ஒத்துழையாமையையும், மகாத்மா காந்தியையும் ஒழிப்பதற்கென்றும் நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்தும் பயன்படாமல் போனது கண்டு, கடைசியாக வங்கத்து வீரரும் ஸ்தோத்திரப் பிரியருமான ஸ்ரீமான் தாஸ் அவர்களைப் பிடித்து அவருக்குப் பட்டாபிஷேகம் செய்வதாய் ஏமாற்றி அவரை விபூஷணராக்கி அவரைக் கொண்டு, தங்கள் எண்ணிய எண்ணத்தை முடித்துக் கொண்டார்கள். அது சமயம் தங்களுக்கென்று ஒரு கக்ஷியிருப்பதாயும் அதற்கு பொது ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் பஞ்சாப், கிலாபத் சுயராஜ்யக் கக்ஷி என்று பெயருமிட்டு ஒரு பொய் மாயமானை சிருட்டித்தார்கள். பெயர் நீளமாயிருப்பதாக பலர் பரிகாசம் செய்யவே அதை சுயராஜ்யக் கக்ஷி என்று சுருக்கிக் கொண்டார்கள். இக்கட்சியின் உற்பத்தியையும், வளர்ச்சியையும் மனப்பூர்வமாய் அறிந்தும் தன் காலிலேயே நிற்கக் கூடிய சக்தி இல்லாத சில தலைவர்கள் என்போர்களும் தேசீயப் பத்திரிகை என்பதுகளும், அப்பொய்மானை எதிர்க்க சக்தியில்லாதவர்களாகி, சமயம் வரும்போது நாமும் ஒரு கல்லைத் தூக்கிப் போடலாம் என்கிற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியில் சுயராஜ்யக் கக்ஷியை ஆதரிப்பவர்கள் போலவே நடித்து தங்கள் நிலையைக் காப்பாற்றி வந்தார்கள். இதன் பலனாய் இப்பொய்மானை எதிர்க்க யாராவது வெளிக் கிளம்புவது என்றாலே பயப்பட வேண்டியதும், ராஜீய உலகத்தில் உயிருக்குத் துணிய வேண்டியதும் மிகவும் அவசியமாயிருந்துவிட்டதால் வெகுசிலர் கூட வெளிக் கிளம்ப முடியாமல் போய் விட்டது.

periyar 350இந்த நிலைமையானது நமது பார்ப்பனர்களுக்கு பாமர ஜனங்களை வஞ்சித்து பதவிகள் பெறவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அதுகளை உபயோகித்துக் கொள்ளவும் வெகு அநுகூலமாய்ப் போய்விட்டது. இதைக் கண்டு இரண்டொருவர் அரசியல் உலகத்தையே துறந்து தங்கள் சொந்தத்திற்கு ஏற்படக்கூடிய பல துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் துணிந்தும் அரசியல் உலகில் கடுகத்தனை இடம் இல்லாமல் போனாலும் உண்மைத் தொண்டுக்கும் சத்தியத்திற்கும் யோக்கியதை இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு கை பார்த்தே தீருவோம் என்று இறங்கி இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும், தந்திரத்திற்கும், பழிக்கும், விஷமப் பிரசாரத்திற்கு கூலி கொடுத்து ஆள்களை விட்டு திட்டவும், வைது எழுதவும் செய்வித்த கொடுமைகளுக்கெல்லாம் பயந்து ஓடாமல் முகம் கொடுத்ததின் பலனாகவும் இப்பொய்மானை பாமர ஜனங்கள் கொஞ்சமாவது உணரவும், இப் பொய்மானை நம்பி ஏமாந்த தலைவர்கள் கண் விழிக்கவும், தன் காலில் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டு இரண்டும் கெட்டானாய் இருந்தவர்கள் உறுதியுடன் நிற்கவும் முடிந்தது. ஆனால் லாலா லஜபதிராய் போன்ற வீரர்கள் எல்லாம் இப்பொய்மானால் ஏமாற்றப்பட்டார்கள் என்றால் மற்ற யார் ஏமாந்ததைப் பற்றி நாம் குற்றம் சொல்ல முடியும். பல அரசியல் தலைவர்கள் ஏமாறவில்லையானாலும் அதுசமயம் வேறு மார்க்கமில்லாமல் தெரிந்தே கட்டுப்பட்டிருக்க வேண்டியிருந்ததையும் நாம் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்.

