சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் – அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் – மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன, கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் – சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் – பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள். பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும், பெண்களை பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது.

முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது மாநாட்டில் சைமன் கமிஷன் சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதோடு, திருமணம் மற்றும் மதச் சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது தீர்மானங்களில் ஒன்று.

இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1930ல் ஈரோட்டில் நடந்தது அதே மாநாட்டில் அரங்கில் இளைஞர்கள் மாநாடும், பெண்கள் மாநாடும் தனித்தனியாக நடத்தப்பட்டன. பெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வர வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை. அந்த அடிப்படையில்தான் பெண்களுக்கான தனி மாநாடு நடத்தப்பட்டது.

பெண்கள் உரிமைக்காக ஆண்கள் போராட வர மாட்டார்கள் என்பது பெரியாரின் உறுதியான கருத்து. அந்த மாநாட்டைப் பெண்களே முழுமையாக முன்னின்று நடத்தினர். 16 வயது வரை பெண்களுக்கு கட்டாயக் கல்வி தர வேண்டும், பால்ய விவாகத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாகவும் உடனடியாகவும் அமல்படுத்த வேண்டும், பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு விபச்சாரிகளாக்கும் இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் அதிலே நிறைவேற்றப்பட்டன. (குடி அரசு 1930 மே 18)

பொதுமாநாட்டில் குறுக்கிடாமல் – இந்தப் பெண்கள் மாநாடு தனியாகவே நடத்தப்பட்டது. இளைஞர்கள் மாநாட்டிலும் பெண்ணுரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்கள் – விதவைகளையும் தேவதாசிப் பெண்களையும் திருமணம் செய்ய முன் வர வேண்டும் என்று அந்த மாநாடு அறைகூவல் விடுத்தது. சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்களைக் கொண்டு தனியாகப் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டாலும் மாநாட்டிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாகவே இருந்தது. அதாவது பெண்கள் இயக்கத்தோடு மட்டும் பெண்களை முடக்கிவிட  நினைக்கவில்லை. பல நேரங்களில் மாநாட்டின் முக்கிய கவுரவமாகக் கருதப்படும் மாநாட்டுத் துவக்க உரையை நிகழ்த்தும் பொறுப்புக்களே பெண்கள் மீது சுமத்தப் பட்டிருக்கின்றன.

periyar womens 600உதாரணத்திற்குச் சிலவற்றைக் குறிப்பிடுவோம்.

1. 1931இல் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் துவக்கி வைத்தவர் இந்திராணி பாலசுப்பிரமணியம் (குடி அரசு 1931 ஆகஸ்ட் 16)

2. 1932 இல் நடந்த தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டைத் துவக்கி வைத்தவர் டி.எஸ் குஞ்சிதம் (குடிஅரசு 1932 ஜீன் 26)

3. 1933 இல் தஞ்சை மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் துவக்கி வைத்தவர் எஸ். நீலாவதி.

4. 1934 இல் திருச்செங்கோடு தாலுகா ஆதி திராவிடர் மாநாட்டைத் துவக்கி வைத்தவர் ஆர். அன்னபூரணி.

5. 1937 இல் திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் மீனம்பாள் சிவராஜ்,

6. 1938இல் மதுரையில் நடந்தசுயமரியாதை மாநாட்டைத் துவக்கி வைத்தவர் இராஜம்மாள்.

இந்தப் பெண்கள் தங்களின் துவக்க உரைகளில் பெண்ணுரிமை தொடர்பான பல்வேறு கருத்தோட்டங்களை முன்வைத்துப் பேசினர். பெண்களின் மவுனக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிய பெரியார் மேற்கொண்ட முயற்சி இது. இந்த நடவடிக்கைகளால் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆர்வத்துடன் செயல்பட முன்வந்தனர். பேசவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் சில வார்த்தைகளாவது மாநாட்டு மேடையில் பேச வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண்களைப் பொதுவாழ்வில் இறக்கிவிடும் நோக்கத்தோடு சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகளின் வெற்றி பற்றி சிங்காரவேலர் இவ்வாறு எழுதினார்.

“சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பெதுமக்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கிறார்கள்,. ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத்தான் சேரும். இந்த இயக்கத்தில் இருப்பது போல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தேசியக் காங்கிரஸ் ஒரு சரோஜினி நாயுடுவைத் தான் உருவாக்க முடிந்தது. சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்களுக்குத் தான் எத்தனை ஆற்றல். பெண்கள். மாநாட்டைத் தனியாகவும் உண்மையான சமத்துவ உணர்வுடனும் அவர்களே நடத்துகிறார்கள். வேறு இயக்கங்களிலே ஆண்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால்தான் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய இயக்கத்திலோ பெண்கள் சுதந்திரமான குழுவாகச் செயல்படுகிறார்கள். ஆண்களுடன் சமத்துவத்தைக் காட்டி இயக்கப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்..” கோலாலம்பூரில் – சிங்காரவேலரின் உரையை மேற்காள் காட்டி பி.வி.கே.அமிர்தலிங்கம் பேசியது (குடிஅரசு1940 அக்டோபர் 20).

1938இல் சென்னையில் நடந்த முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில் தான் பெரியாருக்கு “பெரியார்” என்ற பட்டத்தைப் பெண்கள் அளித்து கவுரவித்தனர். தென்னாட்டு மக்களின் சமூக சீர்திருத்தத்துக்கு உழைத்த ஈடு இணையற்ற தலைவர்  பெரியார் என்று பாராட்டினார்கள். இந்த பட்டமே அவர் வாழ்நாள் முழுவதும், அவரது மறைவுக்குப் பிறகும் அவருக்கு நிலைத்து விட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் மாநில மாநாடுகளுக்காக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினர்களாகப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். உதாரணமாக 1931இல் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டுக் கமிட்டி உறுப்பினராக இந்திராணி பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த சமதர்மக் கட்சி மாநாட்டு உறுப்பினராக எஸ்.நீலாவதி, கே. குஞ்சிதம் ஆகியோர் பிரச்சாரக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். கிராமங்களில் சுயமரியாதை லீக்குகளை அமைப்பது இவர்களின் பணி. அ.அன்னபூரணி, இராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் சமதர்மக்  கொள்கைப் பிரச்சாரகர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் இப்படி மாநாடு பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதோடு இல்லாமல் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத் தகுந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டமாகும். 1937 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி 1940 துவக்கம் வரை சுமார் இரண்டாண்டு காலம் இந்தப் போராட்டம் நடந்தது. இந்தியைத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்வர் சி. இராஜகோபாலாச்சாரி உத்தவு பிறப்பித்திருந்தார். இந்தப் போராட்டம் தான் சி.இராஜகோபாலாச்சாரியின் உத்தரவைப் பின் வாங்கச் செய்தது.

போராட்டத்தின் துவக்கக் கட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சேலைகளில் தமிழ்க் கொடியின் படத்தை அச்சிட்டுக் கொண்டு இந்தி எதிர்ப்பு தமிழ் வாழ்த்து முழங்கங்களை எழுப்பிக் கொண்டு வந்தது ஊர்வலத்தின் தனிச்சிறப்பு (தமிழர் தலைவர் நூல்).

இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் பெண்கள் பேசினார்கள். உதாரணமாக சென்னை திருவல்லிக்கேணி 1938 செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த இந்தி எதிர்ப்புப் படை வரவேற்புக் கூட்டத்தில் இராமாமிர்தம் அம்மையார், நாராயணி அம்மையார், வா.பா.தாமரைக்கண்ணி அம்மையார், முந்நகர் அழகியார் உட்பட பல பெண்கள் பேசினார்கள். இந்தியை எதிர்த்து திருச்சியிலிருந்து புறப்பட்டு நடந்தே சென்னை வரைப் பிரச்சாரம் செய்து வந்த இந்தி எதிர்ப்புப் படையை வரவேற்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. போராட்டக் களம் நோக்கிச் சென்ற தங்கள் இயக்கத்தின் ஆண் தோழர்களுக்கு வழி அனுப்பு விழாக்களையும் பெண்களே ஏற்பாடு செய்து நடத்தினர்.

