தேடற்கரிய ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம் பனகால் ராஜா சர். ராமராய நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்து விட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால் பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முனைந்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மையான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டு பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க் கொண்டு வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும் அழகாகவும் பேசுவதும் எழுதுவதும் சமயம், சந்தர்ப்பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும் கண்டித்தும் பேசுவது போல் காட்டுவதும் ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமையும் பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு தலைவரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அன்றியும் மற்றொரு விதமாகவும் அதாவது பத்திரிகைகாரர்கள் தயவால் அதாவது, பத்திரிகைகாரர்களை திருப்தி செய்து அவர்களது லட்சியங்களுக்கு ஆயுதமாய் இருந்து அவர்களால் கை தூக்கி விடப்பட்டு, தலைவரானவரும் அன்று. அன்றியும் மற்றொரு விதமாகவும், அதாவது ஆங்காங்கு கூலி ஆட்கள் பிடித்து கூலி கொடுத்து அவர்களைக் கொண்டு நாடு முழுவதும் தங்களை தலைவர்கள் எனக் கூச்சலிடச் செய்து அதனாலேயே தலைவரானவரும் அன்று. அன்றியும் பார்ப்பனர்களின் அடிமையாய் இருந்து உலக நலத்தின் பேரால் கலை நலத்தின் பேரால் ‘மோட்ச’ நலத்தின் பேரால் சுயராஜ்யத்தின் பேரால் என்று பார்ப்பன ஆதிக்கத்திற்கும் நலத்திற்கும் ஆளாயிருந்து அவர்களால் தலைவர் பட்டம் பெற்றவரும் அன்று.

ambedkar periyar 400மற்றென்னையோவெனில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்சாதியார், ஈன சாதியார், சூத்திரர் என்பனவாகிய ‘பிறவி இழிவும்’, ‘பிறவி அடிமைத்தனமும்’ சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். அவ்வேலையில் அவர் பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது.

இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரசார கூலிகளுக்கு விரோதி, இவ்வளவு மல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில் நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகுகஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.

அது மாத்திரமல்ல, நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாகவாவது உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவரைக்கூட உறுதியாய்ச் சொல்ல முடியாது. இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர்.நாயர், சர். தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்பற்றுகின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லை என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல் உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண்டும் பழி சுமத்திக் கொண்டும் அவரது தலைமையைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்து கொண்டும் அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள்.

பின்னை எப்படி ராஜாவுக்கு கட்சியும் ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர்களானால், அதற்கு பதில், அவருடைய தனி சாமார்த்தியத்தால், புத்திசாலித்தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரை தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில் வைத்துக் கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்னும் கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ ஏமாற்றமடையாதவர்களோ அவர் மீது வெறுப்பு கொள்ளாதவர்களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவர் ஒரு அருமையான சாதனத்துக்கு பாடுபட்டதினால் அது ஏதாவது கடுகளவாவது பயன் அளிப்பதானாலும் அந்தப் பலன், அனுபவிப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும், அபிப்பிராய பேதங்களும் ராஜா சாஹேபை அனேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி கொள்ள வேண்டியவராகவும் செய்து விடுகிறது. இந்த நிலையில் அவர் மேல் கண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர் புரிந்தார் என்றுதான் சொல்லியாக வேண்டும்.

அப்படியிருந்தாலும் எதிரிகளால் அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளை சமாளிப்பதில் வழிதவறி போயாவது மனிதத் தன்மைக்கு விரோதமாகவாவது ஒரு சிறு காரியத்தையும் செய்யாமல் ஒரு சுத்த வீரனைப் போலவே நின்று கருமம் ஆற்றியவர். எந்த சமயத்திலும் மனம் கலங்கியோ அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்ல.

