periyar 282திருவாங்கூர் ராஜியத்தில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் வரும் வழியில் சாஸ்த்தா கோவில் என்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்த சாமிக்கு அந்த பக்கத்திய ஜனங்கள் தாங்கள் உத்தேசித்த காரியம் நிறை வேறினால் வெங்காய வெடி வேட்டுகள் இத்தனை போடுகிறேன் என்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம்.

மோட்டார் பஸ்காரரும் அந்தப் பக்கம் பஸ் போகும் போதெல்லாம் வண்டியை நிருத்தி வெடி வேட்டுப் போட்டுச் செல்வது வழக்கம். இந்த வேண்டுதலையை நிறைவேற்றும் விதம் எப்படி என்றால் ரோட்டுக்கும் கோவிலுக்கும் சுமார் 100, 150 அடி இருக்கும்.

ரோட்டு கோவிலை விட கொஞ்சம் மேடானது. இந்தக் கோவில் பூசாரிகளில் இருவர் ரோட்டில் மோட்டார் பஸ் செல்லுகின்ற பக்கம் வந்து நின்று கொண்டு ஒவ் வொரூ பஸ் பிரயாணியையும் பார்த்து சாஸ்த்தா வெடி, சாஸ்த்தா வெடிகள் என்று கேழ்ப்பார்.

பிரயாணிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வேண்டு தலைக்கு தகுந்தபடி ஒன்று இரண்டு ஐந்து என்று இம்மாதிரி சொல்லி ஒவ்வொரு வெடிக்கும் ஒருச் சக்கரம் (திருவாங்கூர் நாணையம்) வீதம் அதாவது 7 பைசா வீதம் கணக்கு கொடுத்து விடுவார்கள்.

இதைப் பெற்றதும் அந்த பூசாரி அங்கிருந்து உரத்த குரலில் இத்தனை இத்தனை வெடி என்று கத்துவான் அந்தப்படி கோவிலில் இருந்து வெடி சப்தம் கேழ்க்கும். அதாவது கோவிலில் உள்ள மற்றொரு பூசாரி வெங்காய வெடி பட்டாசை ஓங்கி நிலத்தில் அடிப்பதால் பெரிய சப்தம் கேழ்க்கும்.

வேண்டுதலைக் காரர்கள் ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கும்பிடு போட்டுவிட்டு பஸ்ஸில் ஏறிப் போய் விடுவார்கள். இந்தப்படி அந்தப் பூசாரிகளுக்கு தினம் 4, 5 ரூபாய்கள் வீதம் ஆதாயம் கிடைக்கும்.

ஆகவே பூசாரிகளின் ஆதாயத்திற்காக பக்தர்களின் பக்திக்கு எத்தனையோ மார்க்கங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைகளில் பல இன்னமும் நம்நாட்டிலும் அநேகம் இருந்து வருகின்றன.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 28.12.1930)

Pin It