பைத்தியக்காரன் : ஸ்ரீமான்கள் பிரகாசமும், சாம்பமூர்த்தியும் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி முதலியவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்ப்பனக் குட்டுகளை வெளியாக்கி வருகிறார்களே, இந்த சமயத்தில் நாம் காங்கிரசைப் பிடித்துக் கொள்ளலாமே?

periyar kamarajar veeramani and karunanidhiஉஷார்காரன் : அட போடா! பைத்தியக்காரப் பயலே. பார்ப்பனர்கள் சங்கதி உனக்குத் தெரியாதா? சுயராஜ்யப் பத்திரிகைக்கு ஏதாவது கொஞ்சம் பணம் வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் ஆந்திர தேசத்தில் சுயராஜ்யக் கட்சியையும் சீனிவாசய்யங்கார் கோஷ்டியையும் திட்டினால்தான் மதிப்புக் கிடைக்கிறதாகவிருக்கும். அதற்காக ஸ்ரீமான்கள் பிரகாசமும் சாம்பமூர்த்தியும் போட்ட புது வேஷமேயல்லாமல் இதில் நமக்கொன்றும் லாபமில்லை. மேற்படி இரண்டு யோக்கியர்களும் சட்டசபைத் தேர்தலின் போது செய்த உபத்திரவம் உனக்குத் தெரியாதா? இவர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியை வைதது உனக்குத் தெரியாதா? இதே ஸ்ரீமான் சாம்பமூர்த்தி முழங்காலுக்கு மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு காந்தியைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டவில்லையா? பார்ப்பனரல்லாதார் என்கிற சண்டை வரும் போது திடீரென்று எல்லாப் பார்ப்பனரும் ஸ்ரீமான்கள் பிரகாசம் சாம்பமூர்த்தி உள்பட நிமிஷ நேரத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அவர்களை நம்பி விடாதே.

பைத்தியக்காரன் : அப்படியானால் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஏன் ஒன்று சேருவதில்லை?

உஷார்காரன் : அதற்குக் காரணம் அனேகமுண்டு. என்னவென்றால் பார்ப்பானுக்கு வயிற்றுச் சோற்றுப் பஞ்சமே இல்லை. எப்படியாவது கஷ்டப்படாமல் பிழைக்கலாம்.

பைத்தியக்காரன் : அதென்ன பார்ப்பனனுக்கு மாத்திரம் சோத்துக்குக் கஷ்டமில்லை என்கிறாய்.

உஷார்காரன் : அப்படிக் கேள். சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் சில பேர் மகா மேதாவிகள் போல் நினைத்துக் கொண்டு “பார்ப்பனர் புத்திசாலி அவர்களுக்குள் சண்டை இல்லை. பார்ப்பனரல்லாதார் முட்டாள்கள். அதனால்தான் சண்டை பிடித்துக் கொள்ளுகிறார்கள்” என்று சொல்லிவிடுவதுண்டு. அது என்ன காரணம் என்றால் அது நமது அடிமை மனப்பான்மையே தவிர வேறில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் அவர்களை விட புத்திசாலி என்பது நன்றாய் விளங்கும். பார்ப்பானுக்கு ஏன் சாப்பாட்டுக் குப் பஞ்சமில்லை என்றால்:

