periyar and anna 480

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைப்பதற்காக ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  அப்பிரயத்தனத்தின் முதல் பாகம் ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கள் வேளாளர் என்பதாகவும், அந்த வேளாளரைக் காப்பாற்ற வேண்டியது வேளாள கனவான்களின் கடமை என்பதாகவும் கிளப்பி விட்டு சில வேளாள கனவான்கள் பெயரால் திருப்பூரில் ஒரு மகாநாடு என்பதாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் நமது செட்டியாருக்கு என்ன வந்தது என்பதை பொது ஜனங்கள் நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும்.  ஸ்ரீமான் செட்டியாரின் கொள்கை என்ன என்பதை பொது ஜனங்கள் முதலில் சிந்தித்தால் மற்றது விளங்கும்.   “உன் பிறப்போ பத்து என் பிறப்போ எண்ணத் துலையாது” என்பதாக மகா விஷ்ணுவைப் பார்த்து ஒரு புலவன் பாடினான் என்கிற கதைபோல் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் அரசியலில் தலையிட்ட பிறகு அவரது அரசியல் பிறப்பு எண்ணத் துலையாது என்றே சொல்லவேண்டும்.

சமீபகாலமாக அவரது அரசியல் தொண்டு என்பது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களுக்கு பரமானந்த சிஷ்யனாயிருப்பதிலும் ஸ்ரீமான்களாக பட்டக்காரர் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகிய கனவான்களை சுவாதீனப் படுத்திக் கொள்ளுவதில் பாடுபடுவதிலுமே முடிந்துவிட்டது.

ஏனென்றால் சர்க்காரை சிபார்சு பிடித்து உத்தியோகம் பெற சர்.சி.பி. அவர்களும், பொது ஜனங்களிடம் சிபார்சு பிடித்து ஓட்டு பெற மேற்கண்ட வேளாள பிரமுகர்களும் இருந்தால் போதும் என்பதே அவரது துணிபாய் விட்டது.  இம்மாதிரி சுருக்க வழியில் சம்பாதிக்கும் பலன் ஒருக்காலும் மணமுள்ளதாயிருக்காது என்பது நமது உறுதி.

ஸ்ரீமான் செட்டியாரிடத்தில் நமக்கு எப்போதும் சிறிது அனுதாபம் உண்டு. அதாவது சுயமரியாதையை விட்டு பாமர மக்களையும் குடியானவர்களையும் அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுத்து அரசாங்கம் அடிக்கும் கொள்ளையில் தாங்களும் ஒரு பாகம் பெறுவது என்பதையே குறியாகக் கொண்டு சுயநலத்திற்கு பாடுபடுவதான கொள்கையுடைய தற்கால அரசியலின் பேரால் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்து வாழும் கூட்டத்தில் ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்க செட்டியாரும் ஒரு முக்கியஸ்தராயிருந்தாலும், அக்கூட்டத்தில் சேர்ந்த மற்றவர்களைப்போல் ஸ்ரீமான் செட்டியாருக்கும் ஏன் ஒரு பங்கு வரக்கூடாது என்பதும், அவருக்கு வந்திருக்க வேண்டிய முறை கூட அவசரத்தினாலும் அகம்பாவத்தினாலும் தவறி விட்டதே என்பதும் தான்.

ஆனால் மேல்கண்ட அரசியல் சூதில் வெற்றி  பெற்று பலனடைந்தவர்கள் பெரும்பாலும் கூடுமானவரை ஒரே கொள்கையில் இருந்து வந்தவர்கள் தானே அல்லாமல் ஸ்ரீமான் செட்டியாரைப் போல் அடிக்கடி மாறி வந்ததாலல்ல.  ஸ்ரீமான் செட்டியார் இம்மாறுதல்களை தன்னோடு மாத்திரம் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீமான் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களையும் கூட இழுத்து அடிக்கடி வழுக்கலில் சறுக்கி விழும்படி செய்து விடுகிறார்கள்.  ஸ்ரீமான் செட்டியார் நம்நாட்டு வேளாள சமூகத்தின் நாடியை சரிவர உணர்ந்திருப்பாரானால் இத்தந்திரத்திலிறங்கி இருக்க மாட்டார்.  காலசக்கிர சுழலினால் நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் பகுத்தறிவும் சுதந்திர உணர்ச்சியும் ஏற்பட்டிருப்பது போலவே நமது வேளாள சமூகத்திற்கும் சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை ஸ்ரீமான் செட்டியார் அறியவில்லை போலும்.  பகுத்தறிவில்லாமல் பெரும் விளம்பரத்தையும் சிபார்சையும் கண்டு மக்கள் ஏமாந்து ஓட்டுக் கொடுத்து வந்த காலம் மலையேறி விட்டது.  இப்போது ஒன்று பணம் கொடுக்க வேண்டும் அல்லது யோக்கியமாகவாவது நடந்து கொள்ள வேண்டும். அல்லது தங்கள் சமூக நன்மைக்காவது உதவ வேண்டும் என்கிற அளவுக்கு நாடு வேகமாய் மாறிவருகிறது.  சிபார்சு செலாவணியாகும் காலம் மலையேறிவிட்டது. இதை அறியாதவர்கள் கண்டிப்பாய் ஏமாற்றப்படுவார்கள்.

