periyar 329இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப் பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரவப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும். இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பனப் போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப் படாமல் இருந்து வருகின்றது. போதாக்குறைக்கு திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும் கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வலமாய் எடுத்துச் செல்லவொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் இப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும் இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது. பார்ப்பனீயப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றது. போலீஸ் இலாக்காவும், சட்ட இலாக்காவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதா யிருக்கின்றதே யொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப் படுவதற்கு ஒரு பரிகாரமும் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகக் தெரியவில்லை யென்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லுவதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவதாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் துலைக்கக் கூடாதா? என்று நாடார் சமூகத்தையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1931)

***

ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா?

ஸ்தல ஸ்தாபன புதிய சட்டப்படிக்கு தீண்டாதார், பெண்கள், சிறு வகுப்பார் முதலியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அநேக ஸ்தலஸ்தாபனத் தலைவர்கள் அச்சட்டத்திற்கு சரியானபடி மரியாதை கொடுக்காமல் தாங்கள் ஏகபோக ஆதிக்கத்தின் மனப்பான்மையையே காட்டி இருக்கின்றார்கள் என்பதாக தெரிய வருகின்றது. ஆகையால் அரசாங்கத்தார் இதுவிஷயத்தில் சற்று கவலை எடுத்து ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சரியானபடி பெண்களுக்கும், தீண்டப்படாதார் என்பவர்களுக்கும் சரியான படி ஸ்தானங்கள் ஒதுக்கியிருக்கின்றதா என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மற்றொரு விஷயம்

லோக்கல் போர்டுகளில், தாலூக்கா போர்டுகள் பிரிக்கப்படுவதிலும் ஒவ்வொரு தாலூக்காவுக்கு ஒவ்வொரு போர்டு இருக்க வேண்டுமென்று சட்டத்தில் தெளிவாய் இருந்தும் சில இடங்களில் 2, 3 தாலூக்காக்கள் ஒரே போர்டாக இருந்து வருகின்றதாகத் தெரிய வருகின்றது. ஆதலால் ஆங்காங்குள்ள பொதுஜனங்கள் இதைக் கவனித்துத் திருத்துப்பாடு செய்யாத வரையில், கவர்ன்மெண்டாராவது கண்டிப்பாய் கவனித்து ஒவ்வொரு தாலூக்காவுக்கு ஒவ்வொரு போர்டாக ஏற்படுத்துவதில் சற்று கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1931)

Pin It