...முந்தைய பகுதி: பாரதியின் பார்ப்பன இன உணர்வு

Bharathi and Chellammal1916 ஆம் ஆண்டின் கடைசியில் சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர்.சி.நடேசனார் மற்றும் பலர் ஒன்றாகச் சேர்ந்து அரசியலிலும், சமூகத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பார்ப்பனரல்லாதார் இயக்கமான “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த இயக்கம் பார்ப்பனரல்லாதார் உயர்விற்காகவும் உரிமைக்காகவும் பாடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் பாரதி இவ்வியக்கத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே காண்போம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றிப் பாரதியார் 1917 இல் சுதேசமித்திரனில் எழுதியதாவ

“இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. இதில் உண்மை இல்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்து விட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும், ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபாலிடி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.

‘பிராமணரல்லாதோர்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...”

“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்” (1) என்று பாரதி கூறியுள்ளது எவ்வளவு பெரிய ஏமாற்று, புரட்டுத்தனம்! இந்தப் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி பொய்யான கிளர்ச்சியாம்; அதன் தலைவர்கள் பதவி வெறி பிடித்தவர்களாம்; ஆரியர்கள், திராவிடர்கள் என்று கூறி அபாண்டமான அர்த்தம் கற்பித்துக் கொண்டார்களாம். அந்தக் கிளர்ச்சியில் உண்மை இல்லாததால் விரைவில் அழிந்து விடும் என்று பாரதி கூறியுள்ளார்.

ஆனால் அவ்வியக்கம் அன்று தென்னாட்டில் மட்டும் தான் இருந்தது. இன்றோ அது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் பாரதியின் கணிப்பில்தான் உண்மையில்லை என்பது தெரிகிறது. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்களைக் காப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார்.

பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்:

“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.” (2)

வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால் தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். பாரதியியைப் பின்பற்றித்தான் துக்ளக் சோ ‘எங்கே பிராமணன்?’ என்று எழுதினார் போலும்!

1920 டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர்-திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்தவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

“ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்து வரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்குப் பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படிச் செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம் மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாகப் பிராமணத் துவேசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையார் சென்னை நகரத்து முக்கியமான கல்விஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள்.

காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம், அஸுரரென்று சொல்லி அவற்றைப் பரமாத்மாவின் அருள்வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுவதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவில் இருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு அதன் பூர்வ குடிகளைத் தாழ்த்தி விட்டனரென்றும் அபாண்டமான கதை கட்டி விட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்துவப் பாதிரிகள் மிக்க ஆவலுடன் மனனம் செய்து வைத்துக் கொண்டு தம்மிடம் இங்கிலீஸ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர் தென்னிந்தியாவில் மாத்திரம் அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்தில் (வேதமெழுதிய காலத்தில்) விரோதிகளாக இருந்தனரென்றும், ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்ன்றும் போதிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்கால் பங்குக்கு மேல் பழைய சுத்தமான ஆரியர்கள் அல்லரென்றும் விசேஷமாகத் தென்னிந்த்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்து போனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பியப் பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப் போல் அஸுரராய் விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்க வேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகின்றதன்றோ?

மேலும் இந்தத் திராவிடர் என்போர், அஸுர, ராஷஸர்களின் ஸந்ததியாரென்பதும், அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தின் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ்முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தது ஐரோப்பிய பண்டிதரின் கணக்குப்படிப் பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறையவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி?” (3)

இப்போது தெரிகிறதா பாரதி எந்த முகாமில் இருந்தார் என்று? அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் சாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர்-திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920 இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்தபோது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று. ‘அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித்திராவிடர்கள். அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போகவேண்டியதுதான்!” என்று பாரதி கூறினார்” (4) என்கிறார்.

டாக்டர்.எ.எம்.நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதை கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது” (5) என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரஸில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916 இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906 இல் எழுதியுள்ளார்.

1906 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 10
பி.எம்.சிவஞானமுதலியார் 10
ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 6
சர்.பிட்டி.தியாகராய செட்டியார் 5
கூடுதல் 31

16 ஓட்டுக்கு மேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 14
பி.எம்.சிவஞான முதலியார் 11
ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 7
கூடுதல் 32

சபைத்தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்து விட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே டாக்டர் டி.எம்.நாயர் அதிக வாக்குகள் பெற்றும் தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்றபோதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்தமுண்டாக்குகிறது.”

இப்படி 1906 இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917 இல் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனிய இயக்கம் தொடங்கிவிட்டார்களே என்ற ஆத்திரம் தானே? வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக்கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26 இல் பாரதி, சுதேசமித்திரன் ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான்; மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” (7) என்கிறார் பாரதி. 1916 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் சாதி வெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்தபோது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப்போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!” என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார். “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.”

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’ என்றார்.

மீண்டும் முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

‘இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண்டிருந்த போதிலும் இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் விசால புத்தி உடையவர்களாய்த் தமது பெயரைக் காத்துக்கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பஷாபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்’ இவர் சொல்லியதில் ஒருவித உண்மையிருக்கக் கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது” என்கிறார் பாரதி. (8)

இது நீதிக்கட்சி அமைச்சரவைக்குப் பாரதி விடுத்த எச்சரிக்கை என்றே கொள்ளலாம். வகுப்புரிமையைக் கண்டித்து பாரதி எழுதியதாவது: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முறையை ஒழித்து விடவேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸுவாய் விட்டது. பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டன்றி மாற்றில்லை” (9) என்கிறார் பாரதி.

பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அக்காலக் கட்டத்தில் பாரதிக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பது துளியும் இல்லை. மாறாக வருணாசிரமத்தில் அக்கறையுள்ளவராய் இருந்தார்.

இவரை விடத் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்துத் திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அது வருமாறு : “இந்த மாநிலத்தில் நிலவும் தற்பொழுதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கவுரவ உத்தியோகங்களிலும் பிராமணன், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” (10) என்கிறார் வ.உ.சி. (இந்து 25.6.1920)

மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.402,404
2. மேற்படி நூல், ப.404-407
3. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.349-351
4. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், ப.185
5. பாரதியார் கட்டுரைகள், ப.352
6. பாரதி தரிசனம் முதல் தொகுதி, நி.செ.பு.அ. ப.348,349
7. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.223
8. மேற்படி நூல், ப.381
9. மேற்படி நூல், ப.393
10. வ.உ.சிதம்பரம் பிள்ளை, என்.சம்பத்-பெ.சு.மணி, பப்ளிகேசன்ஸ் டிவிசன், 1995, புதுதில்லி- ப.224,225
அடுத்த வாரம் ‘பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது?’

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் மூன்றாம் அத்தியாயம்)

வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600 005
பேசி: 9444321902

Pin It