வாத்தியார்:- 'சூத்திர'னுக்கும் 'பிராமண'னுக்கும் உள்ள பேதத்தை சொல்லு பார்ப்போம்?
மாணவன்:- சூத்திரனுக்குத் தன் இனத்திற்கு அல்லது ஜாதிக்கு என்று குறிப்பிட்ட பழக்க வழக்கம் ஆச்சார அனுஷ்டானம் கிடையாது. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்குள் தாங்கள் சைவர்களா, வைணவர்களா என்ற சமய உணர்ச்சி உண்டு. சிலருக்குச் சூத்திரர்களில் தாங்கள் கீழ்ஜாதியா மேல் ஜாதியா என்ற வகுப்பு உணர்ச்சி உண்டு. இவர்களில் பெரும்பாலோருக்கு வைணவம் என்றால் என்ன? சைவம் என்றால் என்ன? இரண்டிற்கும் என்ன பேதம்? எது மேலானது? இவைகளில் ஒன்றை உரிமையாக்கிக் கொள்வதில் பயன் என்ன? அவைகளைக் கடவுளாகவோ சமயமாகவோ கொள்வதில் பயன் என்ன? என்பன போன்றவைகள் ஒன்றும் தெரியாது.
பிராமணனுக்கு இவையெல்லாம் தெரியும். தெரியாவிட்டாலும் இவைகளால் தனக்கு உள்ள பயன் நன்றாகத் தெரியும்.
வாத்தியார்;:- பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் அடையாளம் என்ன?
மாணவன்:- பிராமணன் தன்னைப் பிராமணன் என்று நினைத்துக் கொண்டு சில தனி உரிமைகளை அனுபவிப்பதும், அதற்கு ஏற்றபடி நடிப்பவனுமாவான்.
சூத்திரன் தன்னைச் சூத்திரன் என்பதாக நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப பிராமணனுக்குப் பயன்படும்படி நடந்து கொண்டு தன்னுடைய இழிவையும் இழி நிலையையும் பற்றிக் கவலையோ மானமோ இல்லாமல் இருப்பவனுமாவான்.
வாத்தியார்:- சூத்திரனுக்குத் தன் இழிநிலைப்பற்றி மானத்தைப் பற்றிக் கவலை இல்லை என்பதற்கு என்ன உதாரணம்?
மாணவன்:- சூத்திரன் "பிராமணன் தன்னைவிட மேல் சாதி" என்பதை மனம் வாக்கு காயங்களால் ஒப்புக் கொள்கிறான்.
அவனைச் சாமி என்று அழைப்பதோடு, அவனை மரியாதையோடு பன்மையிலேயே பேசுகிறான்! இந்தப் பழக்கம் சூத்திரர்களில் எல்லா பெரிய மனிதர், படிப்பாளி, பணக்காரர் என்பவர்கள் முதல் எல்லோரிடமும் இருக்கிறது.
உதாரணமாக, ஒரு சூத்திரன் தன்னிடம் வேலைக்கு இருக்கும் 'பிராமணனை' சாமி, வாங்க, போங்க, வாரும், போம் அய்யரே என்று பன்மையில் தான் பேசுகிறார்.
ஒரு போலீசு டிப்டி சூப்ரண்டு (காவல்துறைக் கண்காணிப்பாளர்) ஒரு பிராமண கான்ஸ்டேபிள், தலைமை கான்ஸ்டேபிளைப் பன்மையில்தான் பேசுகிறார். பிராமண சமையற்காரனை அவனது எஜமான் பன்மையில் தான் பேசுகிறார்.
சூத்திரப் பெண்கள் எல்லாம் பிராமணனை வெகுமரியாதையாகப் பேசுகிறார்கள்.
கோவில்களில் 'பிராமணர்கள்' மேல் தாங்கள் பட்டுவிட்டால் தோஷம் என்று கருதுகிறார்கள்.
கல்யாணம், கருமாதி, காரியங்களில் அவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுகிறார்கள்.
பிராமணர்களுக்குக் கூட்டங்களில் முதலில் மரியாதை செய்கிறார்கள்.
100-க்கு 60 பேர் பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவதை உயர்வு என்று கருதுகிறார்கள்.
சூத்திரன் வீட்டுக் கல்யாணம், கருமாதி, பிள்ளைப்பேறு, சாந்தி, குடிபுகுதல் முதலிய சமுதாயக் காரியங்களுக்குப் பிராமணனைக் கொண்டு செய்வது மேல் என்று கருதி அவனை மரியாதை செய்கிறான். அவனை வைத்துச் செய்து கொள்கிறான்.
பிராமணனேதான், பூஜை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்ற கோவில்களுக்குச் சென்று வெளியில் இருந்து சாமியை வணங்குகிறான்.
பிராமணன், தான் மேலான ஜாதி என்று உரிமை கொண்டாடுவதைச் சூத்திரன் பொறுத்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டு இருக்கிறான்.
பிராமணன் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று குறிப்பிட்டிருக்கிற நூல்களையெல்லாம் தனது சமய நூல்களாகவும், தனது கடவுள் தன்மை வாய்ந்ததாகவும், புண்ணிய நூலாகவும் கருதி அவைகளுக்கு மரியாதை செய்கிறான்.
ஜாதி முறையை வெறுத்த சூத்திரன், அதை ஆதரிக்கும் புராண இதிகாசங்களைவெறுத்த சூத்திரன் சூத்திரன்களில் 1000-க்கு ஒருவர் கூட கிடையாது.
பிராமணன் மேல் ஜாதி என்பது 100-க்கு 99 சூத்திரர்களின் இரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. சாதாரணமாகச் சூத்திரர்கள் சங்கராச்சாரியை மதிக்கிற அளவுக்குப் பண்டார சன்னிதிகளை மதிப்பதில்லை.
சாதாரணமாக, சூத்திரர்கள் பிராமணனுக்கு உதவி பண்ணுகிற அளவு பிச்சை கொடுக்கிற அளவு - சூத்திரனுக்குக் கொடுப்பதில்லை.
சாதாரணமாக, மேல் தரத்தில் உள்ள சூத்திரர்கள் பிராமணன் வீட்டில் சாப்பிடுவது போல் அவன் ஓட்டலில் பலகாரக் கடையில் சாப்பிடுவது போல் சூத்திரன் வீட்டில் ஓட்டலில் சாப்பிடுவது இல்லை.
பார்ப்பனன் இடமும், பிராமணனுக்குக் கீழும் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அவனை சாமி என்றே தான் அழைக்கிறார்கள். அந்தப் பிராமண வீட்டார்கள் தங்களை இழிவாய் கீழாய் நடத்துவதை எல்லா சூத்திர ஆள்களும் பொறுத்துக் கொள்கிறார்கள்.
--------------------------
பெரியார் ஈ.வெ.ரா உரையாடல்- "விடுதலை", 23.07.1950
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (