அரசியலின் பேரால் தொண்டு செய்து வந்த ஒருவன் அரசியலை வெறுத்து அதன் பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு சமூக முன்னேற்றமே பிரதானமானது என்பதாக இன்று உங்கள் முன் பேச வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றியும், மத சம்பந்தமாக தற்காலம் உள்ள விஷயங்களையும் ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்கிற விஷயத்தைப் பற்றியும், சமூக முன்னேற்றத்திற்கு உழைப்பதை அரசியலிலும் மத இயலிலும் உழைப்பது என்று ஏன் சொல்லுகிறேன் என்பதைப் பற்றியும் நீங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டும்.

pavanar periyar 600அரசியல் என்பதும் மத இயல் என்பதும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்டதே தவிர அரசியலுக்கும் மதத்துக்குமாக சமூகம் ஏற்பட்டதல்ல. ஆகவே அரசியல் என்பதும், மதம் என்பதும் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமாயிருப்பதாயிருந்தால் மாத்திரம் அவற்றில் ஈடுபட்டு ஒரு மனிதன் உழைக்க வேண்டுமேயல்லாமல் மனிதனுக்கு ஒரு வேலை வேண்டுமே என்கிற காரணத்திற்காக வீணானதும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு சூழ்வதுமான காரியங்களைக் கட்டிக் கொண்டு அழுது மக்களைப் பாழாக்க கூடாது. முக்கியமாக மனித சமூகத்தின் நன்மையை உத்தேசித்துதான் நாட்டின் நிலைமையைக் கவனிக்க வேண்டியதேயல்லாமல் வேறு காரியத்திற்காக அல்ல. அன்றியும் தேசீயம் (நேஷனலிசம்) என்பது கூட ஒரு நாட்டு மக்கள் சமுதாயத்தைப் பொறுத்ததுதான். ஆகவே சமூகத்தின் நன்மையை பார்க்கிற போது நமது மக்கள் இப்போது பேசிக்கொள்ளும் அரசியலையும் மத இயலையும் அடியோடு அழித்து புதுப்பிக்க வேண்டியதே தவிர அதை வைத்துக் கொண்டு எந்த விதத்திலும் திருத்தவோ, பழுது பார்க்கவோ முடியாது (இர்ரிபேரபிள்) என்பதே எனதபிப்பிராயம்.

முக்கியமாய் நம் தமிழ் நாட்டையோ தமிழ் மக்களையோ உத்தேசித்தால் இந்த இரண்டு காரியமும் செய்தாலொழிய கண்டிப்பாய் தமிழ் மக்களுக்கு விடுதலை என்பதே கிடையாது என்றே சொல்லுவேன். எனவே இதற்காக யாரும் மனம் விட்டுவிடக் கூடாது. இந்த காரியமும் நமது மக்களுக்கு அவசியம் என்று மனதார தோன்றும்படி ஏற்பட்டுவிட்டால் தானாகவே இது அமுலுக்கு கொண்டுவரக் கூடியதாகிவிடும். ஆனால் அப்படி ஏற்படுகிற காலத்தில் அதற்கு அநேக எதிரிகள் ஏற்படக்கூடும். இதுபோலவே அக்காலமாகவே இவ்வித முயற்சிகளுக்கு எதிரிகள் ஏற்பட்டு அவ்வப்போது அதைக் கெடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் . அதற்கு எத்தனையோ சரித்திரமும், கதையும், புராணமும் இருந்தாலும் நாம் நேருக்கு நேராய் பார்க்கக் கூடியதாய் ஏற்பட்டது, நமது மகாத்மாவினால் தொடங்கப்பட்ட காரியமாகிய அரசியல் என்னும் பேரால் நடத்திய ஒத்துழையாமை என்னும் முயற்சியையும், அதற்குள் அழிக்கத்தக்கது, ஆக்கத்தக்கது ஆகிய பகிஷ்கார நிர்மாணத் திட்டங்களை அவ்வெதிரிகள் அழிப்பதற்காக மக்களின் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் முயற்சியையும் வேறு வழியில் ஈர்த்து அவைகளை அடியோடு பாழ்படுத்தினதையும் நாம் நேரிலேயே பார்த்திருக்கிறோம். ஆதலால் இனியாவது நாம் இது விஷயமாய் செய்யும் முயற்சிகளை இம்மாதிரி எதிரிகளால் அழிக்க முடியாதபடி இவ்வளவு காலத்திய அனுபவத்தையும் கொண்டு தக்க பந்தோபஸ்துடன் உழைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். அதற்கு அரசியல் என்றாவது மத இயல் என்றாவது பெயர் கொடுக்காமல் மனிதஇயல் அதாவது மனிதத் தன்மை என்பதான சுயமரியாதை இயல் என்பதாகவே பெயர் கொடுத்து அதற்காக பாடுபட வேண்டும். அப்படிக்கில்லாமல் வேறு எவ்வளவு பாடுபட்டாலும் வீணாய் ஏமாந்து கீழே போய்க் கொண்டே இருப்போமே தவிர ஒரு விதத்திலும் முன்னுக்கு வர மாட்டோம் என்பதை உணருங்கள் .