எக்காலத்திலும் வீரரே

உதாரணமாக அவரது தலைமை வாழ்வு இந்த 10 வருஷத்திற்கு உள்ளாக மூன்று வித பரீக்ஷைக்கும் ஆளாகிற்று. அதாவது ஒரு சமயத்தில், முதல் மூன்று வருஷத்தில் அவருக்கு அதிகாரமும் செல்வாக்கும், அதாவது மந்திரி அதிகாரமும் கக்ஷி செல்வாக்கும் இருந்தது. இரண்டாவது, மூன்று வருஷத்தில் உள்ளுக்குள்ளாகவே கக்ஷி ஏற்பட்டதால் செல்வாக்கு இல்லாத அதிகாரம், அதாவது கக்ஷி செல்வாக்கில்லாத மந்திரி அதிகாரம் மாத்திரம் இருந்தது. மற்றொரு சமயத்தில் மூன்றாவது மூன்று வருஷத்தில், உள்கலகத்தை எதிரிகள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டதால் அதிகாரமும் செல்வாக்கும் இரண்டும், அதாவது கக்ஷி செல்வாக்கும் மந்திரி அதிகாரமும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் முக்காலத்திலும் அவர் செய்ய வேண்டியதை தைரியமாகவும் ஒரே மாதிரியாகவுமே செய்து வந்தார் என்று சொல்லியாக வேண்டுமேயொழிய எப்போதாவது களைத்துப் போயோ மனமுடைந்து போயோ விட்டார் என்று சொல்ல முடியாது. மேலும், அதிகாரமும் செல்வாக்கும் இல்லை என்று சொல்லும்படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில் மந்திரி வேலையுமில்லாமல் கக்ஷி செல்வாக்குமில்லாமல் முன் ஆறு வருஷத்தில் செய்ய முடியாத காரியங்கள் அனேகம் செய்து முடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே நமது பனகாலரசரின் பெருமையும் சாமார்த்தியமும் விளங்கும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டே வந்தன.

திரு. பனகாலரசருக்கு மந்திரி அதிகாரமும் கக்ஷி செல்வாக்கும் இருந்த காலத்தில் நம் நாட்டில் பார்ப்பன ஆயுதமான காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கும் மதிப்பும் இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்க முடியாத மாதிரி வக்கீல் குமாஸ்தாக்களின் தோட்டங்களிலும் வக்கீலுக்குக் கக்ஷிக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடும் தரகர்களின் புழக்கடைகளிலும் புகுந்து மறைந்து கொண்டது.

இந்த இரண்டு வருஷ காலத்தில் நமது தமிழ்நாட்டில் காங்கிரசு, ஒரு மாகாண மகாநாடுகூட கூட்ட முடியாத அளவு முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் நமது தலைவருக்கு ‘அதிகாரமும் செல்வாக்கும்’ என்பவைகள் ‘போய் விட்டதின்’ பலன்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். இவ்வளவினும் பொறுக்கியெடுத்த மணி போன்ற அதிசயம் என்னவென்றால், அவர் எந்தக் காலத்திலும் சர்க்காரிடத்திலோ மற்றும் யாரிடத்திலோ தனது கொள்கையை சிறிதாவது விட்டுக் கொடுக்க சம்மதிக்காததும் யாருக்கும் தலை வணங்காததுமேயாகும்.

முக்காலத்திலும் சர்க்காரை நடத்தக்கூடிய ஒற்றைத் தலைவராகவே (டிக்டேட்ராகவே) இருந்தார். அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காலத்தில்தான் நமது தலைவரானவர் பெருமை தங்கிய கவர்னர் பிரபுவான லார்ட்கோஷன் அவர்களை - சென்னை அரசாங்கத் தலைவரை - அரசரின் பிரதி காவலரை - மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறும்படி உத்திரவிட்டார். “பெரிய தலைவர்கள்”, “33 கோடி மக்களின் பிரதிநிதிகளான” காங்கிரஸ்காரர்களும் அவர்கள் முன்னோர்களும் முன்பு இதைவிட அதிகமாக சொன்னபோதெல்லாம் சிறிதும் லக்ஷியம் செய்யாத அரசாங்கம் - அரசாங்கத் தலைவர்கள் நமது அரசர் பனக்கால் வீரர் ‘உம்மீது நம்பிக்கையில்லை; கட்டு மூட்டை” என்று சொன்னவுடன் லார்டு கோஷன் மாத்திரமல்ல, சென்னை அரசாங்கம் மாத்திரமல்ல, இந்திய அரசாங்கம் மாத்திரமல்ல, பார்லிமெண்டு கூட நடுங்கின நடுக்கம் யாரே அறிவார். சர்க்கஸ்காரன் குதிரைகளையும் யானைகளையும் சிங்கங்களையும் ஆட்டுவது போல் இந்த அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காலத்தில் அவர் அரசாங்கத்தை ஆட்டி வைத்த ஆட்டம் அறிஞர்களுக்கு மாத்திரமல்லாமல் அறியாதவர்கள் என்பவர்களையும், அதே மந்திரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டது. இது ஒன்றே அவர் அரசாங்கத்திற்கு அடிமையாய் இருந்தாரா அரசாங்கத்தை ஆட்டி வைத்தாரா என்பதை விளக்கி வைக்கும்.

அவர் சென்னை அரசாங்கத்தை மாத்திரமல்லாமல் அவசியமானபோது இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும்கூட மிரட்டி நடுங்க வைத்து வந்திருக்கிறார். மற்றும் அவர் அதிகார ஆட்சியான ஆறு வருஷ மந்திரி காலத்தில் தனது மந்திரி வேலையை ராஜிநாமா கொடுத்தது குறைந்தது மூன்று நான்கு தரம் இருக்கும் என்றே சொல்லலாம். 1921-ல் தொழிலாளருக்காக ஒரு தடவையும், 1924-ல் வெளியில் சொல்லக்கூடாத விஷயத்திற்காக ஒரு தடவையும், 1926 - ல் தேவஸ்தான ஆக்ட்டுக்காகவும் சர். சி.பி. அவர்கள் அக்கிரமத்திற்காகவும் ஒரு தடவையும் மற்றும் சில சமயத்திலும் அவர் இராஜினாமா கொடுக்கத் துணிந்ததும் ராஜினாமா கடிதம் எழுதி கவர்னர் பிரபுவுக்கு அனுப்பி விட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டதும், கவர்மெண்ட் மெம்பர்கள் ஜாமீனாக இருந்து ராஜினாமாவை வாபீசு பெற்றுக் கொள்ளச் செய்ததும் அவரது உத்தியோக அலக்ஷியத்தை காட்டப் போதுமானது.

மற்றும் அரசியல் சுதந்திரம் என்பதின் பேரால் தேசத்திற்காக பனகால் வீரர் போட்ட திட்டங்கள் இப்போது உள்ள எந்தப் பெரிய மகாத்மாக்களோ, சிங்கங்களோ, லோகமான்யர்களோ, தேச பந்துக்களோ, நேருக்களோ, தேசீய வீரர்களோ, அம்மைகளோ, மகான்களோ ஆகியவர்கள் கேட்டவைகளுக்கு ஒரு பிடியாவது அதிகமானதாயிருக்குமேயொழிய ஒரு நெல்லிடை அளவாவது குறைந்ததாயிருக்காது என்று கல்லின் மேலும் எழுதுவோம். வெள்ளைக்காரர்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதில் நமது ராஜா அவர்கள் காங்கிரசுக்காரர்களைவிட சிறிதும் பின் வாங்கியவரல்ல என்றே சொல்லுவோம். அநேக இடங்களில் இதுவரை வெள்ளைக்காரர்கள் பார்த்து வந்த உத்தியோகங்களை கையைத் திருகிப் பிடிங்கி கொள்வதுபோல் வாதாடி பிடுங்கிக் கொண்டார். அப்பேர்ப்பட்ட நிலையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வித்தியாசத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவரே அல்ல. ஆனால் நமது பார்ப்பனக் காங்கிரசுக்காரர்கள் நேரே தங்கள் கைக்கு ஏதாவது உத்தியோகங்கள் வராது என்று நினைத்தால் உடனே அவற்றை வெள்ளைக்காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றார்கள்.

