்துக் குழந்தைகளுக்கும் மூளையில் பிட்டியூட்டரி சுரப்பி (Pitiuatary Gland) என்று ஒரு சுரப்பி இருக்கும். நம் உடம்பிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்துக்கும் இந்த பிட்டியூட்டரி சுரப்பி தான் அடிப்படை. ஒரு பெண் பருவ வயதை அடைந்தவுடன் பிட்டியூட்டரி சுரப்பியானது இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். ஒன்று நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார் மோன் Folucule Stimulating Hormone மற்றொன்று Mutilising Hormone. இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் ஆனது சினைப்பையில் இருக்கும் சிறு, சிறு செல்களைத் தூண்டி, அந்தச் செல்களை ஊதி, பெருசாக்கி நிறைய எரிபொருளை உள்வாங்கும்.

pat ma wing man 600ஒரு கரு உருவானால் மூன்று மாதத்திற்கு அந்தக் கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய எரிபொருள் கிடங்கை அந்த செல் உற்பத்தி செய்யும். ஒரு சிறுமி ஒரு சமயத்தில் ஒரே ஒரு கரு முட்டையைத்தான் உருவாக்குவார். அதே சமயம் வயது வந்த ஆண் உருவாக்கும் 23 குரோமோ சோம்களைக் கொண்ட செல் அமைப்பை விந்தணு என சொல்கிறோம்.

சராசரியாக ஒரு ஆண் ஒரு நாளைக்கு 200 மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்வார். நிறைய கொழுப்பு, புரதம் எரிபொருள் தேவைப் படுவதால் ஒரே ஒரு கருமுட்டை சினைப்பையில் உருவாகும் போதே கர்பப்பையில் சில மாற்றங்கள் நடக்கும். இத்தனை மெனக்கெடலுக்கு பிறகு உருவாகும் கருமுட்டை சினை கருத்தரித்து விட்டால் அந்தக் கருவை உள்வாங்கிக் கொள்வதற் கான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு இரத்தப் படலம், இரத்தக்கம்பளியே விரித்து வைத்து  கருவுக்காக காத்திருக்கும். உடலுறவு கொண்டு கருவும் தரித்தால் அந்தக் கரு 9 மாதத்தில் சிசுவாக வெளிவரும்.

ஒருவேளை உடலுறவு கொண்டும், கரு உருவாகவில்லையென்றால் கருவுக்காகக் கர்ப்பபை செய்து வைத்திருந்த இத்தனை ஏற்பாடுகளும் காலாவதியாகி விடும். ஒவ்வொரு மாதமும் புதுப்புது ஏற்பாட்டைத் தான் கர்ப்பப்பை செய்யும். ஆதலால் காலாவதியான இரத்தக்கம்பளம் நெகிழ்ந்து, உதிரம் வெளியேறுவதை தான் நாம் மாதவிடாய் என்கிறோம்.

ஒரு உயிரைப் பாதுகாத்து வளர்க்க உருவான இந்த ஏற்பாடு எப்படி அசுத்தமானதாகும். இதை அசுத்தம் என கூறுவோமானால் மனித இனமே இதிலிருந்து தோன்றியதுதானே. அவ்வளவாக அறிவியல் வளராத அந்தக் காலகட்டத்தில் கூட மாத விடாய் நாட்களை, தூய்மை நாட்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். காலப்போக்கில் இச்சொல் மருவி தூமை என்று ஆகிவிட்டது.துணி உபயோகிக்கத் தொடங்காத காலகட்டத்தில் அனைவர் வீடுகளிலும் தனியாகக் குளியலறை இல்லாததால் பொதுக்குளத்தில் குளித்திருப்பார்கள். ஆதலால் மற்றவர்களுக்கு பாதிப்பு வரும் என்கிற எண்ணத்தில் அந்த நாட்களில் தனியாக ஒதுங்கி இருந்தனர்.

ஆனால் தற்போது அனைவர் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது, வீதிக்கு ஒரு பொதுக் கழிப்பறையும் இருக்கிற காலகட்டத்தில் மாதவிடாய் நாட்களில் தனித்து அமர வைக்கும் நடைமுறையைக் கையாள வேண்டிய அவசியமே இல்லை. இந்த நாட்களில் உடலையும், பிறப்புறுப்பு பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை சானிட்டிரி நேப்கின்ஸ்களை உபயோகப்படுத்தலாம். உதிரப்போக்கு இருந்தாலும், இல்லையென்றாலும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சேனிட்டிரி நேப்கின்களை மாற்ற வேண்டும், அப்பொழுது தான் பூஞ்சை தொற்று (Fungal Infections) ஏற்படாது.  

உபயோகித்த சேனிட்டிரி நேப்கின்களை இறுக மூடுப்பட்ட சிமெண்ட் குடுவையில் போட்டு தீயிட்டு எரித்துவிடவேண்டும் அல்லது பழைய செய்தித்தாளில் சுற்றி குப்பை தொட்டியில் போட்டு விடலாம். எக்காரணத்தைக் கொண்டும் கழிப் பறைக்குள் போடக்கூடாது. மற்ற குப்பைகளுடனும் போடக்கூடாது. ஒவ்வொரு தடவை பேட் மாற்றிய பிறகும் சோப்பு போட்டு நன்றாகக் கைகளை அலச வேண்டும். மாதவிடாய் நாட்களில் இவ்வாறு சுகாதாரமாக இருக்க வேண்டும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கால கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஆணும், பெண்ணும் சரிநிகர் என அறிவித்து ஆணைப் போலவே பெண்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் சமவாய்ப்பு கொடுக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தியது. பெண்கள் கல்வியில், வேலைவாய்ப்பில், பொதுவெளியில் இயங்குவதற்கு தடையாக உள்ள (அந்த மூன்று நாட்கள்) மாதவிடாய் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கண்டுபிடிக்கப் பட்டது தான் சேனிட்டிரி நேப்கின்ஸ். பெண்களும் பங்கு கொள்ளும் போது தான் நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் தற்போதும் 15 சதம் பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர், அக்டோபர் 2016ஆம் ஆண்டு எடுத்த சர்வேயின்படி 12 ல் இருந்து 18 வயது பெண்களில் ஏறக்குறைய 20 சதம் பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளாலும், அறியாமையாலும் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்டுவிட்டனர் என தெரிவிக்கிறது. இது தேசிய அவமானம் என்றே சொல்லலாம். வறுமையில் உழலும் ஏழை, எளிய மக்களுக்கு இவற்றின் விலை எளிதில் வாங்கக் கூடியதாக இல்லாமல் ஆக்கி விடுகிறது. தமிழக அரசின் கல்வித்துறை நமது பள்ளிக்கூடங்களில் இலவச சேனிட்டிரி பேட் விநியோகிக்கிறது. ஆனால் இது போதாது.

மாதவிடாய் பற்றிய அறிவியல் விளக்கத்தை ஒரு பாடத்திட்டமாகச் சேர்த்து மாணவர்களிடையே இருக்கும் கூச்சத்தைக் களைந்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.

Pin It