சென்ற மாதம் 25, 26 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூடிக் கலைந்து விட்டது. மகாநாடானது சென்னை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தினரால் பார்ப்பனரல்லாதார் மகாநாடென்று முறையாகச் சென்ற பத்து வருஷ காலமாய் நடந்து வந்ததை அனுசரித்தே கூட்டப்பட்டது என்பதாகக் கருதி, “பார்ப்பனரல்லாதார் 10வது மகாநாடு” என்னும் பேரால் கூட்டப்பட்டது என்று சொல்வதானாலும் இவ்வருஷம் பார்ப்பனரல்லாதார் முதல் மகாநாடென்றே சொல்ல வேண்டும். இந்த மகாநாட்டிற்கு வந்தால் தங்கள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ, பெருமை குறைந்துவிடுமோ, பார்ப்பனர்கள் அழித்து விடுவார்களோ என்று பயந்தவர்களும், தவிர்க்க முடியாதபடி பார்ப்பனர்களின் தாக்ஷண்ணியத்திற்கு கட்டுப்பட்டவர்களும், எப்போதும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் சேருவதில்லை என்பதாக பார்ப்பனருக்கு வாக்குறுதி கொடுத்து, அப்புறம் இப்புறம் ஒப்பந்தம் பேசிக்கொண்டவர்களும், தவிர்க்க முடியாத அசந்தர்ப்பத்தில் பட்டவர்களும் தவிர, மற்றெல்லா முக்கியஸ்தர்களும் பிரதிநிதிகளும் விஜயம் செய்திருந்தார்கள். இம்மகாநாடு கூட்ட வேண்டுமென்று “குடி அரசி”ன் மூலம் வெகுநாளாக எழுதிக்கொண்டு வந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

periyar 350இதை அனுசரித்தே சென்னை ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களையும் மற்றும் ஜில்லாக்களிலுள்ள பலதிறப்பட்ட அபிப்பிராயம் கொண்ட பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் இவ்வாறு மாத காலமாய் கண்டு பேசி நமது திட்டங்களை விளக்கிக் காட்டி, அவர்களது சம்மதமும் பெற்றுவர ஸ்ரீநாயக்கர் ஆங்காங்கு சென்று கொண்டிருந்ததும் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆகவே இதன் பலனாக சட்டசபைத் தேர்தல்கள்முடிந்தவுடன் இம்மகாநாடு கூட்டுவதாய் உத்தேசித்திருந்தபடி மகாநாடு மதுரையில் கூட்டினதும், எல்லாப் பிரமுகர்கள் விஜயம் செய்திருந்ததும், அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டது போல் நமது திட்டமாகிய நிர்மாணத் திட்டத்தை மகாநாட்டில் நிறைவேற்றிக் கொடுத்ததும் நமக்கு மிகுதியும் சந்தோஷமே. இந் நிர்மாணத் திட்டம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி நமது எதிரிகளான பார்ப்பனரும் நமது கோடாலிக் காம்புகளான பார்ப்பனரல்லாதாரில் சிலரும் என்ன சொல்லிக் கொண்டபோதிலும் நமக்கு கவலையில்லை. காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு இவ்விரு கூட்டத்தாரும் நடந்து கொள்ளும் இழிதன்மையைப் போலவும் வஞ்சக நினைவோடு தீர்மானிக்கும் போலித் தீர்மானங்களைப் போலும் அல்லாமல் மதுரை மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேறின. மிகப் பெரும் பகுதி மக்களால் உண்மையான ஊக்கத்தோடும் எவ்விதத்திலாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்னும் ஆவலோடுமே அவைகள் ஏகமனதாய் நிறைவேற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.