பின்னர் போராட்டம் தீவிரமானபோது பெண்களே நேரடியாகப் போராட்டக் களத்தில் குதித்துக் கைதானார்கள். பெண்களின் முதல் போராட்ட அணி 1938 நவம்பர் 14 ஆம் தேதி சென்னையில் கைதானது. அதில் டாக்டர் தர்மாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் (குடி அரசு 1938 நவம்பர் 30)

தமிழ்க் கொடி பதிக்கப்பட்ட சேலையை அணிந்து பாரதிதாசனின் இந்தி எதிர்ப்பு போர்ப்படைப் பாடலைப் பாடிக் கொண்டு பெத்து நாயக்கன் பேட்டையில் உள்ள காசிவிசுவநாதன் கோயிலில் இருந்து இந்து தியாலாஜிக்கல் பள்ளி வரை இந்தப் பெண்கள் அணி ஊர்வலமாகச் சென்றது. வழியில் பல இடங்களில் இந்தி எதிர்ப்பாளர்கள் அவர்களை வரவேற்று மாலைகள் அணிவித்தனர். பள்ளி முன் மறியலுக்குச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். அவர்களுக்கு நீதிபதி 6 வார சிறைத் தண்டனை விதித்தார். அபராதம் கட்டி விடுதலை ஆகிறீர்களா? அல்லது சிறைக்குப் போகிறீர்களா? என்று நீதிபதி கேட்டபோது அவர்கள் சிறைக்குப் போவதையே விரும்பி ஏற்றனர்.

அதுமுதல் அவ்வப்போது பெண்கள் போராட்ட அணிகள் களத்தில் வந்து கொண்டே இருந்தன. 1934 செப்டம்பர் 5இல் கடைசிப் பெண்கள் அணி கைதானது.. மொத்தம்  73 பெண்கள் இந்தியை எதிர்த்து மறியல் களத்தில் இறங்கி கைது செய்யப்பட்டு, பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதிலே மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது பல பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை புகுந்ததாகும். மொத்தம் 32 குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் சிறையிலிருந்தனர் (நூல்: தமிழன் தொடுத்த போர் மா.இளஞ்செழியன்)

போராட்டத்தைக் கண்டு நிலை குலைந்து விரக்தி அடைந்த ஒரு காங்கிரஸ் அமைச்சர் இப்படிக் குழந்தைகளுடன் பெண்கள் சிறை புகுவதைக் கேலி பேசினார். தங்கள் குழந்தைகளுக்கு சிறையில் பால் கிடைக்கும் என்பதால்தான் இவர்கள் குழந்தைகளுடன் சிறைக்குப் போகிறார்கள் என்றார். சுயமரியாதை இயக்கப் பெண்கள் இந்தப் பேச்சை கேட்டுக் கொதிப்படைந்தனர். 1938 இல் வேலூரில் நடந்த சென்னை மாகாணப் பெண்கள் மாநாட்டில் அமைச்சர் தனது கூற்றைத் திருப்பப் பெறுவதோடு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது (குடிஅரசு 1939 டிசம்பர் 28)

சுயமரியாதை இயக்கத்தின் பத்திரிக்கையான 'குடிஅரசு' பெண்கள் போராட்டத்தில் பங்கெடுத்த செய்திகளை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. நீதிமன்றத்தில் இந்தப் பெண்கள் வாதிட்ட விவரங்களை முழுமையாக வெளியிட்டதோடு, அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டதற்குக் கூட பெண்களைத் தூண்டிவிட்டு சிறைக்கு அனுப்பினார் என்றே குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞருக்கும் ஒரு பெண்ணுக்கும் நடந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

அரசு வழக்கறிஞர்:

நீங்கள் கைகுழந்தைகளுடன் இருக்கிறீர்களே... சிறையிலே இருப்பது மிகவும் அவதியானது. உங்கள் கணவரும் இதனால் பாதிக்கப்படுவார். நன்றாக யோசியுங்கள்... இனிமேல் இப்படி எதிர்காலத்தில் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டால் நாங்கள் மன்னித்து விடுகிறோம்.

கைதான பெண்:

எங்கள் மொழியின் வளர்ச்சிக்கும் நாட்டின் உயர்வுக்கும் எந்த சங்கடத்தையும் நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.. இதிலே தலையிடுவதற்கு எங்கள் கணவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது; அதற்காக அவர்கள் கவலைப்படுபவர்களும் அல்ல. (குடிஅரசு நவம்பர் 25)

சுயமரியாமை இயக்கத்தின் செயல்பாடுகள் சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிகர செயல்பாடுகளில் ஒன்று சம்பிரதாய இந்துத் திருமணமுறைக்கு எதிராக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தியதாகும்.1926ஆம் ஆண்டு முதல் பார்ப்பனர் அல்லாதாரிடையே சுயமரியாதைத் திருமணங்களை இந்த இயக்கம் நடத்தி வந்திருக்கிறது. குக்கிராமங்களிலே கூட இந்தத் திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது.

