Periyar E.V. Ramasamyசாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதான÷காசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை டர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது. 

(‘குடி அரசு' தலையங்கம் 30.11.1930)

Pin It