முதலாவது, பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்பதாலும் மற்றவர்கள் தாழ்ந்த ஜாதி என்பதாலும் பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் தாங்கள் உண்மையாய் எந்தத் தகப்பனுக்குப் பிறந்தார்களோ அதை விட்டுவிட்டு “நான் வைசியனுக்குப் பிறந்தேன்; நான் க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்; நான் பூ வைசியனுக்குப் பிறந்தேன்; நான் அக்னி குல க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்; நான் யாக க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்; நான் விஸ்வப் பிராமணனுக்குப் பிறந்தேன்; நான் சௌராஷ்ட்டிரப் பிராமணனுக்குப் பிறந்தேன்” என்று இந்த நாட்டில் இல்லாத ஒரு ஜாதித் தகப்பன் பேரைச் சொல்லிக் கொண்டும் எல்லோரும் சகோதரர் என்பதை மறந்தும் ஒருவனுக்கு ஒருவன் உயர்ந்த ஜாதி என்றும், ஒருவனை ஒருவன் மற்றவனை விட தாழ்ந்த ஜாதி என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனனைப் பார்த்து காப்பியடித்து ஒருவன் வீட்டில் ஒருவன் சாப்பிடுவதில்லை; ஒருவன் தொட்டதை ஒருவன் சாப்பிடுவதில்லை; ஒருவன் பார்க்க ஒருவன் சாப்பிடுவதில்லை என்று முட்டாள்தனமாக சொல்லிக் கொள்வதாலும், இவர்கள் எல்லோரும் பார்ப்பனனை விட தாழ்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவனை உயர்வாகக் கருதிக் கொண்டிருப்பதாலும், பார்ப்பனரல்லாதார் எல்லோரும் பார்ப்பனர்கள் தொட்டதை பார்ப்பனர் வீட்டில் பார்ப்பனர் முன்னால் சாப்பிடுவது குற்றமற்றதென்றும் விசேஷமென்றும் நினைத்துக்கொண்டு இருப்பதாலும் பார்ப்பனர் ஓட்டல், பலகாரக் கடை, காப்பிக் கடை முதலியதுகள் வைத்து கொள்ளையடிக்க சவுகரியமாயும் கோவிலில் பூசை செய்ய சௌகரியமாயும், சமையல் வேலையில் சேர்ந்துக் கொள்ள சௌகரியமாயும் ஆகிய இந்த வேலைகளை உலகத்தில் உள்ள 3 -ல் ஒரு பங்கு பார்ப்பனருக்கு தாராளமாய் கிடைக்கிறது. இதனாலேயே ஒரு சமையல் பார்ப்பானுக்கு மாதம் 30 முதல் 50 ரூபாய் வரை சம்பளம் நடக்கிறது. ஒரு காப்பிக்கடைக்காரன் மாதம் 1-க்கு 100, 150 ரூ. வாடகை கொடுத்து 50, 60 ரூபாயிக்கு சாராயம் குடித்து, மாம்சம் சாப்பிட்டு மாதம் 75 முதல் தேவடியாளுக்கும் கொடுத்து தான் குடும்பத்திற்கு 100 ரூ. சிலவும் செய்யத்தக்க வரும்படி சம்பாதிக்கிறான். பக்கத்துக் கடைக்காரன் பார்ப்பனரல்லாதானாயிருந்தால் அதே வியாபாரம் செய்வதில் 15 ரூபாய் வாடகை கொடுக்கமாட்டாமலும் தன் வீட்டு ஜனங்கள் வயிறு நிறைய சாதாரண சாப்பாடு கூட சாப்பிட முடியாமலும் பட்டினி கிடக்கிறார்கள்.

இரண்டாவது பார்ப்பார் உயர்ந்த ஜாதி, கடவுள் முகத்தில் பிறந்தவன் என்கிற நமது அறியாமையால் நமது பாவங்களைப் போக்கவும் புண்ணியம் சம்பாதிக்கவும் நமது பெற்றோர்களுக்கும் பண்ணை குடிகளுக்கும் நன்மையை உண்டாக்கவும் நாம் அவனுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடித்து மோக்ஷத்திற்கு போக எண்ணுவதாலும் அவர்களுக்கு தினப்படி தாராளமாய் சம்பாதனை ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு புரோகிதனும், பண்டாரங்களும், பஞ்சாங்கக்காரனும் தாங்கள் வயிறு நிறைய சாப்பிட சம்பாதிப்பதுடன் தங்கள் பிள்ளை குட்டிகளையும் க்ஷ.ஹ., ஆ.ஹ., படிக்க வைத்து ஐகோர்ட் ஜட்ஜி, சட்ட மெம்பர், அட்வொகேட் ஜனரல் முதல் உத்தியோகம் பெற்று வாழவும், லக்ஷக்கணக்காய் சம்பாதிக்கவும், காசி இராமேஸ்வரம் கன்னியாகுமரி வரையில் பார்க்கிறோம்.

தவிர, காங்கிரசின் பலனாய் சர்க்கார் உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் ஏராளமாய் அமைய ஏற்பட்டுவிட்டதாலும் அவர்களே கோர்ட் குமாஸ்தா, ஜட்ஜிகள் வரையில் ஏற்பட்டு விட்டதால் அவர்கள் கோர்ட்டுக்கு பார்ப்பன வக்கீல்களும், பார்ப்பன வக்கீல் குமாஸ்தாக்களும் என்கிற வகையில் ஒரு மாசம் பார்ப்பனர்களுக்கு பிழைப்பு ஏற்பட்டு விடுகிறது.

இது தவிர பிச்சை எடுப்பது தங்கள் குலத்தின் மேலான தர்மம் என்பதாக ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நம்மிடவர்களில் கடைந்தெடுத்த முட்டாள்கள் அவர்களுக்கு பிச்சை கொடுப்பது தங்களுக்கு மோக்ஷக் கதவு திறக்கக்கூடிய சாவி என்று நினைப்பதாலும் இவ்வளவு வழியிலும் பிழைக்க முடியாத பார்ப்பான்களுக்கு கோவென்றால் கெட்டுப்போன நம்முடைய முன்னோர்களும், நம் பழைய ராஜாக்களும், கெடப்போகும் நம்மிடப் பெரியவர்களும் இப்போதிருக்கும் சில இஸ்பேட் ராஜாக்களும் 100 - க்கு 5 வட்டி சம்பாதித்த பாவத்தைத் தொலைப்பதற்கு பார்ப்பனனுக்கு சோறு போட்டால் போதும் என்று நினைக்கிற லேவாதேவி செட்டிப் பிள்ளைகளும், பார்ப்பன ஆண் - பெண், பெண்டில்லாதவன், புருஷனுடன் வாழாதவள், புருஷனிழந்தவள், குழந்தை குட்டி சகலத்துடன் தினம் சாப்பிட சத்திரங்களும், காம விகாரத்தால் தப்புக் குழந்தைகள் உண்டாகிவிட்டால் பிரசவிப்பதற்கு பிரசவ ஆஸ்பத்திரிகளும், பிரசவித்த அக்குழந்தையை எடுத்து வளர்த்து தங்கள் ஜனசங்கையை அதிகப்படுத்திக் கொள்ள கிறிஸ்து பாதிரிமாரும் போர்டிங்குகளும் தாராளமாய் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எந்த வழியில் வயிற்றுப் பிழைப்புக்குக் கஷ்டம் இருக்கிறது என்பதை சொல்லு பார்ப்போம்.

தவிர பார்ப்பான் பிழைப்பு என்றும் கெடவில்லை. அன்றும் கெடவில்லை. இன்றும் கெடவில்லை. நமது முட்டாள்தனத்தால் பிழைப்பவனானதால் நம்மிடம் எதுவரை முட்டாள்தனம் இருக்கிறதோ அதுவரை அவன் பிழைப்புக்கு ஆnக்ஷபணையில்லை. நம்மவர் பிழைப்போ அப்படியில்லை.

பைத்தியக்காரன் : அதென்ன அப்படிச் சொல்லுகிறாய்?

உஷார்காரன் : என்னவென்றால் நம்மவர்கள் முன்காலத்தில் எப் படிப் பிழைத்தார்கள் தெரியுமா? எல்லோருக்கும் விவசாயமும் கைத் தொழிலும் தான். விவசாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வரி கட்டுவதே கஷ்டமாய் விட்டது. பூமி எல்லாம் பார்ப்பனனிடமும் பார்ப்பனர்கள் காலில் விழுந்து அவர்களுக்கு அழும் சில பணக்காரனிடமுமே சேர்ந்து விட்டது. போராக் குறைக்கு பருவ மழையுமில்லை. கைத் தொழிலைப் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. இந்தப் பார்ப்பனர்கள் அரசாங்கத்திற்கு உள் உளவாய் இருந்து வருவதின் மூலம் வெளி அரசாங்கத்தார் நமது தொழில்களையே பாழ்பண்ணி விட்டார்கள். எனவே கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாதாருக்கு தன் தன் குடும்ப ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமல் இருப்பதுடன் மேல் கண்ட பார்ப்பனர்களுக்கு அழுகவும் சம்பாதிக்க வேண்டிய கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அல்லாமலும் காங்கிரசின் பயனாய் “அரசியல் பார்ப்பனர்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டு விட்டபடியால் பார்ப்பனரல்லாதார்களில் அரசியலின் மூலம்” பணம் சம்பாதிக்கவோ பதவி பெறவோ ஆசைப்பட்டவர்களும் பார்ப்பனர்கள் காலை சுற்றிக் கொண்டு அவர்கள் வாலைப் பிடித்துத் திரிய வேண்டி ஏற்பட்டு விட்டது.

பைத்தியக்காரன் : இதுதானா காரணம். வேறொன்றுமில்லையா?

உஷார்காரன் : வேறு என்ன. நீ தான் சொல்லு பார்ப்போம். எத்தனை பார்ப்பனரல்லாதார், மகமதியர், கிறிஸ்தவர், பஞ்சமர் என்று சொல்லக் கூடியவர்கள் உள்பட பார்ப்பனரிடம் பணம் வாங்கிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரைத் திட்டுகிறார்கள். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வைகிறார்கள். பார்ப்பனர்கள் எவ்வளவு அயோக்கியர்களாயிருந்தாலும் அவர்களை நமது பார்ப்பனரல்லாதார்கள் “தலைவர்,” “தென்னாட்டு மகான்,” “பெரியார்,” “தியாகி,” “விவேகி,” “குரு” எனப் பலவிதமாய் புகழுகிறார்கள். ஏன்?