முதலில் அரசியல் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு பிறகு மத இயலைப்பற்றி பேசுகிறேன்.

அரசியல் என்பது பித்தலாட்டமானது. அது மக்களுக்கு பொதுவாக எல்லோருக்குமாக ஏற்பட்டதல்ல. இப்போது இருக்கும் அரசியல் நிலையைப் பார்த்து ஏதோ நான் சொல்லுவதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. நமது நாட்டில் அரசியல் என்பதாக ஒரு இயக்கம் ஆரம்பித்த காலத்திலேயே இதே கருத்துடனும், இதே கொள்கையுடனும்தான் ஆரம்பிக்கப்பட்டதே தவிர வேறில்லை. நமது நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் இயக்கமானது நமது நாட்டு பழக்க வழக்கங்களையும் நன்மையையும் ஆதாரமாய்க் கொண்டு ஆரம்பித்ததல்ல. இது மேல் நாட்டு முறையைப் பார்த்து ஆரம்பிக்கப்பட்டதேயாகும். பெரும்பாலும் உலகத்திலுள்ள அரசியல் என்பவைகளே யார் ஆட்சி புரிவது, யார் அதிகாரம் செய்வது, ஆட்சி புரிவதாலும், அதிகாரம் செலுத்துவதாலும் ஏற்படும் பயனை யார் அனுபவிப்பது, யார் ஆதிக்கம் பெறுவது என்பதைத்தான் கவலையாகக் கொண்டதேயொழிய, யார் பொது மக்களுக்கு பாமர மக்களுக்கு உபகாரம் செய்வது என்கிற கவலையே ஒரு சிறிதும் கொண்டதல்ல என்பதை தயவு செய்து கருத்தில் இருத்துங்கள் . இம் மாதிரி ஆக்கமும், பலனும் அடைய வேண்டியவர்கள் அதற்கு ஒரு ஆயுதமாக பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, பொது ஜனங்களுக்கு உபகாரம் செய்வதாகச் சொல்லுவது உண்டு. இதை பாமர மக்கள் நம்பி அடிக்கடி ஏமாறுவதுண்டு. இதுதான் மேல் நாட்டு அரசியல் என்பது. நமது நாட்டு ஆங்கிலம் படித்தவர்கள் இதைப் பார்த்து தான் நமது நாட்டிலும் அதே மாதிரி அரசியல் இயக்கங்கள் ஆரம்பித்தார்கள் .

இதில் ஆரம்பித்தவர்கள் அநேகமாக வெற்றியும் பெற்றார்கள் . அவர்கள் வெற்றி பெற்றதின் பலனாய் நாட்டு மக்களுக்கு பெரிய இடையூறும் ஆபத்தும் கொடுமையும் வளர்ந்து கொண்டே வந்தன. இனியும் வரப் போகின்றன.

இக்கூட்டத்திலுள்ளவர்களையே நான் துணிந்து கேட்கிறேன். தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்கள் . இந்த 42 வருஷத்திய அரசியல் இயக்கத்தால் அரசியல் கிளர்ச்சியில் நமது நாட்டிற்கு நமது பாமர மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, வர்த்தகர்களுக்கு, கூலிக்காரர்களுக்கு ஏழை மக்களுக்கு ஏதாவது ஒரு காதொடிந்த ஊசியளவு பிரயோஜனம் ஏற்பட்டதாகச் சொல்லுங்கள் பார்க்கிறேன்.

இரண்டு பெரிய சீர்திருத்தங்கள் வந்தன. பெரிய பெரிய அதிகாரங்களும், சம்பளங்களும் நமக்கு கிடைத்தது என்று சொல்லுவீர்கள் . இதைத் தவிர வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களா? ஒன்றுமில்லை. இந்த உத்தியோகமும் சம்பளமும் யாருக்குக் கிடைத்தது. இதனால் யாருக்கு என்ன லாபம். இது இல்லாத காலத்தைவிட இது ஏற்பட்ட காலத்தில் உண்டான நன்மை என்ன? வெறும் ஏமாற்றலும், சிலரின் சுயநல சித்தியும் அல்லாமல் வேறு ஏதாவது ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? ஜனங்களுக்குள் கக்ஷியுண்டாக்கப்பட்ட தல்லாமல் வேறு ஏதாவது அவர்களுக்கு லாபமுண்டா? சர்க்காரை உத்தியோகங்கள் கேட்பதும், அது கிடைத்தவுடன் யார் அதை அடைவது என்பதற்காக சண்டைப் போட்டுக் கொள்வதும் அதற்காகக் கக்ஷி ஏற்படுத்துவதும், மக்களை பிரிப்பதும் இதன் சுபாவமாய்ப் போய்விட்டது.

அரசியல் கக்ஷிகள் என்பதின் உத்தேசம் தான் என்ன? ஒருவரிடமிருக்கும் உத்தியோகத்தை ஒருவன் பிடிங்கிக் கொள்ளச் செய்யும் தந்திரமேயல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணயமான எண்ணமுண்டா? பார்ப்பனரல்லாதார் கக்ஷியான ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரில் பார்ப்பனர்கள் குற்றம் சொல்லி வந்ததின் கருத்து என்ன? அவர்களிடமுள்ள அதிகாரத்தை பிடிங்கிக் கொள்வதற்கேயல்லாமல் வேறு என்ன? இன்றைய தினம் பார்ப்பனர்களுக்கு இஷ்டமாயிருக்கும் தற்கால மந்திரிகள் பேரில் மற்றவர்கள் குற்றம் சொல்லும் கருத்து என்ன? இதை இப்படியே விட்டுவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் பெருகிவிடும் என்கிற எண்ணமேயல்லாமல் வேறு என்ன? ஆகவே இப்போதைய மந்திரியாவது முன் இருந்த மந்திரிகளாவது உத்தியோகத்தில் செய்த குற்றமென்ன? அவரவர்கள் ஆதிக்கத்திற்குத் தக்கப்படி உத்தியோகம் நடத்தும்போது மற்ற கக்ஷியாருக்கு விரோதமாயிருப்பதும் அவர்கள் அதை ஒழிக்க கிளர்ச்சி செய்வதும் தவிர வேறு என்ன அங்கிருக்கிறது........... இதைத் தவிர வேறு வேலைதான் ஏதாவது அரசியல்காரருக்கு இருந்ததாகவோ, இருக்கிறதாகவோ சொல்ல முடியுமா? இந்த லக்ஷணத்தில் இந்த மாதிரி இரண்டு சீர்திருத்தங்களையும் நடத்திக் காட்டி விட்டதாகவும் இனி மூன்றாவது சீர்திருத்தம் வேண்டுமென்றும் கேட்கப்படுகின்றது. சர்க்காரும் விசாரணை செய்து பார்த்து கொடுக்கப் போவதாக வேஷம் போட்டு கடைசியாக மூன்றாவது சீர்திருத்தம் என்பதாக ஒன்றை வழங்கப் போகிறார்கள் . அது என்ன என்று கேட்பீர்களானால் இதை விட இன்னம் கொஞ்சம் பெரிய உத்தியோகங்கள். அதாவது இப்போது நிர்வாக சபை மெம்பர், மந்திரி ஆகியவை இதுவரை கொடுக்கப் பட்டது. இனி மாகாண கவர்னர் வேலை கொடுக்கப்படும். அப்படி கொடுப்பதால் வெள்ளைக்காரருக்கு இப்போது இருந்து வரும் அதிகாரமும் உத்தியோகமும் ஒரு சிறிதும் குறைந்து விடும் என்பதாக நினைத்து விடாதீர்கள் . அதை உத்தேசித்து இப்போது முதலே அஸ்திவாரம் போட்டு வரப்படுகிறது.என்னவென்றால்:-