இந்த நிலைமையில் இன்னமும் சுயராஜ்யக் கட்சி என்கிற பொய்மான் சில புது ஆசாமிகளை ஏமாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஆதலால் அதனிடத்தில் உள்ள மாய்கையில் பல சுயநலக்காரர்கள் மயங்குவது பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் பாமர ஜனங்கள் அதன் மாய்கையில் விழ இடங்கொடுக்கக் கூடாதென்றே ஆசைப்படுகிறோம்.

சுயராஜ்யக் கட்சி என்பது எந்த வகையில் நாட்டிற்கு அநுகூலமான கொள்கையை உடைத்தாயிருக்கிறது? எவ்விதத் தலைவர்களை அது உடைத்தாய் இருக்கிறது அல்லது அதனிடத்தில் எவ்வித கண்ணியமிருக்கிறது? அல்லது நமது நாட்டில் எந்தக் கூட்டத்தாரிடத்தில் அதற்கு மதிப்பு இருக்கிறது? இவைகளையெல்லாம் பாமர ஜனங்கள் அறியும்படி யோக்கியமான பத்திரிகைகள் என்று சொல்லப்படுவதும் உண்மையான அரசியல் தலைவர்கள் என்போர்களும் உண்மைத் தொண்டர்களும் தங்கள் மனச்சாட்சி சொல்லுகிறபடியாவது வெளியிட்டிருப்பார்களானால் ஒத்துழையாமையும் காந்தியடிகளும் ஒடுங்கியிருக்க முடியுமா? காலகதியில் ஒடுங்கியிருந்தாலும் இன்னமும் தலையெடுக்காமலாவது இருந்திருக்க முடியுமா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

ஒத்துழையாமை ஒடுங்கினதற்கும் மகாத்மா விலகிக் கொண்டதற்கும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியே காரணமானாலும் அச்சூழ்ச்சிகளுக்கு ஆக்கமளித்த பார்ப்பனரல்லாத தேசீய பத்திரிகைகளும், தேசீயத் தலைவர்களும், தேசீயத் தொண்டர்களுமே இதன் பெரும் பாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள். ஒரு வீட்டில் உள்ள சொத்துக்கள் களவு போனதற்கு களவாளியே காரணமானாலும் கதவைத் திறந்து வைத்து விட்டவர்களே அதிக காரணஸ்தர்கள் ஆவார்கள். ஆரம்பத்தில் கதறினோம் எல்லோரும் இதற்கு உடந்தையாய் இருக்கிறார்களே, அறியாமலா அல்லது வேண்டுமென்றா அல்லது நாம் மாத்திரம்தான் பைத்தியக்காரரா என்று கூட எழுதினோம். நமது எதிரிகள் ஆம், ஒரே ஒரு பைத்தியக்காரன்தான் ஈரோட்டில் இருக்கிறான் என்று கூட எழுதிற்று. இப்பொழுது நாள் ஆக ஆக அதிக பைத்தியக்காரர்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகிறார்கள். நாம் பயித்தியக்காரரான வெகு நாள் பொறுத்துதான் மகாத்மாவும் பயித்தியக்காரர் ஆனார். பிறகு அநேகம் பயித்தியக்காரர்கள் ஆனார்கள். கடைசியாக லாலா லஜபதிராயும் நம்மைப் போலவே பயித்தியக்காரராகி விட்டார். இப்போது நமது பார்ப்பனர்கள் அவரை மிதவாதி என்றும், பொருத்தமற்ற நடவடிக்கைக்காரர் என்றும் வெள்ளைக்காரரிடம் சபாஷ் பட்டம் வாங்கி விட்டார் என்றும் சொல்லுவதோடு லாலா அவர்கள் நிர்மாண வேலை செய்வதாய் ஒப்புக் கொண்டு என்னையும் நம்பச்செய்து தங்கள் கக்ஷியில் சேர்த்துக்கொண்ட பிறகு (கொள்கை) நிர்மாண வேலையைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்று கேட்டால் அதற்கு மறு மொழி, தாங்கள் செய்யாமல் தேசத்தாரை ஏமாற்றி விட்டதற்கு வெட்கப்படாமல் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் லாலாஜி அவர்களை லாலாஜி சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்து தனக்காக செய்து கொள்ளவேண்டிய அவசியம் இருந்ததாகவும் இப்போது அது தீர்ந்தவுடன் அதைவிட்டு விலகி விட்டதாகவும் ஒரு கெட்ட எண்ணமும் கற்பிக்கப்படுகிறது. மற்றும் பல கடுமொழிகளும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. இது எவ்வளவு கொடுமை என்பதை வாசகர்கள் யோசிக்க வேண்டும்.