நமது செட்டியார் இந்த பொய்க்கால் மாதிரி மந்திரிகளை ஆதரிப்பதற்காக போடப்பட்ட கூட்டத்தை திருப்பூரில் போடுவானேன்?  கோயமுத்தூரில் உள்ள அறிவாளிகளைவிட திருப்பூரில் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதாலா? அல்லது கோயம்புத்தூரை விட திருப்பூர் பெரிய பட்டணம் என்பதாலா?  அல்லது அந்த ஊரார் கேட்டுக் கொண்டார்கள் என்பதாகவா? என்பது ஒன்றும் விளங்கவில்லை.  திருப்பூர் பஞ்சு வியாபாரிகளுக்கு மிகவும் அவசியமாயிருக்கிற ஒரு காரியத்தின் பெயரை அதாவது பருத்தி சட்டத்தில் சில மாறுதல்கள் செய்வதாக ஆசைக்காட்டி அதன் மூலம் கூட்டத்தைச் சேர்க்க ஏற்பாடு செய்து கொண்டு, பொது ஜனங்கள் மந்திரிகளை ஆதரிக்கிறார்கள் என்று ஒரு பொய்க் கதையை உண்டாக்கச் செய்த சூழ்ச்சியே அல்லாமல் மற்றபடி வேறு என்ன நாணயம் இதில் இருக்கிறது.  ஸ்ரீமான்  ராமலிங்க செட்டியார் இந்த மந்திரிகளை ஆதரிக்க இதுவரையில் வெளிப்படையாய்ச் சொல்லியிருக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது “பார்ப்பனரல்லாதாருடைய முன்னேற்றத்திற்கு உழைத்து வருவதாகச் சொல்லும் ஒரு கக்ஷியார் பார்ப்பனரல்லாத மந்திரிகளை அதிகாரத்திலிருந்து நீக்குவது சரியல்ல” என்கிறார்.

இந்த வார்த்தை சொல்ல நமது ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியாருக்கு உரிமை உண்டா என்றுதான் கேழ்கிறோம்.  இதே பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் சொல்லிக் கொண்டு இதே பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இருந்த இதே ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் மூன்று ´ த்துக்கு முன்பு பார்ப்பனரல்லாத மந்திரிகளை அதிகாரத்திலிருந்து நீக்க முயற்சி செய்து கக்ஷி சேர்த்து பார்ப்பனரல்லாத மந்திரிகளின் மேல் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து ஓட்டுக் கொடுத்தவரா அல்லவா?  அப்படியிருக்க இவர் இந்த மாதிரி கேழ்பதில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்பதை யோசித்தால், இது பொய்க்காரணம் என்பது விளங்காமல் போகாது. 

ஸ்ரீமான் செட்டியார் இப்போது காங்கிரஸ்காரரா?  அல்லது பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்காரரா?  அல்லது  மந்திரி கக்ஷியார் என்கிற இண்டிபெண்டெண்ட் கக்ஷியாரா?  ஒரு கக்ஷியிலும் சேராமல் தன் இஷ்டப்படி நடப்பவரா?  இவரது அரசியல் கொள்கை என்ன?  சமூக இயல் கொள்கை என்ன?  அக்கொள்கைகளுக்கு தக்கபடி இதுவரை நடவடிக்கையில் என்ன செய்து வந்திருக்கிறார்?  இவைகள் ஒன்றும் இல்லாமல் ஊரில் இருக்கிறவர்கள் எல்லாம் பயித்தியக்காரர்கள், தான் மாத்திரம் ஒரு தனிப்பட்ட அவதாரம் என்று வெறும் பேச்சைப் பேசிக்கொண்டு  எல்லா கொள்கைகளையும் பரிகாசம் பண்ணிக் கொண்டிருப்பதால் என்ன பயன் அடைய முடியும். மற்றும் ஸ்ரீமான் செட்டியாரின் சொந்த அபிப்பிராயங்கள் பலவற்றை இதுசமயம் வெளியில் சொல்ல இஷ்டமில்லையானாலும் திருப்பூர் கூட்டத்தின் முடிவுக்குப் பின் வெளியாக்கலாம் என்றே இருக்கிறோம். 

பொதுவாய் திருப்பூர் கனவான்களுக்கும் மற்றும் பலருக்கும் நாம் எச்சரிக்கை செய்வது என்னவென்றால், நமது சமூக முன்னேற்றத்திற்கு இடையூறான காரியங்களுக்கு இடம்கொடுத்து விடாதீர்கள்.  இவர்களது சொந்த காரியம் நடந்த பின்பு மறுபடியும் உங்களை எந்த ஊர் என்று கேழ்பார்கள். வீணாக நாடு சுயமரியாதை அடையும் சமயத்தை இரண்டொரு சுயநலக்காரர் வார்த்தையில் ஏமாந்து பாழாக்காதீர்கள்.  சில சுயநலக்காரர்களுக்காக ஒரு சமூகத்தையோ நாட்டையோ பலிகொடுத்து விடாதீர்கள் என்பதுதான். மற்றவை பின்னால்.

(குடி அரசு - கட்டுரை - 07.08.1927)

Pin It