நம்மவர்களில் உண்மையான தியாகி இல்லையா? மகான் இல்லையா? தலைவர் இல்லையா? பெரியார் இல்லையா? விவேகி இல்லையா? எந்தப் பார்ப்பனரல்லாதாராவது நம்மவர்களைப் பற்றிச் சொல்லுகிறார்களா? என்று யோசித்துப் பார். அதோடு நம்மவர்களை வையாமலாவது இருக்கிறார்களா? ஏன்? பார்ப்பனர்களிடம் கொடுக்கப் பணம் இருக்கிறது. பார்ப்பனரல்லாதாரிடம் வாங்க தரித்திரமிருக்கிறது. அப்படிக்கில்லாதிருந்தால் ஓட்டமுள்ளவனுக்கு ஒரு கடுகளவு மூளையுள்ளவனுமான எந்தப் பார்ப்பனரல்லாதாராவது நமது சமூகத்தையும், நமது இயக்கத்தையும் பாழாக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரை அவரது பொய், புரட்டு, புளுகு, வஞ்சகம், மானம் கெட்டத்தன்மை எல்லாம் வெளியான பிறகு கூட தலைவன் என்று கூப்பிட மனம் வருமா? ஸ்ரீனிவாசய்யங்காரிடம் உதை வாங்கிக் கொண்டு அவர் காலை முத்தமிட மனம் வருமா? அதோடு அனேக பார்ப்பனரல்லாதாருடைய உழைப்பையும், பரிசுத்த எண்ணத்தையும், தியாகத்தையும் மனதாரப் பார்த்துக்கொண்டு அவர்களை வைய மனம் வருமா? காட்டிக் கொடுக்க வருமா? என்பதை நீயே யோசித்துப் பார்.

தவிரவும் நமக்கு இருக்கிற தரித்திரம் பார்ப்பனருக்கில்லை என்பதற்கு இன்னமும் ஒரு சாட்சி காட்டுகிறேன். அதாவது எந்தப் பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாரிடம் பணம் வாங்கிக்கொண்டு எந்தப் பார்ப்பனனையாவது வைவதைப் பார்த்திருக்கிறாயா? வைவதற்குப் பத்திரிகை நடத்துவதைப் பார்த்திருக்கிறாயா? கொடுப்பதற்குப் பார்ப்பனரல்லாதாரிடம் பணமும் இல்லை. ஒரு சமயம் இருந்தாலும் தனது சமூகத்தை விற்றாவது வாழ வேண்டும் என்று சொல்லத் தகுந்த தரித்திரமும் பார்ப்பனர்களிடத்தில் இல்லை. இதுதான் வித்தியாசமே ஒழிய பார்ப்பனர் மகா புத்திசாலி என்பதாவது பார்ப்பனரல்லாதார்கள் முட்டாள்கள் என்பதாவது இதன் பொருள் அல்ல.

உதாரணமாக ஒத்தக்காசு செட்டியாரான ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாருக்குப் புத்தியில்லை என்கிறாயா? அல்லது அய்யங்காரின் புரட்டுகளையும், பித்தலாட்டங்களையும், கெட்ட எண்ணத்தையும், சின்னப் புத்தியையும் அறிய சக்தி இல்லை என்கிறாயா? அல்லது அய்யங்காரை மகா பெரிய மனிதர் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறாயா? செட்டியாரின் புத்திசாலித்தனம் அவருடைய பழைய வீரம், அவர் கொஞ்ச நாளைக்கு முன்பு பார்ப்பனர்களுடைய அயோக்கியத்தனத்தை புட்டுப்புட்டு விளக்கியிருக்கும் தன்மை, அவருடைய கல்வி, பார்ப்பனருடன் சேருவதற்கு முன் இருந்த ராவ்சாஹிப் பட்டம் முதலியதுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கஷ்டகாலம் வந்தால் யார்தான் என்ன செய்வார்கள். அரிச்சந்திரன் சத்தியத்திற்கு ஆக பெண்டாட்டியை விற்றதாகக் கதை இல்லையா? அது போல் நம்முடைய சகோதரர்கள் பலர் தரித்திரத்திற்கு ஆக சமூகத்தை விற்கிறார்கள் என்பதில் அதிசயமென்ன இருக்கிறது. அதற்கு யார்தான் என்ன செய்வது. கடவுளைத்தான் கேக்க வேண்டும். கடவுளோரிடமில்லாதவர் ஆனதினால் குட்டிச் சுவற்றில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். போ! எனக்கு நேரமாய் விட்டது.

(குடி அரசு - உரையாடல் - சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியது - 05.06.1927)

Pin It