அது பற்றிய செய்திகள் விடாமல் குடிஅரசு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.. சுயமரியாதைத் திருமணங்களைத் தவிர ஜாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், ஆண் பெண் சம்மதத்தோடு நடந்த மறுமணம் பற்றிய செய்திகளைபும் தேடிக் கண்டுபிடித்து குடிஅரசு பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

சுயமரியாதைத் திருமணத்தின் முக்கிய நோக்கம் இந்து திருமணச் சடங்குகளை எதிர்ப்பதாக இருந்திருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்து மதச் சம்பிரதாயங்களையும், கற்பு எனும் பெண்ணடிமைக் கோட்பாடுகளையும் எதிர்ப்பதோடு, பார்பபனப் புரோகிதர்களோ வேத மந்திரங்களோ இல்லாமல் இந்தத் திருமணங்கள் நடத்தப்பட்டன. இன்னும் குறிப்பாக சுட்டிக் காட்டப்பட வேண்டியது என்ன வென்றால், தாலி இல்லாமல் இந்தத் திருமணங்கள் நடைபெற்றது தான். சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கை அடிப்படையில் இராகு காலத்தில் பல திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. சில திருமணங்கள் நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ளன. அப்படி நடத்துவது அபசகுனம் என்று இந்துமத சம்பிரதாயத்தில் கூறப்படுகிறது. திருமணம் என்ற அமைப்பில் நிலைநிறுத்தப்பட்ட பிற்போக்குத்தனங்களுக்கு சவால் விடுவதே இந்தத் திருமணங்களின் நோக்கம்.

திருமணம் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட சொந்த நிகழ்வு மட்டுமல்ல என்பதோடு அதற்கு அரசியல் சமுதாய முக்கியத்துவம் உண்டு என்ற கண்ணோட்டத்தோடு நடத்தப் பட்டிருக்கின்றன. இப்படி நடந்த மூன்று திருமண நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். சம்பிரதாய ரீதியாக நிலை நிறுத்தப்பட்டிருந்த ஆணாதிக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக இவைகள் நடத்தப் பட்டவைகளாகும்.

1. தஞ்சை மாவட்டத்தில் வைதீகத்தில் ஊறிப்போன குடும்பத்தில் பிறந்து இளமையிலே விதவையாகி விட்ட சிவகாமி அவர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்துச் செயல்பட்டவரும் தமிழறிஞருமான சாமி சிதம்பரனாருக்கும் 1930 இல் திருமணம் நடந்நது. சிவகாமி அவர்கள் இந்தத் திருமணத்திற்கு முழு சம்மதம் தெரிவித்தாலும் இருதரப்புக் குடும்பத்தாரும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் கும்பகோணத்தில் நடக்க இருந்த இந்த திருமணத்தை பெரியார் தனது சொந்த ஊரான ஈரோட்டிலேயே நடத்த முடிவு செய்தார். நாகம்மையார் தலைமையில் நடந்த இந்த திருமணத்தில் எந்த மதச் சடங்குகளும் இடம்பெறவில்லை, தாலியும் கட்டப்படவில்லை. திருமணத்துக்குத் தலைமை ஏற்றுப் பேசிய நாகம்மையார் தாலியும் இந்து மதச் சடங்குகளும் எப்படி பெண்களை ஆண்களுக்கு அடிமைப்படுத்துவதாக இருக்கிறது என்பதை விளக்கினார்.

மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு வாழ்வில் இருவரும் உற்ற நண்பர்களாவும் சமஉரிமை படைத்தவர்களாகவும் வாழ்வோம் என்று உறுதி எடுத்தனர். மணமக்கள் தங்களை கணவன் மனைவி என்று வழக்கமாக சம்பிரதாயப்படி கூறாமல் தோழர் என்றும், நண்பர் என்றும் ஒருவரை ஒருவர் அழைத்தனர். இந்தத் திருமணத்தின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இரண்டாவது சுயமரியாதை மாநாட்டு மேடையிலேயே இது நடத்தப்பட்டது.