தீர்மானங்களையும் மக்களின் உண்மையான நிலையையும் கவனிக்காமல், சில வாய்ப்பந்தல் பதர்கள் அக்கிராசனர் இப்படிச் சொன்னார்; வரவேற்பு அக்கிராசனர் அப்படிச் சொன்னார்; பெயர் நன்றாக இல்லை; சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருவது நமக்கு ஒன்றும் அதிசயமாக இல்லை. உலக அனுபவ சரித்திரத்தில் இப்படி ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் வந்திருக்கிறது. ராவணனுக்கு தன் தம்பியே துரோகியாயிருந்தான். கிறிஸ்துவுக்கு தனது சிஷ்யனே துரோகியாயிருந்தான். மகாத்மாவையும் தனது சிஷ்ய கோடியிலொருவரே மூலையில் உட்கார வைத்துவிட்டார். ஆகவே பஞ்சமும், நோயும், பார்ப்பனச் சூழ்ச்சியும் உற்றதும், சுயமரியாதை அற்றதுமான நமது நாட்டில் இத்திருக்கூட்டம் தோன்றுவது அதிசயமல்ல. இக்கூட்டம் யோக்கியமான கூட்டமாயிருக்குமானால் மகாநாட்டிற்கு வந்து தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லவோ, மகாநாட்டுக்கு தெரிவிக்கவோ செய்திருக்கும். அது யாருக்கும் ஆட்சேபமுமிருக்கவில்லை. சிலருக்கு பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர் பிடிக்கவில்லையாம். இதனால் தங்களுக்கு பெருத்த அவமானமாயிருக்கிறதாம். இவர்கள் இதுவரை எந்த உலகத்திலிருந்தார்களோ தெரியவில்லை. இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் சந்ததிகளையும் சேர்த்து வெள்ளைக்காரன் , “மகமதியரல்லாதார்” என்று மேளம் போட்டு அழைக்கிறானே இதனால் இவர்களுக்கு மானம் போகவில்லையா? என்று கேட்கிறோம். இந்தப் பெயரோடு இவர்கள் சகோதரர்கள் சட்டசபைக்குப் போக உடந்தையாய் இருந்தார்களே இதனால் இவர்கள் மானம் போகவில்லையா? என்று கேட்கிறோம். கொஞ்சமாவது நெஞ்சில் ஈவு, இரக்கம், குலாபிமானம், தேசாபிமானம், வெட்கம் இல்லாமல் தன் வாழ்வையும் தன்பெயர் தம்பட்டமடிப்பதையுமே கருத்திலிருத்திக்கொண்டு மகாநாடு எதற்காக நடத்தப்பட்டது இதனால் யார் பலன் அடைவார்கள், இம்மாதிரி ஒரு கூச்சல் ஏற்பட்ட பிறகு நமது மக்களின் நிலை என்னவாயிருக்கிறது என்பதை கொஞ்சமும் உணராமல் 'உபதேசியார்' வேடம் போடுவதானால் அது மனதிற்கு எவ்வளவு வேதனையைக் கொடுக்கும் என்பது அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

நிற்க, மகாநாட்டுக்கு வந்தவர்களுக்கும் மகாநாட்டு அனுதாபிகளுக்கும் ஒரு வார்த்தை. தீர்மானங்களை நிறைவேற்ற அனுகூலமாயிருந்ததும், தீர்மானங்களை நிறைவேற்றியதும் மாத்திரம் போதாது. பார்ப்பன காங்கிரஸ்காரர்களுக்கானால் இது போதும். ஏனெனில் காங்கிரசு என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களும், படித்தவர்களும் இவ்விரு கூட்டத்தவர்களின் கூலிகளும் சிஷ்யர்களுமுடையதுமாயிருப்பதால், ஏதோ ஒரு தீர்மானம் பாமர மக்கள் ஏமாறும்படி போட்டு, சட்டசபைக்குப் போய் உத்தியோகம் பெறவேண்டியதே அதன் தத்துவம். ஆனால் மதுரை மகாநாட்டிற்கு வந்திருந்த 5000 பிரதிநிதிகளில் உத்தியோகத்திற்கு லாயக்கானவர்களோ சுமார் ஒரு நூறு பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். மற்ற 4900 பேரும் தங்கள் நாட்டினுடையவும், சமூகத்தினுடையவும் சுயமரியாதையைக் காப்பாற்ற வந்தவர்கள். ஆதலால் இவர்கள் இனி சும்மா இருக்காமல் இத் திட்டங்களை நிறைவேற்ற முயலவேண்டும். சென்னைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் யோக்கியதை இம்மகாநாட்டில் நன்றாய் விளங்கிவிட்டது. ஆதலால் அவர்களை நம்புவதில் முழுப் பலனையும் அடைந்து விடமுடியாது. ஆங்காங்கு ஜில்லா, தாலூக்கா, கிராம வாரியாக கிளைச் சபைகளை ஏற்பாடு செய்வதும் பிரசாரம் செய்வதும், நிர்மாண திட்டங்களை நிறைவேற்றுவதும் பொதுமக்களுடைய வேலையாய் விட்டது. சீக்கிரத்தில் வேலை செய்வோரின் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டி ஜனவரி மாதத்திற்குள்ளாகவே இத்திட்டங்களை நிறைவேற்றத் தகுந்த வழிகளைக் காண வேண்டும்.

இக்கூட்டத்தின் அங்கத்தினர்கள் கூடியவரையில் எந்தத் தேர்தலுக்கும் நிற்கக்கூடாதவர்களாகவும் தங்களது முழு நேரத்தையும் இதற்கே செலவிடுபவர்களாகவும் இருக்க வேண்டும். 12 பேருக்கு குறையாமல், மாதம் 30 ரூபாய்க்கு அதிகப்படாத சம்பளமும், 10 ரூபாய்க்கு அதிகப்படாத படியும் கொடுத்து ஜில்லா சுற்றுப்பிரயாண அமைப்புக்காரரையும் மாதம் 50 ரூபாய்க்கு அதிகமில்லாத சம்பளமும் 25 ரூபாய்க்கு அதிகமில்லாத படியும் கொடுத்து 3 மண்டலாதிபதிகளை தணிக்கையாளராகவும் நியமித்து வேலை துவங்க வேண்டும். ஆக இந்த செலவுகளுக்கும் சில்லரைச் செலவுகளுக்குமாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் குறைந்தது மூன்று மாதத்திற்காவது தமிழ்நாட்டிற்கு 3000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை யாராவது சிலரோ ஒருவரோ தருவதாக, இந்த இரண்டு வாரத்திற்குள் ஸ்ரீமான் மதுரை ஞ.கூ. ராஜன் அவர்களுக்கு தங்களது பெயர்களையும் தொகைகளையும் அனுப்பி விட வேண்டும். அப்படிக்கு இயலாதவரை ஸ்ரீமான் ஞ.கூ. ராஜன் 1000ரூபாயும் சவுந்திரபாண்டிய நாடார் 1000ரூபாயும், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் 500 ரூபாயும், ஸி.எஸ். ரத்தின சபாபதி முதலியார் 500 ரூபாயுமாகப் போட்டுக் கொண்டு ஜனவரி 15யில் கூட்டம் கோவையிலோ, மதுரையிலோ போட்டு காரியங்கள் துவக்க வேண்டும். அப்படிக்கு இல்லாதவரை நமது மகாநாடு என்பது நமது எதிரிகள் சொல்வது போல்தான் என்று பிறர் நினைக்க இடமுண்டாகிவிடும்.

மகாத்மா காந்தியவர்கள் ஏப்ரல் மத்தியில் நமது நாட்டிற்கு விஜயம் செய்யப்போகிறார். அக்காலத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் மக்களின் சுயமரியாதைக்கும் பொருளாதார நிலைமைக்கும் வேலை செய்ததா? அல்லது காங்கிரஸ் வேலை செய்ததா? என்பதை அறியச் செய்து, கதரைப் பரப்ப நாம் எவ்வளவு தூரம் பிரசாரம் செய்திருக்கிறோம் என்பதைக் காட்டி நமது இயக்கத்திற்கு மகாத்மாவின் ஆசியைப் பெற வேண்டும். மகாத்மாவின் அபிப்பிராயங்கள் வர வர தாக்ஷண்ணியத்திற்கு கட்டுப்படக்கூடியதாயிருந்தாலும் அதுவும் பெரியோர் குணத்திலொன்றாதலால், மகாத்மாவின் ஆசி நமக்கு இருப்பதென்பது நமது சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வளவோ மேன்மையை உண்டாக்கும். ஆதலால், மகாநாட்டுக்கு வந்து போனவர்களும் மகாநாட்டு அனுதாபிகளும் இதைக் கவனித்து உடனே தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதுடன் முதல் காரியமாக வரப்போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லோரும் கதரையே வாங்கி உடுத்த வேண்டும் என்றும் தங்கள் சிப்பந்திகளிடையிலும் வேலைக்காரர்களிடையிலும் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள ஸ்தாபனங்களின் இடையிலும் கதரைப் பரப்ப வேண்டும். அதிலில்லாமல் வாயில் பேசுவதானது பார்ப்பன அரசியல் புரட்டுக்கு இளைத்ததாகாதென்று கண்டிப்பாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குறிப்பு : இம்மாதம் 1 ஆம் தேதி முதல் கதரின் விலையும் கஜம் ஒன்றுக்கு 9 பைசா வீதம் குறைவுபட்டிருக்கிறது.

(குடி அரசு - தலையங்கம் - 02.01.1927)

Pin It