இதற்கு ஆதாரம், எவ்விதமான சீர்திருத்தம் வேண்டுமென்று பார்லிமெண்டாரால் சென்னை அரசாங்க மெம்பர்கள் என்கின்ற முறையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நமது பனகால் அரசர் கொடுத்த விடையும் வெகு நாளைய காங்கிரஸ்காரர் சர்.சி.பி. ராமசாமி அய்யரவர்கள் கொடுத்த விடையும் போதுமானது. அவ்விடைகளை பார்த்தவர்களுக்கு எந்த இயக்கம் எந்தக் கூட்டம் தேசத்துரோகி என்பதும் யார் தேசபக்தர்கள் என்பதும் ஒரு மூடனுக்கும் விளங்கச் செய்யும்.

அவரது தலைமை வாழ்நாளில் அவர் எந்தக் காரியம் செய்தாலும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரே வித நன்மையைக் கருதி திட்டம் போடுவாரே ஒழிய ஒன்றுக்கொன்று விரோதமாகவோ தனது சுயநலத்திற்காகவோ ஒரு சிறு காரியத்தையும் செய்ததாக அவர் இறந்த பிறகு கூட இழிமுறையில் அவரைத்தூற்ற முற்பட்டவருங்கூட ஒரு சந்தர்ப்பத்திலாவது சொல்ல வரவில்லை என்பதாலேயே விளங்கும். பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பார்ப்பனக்கூலிகளும் அவர்களது பத்திரிகைகளும் நமது ராஜாவின் மீது சுமத்திய பழிகளும் செய்த சூழ்ச்சிகளும் விஷமப் பிரசாரங்களும் கொஞ்சநஞ்சமல்லவானாலும் ஒன்றையாவது லக்ஷியம் செய்து பதில் சொல்லவோ அல்லது அந்த நபர்களை லக்ஷியம் செய்து திருப்பிச் சொல்லவோ சற்றாவது தனது காலத்தைச் செலவழித்தார் என்று அவரது எதிரிகள் கூட இதுவரை சொல்ல வரவில்லை.

இந்த தலைமை ஸ்தானத்தால் மற்றவர்களைப்போல் பணம் சம்பாதிக்காமல் இருந்ததோடு மாத்திரம் அல்லாமல் குறைந்தது மாதம் 1க்கு 2000 ரூ. வரை இயக்கத்திற்காக செலவு செய்து கொண்டு முழு நேரத்தையும் அதற்கே ஒப்புவித்து விட்டவர். கடைசியாக உயிரையும் கொடுத்து விட்டார். இதனால் உண்மைத் தியாகி ஒப்பற்ற தலைவர் மறைந்தார்.

இந்த நிலையில் இப்பேர்ப்பட்ட தலைவரை இழந்து பரிதவிக்கும் தமிழ் மக்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்பது நமக்கே விளங்காமல் துடிக்கின்றோம்.

சமாதானம்

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் தடை செய்ய முடியாத தத்துவம். தலைவர்கள் போவதும் வருவதும் முரண்பாடில்லாத வழக்கம். இதற்குமுன், எத்தனையோ தலைவர்கள் மறைந்து போனார்கள். எத்தனையோ தலைவர் தோன்றினார்கள். நமது தலைவரும் மாட்சிமை தங்கிய ஜார்ஜ் மன்னர் பிறந்த அன்றே அதே நேரத்தில் பிறந்து சாகும்வரை நமக்காகவே உழைத்து 62 வயதான பிறகே உயிர் நீத்தார். இந்திய மக்களின் சராசரி வயது 24 என்றால் சராசரிக்கு மேல் 39 வருஷம் வாழ்ந்திருந்து நமக்கு செய்திருக்கும் நன்மைகளை உணர்ந்து திருப்தி அடையாமல் இன்னும் கவலைப்பட்டுக் கொண்டு மனமுடைந்து போவதானது நமது மயக்கத்தையும் பேராசையையுமே காட்டும்.