விதவைத் திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்கள் மாநாட்டில் இதுபோல் ஏராளமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நோக்கத்தோடு அன்று மாலை சுயமரியாதை இயக்கச் செயல் வீரர்கள் இந்த மணமக்களை வைத்து ஈரோடு வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று இந்தச் சம்பிராதய மறுப்பு பகுத்தறிவு மணமக்களைப் பார்த்தனர். (குடிஅரசு 11 மே 1930)

2. அதே ஆண்டில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள நாகர்கோவிலில் கமலாம்பாள் - நல்லசிவம் ஆகியோர் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் நெசவாளர் சமூகமாகிய சாலியர் சமூகத்தில் கடுமையான பதட்டத்தை உருவாக்கியது. இதில் மணமகள் விதவை. மணமகன் விதவன். இருவருக்குமே ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் ஒரு குழந்தை உண்டு (குடிஅரசு 14 செப், 1930)

இந்தத் திருமணத்தை பெரியாரும் நாகை காளியப்பனும் ஒரு திரையரங்கில் நடத்தி வைத்தனர். திருமண நிழ்ச்சியில் மணமகன் தன்னுடைய 5000 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மணமகள் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வேண்டும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைப்படி இது நடந்தது. வழக்கத்துக்கு மாறான இந்தத் திருமணத்தைப் பார்க்க அரங்கில் 2500 பேர் கூடியிருந்தனர். பெரியார் இது போன்ற திருமணங்கள் ஏராளமாக நடக்க வேண்டும் என்று பேசினார். அ.பொன்னம்பலனார் மற்றும் எம்.மரகதவல்லி ஆகிய இருவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி பாடல்களைப் பாடினார் (அ.பொன்னம்பலனார் சிறந்த அறிஞர். குடிஅரசு பத்திரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியவர். எம். மரகதவல்லி மாதர் மறுமணம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். இந்த பத்திரிக்கை 1930 இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்தது)

3. சுயமரியாதை இயக்கத்தின் செயல்வீரர்களாக இருந்த எஸ்.நீலாவதி - இராமசுப்பிரணியம் ஆகியோரது திருமணம் இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூரில் 1930 இல் நடந்தது. இந்தத் திருமணத்தில் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த 2000 ஆண்களும், 500 பெண்களும் கலந்து கொண்டனர். இது தவிர உள்ளுர் மக்கள் சுமார் 100 பேரும் வந்திருந்தனர். (எஸ்.ஏ.கே.இராஜீ எழுதிய நீலாவதி இராமசுப்பிமணியம் வாழ்க்கை வரலாறு நூல் பக்கம் 14 – 15 வெளியான ஆண்டு 1983)

இந்தத் திருமணத்தின் போது ஆண் பெண் உறவு, திருமணம், பெண் விடுதலை போன்ற பிரச்சனைகள் பற்றி பார்வையாளர்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தனர். கேள்விகளைக் கேட்குமாறு பார்வையாளர்களை ஊக்கப்படுத்தினார்கள். பலரும் கேள்விகளைக் கேட்டனர். ஒருவர் "சுயமரியாதை இயக்கம் இரண்டாவது திருமணங்களை எப்படி நடத்தலாம்?" என்று பெரியாரிடம் கேட்டார். அதற்குப் பெரியார் "திருமணம் என்பது கணவன் மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற ஒரு ஒப்பந்தம்தான். இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துவிட்டால் பிரிந்த செல்ல உரிமை உண்டு. காலாகாலத்துக்கும் எந்த நிலையிலும் சேர்ந்துதான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் கூடாது" என்று பதிலளித்தார். "ஒரு ஆணும் பெண்ணும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை பெற்றவர்கள் இருவருக்குமே இதில் சம உரிமை உண்டு; முதல் திருமணம் செய்து கொண்டாலும் கூட சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்ளவும் மறுமணம் செய்து கொள்ளவும் இருவருக்குமே உரிமை உண்டு" என்றும் பெரியார் வலியுறுத்தினார். (குடிஅரசு 12 அக்டோபர் 1930)

