periyar 350எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள்

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டு பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரஸ்தாபங்களைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும் ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள்கைகளுக்கும் தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும் ஊக்கமும் ஏற்பட்டுவிட்டதென்றும் யோக்கியமான எவ்வித அரசியல்காரர்களும் மத இயல்புக்காரர்களும் அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும் சமத்துவமும் அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சியமென்றும் ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்று தான் உறுதியாய் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

குறிப்பு : 20-12-1929ஆம் நாள் ஐக்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்புப் பத்திரத்திற்கும் பினாங்கு தமிழ்மக்கள் கழகத்தாரின் வரவேற்புப் பத்திரத்திற்கும் மறுமொழியாக நன்றி கூறி பேசியதன் சுருக்கம்.

நாங்கள் இங்கு எந்த கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லை யென்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையென்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் அதற்கு தக்க உதாரணங்கள் காட்டி பேசினார்.

குறிப்பு : 20-12-1929 ஜனாப் முகமது ராவுத்தர் அவர்களின் மாளிகையில் விருந்துக்குப் பின் மலாய் நாட்டிற்கு வந்ததின் பேச்சு சுருக்கம்.
கடவுளைப் பற்றியோ, சமயங்களைப் பற்றியோ பிரசாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும் தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித்தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியும் கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டு வந்து முட்டுக் கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்து விட்டு முன் செல்ல வேண்டிய நிர்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும் ஆனாலும் கடவுளும், உண்மையான மதமும் உண்மையான வேதமும் கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

(குறிப்பு : 20-12-1929 கப்பல் பிரயாணிகளின் குறை நிவாரணச் சங்கத் தலைவர் திரு. ஏ. சிங்காரம் பிள்ளை, காரியதரிசி எம். துரைராஜு, கப்பல் பிரயாண இன்ஸ்பெக்டர் எம்.எம்.எஸ். முதலியார் ஆகியோரின் ஆலோசனைக்கு மறுமொழியாக பேசியதன் சுருக்கம்.

குறிப்பு : 20, 21 . 12. 1929 பினாங்கு சொற்பொழிவு.)

கடவுள் உண்டா?

இடையில் ஒரு மலையாளி தங்கள் நாட்டைப்பற்றி இங்கு பேசக் கூடாது என்று அக்கிராசனரைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னவுடன் ஆவேசத்துடன் மலையாளச் சங்கதிகள் ஒன்று விடாமல் சொல்லி இது பொய்யா? இது பொய்யா? என்று கேட்டு, இது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மற்றும் பல விஷயங்களையும் விளக்கி இதற்காகத் தான் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் சொல்லி அமர்ந்தார்.

குறிப்பு : 21-12-1929 ஈபோ இந்தியர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பில் பேசிய சொற்பொழிவின் இடையில் பேசியது.

(குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930)

Pin It