சுயமரியாதை வீரர், உறுதியான பெரியாரியல்வாதி, இறுதி வரை கொள்கை சமரசமின்றி பெரியார் கருத்துகளை முழங்கிய தன்மான வீரர், நாத்திகம் இராமசாமி முடிவெய்தினார் என்பதை பெரியார் திராவிடர் கழகம் ஆழ்ந்த துயரத்துடன் பதிவு செய்கிறது.

தி.மு.க.வில் சிலகாலம் இருந்து, அதன் கொள்கை சறுக்கலை எதிர்த்து பெரியார் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர் நாத்திகம் இராமசாமி. குத்தூசி குருசாமி தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலும், பிறகு காமராசரின் தலைமையிலான காங்கிரசிலும் செயல்பட்டாலும் பெரியார் கருத்துகளையே முழங்கியவர். தமது நாத்திகம் ஏட்டை வார ஏடாகவும், நாளேடாகவும் 50 ஆண்டுகாலம் நடத்தி, வாழ்நாள் இறுதி வரை நடத்திய சாதனையாளர்.

பெரியார் திராவிடர் கழகத்துக்கு அரணாக நின்றார்; பெரியார் திராவிடர் கழகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இயக்கத்தை பல்வேறு நிலைகளிலும் ஊக்கப்படுத்தினார். மனம் திறந்து பாராட்டினார். பெரியார் கொள்கை துரோகிகளை சமரசமின்றி அம்பலப்படுத்தினார். அவரது மறைவு பெரியார் திராவிடர் கழகத்துக்கு பேரிழப்பாகும்.

சர்க்கரை நீரிழிவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 24 ஆம் தேதி சென்னை மருத்துவமனையில் விடைபெற்றுக் கொண்டார்.

25 ஆம் தேதி காலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினர். அருகே இருந்த டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து கொள்கை வீரர் நாத்திகம் இராமசாமியை வாழ்த்தி ஒலி முழக்கங்களுடன் தோழர்கள் ஊர்வலமாக வந்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

இறுதி வரை பெரியார் பெரும் படையின் ஆற்றல் மிகு கொள்கை வீரராக வாழ்ந்து, கொள்கை அடையாளத்தோடு முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி நாத்திகம் இராமசாமிக்கு பெரியார் திராவிடர் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது. கழகத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் குலையாது, பெரியார் கொள்கைகளை முன்னெடுக்க உறுதி ஏற்கிறது.

அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மேல் ஆழ்வார்தோப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு இறுதி நிகழ்ச்சி நடந்தது.

‘நாத்திகம்’ கொள்கை குடும்பத்தினரின் துயர உணர்வுகளை பெரியார் திராவிடர் கழகம் பகிர்ந்து கொள்கிறது.

Pin It