தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"

இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?

தீபாவளி, கிருஷ்ணஜயந்தி, ராமநவமி, சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆகியவற்றைக் கொண்டாடுவது ஆரியர்களின் பெருமையையும் திராவிடர்களின் சிறுமையையும் எவ்வாறு உணர்த்துகின்றதோ, அதுபோலத்தான் பாரதியார் விழாக் கொண்டாடுவதிலும், பாரதியாருக்கு மண்டபம் சமைப்பதிலும் உள்ளது என்றால் யாரேனும் மறுத்துக்கூறவியலுமா?

பாரதியாருக்குக் கோவில் கட்டுவதிலோ அல்லது அதுபோன்ற பிற செயல்களிலோ நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இத்தகைய செயல்களில் தமிழர்கள் திராவிடர்கள் கலந்து கொள்ளலாமா? எட்டையாபுரம் ராஜாவைப் போன்ற குறு நில மன்னர்கள், ஆரியத்தின் பெருமைக்கும் திராவிடத்தின் இழிவுக்கும் மடி தாங்கலாமா? என்ற கேள்வியை இனமானமுள்ள திராவிடன் கேளாமல் இருக்க முடியுமா?

திராவிட மந்திரிகளோ என்றால், அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் அவர்கள் நிலைமை அப்படி. அவர்கள் பெயரையே, ஆரியர்கள், மந்திரிப் பட்டியலிலிருந்து அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசி எழுத்திலே கையை வைத்து "ரி"யை அழித்த நிலையில்தான், இன்று அவர்கள் இராமயணத்தில் காணப்படும் குரங்கு வால்நரர்களைப் போல, ஆரிய உயர்வுக்குப் பாடுபட வேண்டியவர்களாய் ஆகிவிட்டார்கள். அனுமாரைப் போல இந்நாட்டு இளைஞர்களும் ஆகவேண்டும் என்று, திராவிட மந்திரிகளே வாய் விட்டுக் கூறுகின்றார்கள்.

நிற்க, அனுமார் கோவில்கட்டி அனுமார் படை ஏற்படுத்தி, வணங்கித் தொண்டு செய்யும் திராவிடர் இது செய்வதுதானா அருமை? என்று திராவிட இன உணர்வு கொண்டவர்கள் அமைதி கொள்ளலாம். ஆனால், பாரதியைப் பெருமைப்படுத்துகின்றவர்கள், உண்மையிலேயே தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ தமிழரைப் பெருமைப்படுத்தியவரென்றோ கூறமுடியுமா? இதை நாம் கேட்கவில்லை. பாரதியார் பாடியன என்று மேலே எடுத்துக்காட்டிய பகுதிகளே இக்கேள்வியைக் கேட்கின்றன.

செவியுடையோர் சிந்தனை செய்யும் திறமுடையோர் இதை நன்கு உணரலாம்.

இவ்விழாவிற்குப் பொருளுதவி செய்தவர்களும், விழாவில் போய் மகிழ்ந்தவர்களும், விழாவை வெவ்வேறு வகையில் பெருமைப்படுத்தியவர்களும், ஆரியத்தின் பெருமை, ஆரிய உயர்வு, என்பதல்லாமல் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் உயர்வு என வாயால் பேச முடியுமா? என மனதில் கையை வைத்துக் கூறுங்கள்.

திராவிட உணர்ச்சியைச் சிதைப்பதற்காகச் செய்யப்படும் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே, இப்பாரதி மண்டப விழாவும் பாரதி விழாவும் என்பதை, இப்போதாவது திராவிடர்கள் உணர்ந்து விழித்தெழுவார்களாக!

-------

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு", 18-10-1947

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா