எல்லா மக்களின் பொது நலத்திற்கென்று ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய   பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.   அவைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும்.   சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ்திரேட்டோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ, ரிவினியூ இன்ஸ்பெக்டரோ பார்ப்பனர்களாயிருந்து விட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய மனிதர்களோ அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப்பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனீயப் பிரசாரத்திற்கு செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள்.  

periyar and pavanarநமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும்   “சுதேசமித்திரன்”, “இந்து” முதலிய பார்ப்பனீயப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கும். “இந்து”, “சுதேசமித்திரன்” இல்லாத ரீடிங்குரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா என்று சொல்லிவிடுவார்கள்.   தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை வருகிறது என்று பெருமையும் பேசிக் கொள்வார்கள்.   ஆனால், “திராவிடன்”, “ஜஸ்டிஸ்”, “குடி அரசு” பத்திரிகைகளை தருவிக்கலாமா என்று சொல்லுவதற்குக்கூட நமது பார்ப்பனரல்லாத செகரட்டரிகளுக்கே தைரியம் இருக்காது.   ஏனென்றால் பார்ப்பன அதிகாரிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும் என்கிற பயம்தான்.   அப்படி யாராவது ஒருவர் மீறி தன்னை தைரியம் செய்து கொண்டு தருவிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த ரீடிங் ரூமே நமது பார்ப்பனர்களுக்கு வகுப்பு துவேஷ ரீடிங் ரூமாய்விடும்.   பிறகு அந்த காரியதரிசியை ஒழிக்க வழி தேடி விடுவார்கள். இதனாலேயே வாசக சாலைகளில் பெரும்பாலும் இப்பத்திரிகைகள் வரவழைக்கப்படுவதில்லை. அல்லாமலும் வரவழைத்து வந்த ஒன்று இரண்டு வாசக சாலைகளிலும் இப்பொழுது வர வர நிறுத்தப்பட்டு வருவதாய் தகவல்கள் எட்டுகின்றன.

  உதாரணமாக சேலம் “லிட்டரரி சொசைட்டி” என்கிற வாசக சாலையில் “தமிழ்நாடு” பத்திரிகை ஆரம்பம் முதல் வரவழைக்கப்பட்டு வந்தது.   இப்பொழுது நிறுத்தப்பட்டாய் விட்டதாம்.   இவ்வாசக சாலையில் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள் அநேகர் உண்டு;   ஒரு பார்ப்பனரல்லாதாருக்காவது இதில் அவமானம் தோன்றவே இல்லை.   தங்களை எவ்வளவோ கேவலமாக பார்ப்பனர்கள் மதித்தாலும் சரி அவர்களுடன் அவர்கள் வால்பிடித்துத் திரிந்து ஏதாவது உத்தியோகம் பதவி முதலிய எச்சில் பொறுக்க அவர்கள் தயவை எதிர்பார்க்கலாமா என்கிற எண்ணமே அல்லாமல் தங்கள் சுயமரியாதையைப் பற்றி அநேகருக்கு கவலையே இல்லை.   உண்மையாய் இப்பார்ப்பனரல்லாத மெம்பர்கள் சுயமரியாதை உடையவர்களாயிருந்திருந்தால் உடனே ராஜினாமாக் கொடுத்திருப்பார்கள். தவிர அந்த வாசக சாலையில் பார்ப்பனருக்கு   தண்ணீர் சாப்பிட வேறு பாத்திரமும் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு பாத்திரமும் வைக்கப்பட்டிருக்கிறதாம்.

  சேலத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியாரின் சிஷ்யர்கள் என்றும் அவருடைய நண்பர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறவர்கள். இவர்கள் யோக்கியதையே இப்படி இருந்தால் மற்றவர்களின் யோக்கியதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?   அதனால் இனி பொது வாசக சாலைகளில் உள்ள சுயமரியாதை உடைய பார்ப்பனரல்லாதார் அவசியம் இவற்றை கவனிக்க வேண்டும்.   அதாவது ‘இந்து’ ‘மித்திரன்’ ‘மெயில்’ பத்திரிகைகளை வரவழைக்கும் வாசக சாலைகள் கண்டிப்பாய் ‘ஐஸ்டிஸ்’, ‘திராவிடன்’, ‘சைபுல் இஸ்லாம்’ முதலிய பத்திரிகை வரவழைக்க வேண்டும். பணம் இல்லா விட்டால் பார்ப்பனப் பத்திரிகை ஒன்று பார்ப்பனரல்லாதார் பத்திரிகை ஒன்றுமாக வரவழைக்க வேண்டும். 100 -க்கு 3 பார்ப்பனர்கள் இருந்து கொண்டு             100-க்கு 97 பேர் கொண்டவர்களால் நடத்தப்படும் பத்திரிகையை வரவழைக்க   ஆnக்ஷபிப்பதை பொறுத்துக் கொள்ளுவதென்றால் இந்த பார்ப்பனரல்லாதாருக்கு மானம், வெட்கம், சுயமரியாதை இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம்?

தவிரவும் பார்ப்பனருக்கு வேறு தண்ணீர் பாத்திரம் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு தண்ணீர் பாத்திரமானால் அதை ஒத்துக் கொள்ளுவதும் அவமானம் என்றே சொல்லுவோம். அப்படியானால் எல்லா வகுப்பாருக்கும் வைக்க வேண்டும்; மகமதியர், கிறிஸ்தவர், சைவர், அசைவர், ஆதி திராவிடர் மற்றும் சமபந்தியில்லாத சகல வகுப்புக்கும் வைக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் தன் ஜாதிக்கு 100-க்கு 3 பேருக்கு ஒன்று மற்ற 100-க்கு 97 பேருக்கும் ஒன்று என்பது நமது சமூகத்தை எவ்வளவு கேவலமும் அவமானமும் படுத்தியதாகும்.   இது விஷயங்களில் படித்தவர்கள் என்பவர்கள் இவ்விழிவுக்கு கட்டுப்படுவதால் இந்த அவமானம் இது எல்லோர் தலையிலும் விடிகிறது.   ஆதலால்   இனியாவது வாசக சாலைகளில் உள்ள பார்ப்பனரல்லாத மெம்பர்கள் சுயமரியாதையுடனும் சுத்த ரத்தோட்டமுள்ளவர்களாகவும் நடந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.02.1927)

Pin It