எந்தத் தலைவர் அல்லது எந்தப் பெரியார் சாகாமல் “சிரஞ்சீவியாய்” வாழ்வதை நாம் பார்க்கிறோம். இப்படி இருக்க உலகில் மக்களில் ஒருவர் இறந்ததற்காக ஒருவர் ஏன் துக்கப்படுகின்றார்கள் என்று கேட்போமானால், அது இறந்தவரின் அருமை பெருமையைப்பற்றி பேசவும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்து அதன்படி நடக்கவும் அவர்களது உயர்ந்த குணத்தைப் பின்பற்றவும் சித்தாந்தப்படுத்திக் கொள்ள இந்த சமயத்தை உபயோகித்துக் கொள்வதற்காகத்தான் என்பதே எமது அபிப்பிராயம். அன்றியும் நாயர் பெருமான் அவர்களும் இதேமாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார். தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார். பனக்கால் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே தியாகராய வள்ளல் மறைந்தவுடன் நமது பனகால் வீரர் தோன்றினார். பனகால் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த பிறகு சற்றேக்குறைய இரவும் பகலுமாக 192 மணி நேரம் லக்ஷக்கணக்கான வர்கள் காலம் சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித் தேடி களைத்தாய் விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நமது பனக்கால் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகின்றது.

ஆனாலும் இதற்காக மனமுடைந்து போகாமல் இந்த நிவர்த்தி இல்லாததும் பெரிய துக்ககரமானதுமான சந்தர்ப்பத்தையும் “இதுவும் ஒரு நன்மைக்காக” என்பது போல் கருதி அதை அந்தப்படி உபயோகித்துக் கொள்வதுதான் அறிவுடைமையாகும். அன்றியும் அதுதான் அறிவும் வீரமும் தியாகமும் உறுதியும் கொண்ட தலைவரால் நடத்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு ஏற்ற குணமுமாகும்.

“இனிமேல் நமக்கு எதற்காக தலைவர்கள் வேண்டும்? இனியும் நாம் எத்தனை நாளைக்கு தலைவர்களாலேயே நடத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இவ்வளவு அருமை பெருமை சாமர்த்தியம் வீரம் வாய்ந்த தலைவர்களாய் இத்தனை காலம் நடத்தப்பட்டும் இனியும் நாம் நமது காலிலேயே நிற்க முடியாத பலவீனர்களாக நாம் இருப்போமானால் அல்லது இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருப்போமானால் என்றுதான் நாம் மனிதர்களாவது?” என்பது போன்ற ஞானங்கள் உதயமாவதற்கு இதுவே தக்க சமயம் என்று கூசாமல் சொல்லுவோம். ஏனெனில் இந்த சமயத்தில் நாம் நிலைகொள்ள வில்லையானால் இனி நமக்கு வெகுகாலத்திற்கு விமோசனம் இல்லை என்றுதான் முடிவுகட்டிக் கொள்ள வேண்டும்.

தலைவர் அவசியமா?

தந்தையை இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையை இனி தந்தை இல்லாமல் எந்த விதமாய் நடத்துவது என்கின்ற யோசனை கொண்டு மார்க்கம் கண்டு நடக்க முயற்சிப்பார்களே ஒழிய வேறு தந்தை யார் என்று நினைத்துக் கொண்டு தேடித் திரிய மாட்டார்கள். அதுபோலவே நாமும் இனித் தலைவரைத் தேடிக் கொண்டு திரிவதைப் போன்ற பைத்தியக்காரத்தனம் வேறில்லை என்று நினைக்க வேண்டும். உண்மையில் நமக்கு இப்போது என்ன குறை? தலைவர் இல்லாத குறையா? நமக்குப் போதிய கவலையும் உணர்ச்சியும் பொறுப்பும் இல்லாத குறையா? என்பதை ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையைப் பேச வேண்டுமானால் நமது மக்களுக்கு இனியும் போதிய உணர்ச்சி ஏற்படவில்லை. பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. சுயநலம் அளவுக்கு மேல் தாண்டவமாட விட்டு விடுகின்றோம். இத்தியாதி குணங்கள் உள்ள சமூகம் ஆயிரம் ஆயிர நாயர்களையும் தியாகராயர்களையும் பனகால் வீரர்களையும் “சிரஞ்சீவி”களாக வைத்துக் கொண்டிருந்தாலும் முற்போக்கடைய முடியவே முடியாது என்று சொல்லுவதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். நமது ஈன நிலைக்கு நமது மக்களில் பாமர மக்களைவிட படித்தவர்கள் என்பவர்களும் பணக்காரர்கள் என்பவர்களுமே மிகுதியும் காரணஸ்தர்களாய் இருந்து வந்திருக்கின்றார்கள் என்று சொல்லுவதற்கு படித்தவர்கள் என்பவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும்.

நமது மேல்கண்ட தலைவர்களால் இதுவரையில் பாமர மக்களைவிட முக்கியமாய் படித்தவர்கள் என்பவர்களும் சிறிது பணக்காரர்கள் என்பவர்களுமே பயன் பெற்று வந்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக அனேக படித்தவர்கள் பெற்றிருக்கும் உத்தியோகங்களையும் பணக்காரர்கள் பெற்றிருக்கும் பதவிகளையும் கவனித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. ஆனால் இப்படித்தவர்களினுடையவும், பணக்காரர்களினுடையவும் உணர்ச்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டியவர்களாகவே யிருக்கின்றோம்.

நமது யோக்கியதை

உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகின்றோம். ஆனால் கோபிப்பதில் பயன் இல்லை. ஒரு சாதாரணமான 2 1/2 அடி உயரமுள்ள பையன் அதுவும் அரை டிக்கட்டுக்கு அருகதை யில்லாதவன் என்று சொல்லக் கூடியவன் முதற்கொண்டு பெரிய ஆசாமி என்கின்றவர்கள் வரையில் இரண்டு கோணை எழுத்து அறிவோ அல்லது ஏதாவது ஒரு சர்வகலாசாலைப் பட்டமோ பெற்று விட்டால் உடனே தன்னை ஒரு பெரிய முக்கியமான பார்ப்பனரல்லாதார் என்று நினைத்துக் கொள்வதும் “பார்ப்பனரல்லாதாரியக்கம் என்ன செய்துவிட்டது யாருக்கு சாதித்துவிட்டது, எனக்கு இன்னமும் யாதொரு உத்தியோகமும் கொடுக்கவில்லை, அவனுக்குக் கொடுத்தார்கள், இவனுக்குக் கொடுத்தார்கள், எல்லாம் அவரவர்கள் சுயநலத்திற்காக போடும் வேஷமே ஒழிய இது பார்ப்பனரல்லாதார் இயக்கமல்ல” என சவடால் அடிப்பதும், “பனக்காலைத் தெரியாதா, நாயரைத் தெரியாதா, செட்டியாரைத் தெரியாதா, எல்லாம் கூட்டுக் கொள்ளை” என்று சொல்லுவதும் “பார்க்கப் போனால் பார்ப்பனர்களே நல்லவர்கள்” என்று சொல்லுவதும் “என்ன இருந்தாலும் காங்கிரசைக் குற்றம் சொல்லலாமா? ஆதலால்தான் இவர்களோடு இருக்க முடியவில்லை” என்பதும், எல்லாம் சரி, எனக்கு அந்தப் பெயர்தான் பிடிக்கவில்லை என்பதுமானது, ஆயிரத்தெட்டு அசந்தர்ப்பமும், அசம்பாவிதமான வார்த்தைகளை உளறிக் கொண்டு திரிவதும், இவ்வளவையும் சகித்துக் கொண்டும் தலைவர்கள் ஏதாவது உத்தியோகமோ, பதவியோ கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டவுடன் நேர் விரோதிகளாகவும் அலட்சியப் புத்தியுடையவர்களாகவும் இருந்து கொண்டு, “பனக்கால் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும்” என்று அவருக்கே புத்தி சொல்லுவதும், பார்ப்பனர்களுக்கு உள் ஆளாயிருப்பதும், இயக்கத்தைக் குறை கூறுவதுமான வேலையிலேயே காலங் கழிப்பதுமாய் இருக்கின்றார்கள்.

பணக்காரர்களும் தங்களுக்கு பதவி கேட்பதும், கிடைத்துவிட்டால் இயக்கத்தை மறந்து விடுவதும், கிடைக்கா விட்டால் இயக்கத்தையும் தலைவர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டு எப்படியாவது இந்த இயக்கத்தை ஒழித்தாலொழிய நாட்டுக்கு மோட்சமில்லை என்று பிதற்றித் திரிவதுமான வேலையில் ஈடுபடுவதைத் தவிர வேறு ஒரு நன்மையுமே செய்யாமல் இருந்து வருகின்றார்கள். இதற்கு வெளிப்படையான சாட்சி பார்ப்பனரல்லாதார் பெயர் சொல்லிக் கொண்டு பெரிய பெரிய உத்தியோகம் பெற்றவர்கள், ஜில்லா ஜட்ஜி, கலெக்டர் முதல் சாதாரண பெரிய உத்தியோகம் வரை பெற்றவர்கள் இயக்க பத்திரிகை வாங்க மாட்டார்கள். வாங்கச் சொன்னால் அதில் குற்றம் சொல்லுவார்கள். மீறி வாங்கினாலும் பணம் கொடுக்க மாட்டார்கள். கேட்கப் போனால் “அந்தப் பணம் என்ன ஆச்சுது, இந்தப் பணம் என்ன ஆச்சுது” என்று கேட்பதின் மூலம் பழி சுமத்த வருவார்கள். அதோடு எதிரிகளின் பத்திரிகைகளை முன்பணம் கொடுத்து வாங்கிப் படிப்பார்கள். அன்றியும் இவர்கள் தங்களை பார்ப்பனரல்லாத இயக்கத் தலைவர்கள் என்றும், அவ்வியக்கத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள்.

சாதாரணமாக, அவ்வியக்கம் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இருந்ததான 1927ம் வருஷம் வரையில் “ஜஸ்டிஸ்” பத்திரிகை 1200ம் “திராவிடன்” பத்திரிகை 700 ம் தான் அச்சாகிக் கொண்டு வந்தன. இதற்கும் மந்திரிகள் மாதம் 2000 ரூபாய் போல் கொடுத்து வந்தார்கள். மற்றபடி சில ஜமீன்தார்களும் பெரிய பணக்காரர்களும் உதவி வந்தார்கள். ஆனால் இயக்கத்தால் உத்தியோகம் பெற்றவர்களில் பணங்கொடுப்பதையோ, பத்திரிகை படிப்பதையோ தங்கள் கடமை என்று நினைத்தவர்கள் யார் என்று சொல்ல முடியாமலே இருந்தது. இன்றைய தினமும் 3000க்கு மேல்பட்ட “ஜஸ்டீசு”ம், 6000க்கு மேல்பட்ட “திராவிட”னும் வெளியாகின்றதானாலும் “ஜஸ்டீசு”க்கு மாதம் 1-க்கு 1500 ரூபாய் நஷ்டமும் “திராவிட”னுக்கு மாதம் 1க்கு 500 ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டு வருவதன் மூலம் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் 25000 ரூபாய் கடனிலும் அது இன்னமும் பெருகும்படியான நிலையிலும் இருக்கின்றது. தியாகராய மமோரியல் கட்டிடத்திற்கும் 40000 ரூபாய் கடனும் வட்டி ஏறிக் கொண்டும் வருகின்றது.

எனவே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் நன்மை அடைந்தவர்களின் யோக்கியதைக்கும், ஒப்பற்ற அருமையான 3 தலைவர்களால் அவ்வளவு தியாக புத்தியுடனும் சமர்த்துடனும் நடத்தப்பட்ட மக்களின் நன்றியறிதலற்ற தன்மைக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். மற்றும் இவ்வியக்கமானது தன்னிடமிருந்து வெறும் உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் எதிர்பார்க்கும் மக்களைக் கொண்டிருக்கின்ற வரையிலும் - இயக்கத்தின் லட்சியமே வெறும் உத்தியோகங்களை சர்க்காரிடமிருந்தும் பார்ப்பனர்களிடமிருந்தும் பிடுங்கிக் கொள்வதுதான் என்று கருதும் மக்களைக் கொண்டிருக்கும் வரையிலும் - இனியும் எத்தனை தலைவர் தோன்றினாலும் உண்மை லட்சியம் கைகூடும் என்று நம்மால் சொல்ல முடியாது.

பதவிப் போட்டியாலும் அதிகாரப் போட்டியாலும் உத்தியோகப் போட்டியாலும் மக்களுக்குள் கட்சிப்பிரதி கட்சியும் விரோதமும் வெறுப்பும் ஏற்படும் நிலைமையை மாறும்படி செய்ய வேண்டும். உத்தியோகம், பதவி, அதிகாரம் முதலியவைகள் எல்லாம் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படத்தக்க வழியில் கைப்பற்றவும் உபயோகப் படுத்தவுமான மாதிரியில் நிர்வகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெரிய சம்பளம் உள்ள மந்திரி போன்ற பொறுப்புள்ள அதிகாரப் பதவிகள் இயக்கத்தின் பிரதிநிதித்துவமாக அனுபவிக்க வேண்டும். அதன் வருமானம் முழுவதும் இயக்கத்திற்குச் சேர வேண்டும். வேலை பார்ப்பவரின் செலவுக்காக இயக்கத்திலிருந்து ஏதாவது கொடுபட வேண்டும். கவுரவ உத்தியோகங்களும், பொது நன்மையை கருதுபவர்களுக்கே - ஒரு குறிப்பிட்ட நிபந்தனைப்படி நடப்பவர்களுக்கே - கொடுக்கப்பட வேண்டும்.

அன்றியும் சாதாரணமாக இது சமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் உண்மையிலேயே கொள்கைகளுக்காக அபிப்பிராய பேதம் இருப்ப தாக யாரும் சொல்ல முடியாது. சுயநலத்தை முன்னிட்டு ஏற்பட்ட விரோதத்தினால் விலகி நிற்கவும் எதிர்த்து நிற்கவும் வேண்டி வேண்டுமென்றே சில மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கற்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே ஒழிய வேறில்லை.

இந்த நிலைமை அடியோடு ஒழிய வேண்டும். இன்னும் இன்னோரன்ன பல விஷயங்களைக் கவனித்து மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள சம்மதிப்பார்களானால் தலைவர் மறைந்த நஷ்டம் நம்மை ஒன்றும் செய்து விடாது. மற்றும் அவர்களின் உயிர்த் தத்தத்தால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டது என்றுகூட சொல்லத்தக்க ஒரு பெருமையும் மறைந்த தலைவர்களுக்கு ஏற்படும். இந்த சமயத்தில் முடிவாகவும் சுருக்கமாகவும் நாம் இவற்றைச் சொல்லி இந்த நமது துயரத்தையும் ஆசையையும் படித்த மக்களைவிட சாதாரண பொது மக்களிடமே தெரிவித்துக் கொண்டும் அவர்களையே நம்பிக் கொண்டும் இருக்கின்றோம். ஆதலால் இந்த சகித்தற்கரிய துக்கத்தால் யாரும் தங்கள் பிற்கால கதியைப்பற்றி உடைந்து போகாமல் நம்பிக்கையோடு ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாடாக முனைந்து வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

மக்கள் எல்லோரும் நாயராக!

எல்லோரும் தியாகராயராக!!

எல்லோரும் பனக்கால் வீரராக!!!

(குடி அரசு - தலையங்கம் - 23.12.1928)

Pin It