 சென்னை மாகாணத்தை பாஷைவாரி மாகாணமாக பிரிக்க வேண்டுமென்று நமது அரசியல்காரர்கள் இப்போதே காங்கிரஸ் மூலம் தீர்மானம் செய்துவிட்டார்கள். அதாவது சென்னை மாகாணம் பாஷைகளை உத்தேசித்து 4 மாகாணமாகப் பிரிக்க வேண்டுமாம்.

தமிழ் மாகாணம், ஆந்திர மாகாணம், கேரள மாகாணம் என்பதாக நான்காய்ப் பிரித்தால் நாலு மாகாணத்திற்கு நாலு கவர்னர்கள் வேண்டிவரும். லார்ட் கோஷனுக்கோ தமிழ்நாடு என்பது இப்போது இருப்பது போலவே இருந்துவிடும். மற்ற மூன்றில் ஆந்திராவை ஸ்ரீமான் சீனிவாச சாஸ்திரி போன்றவருக்கு அதாவது “மகாத்மாவை ஜெயிலில் பிடித்து போடு” என்று யோசனை சொன்னவருக்கும், மற்ற இரண்டில் ஒன்று நமது டாக்டர் சுப்பராயன் போன்று சர்க்காருக்கு நல்ல பிள்ளையாய் இருப்பவருக்கும் கொடுத்து விட்டு ஒன்றை இன்னும் யாராவது ஒரு வெள்ளைக்காரருக்கும் கொடுத்து விடுவார்கள் . பெயருக்கு இந்தியர்களுக்கு இரண்டு கவர்னர் வேலை கொடுத்ததாகவும் சீர்திருத்த சரித்திரத்தில் எழுத இடம் கிடைத்தது. அரசியல்காரருக்கும் அரசாங்கத்தாரோடு சண்டைபோட்டு கிளர்ச்சி செய்து கவர்னர் உத்தியோகம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி பாமர மக்களை இன்னமும் ஏமாற்றவும் இடம் ஏற்படலாம். இவை ஆதாரமாகக் கொண்டு இன்னமும் சில உத்தியோகமும் ஏற்படலாம். ஆனால் இவைகளினால் நமது நாட்டுக்கு என்ன லாபம்? பாமர மக்களுக்கு என்ன லாபம்? வரி செலுத்துவோர்களுக்கு என்ன லாபம்? ஏழைகளுக்கு என்ன லாபம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இந்த அதிக சம்பளமுள்ள உத்தியோகங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு ஏற்படும் செலவுக்கு யார் தலையில் கை வைக்க வேண்டிவரும் என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். இந்தியர்களுக்கு உத்தியோகமும் பெருத்த சம்பளமும் கொடுப்பதன் மூலமாய் வெள்ளைக்காரர்கள் அனுபவிக்கும் உத்தியோகமும் சம்பளமும் குறைவுபடுவதாயிருந்தால் ஒரு விதத்திலாவது நமக்கு அது லாபம் என்று சொல்லலாம். அப்படியில்லாமல் எவ்வளவு சீர்திருத்தம் வந்தாலும் வெள்ளைக்காரர் அனுபவிக்கும் உத்தியோகம், சம்பளம் முதலியவைகள் குறையாமல், மேலும் அவர்களுக்கு அதிகமும் ஆகிக்கொண்டு அதை அனுமதிப்பதற்கு லஞ்சம் கொடுப்பது போல நமக்கும் சில உத்தியோகங்களைக் கொடுத்து அந்த செலவுக்கு நமது குடியானவர்கள் , வியாபாரிகள் , பாமர மக்கள் முதலியவர்கள் தலையில் வரிப்பளுவை அதிகப்படுத்தி வருவதில் என்ன நன்மை இருக்கிறது? இவ்வளவு துன்பத்தோடு போவதல்லாமல் இந்த உத்தியோகத்தை நம்மில் யார் அனுபவிப்பது என்பதில் “எச்சில் இலைக்கு நாய்கள் சண்டைப் போட்டுக் கொள்வது போல்”, நமக்கும் ஒருவருக்குக்கொருவர் கக்ஷி, ஜாதிபிளவு, மதப்பிளவு, கிராமப்பிளவு, குடும்பப் பிளவு, சகோதரப்பிளவு முதலிய ஒற்றுமை குறைவுகள் எவ்வளவென்பதையும் கவனித்துப் பாருங்கள்.

இதோடு தேர்தல் சுதந்திரம் என்பதாக நமக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் போல் மோசமான காரியம் வேறு ஒன்று இருப்பதாகவே சொல்ல முடியவில்லை. ஓட்டர்கள் அதிகமானார்களேயொழிய ஓட்டுகளை எப்படி உபயோகிப்பது என்கிற அறிவு 100 - க்கு 5 ஓட்டர்களுக்குக் கூட கற்பிக்கப்படவே இல்லை. ஆராய்ச்சி இல்லாமலே ஓட் செய்யக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் . அதோடு மனிதன் நாணயக் குறைவு கற்பதற்கு முதல் பள்ளிக்கூடம் ஓட்டராவதாய் இருக்கிறது. 4 அணா 2 அணாவுக்கு கள்ளு சாப்பிடும் ஓட்டுகள் விலை கூறப்படுகிறதை தினம் பார்த்து வருகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பணம் செலவு செய்வதை பொருத்தும், பொய்ப்பித்தலாட்டம் பேசுவதற்கு சக்தி இருப்பதைப் பொருத்தும் முடிவாகிறதே தவிர மனிதனின் யோக்கியதையையோ, பரோபகார குணத்தைப் பொருத்தோ ஏற்படுகிறதா என்பதை யோசித்துப் பாருங்கள் . 1000, 10000, 50000 என்பதாக செலவு செய்து ஓட்டுகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டசபை முதலிய ஸ்தானங்கள் பெறுகிறவன் யோக்கியனாகயிருப்பானா? இருக்க முடியுமா? ஆகவே இம்மாதிரி ஆபாசங்களும் அயோக்கியத்தனங்களும் தேசத்துக்கு துரோகம் செய்து பாமர மக்களையும் வஞ்சித்து பாழ்படுத்தும் பலனை அரசியல் பலன் என்று எந்த மூடனாவது ஒத்துக் கொள்ள முடியுமா? என்பதை தயவு செய்து யோசியுங்கள் . நான் தேசத் துரோகியல்ல. நானும் தேசத்துக்காக என்று கொஞ்சமாவது உழைத்தவன். அதற்குள் புகுந்து அதன் வண்டவாளங்களைத் தெரிந்து வந்து உங்களிடம் சொல்லுகிறேனேயல்லாமல் சர்க்காருக்கு உள்ளாள் என்று நினைக்காதீர்கள் . நான் போகிறவிடமெல்லாம் போலீஸ்காரன் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் வருகிறான். வீணாய் அரசியல், அரசியல் என்று கருதி நாட்டையும், ஏழை மக்களையும் குழியில் வீழ்த்தாதீர்கள் என்று சொல்லி விட்டு மதப் புரட்டைப் பற்றிச் சில வார்த்தை சொல்லுகிறேன். (தொடர்ச்சி 11.09.27 இதழில்)

(குறிப்பு : குற்றாலத்தில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 04.09.1927)

Pin It