தலைவர்கள்

முதலாவதாக, இது பெயருக்கு மாத்திரம் பண்டிட் மோதிலால் நேரு என்கிற ஒரு மத்திய மாகாண பார்ப்பனரால் எழுதப்பட்டது என்று வெளியில் தெரிவதாயிருந்தாலும் உண்மையில் அது தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவரால் எழுதி, பண்டிதர் பேரால் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். எப்படி என்றால் கவர்னர் போன்றவர்களுக்கு ஏதாவது உபசாரப் பத்திரமோ விண்ணப்பமோ கொடுத்தால் அதற்கு பதில் கவர்னரோ அல்லது கவர்னர் பேராலோ கொடுக்கப்பட்டாலும் அதை தயார் செய்வது இலாக்கா காரியதரிசிதான். அது போல் இதை எழுதியவர் இலாக்கா காரியதரிசியாகிய ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்காராகத்தான் இருக்க வேண்டும். அது எப்படியிருந்த போதிலும் இப்பார்ப்பனர்கள் அபிப்பிராயத்திற்கு யாராவது மாறுபட்டால் அவர்கள் வெள்ளைக்காரரின் ஆள், சுயநலக்காரர், பொம்மை, தத்துவம் உணராதவர், துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள். லாலாஜி அவர்கள் யோக்கியதையையும் இவ்விரு பார்ப்பனர்கள் யோக்கியதையையும் நினைத்துப் பார்த்தால் யார் தேச பக்தர்கள், யார் சுயஜாதி பக்தர்கள், யார் சுயநல பக்தர்கள் என்பது விளங்காமல் போகாது. மத்திய மாகாண பார்ப்பனரான பண்டிதர் அவர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றி மாதம் 10, 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்துக்கொண்டு ராஜபோகம் அனுபவித்துக் கொண்டு தேசபக்தராய் இருந்த காலத்தில் லாலாஜி தூக்கிச் செல்லப்பட்டதும், அன்னிய நாடுகளில் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடினதும் வருஷக்கணக்காய் ஜெயிலில் வதிந்ததையும் உலகம் அறியாதா? இந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனரான அய்யங்கார்கள் இவர் ஜெயிலுக்கு போனார்; அவர் ஜெயிலுக்குப் போனார் என்று எழுதி தானும் தன் இனத்தாரும் மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடித்துக் கொண்டு தேசபக்தராயிருந்த (இருக்கிற) காலத்தில் லாலாஜி ஜெயிலிலும் வெளிநாடுகளிலும் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருந்தவர். இப்படிப்பட்டவர் இந்த பார்ப்பனர்களுக்கு உள்ளாளாயில்லாவிட்டால் உடனே ஒழிப்பதற்குத் துணிந்து விடுகிறார்கள்.

கண்ணியம்

அதன் கொள்கைகளும் தலைவர்களும் இப்படி இருந்தாலும் அதன் கண்ணியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கடைசி விஷயமாகிய சட்டசபையை விட்டு வெளியேறிய வெளியேற்றத்தைப் பற்றி யோசிப்போம்.