சுயமரியாதை இயக்கம் இந்தத் திருமணங்களை சொந்தப் பிரச்சனை என்பதாக மட்டும் கருதாமல், இத்தகைய திருமணங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு அதற்குள்ள சமூக அரசியல் பங்கை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பொது நிகழ்ச்சிகளாகவே நடத்தப்படுகின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் திருமணங்களின் மூலம் சுயமரியாதை  இயக்கத்தின் பெண்ணுரிமைக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார்கள். திருமண அரங்குகளில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை எழுதி மாட்டி வைத்திருந்தார்கள். உதாரணமாக 1928 இல் கடலூருக்கு அருகே ஒரு கிராமத்தில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் 'சுமயரியாதை இயக்கம் நீடுழி வாழ்க, வைக்கம் வீரர் நீடூழி வாழ்க' என்ற வரவேற்பு வளைவுகளை அமைத்திருந்தனர். திருமணம் நடந்த மண்டபத்தில் சுவர்களில் சுமயரியாதை இயக்கத்தின் கொள்கைகள், செயல் திட்டங்களை விளக்கிடும் பெரிய சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

மிக மிகச் சாமானியர் வீட்டுத் திருமணம் ஆனாலும் சரி, சமுதாயத்தில் மிகப் பெரிய நிலையிலுள்ளவர் வீட்டுத் திருமணம் ஆனாலும் சரி, சுமயரியாதைத் திருமணம் எங்கே நடந்தாலும் வேறுபாடு, ஆயாசம் காட்டமல் சுயமரியாதை இயக்கத்தினர் அந்தத் திருமணங்களுக்குச் செல்வதை தங்களது கடமையாகவே கொண்டிருந்தனர். செருப்புத் தைக்கும் தொழிலாளியான மாரிமுத்து வீட்டில் நடந்த திருமணமானாலும் (மாரிமுத்து தாயம்மாள் சுயமரியதை திருமணம் கோவையில் 1930 ஏப்ரல் 20ஆம் தேதி நடந்தது - குடிஅரசு 1920 ஏப்ரல் 27), அரசியலில் செல்வாக்கான தலைவராக இருந்த சவுந்திரபாண்டியன் வீட்டுத் திருமணமானாலும் சரி சுமயரியாதை இயக்கத்தினர் குறிப்பாக இந்த இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் இதில் கலந்து கொள்வதைத் தங்களது கொள்கைக் கடமையாகவே கருதினர். (1930களில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் சவுந்தரபாண்டியன் நாடார் சமூகத்தில் ஏராளமான சாதிமறுப்புத் திருமணங்களையும் விதவை மறுமணங்களையும் நடத்தியவர்). அந்தத் திருமணங்களில் பெண்ணுரிமை பற்றிப் பேசியதோடு பெண்ணுரிமைக்கான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர் (குடிஅரசு 1932 டிசம்பர் 25).

இந்தத் திருமணங்கள் வேகமாகப் பரவ வேண்டும் என்ற முயற்சியில் சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பக் காலங்களில் பெரியார் பெரும்பாலான திருமணங்களில் தனிப்பட்ட முறையிலேயே சென்று கலந்து கொண்டிருக்கிறார். குக்கிராமத்தில் நடந்தாலும் கூட அங்கேயும் பெரியார் போயிருக்கிறார் (சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் நூல்). 30 ஆண்டு கால வரலாற்றில் சுமயரியாதை இயக்கம் பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியது. உதாரணமாக 1929 முதல் 1932 ரையில் சுமார் 5000 சுயமரியாதைத் திருமணங்களை இந்த இயக்கம் நடத்தியது (ஈ.சா. விசுவநாதன் எழுதிய The Political Career of EV Ramkaswamy Naicker 1983 வெளியீடு பக்கம் 991)

பெண்ணுரிமை இலட்சியத்தோடும், பார்ப்பன புரோகித மறுப்பு வடமொழி எதிர்ப்பு இலட்சியத்துடனும் இந்தத் திருமணங்கள் நடத்தப்பட்டன. 1931 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரியார் "ஒவ்வொரு புரோகித மறுப்பு சடங்கு மறுப்புத் திருமணங்களையும் சுயமரியாதை திருமணங்கள் என்று கூறாதீர்கள். காலப்போக்கில் திருமணத்தையே ஒழிக்க வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையாக இருக்கும்" என்றார் (குடிஅரசு ஜீன் 21). ஆனால் மதச் சடங்குகள் இல்லாமல் திருமணம் நடத்துவது அந்தக் கால கட்டத்தில் ஒரு புரட்சி என்பதில் சந்தேகமில்லை. 

(கட்டுரையாளர் – பேராசிரியர் – சென்னை தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்)

Pin It