சட்டசபை உபயோகமற்றதென்று வெளியேறியபின் தேசப் பொது நன்மையின் அவசியத்தைப் பற்றி அப்போதைக்கப்போது வரும் விஷயங்களை அனுசரித்துப் போவதும் போகாமலிருப்பதும் கமிட்டியார் தீர்மானிக்கிறபடி நடந்து கொள்வதென்று தீர்மானித்தார்கள். இந்துமத பரிபாலன மசோதா விஷயத்தில் கமிட்டியைக் கேளாமல் கமிட்டியின் பேரால் உத்திரவு போட்டு சுயராஜ்யக் கட்சியார் மசோதாவை எதிர்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு அதன் தலைவர் அதை ஆதரித்து அந்த உத்திரவு சட்டப்படி செல்லத்தக்கது என்றும், கமிட்டி சாங்ஷன் அவசியமில்லையென்றும் சொன்னார். சுயராஜ்யக் கட்சி முக்கிய மெம்பரான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் மசோதாவை எதிர்த்தால் கட்சியை விட்டு விலகுவதாய் சொன்னவர், அவரும் பத்திரிகைக்கு ஏதோ எழுதிவிட்டு விலகாமலே இருக்கிறார். கமிட்டி மெம்பர் ஒருவர் கமிட்டி சாங்ஷன் இல்லாமல் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு போனதைக் கண்டித்து ‘2’ வார்த்தை சொல்லி விட்டு கமிட்டி மெம்பராகத் தான் இருந்து வருகிறார். இவ்வளவும் பொறாமல் அதன் தலைவர் மறுபடியும் முன் எழுதியதற்கு விரோதமாய் இந்துமத தர்ம மசோதா கட்சி விஷயமுமல்ல பொது விஷயமுமல்ல தனிப்பட்ட விஷயம். அவரவர்கள் இஷ்டப்படி நடக்கலாம் என்றார். அப்படியானால் சட்டசபையை விட்டு வெளிவந்ததற்கு என்ன அருத்தம்? கட்டுப்பாட்டுக்கு என்ன அருத்தம்? கமிட்டி நியமித்ததற்கு என்ன அருத்தம்? கமிட்டி மெம்பர் மிரட்டுவதற்கு என்ன அருத்தம்? காரியதரிசி விலகுவதாய்ச் சொன்ன வாக்குறுதிக்கு என்ன அருத்தம்? இது மாத்திரமா, வகுப்புப் பிரசாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பிடுங்க இந்தியா சட்டசபையில் சர்க்கார் கொண்டு வந்த மசோதாவை எதிர்க்காமல் சுயராஜ்யக் கட்சியார் கட்சிக்கட்டுப்பாடு என்கிற பெயரைச் சொல்லிக் கொண்டு அதை நிறைவேற்ற அநுகூலமாயிருந்ததற்கு என்ன அருத்தம்?

யார் மதிக்கிறார்கள்

கண்ணியம் இப்படியிருந்தாலும் அதை யார் மதிக்கிறார்கள் என்று பார்ப்போம். சுயராஜ்யக் கட்சியென்கிற பெயரை ஜனங்களுக்கு பித்தலாட்டம் என்று சொல்லும் வார்த்தைக்கு மாறு பெயராய் உபயோகிக்கிறார்கள். கும்பகோணம் என்ற வார்த்தைக்கு எப்படி சூழ்ச்சி, மோசம் என்கிற வார்த்தை அகராதியில் இருக்கிறதோ அது போல் சுயராஜ்யக் கட்சியென்றால் பார்ப்பனப் பித்தலாட்டம் என்கிற கருத்துடன் சாதாரண மக்களிடையே பழக்கத்தில் இருந்து வருகிறது. சர்க்காராருக்கும் சுயராஜ்யக் கட்சி என்றால் வெகு பரிகாசமாய் விட்டது. அதன் மூலம் சில தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள யோக்கியதையும் குறைந்தது. பார்ப்பனர் ஒருவர் தவிர வேறு யாரிடத்திலும் இது சமயம் அக்கட்சிக்கு மதிப்புமில்லை. அதோடு மாத்திரமல்லாமல் அக்கட்சிக்கு ஆதரவளித்தவர்களுக்கும் கெட்டபேர் ஏற்பட்டுவிட்டது. ஒத்துழைப்புக்கு மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது. பார்ப்பனர் பிழைக்க வேண்டி இவ்வளவு மோசமானதும் புரட்டானதுமான ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி சுயராஜ்யத்திற்குப் பாடுபடுவதாய் பாமர ஜனங்களை ஏமாற்றி ஆதிக்கம் பெற நினைத்ததின் பலன் பொது ஜனங்களுக்கு பார்ப்பனர் யோக்கியதை வெளியாக இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டதோடல்லாமல் மகாத்மா செய்த வேலையும் கெட்டு, சர்க்காரிடம் பொது ஜனங்களுக்கு நம்பிக்கையும், ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுப் போய் விட்டது. இனியும் கொஞ்ச காலத்திற்கு இப்பார்ப்பன சூழ்ச்சி நிலைத்திருக்குமானால் தற்காலம் மக்களுக்கு இருப்பதாய்ச் சொல்லப்படும் சிறு சிறு உரிமைகள் என்பது கூட சர்க்காரிடமே ஒப்படைக்க வேண்டிவருமென்றே பயப்படுகிறோம். ஆதலால் பொதுமக்கள் இக்கட்சியை விளையாட்டுக்காவது ஆதரிக்காமல் வரப் போகும் தேர்தலில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதை ஞாபகமூட்டுகிறோம்.

(பெரியார், அரசு - கட்டுரை - 05.09.1926)

Pin It